நாவல்
சுவீடன் எழுத்தாளர் Pär Lagerkvist அவர்களினால் 1950 இல் எழுதப்பட்ட இந் நாவல் 1951 இல் நோபல் பரிசை பெற்றது. பௌதீக யதார்த்த வாழ்வுக்கும், நம்பிக்கைகளை உருவாக்கி போற்றும், அல்லது அதற்கு கட்டுப்பட்டு வாழும், வாழ்வுக்கும் இடையே நகருகிறது இந் நாவல். குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு ஜெரூசலத்திலுள்ள கொல்கொத்தா மலையில் மூவர் சிலுவையில் அறையப்படுவதற்காக தொங்கவிடப்படுகிறார்கள். அவர்களில் ஒருவன் பாரபாஸ். பெற்றோராலும் சமூகத்தாலும் கைவிடப்பட்டவன். ஓர் அநாதை. பழிபாவம் எதற்கும் அஞ்சாதவன். கொள்ளைக்காரன். பாரபாஸ் இன் அலைவு கொல்கொத்தா, ஜெரூசலம், சைப்பிரஸ் என பயணித்து இறுதியில் றோம் இல் சிலுவையில் ஏற்றப்பட்டு மரணிக்கிறது.
சிலுவையில் அறையப்படும் தண்டனை நிறைவேற்றப் படுவதற்கிடையில் அவசர அவசரமாக இன்னொரு கைதி கொண்டுவரப்படுகிறான். அவன் முதலில் கொல்லப்பட வேண்டியவனாக இருக்கிறான். கலகக்காரன். அவன் கொலை கொள்ளைக்காரர்களை விட ஆபத்தானவன் என கண்டறியப்பட்டவன். சிலுவைகள் மூன்றுதான் இருக்கின்றன. எனவே ஒருவரை விடுதலை செய்ய வேண்டும். கூட்டத்தினர் பாரபாஸ் இனை தெரிவுசெய்கிறார்கள். மரணத்தின் எல்லையில் நின்ற அவன் அதிர்ஸ்டவசமாக உயிரின் தேசத்துள் வீசப்படுகிறான். இப்போ அவன் சிலுவையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பார்வையாளனாகிறான். சிலுவைகள் ஆணிகளுக்கு கட்டளையிடுகின்றன. பீறிட்டுவரும் இரத்தத்தை அவைகள் குடிக்கத் தொடங்குகின்றன.
தன்னை துரத்திவிட்ட சிலுவையில் தொங்கிய புதியவனை பாரபாஸ் பார்த்துக்கொண்டு நிற்கிறான். மெலிந்து ஓர் அப்பாவிபோல் தொங்கும் அவன் அப்படி என்ன குற்றத்தை இழைத்திருப்பான் என்ற புதிர் பாரபாஸை அந்த புதியவனுடன் இணைக்கும் முதல் ‘இழை’ ஆகிறது. இருட்டுச் சிறையில் காலங்கழித்த பாரபாஸ் இப்போ மெல்லிய ஒளிபடர்ந்த வெளியில் நிற்கிறான், ஒரு பார்வையாளனாக!. அந்த புதியவன் பெயர் ஏசு கிறிஸ்து. அவர் பின்னால் ஒளி தோன்றி மறைந்ததாக -அவனது ஒளிக்கு அந்நியமாகவிருந்த கண்ணுக்குள்ளால்- ஒரு பிரமை ஏற்பட்டுவிடுகிறது.
ஜெரூசலத்தில் இருக்கும் அந்தப் பெண்ணை பாரபாஸ் சந்திக்கிறான். அவள் முன்னர் அவன்மீது ஒருதலைக் காதல் கொண்டிருந்தவள். அவள்தான் இயேசு உயிர்த்தெழுந்ததை கண்டவள் என்று அறியப்பட்டவள். தேவதைகள் வந்து அவரது கல்லறையை கிளப்பி மீட்டுச் சென்றதாக அவள் சொல்லிக்கொண்டிருந்தாள். அதனால் பின்னர் அவள் கல்லால் எறிந்து கொல்லப்படுகிறாள். அதை பாரபாஸ் கண்ணுற்றான். அவளை காட்டிக்கொடுத்தவனை அவன் அறிந்திருந்தான். கல்லெறி அமளிக்குள் அவனை பாரபாஸ் கத்தியால் குத்தி கொன்றுவிடுகிறான். யாரும் கவனிக்கவில்லை.
பின்னர், இருள் கவ்விய பொழுதில் இரகசியமாக அவன் கொலையுண்ட அவளது உடலை காவிக்கொண்டு நெடும் பயணம் மேற்கொள்கிறான். அவளுக்குப் பிறந்து மரணமடைந்த குழந்தையை புதைத்த இடத்துக்கு அருகில் அவளை புதைத்துவிட வேண்டும் என்பது அவனது இலக்கு. சிறைசெல்ல முன்னர் ஒருமுறை காயம்பட்ட பாரபாஸை அந்தப் பெண் மருந்திட்டு தங்குமிடம் கொடுத்து காப்பாற்றிவிட்டவள்.
பாரபாஸ் க்குப் பதிலாக இயேசு சிலுவையில் அறையப்பட்டதாக ஊருக்குள் கதை பரவ அவன் வெறுக்கப்படுகிறான். பலரும் பேசிக்கொண்டவாறு கொல்கொத்தா மலையில் இயேசு சிலுவையில் மரணித்தபோது இருள் கவ்வியதாகவும் இயேசுவுக்கு பின்னால் ஒளிவட்டம் தோன்றியதாகவும் எல்லோரும் பேசிக்கொண்டனர். இருண்ட சிறையில் காலம்கழித்தவனுக்கு ஏற்பட்ட இருள் பிரமையும் மலையுச்சிவெளி ஒளியின் இடையீடும் சிந்தனையை உலுப்பியது. அதனால் அவனும் அதை நம்பலானான். மற்றவர்க்கும் சொல்லலானான். அது இயேசுவை கடவுளாக பூசிக்கத் தொடங்கியிருந்த மக்களின் நம்பிக்கைளோடு பொருந்திப் போய்விடுகிறது. அவனுக்கு இந்தப் புதிர்கள் எல்லாம் அந்நியமானதாக இருந்தது. கடவுள், கடவுளின் மகன் என்பதெல்லாம் அவனை பிணைத்திருந்த ‘இழையை’ அசைத்துக்கொண்டிருந்தது. ஆனால் அவனுக்கு அதுகுறித்த எந்த நம்பிக்கையும் இல்லை. தனது இடத்தில் மரணித்த அந்த மனிதன் குறித்தே அவன் இரக்கப்பட்டான்.
பாரபாஸ் அடிமைநீக்கம் செய்யப்பட்டு, பின் நிலக்கரி சுரங்கத்தில் ஸாகாக் என்பவனுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டு வேலைசெய்ய விடப்படுகிறான். ஸாகாக் ஓர் அசல் கிறிஸ்தவன். அவன் தொழும்போதெல்லாம் சங்கிலின் மறுமுனையில் பாரபாஸ் வேறு உலகத்தில் இருந்தான். சிலுவையில் தனது இடத்தில் மரணித்தவன் குறித்து கழிவிரக்கம் கொண்டான். குற்றவுணர்வும் கொண்டான். அந்த காட்சியை நினைவுபடுத்தியபடி இருந்தான். அவன் நம்பிக்கைகள் எதையும் தாங்க மறுத்த யதார்த்த மனிதனாகவே இருந்தான். அவனுக்கு இயேசு கடவுளல்ல. கிறிஸ்தவம் மதமல்ல. அவனது வாழ்வுக்கு அவனிடம் அர்த்தம் ஏதும்கூட இல்லை. கடவுளாக நம்புகிற ஒரு மனிதன் தனது சிலுவையில் மரணித்ததால் ஒருவித குற்றவுணர்வு கொண்டிருந்தான். கொல்கொத்தா மலையில் அவனை பிணைத்த இழை மட்டும் அவனை தொடர்ந்துகொண்டிருந்தது. அவனை அது விடவில்லை.
ஸகாக் கடவுளின் அடிமை. இயேசுவின் அடிமை. றோமர்களின் அடிமையல்ல என விசாரணையின்போது உறுதியாக அறிவிக்கிறான். றோமன் கவர்ணர் மரணத்தை அவனுக்கு பரிசளிக்கிறார். பாரபாஸ் விடுவிக்கப்படுகிறான். இதுவரை ஸகாக் உடன் சங்கிலி மட்டுமல்ல ஒரு உறவும் பிணைந்திருந்தது. தனது கடவுள் சிலுவையில் அறைப்பட்டதை பார்த்தவன், அப்போது உலகம் இருண்டதை கண்டவன் இவன், இயேசுவின் பின்னால் ஒளிவிட்டம் தோன்றியதைக் கண்டவன் இவன் என்பதால் பிணைந்த உறவு அது. பாரபாஸ் இன் குற்றவுணர்வை ஸகாக் இன் நம்பிக்கையினுள் ஆற்றுப்படுத்திய உறவு அது.
இந்த சம்பவங்கள் அவனை பாதிக்கின்றன. அந்த ‘இழையை’ பலமாக்குகிறது. அது கிறிஸ்தவர்களின் இரகசிய கூட்டத்தை அறிந்துகொள்ள வைக்கிறது. அதை ஒளிந்திருந்து பார்க்கும், கேட்கும் ஆவலை கொடுக்கிறது. சுடுகாட்டினூடாக இருளோடு இருளாக அவனை நகர்த்துகிறது. ஏமாற்றம்தான் எஞ்சுகிறது. பிறகு ரோமாபுரியை தீ பொறுப்பேற்று நாசம் புரிந்ததை எதிர்பாராமல் காண்கிறான். “இதற்குக் காரணம் கிறிஸ்தவர்கள்தான்” என கூக்குரல் எழும்புகிறது. பாரபாஸ் அவனை சுற்றிய இழையால் இன்னொரு உலகத்துள் தூக்கி வீசப்படுகிறான். ஸீஸரேதான் தீயை கிளப்பிவிட்டு கிறிஸ்தவரை குற்றஞ்சாட்டினான் என்பதை பாரபாஸ் அறிந்திருக்கவில்லை. கிறிஸ்தவர்களின் மரணத்துக்கான தீ அது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. தனது சிலுவையில் தொங்கிய ‘கடவுளரே’ வந்துவிட்டார். அவரது சாம்ராச்சியம் உருவாகப்போகிறது. அதற்கு இப்போ இருக்கும் எல்லாம் எரிந்தாக வேண்டும் என அந்த மர்ம இழை அவனை சுற்றி இறுக்கத் தொடங்குகிறது. அவன் பிரமைபிடித்து கொள்ளியுடன் சுழன்று சுழன்று தன்னால் முடிந்தவரை தீயை வியாபிக்க வைத்தான். கைதுசெய்யப்பட்டான். பிரமை தீர்ந்துபோயிற்று. ஸீஸரின் வஞ்சனையின் வலையில் கிறிஸ்தவர்களின் உயிர் மட்டுமல்ல எந்த நம்பிக்கையுமற்ற பாரபாஸின் உயிரும் வீழ்ந்தது. சிலுவையில் அவனும் அறையப்படுகிறான்.கொல்கொத்தா மலையில் தனது சிலுவையில் அறையப்பட்ட அந்த மனிதனை பாரபாஸ் ஞாபகத்தில் அறைந்து பின்தொடரும் ‘இழையால்’ பிணைத்துக் கொண்டான்.
“தான் வாழ்ந்த வாழ்வுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா? அதில்கூட இவனுக்கு நம்பிக்கை வரவில்லையே. நம்பிக்கை என்பதே இவன் அறியாத விசயம். இவன் எப்படி?… இவனைப் பற்றி என்ன நிச்சயமாகச் சொல்ல முடியும்?…”. சிறையிலடைக்கப்பட்டிருந்த அந்த பழுத்த அனுபவமுள்ள கிழவன் மற்றைய கிறிஸ்தவ கைதிகளைப் பார்த்து இப்படி சொல்லிக்கொண்டிருந்தான்!.
இப்போ அவர்களுடன் சேர்த்து பாரபாஸினது உயிரையும் குடித்து சிலுவை சிவப்பாகிக் கிடந்தது. இருள் கவ்வவுமில்லை. ஒளிவட்டம் தோன்றவுமில்லை!.
- 29072023
- fb link: https://www.facebook.com/ravindran.pa/posts/pfbid02uuERt8sSx51M9geCuzC2b1jEutrTZWh4EfP42jqBedKXdoRjmJPQGTo8HR8VivBAl
பாரபாஸ்
தமிழில் : க.நா.சுப்பிரமண்யம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கம்: 128
இந்த நாவல் 1962 இல் படமாக்கப்பட்டது.
