புலம்பெயர் இலக்கியம்

ஒரு பார்வை

அண்மைக் காலமாக தமிழில் புலம்பெயர் இலக்கியம் குறித்த கேள்விகள் வரைவுகள் அதிகம் பேசப்படுவனவாக மாறியுள்ளன. தமிழகத்தில் முதலில் அதாவது 90 களின் முற்பகுதியில் புலம்பெயர் இலக்கியத்தை அறிமுகமாக்கிய வரலாற்றுத் தொடக்கம் நிறப்பிரிகை குழுவுக்கே உள்ளது என நினைக்கிறேன். 1996 இல் பாண்டிச் சேரியில் ஒரு சந்திப்பில் புலம்பெயர் இலக்கியம் என்பது புலம்பெயர்ந்த தமிழக மக்களை உள்ளடக்காதா என ரவிக்குமார் கேட்டிருந்தார். அது இப்போ பலரும் எழுப்புகிற கேள்வியாகியிருக்கிறது புலம்பல் இலக்கியம் என தமிழக எழுத்தாளர்கள் சிலராலும் ஈழத்து எழுத்தாளர்கள் சிலராலும் அப்போ எள்ளிநகையாடப்பட்ட காலகட்டம் அது. இன்று அது பேசப்படும் பொருளாக மாறியிருக்கிறது. அண்மைக் காலமாக அதன் வரையறைகளை கேள்விக்கு உள்ளாக்குகிற, எல்லைகளை விசாலிக்கிற கருத்துக்கள் மேலெழுந்திருப்பது வரவேற்கக் கூடியதுதான். மாறாக அதை ஒரு சர்ச்சையாகப் பார்க்க வேண்டியதில்லை. இதில் என் தரப்பிலான கருத்தை இங்கு முன்வைக்கிறேன். அவ்வளவுதான்.

புலம்பெயர் இலக்கியம் எனவும் புகலிட இலக்கியம் எனவும் வேறுபடுத்தலின்றி ஒரே அர்த்தத்தில் மாறிமாறி பாவிக்கப்படுவது வழமையாக இருக்கிறது.  இது குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. அதை தெளிவாக வேறுபடுத்தி எழுத முயற்சித்திருக்கிறேன். புலம்பெயர் இலக்கியம் என்பதை Diaspora Literature எனவும் புகலிட இலக்கியத்தை Literature in Exile எனவும் வகைப்படுத்த முடியும். Exile என்பது அரசியல் புகலிடம் தேடி வேற்று நாட்டுக்குள் பெயர்தல் / வலிந்த பெயர்ப்பு என்பதாகும்.

Diaspora என்பது ஆரம்ப காலங்களில் வலிந்த பெயர்ப்பு என்ற அர்த்தத்தில் பிறந்திருந்தாலும் காலாகாலமாக அதன் வரையறை மாற்றமடைந்து கொண்டே வந்திருக்கிறது. இன்றுவரை அதன் வரையறை விவாதப் பொருளாகவே உள்ளது. 2019 இல் IMO (International Migration Law) இன் பொதுவான வரையறுப்பின்படி தனது சொந்த நாட்டோடு தன்னை அடையாளப்படுத்தியபடி, வேற்றுநாட்டில் வாழ்பவர்களை குறிக்கும் பதம் புலம்பெயர்வு (Diaspora) என்றாகிறது. அவர்களின் பிள்ளைகள் வேற்று நாட்டில் பிறந்தாலும் ஏதோவொரு வகையில் தனது பெற்றோரின் நாட்டுடன் தொடர்புபட்டிருந்தால் அவர்களும் இதற்குள் அடங்குவர். அந்தத் தொடர்பு என்பது மொழி, பண்பாடு, மதம், வரலாறு, பாதிப்புகள் என்பவற்றினூடாக பேணப்படுவதைக் குறிக்கிறது.

மேலும் டயஸ்போராவை வகைப்படுத்தும்போது,

– சுயாதீனமான பெயர்தல் அல்லது வலிந்த பெயர்ப்பு.

– சொந்தநாட்டின் மீதான கருத்துநிலைப்பட்ட கூட்டு நினைவுப்புலம் (memory) அல்லது புனைவுப்புலம் (myth) அல்லது இரண்டும்.

– சொந்த நாட்டுடனான தொடர்ச்சியான உறவுநிலை அல்லது தொடர்பு

– காலத்தால் நீடிக்கும் கூட்டு மனவுணர்வு

என  சொல்கிறது. இந்த அடிப்படையில் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது அவர்களின் வழித்தோன்றல்களின் அடையாளமும் உணர்வுநிலையும் அவர்களின் புலம்பெயர்வு அனுபவத்தாலும் அதன் பின்புலத்தாலும் வடிவமைக்கப்படுகிறது என்கிறது.

புலம்பெயர்வு

தமிழர்களின் புலம்பெயர்தல் சங்க காலத்திலிருந்தே ஆரம்பித்த ஒன்றுதான். புலம்பெயர்வு என்பது தனது சந்ததி பிறந்து வாழ்ந்த நாட்டிலிருந்து பெயர்ந்து அல்லது பெயர்க்கப்பட்டு வேறு நாட்டுக்கு போய்ச் சேர்வதில் ஆரம்பிக்கிறது. காலனியாதிக்கத்தின் பின்னான பெரும் புலம்பெயர்வுகள் காலனியாதிக்கவாதிகளால் பலவந்தமாகவோ சூழ்ச்சிகரமாகவோ கூலி உழைப்பாளர்களாக மற்றைய நாடுகளுக்கு இடம்மாற்றப்பட்டதிலிருந்து ஆரம்பித்தது. இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்ய தமிழகத்திலிருந்து இலங்கை மலையகத்துக்கு இவ்வாறான பெயர்ச்சி நடந்தது ஒரு உதாரணம். மொரிசியஸ், தென்னாபிரிக்கா, பிஜி தீவுகள் என பல உதாரண பெயர்ச்சிகள் உள்ளன. அவர்கள் நாடற்றவர்களாக உழலும் காலவெளியில் அலைந்து திரிந்த வரலாறு கொண்டவர்கள்.

அதைவிட பொருளாதார அல்லது கல்வி தொழில் வாய்ப்புகள் தேடியதான சுயமான புலம்பெயர்வும் இருக்கிறது. இது பெரும்பாலும் நடுத்தர அல்லது மேல்தட்டு வர்க்கத்தினருக்கானதாக இருந்தது. அது காலனியவாதிகள் நிகழ்த்திய புலப்பெயர்வு போலல்ல. சுயமாக புலம்பெயர்ந்த இவர்கள் குறித்த காலத்துடன் சொந்த நாட்டுக்கு திரும்புபவர்களாகவோ அல்லது நிரந்தரமாக அந் நாடுகளில் குடியிருக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றவர்களாகவோ இருந்தார்கள்.

ஈழத் தமிழர்கள் அரசியல் தஞ்சம் கோரி (புகலிடம் தேடி) மேற்குலகுக்கு பெயர்ந்தமையானது மெல்ல 70 களில் மிகச் சிறிய அளவில் ஆரம்பித்திருந்தது என்றபோதும், 1983 இனக்கலவரத்தின் பின்னர் நிகழ்ந்த பெயர்வு ஒரு வீக்க நிலைபோல அமைந்தது. நடுத்தர வர்க்கத்தினர் -அதன் கீழ்த்தட்டு நிலையில் இருந்தவர்கள் உட்பட- மேற்கு நாடுகளுக்கு புகலிடம் தேடி பெயரக்கூடிய வசதியும் சந்தர்ப்பமும் கிடைத்தன. வர்க்க நிலையில் அடித்தட்டு மக்களாக அல்லது விளிம்புநிலை மனிதர்களாக இருந்தவர்களில் ஒரு பகுதியினர் உயிர்ப் பாதுகாப்புக்காக உள் நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தபடி இருந்தார்கள். இவர்கள் “இடம்பெயர்ந்தவர்கள்” (Displaced People) என்ற வரைபுக்குள் வருபவர்கள். இவர்களில் இன்னொரு பகுதியினர் தமிழகத்துக்கு பெயர்ந்தனர். 30 ஆண்டுகள் கடந்தும் அவர்கள் அகதி வாழ்நிலையிலேயே விடப்பட்டிருக்கிறார்கள். அடிப்படை வசதிகள் அற்ற வாழ்விடங்கள், காவல்துறை கண்காணிப்புகள், கல்வி வசதி சமனின்மை, வேலைவாய்ப்பில் தூர நிறுத்தப்படல் என பாரபட்சத்துக்கும் அந்நியத்தன்மைக்கும் இரையாகி முகாம் வாழ்விலேயே விடப்பட்டிருக்கிறார்கள்.

மேற்குலக அகதிகளும் தமிழக அகதிகளும் ஒருவருக்கொருவர் முற்றாக வேறுபட்ட வாழ்வும் அனுபவமும் கொண்டவர்கள். தமிழக அகதிகளுக்கு சாதகமாக அண்மித்து இருந்த ஒரே மொழி, பண்பாடு,  பழக்கவழக்கங்கள், மதம் என்பன மேற்குலக அகதிகளுக்கு இருக்கவேயில்லை. முழுவதுமாக அந்நியப்பட்டு ஒரு வேற்றுக் கிரகத்தில் விடப்பட்டதுபோல் அந்தரித்தார்கள். இருந்தபோதும் ஒப்பீட்டளவில் காலவோட்டத்தில் வசதி வாய்ப்புகள், உரிமைகள், பிரசாவுரிமை என எல்லாவற்றிலும் மேற்குலக ஜனநாயகப் கட்டமைப்பின் நிழலில் பயனடைந்தார்கள்.

மேற்குலகுக்கு புகலிடம் தேடி வந்தவர்களில் ஒரு பகுதியினர் அரசியல் ரீதியில் இருப்பின் மீதான அச்சுறுத்தலை எதிர்கொண்டு வெளியேறியவர்களாக இருந்த அதேவேளை, இன்னொரு பகுதியினர்  பொருளாதார வாய்ப்புகளை கருத்திற்கொண்டு இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டனர். தமிழர்கள் அரசியல் அகதியா, பொருளாதார அகதியா என விவாதங்கள் எழும்பின. இருப்பின் மீதும் வாழ்வாதாரத்தின் மீதுமான அச்சுறுத்தல் நிகழும் ஓர் அரசியல் நிலைமையில் (அதாவது போர் நிலைமையில்) பொருளாதாரப் பிரச்சினையும் ஓர் அரசியல் பிரச்சினைதான் என்ற வாதங்கள் மேற்குலக இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டன.

புகலிட இலக்கியம் (Exile Literature / Literature in Exile)

மேற்குலகுக்கு புகலிடம் தேடி வந்தவர்களில் ஒரு பிரிவினர் இலங்கையில் அரச இயந்திரத்தின் நேரடி பாதிப்புக்கு முகங்கொடுத்தவர்களாக இருந்தனர். இன்னொரு முக்கியமான பிரிவினர் விடுதலை இயக்கங்களின் அராஜகங்களுக்கு முகங்கொடுத்தவர்களாக இருந்தனர். சக இயக்க பாசிச நடவடிக்கைகளாலோ அல்லது இயக்க உள் பாசிச நடவடிக்கைகளாலோ பாதிக்கப்பட்டு தப்பியோடிவந்தவர்களாக இருந்தனர். இவர்கள் அரசியல் முனைப்பும் தீவிரமும் கொண்டவர்களாக இருந்தனர். இவர்கள் படிப்படியாக சமூக உணர்வு கொண்ட எல்லா மனிதர்களுடனும் இணைந்துகொண்டு, எல்லாவற்றையும் கேள்விகேட்கவும் அதிகாரங்களை எதிர்த்து நிற்கவும் செய்தார்கள். மாற்று அரசியல் இயங்குசக்தியாக இருந்தனர் எனலாம். அரச அதிகாரத்துவத்தை மட்டுமல்ல இயக்கங்களின் அதிகாரத்துவத்தையும் நேர்மையாக எதிர்த்தார்கள். அத்தோடு சமூக ஒடுக்குமுறைகளை நிகழ்த்தும் சமூகசக்திகளின் அதிகாரத்துவ கருத்துநிலைகளுக்கு எதிராகவும் அவர்கள் செயற்பட்டனர்.

இதன் களமாக சிறுபத்திரிகைகள் -சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே, கொலண்ட், டென்மார்க் போன்ற- ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் வெளிவரத் தொடங்கின. இதன் மறுதலையாக அதிகாரத்துவ சக்தியாக இயங்கிய புலிகள் அமைப்பின் கிளைகளிலிருந்தும் ஒருசில சிறுபத்திரிகைகள் வெளிவந்தன. அவை பிரச்சார நோக்கம் கொண்டவையாகவே இருந்தன. தமது அதிகாரத்துவத்தை எதிர்த்து நின்ற, அல்லது தம்மை விமர்சித்த சிறுபத்திரிகைகளின் மாற்றுக் குரலுக்கு புலிகள் அச்சுறுத்தலாக இருந்தனர். புலிகளின் அதிகாரத்துவத்துக்கு எதிராகவும் படுகொலைகளுக்கு எதிராகவும் சக இனங்களின் மீதான கூட்டுப் படுகொலை மற்றும் முஸ்லிம் மக்களின் வெளியேற்ற வரலாற்று அசிங்கத்துக்கு எதிராகவும் சிறு பத்திரிகைகள் வெளிப்படையாக எழுதின. இன்னொரு புறம் சமூக ஒடுக்குமுறைக்குள்ளாகும் பெண்களின் குரலாக பெண்களுக்கான தனிப் பத்திரிகைகளும் ஜேர்மனி, நோர்வே நாடுகளிலிருந்து வெளிவரத் தொடங்கின. இச் செயற்பாடுகள் புகலிட இலக்கியத்தை இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் நிலைக்கு இட்டுச்சென்றன.

1983 இலிருந்து அடுத்தடுத்து தோற்றம் கொண்டன, இச் சிறு பத்திரிகைகள். கணனிகளின் செயற்பாடு கைவசப்பட்டிராத காலம் அது. அப்போ மின்னஞ்சலோ இணையமோ எதுவும் கிடையாது. கையெழுத்துப் பிரதிகளாகவே அவை வெளிவரத் தொடங்கின. பெரும்பாலும் அதை பிரதிபண்ணுவதிலிருந்து ‘பைன்டிங்’ செய்வதுவரை அதிக நேரத்தையும் உழைப்பையும் செலுத்த வேண்டியிருந்தது. அதன் விநியோகம் என்பது பெரும் உழைப்பாகவே இருந்தது. புகையிரத நிலையங்கள் விழாக்கள் என தமிழர்களை சந்திக்கக்கூடிய இடங்களில் வைத்து தேடித்தேடி விநியோகிக்க வேண்டியிருந்தது. அவை கூட்டு உழைப்புடன் சாத்தியமாகின. இந்த உழைப்பு படிப்படியாக அதிக பிரதிகளை அச்சகங்களில் கொடுத்து பதிப்பிக்க வேண்டிய நிலைக்கு உயர்த்தியது. பின்னர் கணனிப் பயன்பாடும் வந்து சேர சிறுபத்திரிகைகள் புதுவடிவங்களாகவும் உற்சாகம் தருவனவாகவும் மாறின. உதாரணமாக சொல்வதானால், கணனிக்கு மாறிய பின் சுவிசிலிருந்து நாம் வெளியிட்ட மனிதம் சஞ்சிகை 600 பிரதிகள்வரை அச்சடிக்கப்பட்டன. ஒவ்வொரு இதழிலும் சுமார் 150 பிரதிகள் இலங்கை இந்திய நாடுகளுக்கு (இலவசமாக) அனுப்பிவைக்கப்பட்டன. இவ்வாறே பல சிறுபத்திரிகைகளும் பெரும் உழைப்பை செலுத்தி வெளிவந்துகொண்டிருந்தன.

இலங்கையில் ஜனநாக விரோத அரசினதும், எதேச்சாதிகாரப் போக்குக் கொண்ட இயக்கங்களினதும் -குறிப்பாக புலிகளின்- நடவடிக்கைகள் அங்கு எல்லா குரல்களையும் நசுக்கின. மீறி செயற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர். எந்த மாற்றுக் குரலும் எழவிடாமல் அமைதியாக்கப்பட்டிருந்த சூழலில், இச் சிறுபத்திரிகைகள் இங்குள்ள ஜனநாயக சூழலை பயன்படுத்தி மாற்றுக் குரல்களை எழுப்பி எழுதின. அது சகல தரப்பு அதிகாரங்களுக்கும் எதிரான குரலாக விரிவான தளத்தில் இருந்தது.

ஆக புகலிடத்தில் சஞ்சிகைகளின் தோற்றம் என்பது இலக்கியத்தை அடித்தளமாகக் கொண்டு எழவில்லை. அரசியலை அடித்தளமாகக் கொண்டதாக இருந்தது. அதுவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிய போதிலும் இவ் எழுத்துச் செயற்பாடு தீவிரமாகவே முன்னெடுக்கப்பட்டது. இதுவே அப்போது வெளிவந்துகொண்டிருந்த சுமார் 40 சஞ்சிகைகளில் பலவற்றை ஒன்றிணைத்தும் வைத்திருந்தது. அச் சஞ்சிகைகள் அரசியலோடு இலக்கிய ஆக்கங்களையும் இணைத்து வெளிவரத் தொடங்கின என்பதே சரியானது. ஆக பெரும்பாலான சஞ்சிகைகளும் இலக்கியம் படைக்கவென தோன்றியவை அல்ல. அவைகளுக்குள் அடிப்படையில் ஓர் அரசியல் இருந்தது. அது இலங்கை இந்திய அரசுகளோ, இயக்கங்களோ, சமூக ஆதிக்க சக்திகளோ எல்லாவகை அதிகாரங்களுக்கும் எதிரான மாற்றுக் குரல் என்பதாக இருந்தது. அது தொடர்ந்து நடந்துவந்த புகலிட இலக்கியச் சந்திப்பினூடாக ஒன்றுகுவிக்கப்பட்டது. இதை குறுக்கி வியாக்கியானம் அளித்த புலிகள் அதிகார எதிர்ப்பாளர்களாக செயற்பட்ட சிறுபத்திரிகைகளையும் இலக்கியச் சந்திப்பையும் புலி எதிர்ப்பாளர்கள் என்று முத்திரை குத்தினார்கள். விமர்சிப்பவர்களை தமிழிச்சியின் வயிற்றில் பிறக்காதவர்கள் எனவும், துரோகிகள் எனவும் தீர்ப்பளிக்கிற வன்மம் வரை அவர்கள் போனார்கள். புகலிடத்தில் அவர்களை எதிர்கொள்வதே முதன்மையான அதிகார எதிர்ப்புநிலையாக இருந்தது.

புகலிட தேசத்தில் இந்துக் கோவில்களையும் தமிழ்ப் பாடசாலை, வாசிகசாலை போன்ற சமூக நிறுவனங்களையும், தொலைக்காட்சி வானொலி போன்ற தொடர்பு ஊடகங்களையும் தம்வசம் பறித்தெடுத்த புலிகளின் அதிகாரத்துவப் போக்கு சஞ்சிகைகள் விடயத்தில் தோற்றுத்தான் போனது. அதற்கு இச் சஞ்சிகைகள் தோளோடு தோளாக நின்றமைதான் காரணம். பிரான்ஸ், நோர்வே நாடுகளில் இரு தோழர்களை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியமை, கனடாவில் தேடகம் நூல்நிலையத்தை எரித்தமை, தொலைபேசி மிரட்டல்கள், எதிர்ப்பிரச்சாரம் என புலிகள் முயற்சித்துப் பார்த்தபோதும் அவர்களால் முடியாமல் போனது. புகலிட இலக்கியம் என்பதை மாற்றுக் குரலாளர்கள் தமது சிறுபத்திரிகைச் செயற்பாட்டின் மூலம் தம்வசமாக்கினார்கள்.

இவ்வாறான ஓர் அரசியல் செயற்பாட்டில் வேர் கொண்டதுதான் புகலிட இலக்கியம். புலிகளின் உச்ச அராஜகமாக, இலக்கியச் சந்திப்பின் ஒரு முக்கிய செயற்பாட்டாளராக இருந்த தோழர் சபாலிங்கம் 1994 இல் அவரது வீட்டில் வைத்து பாரிசில் படுகொலை செய்யப்பட்டார். இது மாற்றுக் குரலாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சபாலிங்கத்தின் கொலையுடன் அச்சத்தால் சில பத்திரிகைகள் நின்றுபோயின.  சந்தாவை நம்பி ஏமாந்து காசுப் பிரச்சினையில் ஈடாடியவையும் நின்று போயின. ஒருசில பத்திரிகைகள் உள்முரண்பாட்டில் நின்று போயின. அதன்பிறகும் சில பத்திரிகைகள் தொடர்ந்து வெளிவந்தன. சில புதிதாக வெளிவரத் தொடங்கின. புகலிட இலக்கியச் சந்திப்புகள் தொடர்ந்து நடந்தே வந்தன. 

90 களின் நடுப் பகுதியில் ஐரோப்பிய நாடுகள் தமது பூகோள அரசியலின் சதுரங்கத்தில் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து அவர்களை ஒடுக்கியதால் புலிகளின் பல பொறுப்பாளர்கள் தலைமறைவானார்கள் அல்லது பொலிசாரால் விசாரிக்கப்பட்டார்கள். இயக்கக் காரியாலயங்களில் பதுக்கி வைக்கப்பட்ட பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிலர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டார்கள். இந் நடவடிக்கைகளால் அவர்களின் புகலிட அராஜகங்கள் 90 களின் நடுப் பகுதியுடன் கிட்டத்தட்ட ஓய்வுக்கு வந்தன. புகலிட இலக்கியத்தின் உள்ளார்ந்த அரசியல் சகல அதிகாரங்களுக்கும் எதிரான குரலாக அரசியல் விமர்சனங்களிலும் இலக்கியப் படைப்புகளிலும் தொடர்ந்தன. இவ்வாறான தமது எழுத்துக்கு தொடர்ந்து நேர்மையாக நடைமுறை வாழ்வில் அவர்களில் எல்லோருமே இருந்தார்களா என்று பின்னாளில் எழுந்த கேள்வியை மேற்சொன்ன பகுப்பாய்வு அழித்து துடைத்துவிட முடியாது என்பதையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆக, புகலிட இலக்கியத்தின் வேரானது அதிகாரத்துவங்களுக்கு எதிரான அரசியல் என்பதும் அது ஒரு அரசியல் எழுத்துச் செயற்பாட்டை நிகழ்த்தியது என்பதும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாறாக அமைந்ததால் புகலிட இலக்கியம் என்ற வகைமை அழுத்தமானதாக பதிவானது.

புலம்பெயர் இலக்கியம் (Diaspora Literature)

வேற்று நாடுகளில் புகலிடம் கோருதல் (அரசியல் தஞ்சம் கோருதல்) என்பது அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் நிகழ்வது. அதாவது வலிந்த பெயர்வு / பெயர்ப்பு என (exile குறித்து) பார்த்தோம். வேற்று நாடுகளுக்கு புலம்பெயர்தல் என்பது சுயவிருப்பத்திலான பெயர்வாக இருக்கலாம், குடியேற்றமாக இருக்கலாம், வலிந்த பெயர்ப்பாகவும் இருக்கலாம் என ஆரம்பத்தில் (diaspora குறித்து) பார்த்தோம். அதனால் புகலிட இலக்கியம் இடம் சார்ந்தும், புலம்பெயர் இலக்கியம் இடம் உள்ளடக்கம் இரண்டும் சார்ந்தும் மதிப்பிடப்பட வேண்டியதாகிறது. புகலிட இலக்கியம் தனித்துவமானதாக இருக்கும் அதேவேளை, புலம்பெயர் இலக்கியத்தின் ஓர் உட்பிரிவாகவும் இருக்கிறது. புகலிட இலக்கியம் என்பதையும் புலம்பெயர் இலக்கியம் என்பதையும் ஒரே அர்த்தத்தில் ஒன்றாக போட்டு குழப்பிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

புலம்பெயர் இலக்கியத்தை வகைப்படுத்த முயல்வோமானால்,

  1. புகலிட இலக்கிய எழுத்துகள். இது எல்லா (தரப்பினதும்) அதிகாரத்துவங்களையும் எதிர்த்த மாற்றுக் குரல் ஆக இருந்தது.

2. மாற்றுக் குரலுக்கு வெளியில் இயங்கியதும், ஒருதரப்பு அதிகாரத்துவத்துக்கு எதிராக அல்லது ஒருதரப்பு அதிகாரத்துவத்தைக் கண்டுகொள்ளாத, சிலவேளைகளில் நியாயப்படுத்துகிற குரல் சார்ந்ததுமான எழுத்துகள்.

3. இவை எதுவுமின்றி தனித்து சுயமான இலக்கியப் போக்குடன் இயங்கியவர்கள்இ இயங்குபவர்களின் எழுத்துக்கள்.

4. தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் முகாமிலிருந்து தோன்றியுள்ள “அகதி இலக்கியம்”.

5. குடியேறியேரின் எழுத்துகள் (புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழக தமிழர்களிடமிருந்து வருகிற எழுத்துக்களும் இதற்குள் அடங்கும்)

6. மத்திய கிழக்கிலிருந்து வெளிவருகிற எழுத்துகள். இது பெருமளவில் வராதபோதும் அதற்கான சூழல் வாய்க்கப் பெறுகிறபோது அதிகமாக வெளிவருவதற்கான சாத்தியத்தை மறுத்துவிட முடியாது. ஏனெனில் அவர்களின் வாழ்வுக்கான போராட்டம் இன்னொரு பரிணாமம் கொண்டது என்றளவில் அவ்வாறான எழுத்துகளுக்கான களம் உயிர்ப்புடன் இருக்கவே செய்கிறது. இதில் மத்திய கிழக்கில் வாழும் ஈழ மற்றும் தமிழக மக்களின் தமிழ் எழுத்துகள் உள்ளடங்கும்.

இப் பிரிவுகளின் மொத்தத்துவமாக இருக்கும் புலம்பெயர் இலக்கியத்தை குறிப்பிட்ட எழுத்தாளர்களின் பிம்பமாக மாற்றியதில் அவர்களுக்கு மட்டுமல்ல, சில தமிழக எழுத்தாளர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. பதிப்பகங்களுக்கு சந்தை உண்டு. புதிய வாழ்வனுபவங்கள், இருப்புக் குறித்த சிக்கல்கள், பண்பாட்டு முரண்களின் மோதுகை, புதிய அறிதல்கள், தொடர்பேதுமற்ற தேசத்திலான அகதி மனவுணர்வு, வெள்ளை மேலாதிக்கத்தின் நேரடி மற்றும் நுண் அரசியல் அனுபவங்கள்  என பல புதிய பரிமாணங்களை தமிழ் இலக்கியத்துக் புலம்பெயர் இலக்கியம் வழங்குகிறது, இந்த புதிய தளத்தில் எல்லா பாலின எழுத்தாளர்களினதும் பங்கு இருக்கிறது.

அகதி இலக்கியம்

போரினால் தமிழகத்துக்கு புகலிடம் தேடிச் சென்றவர்கள் வர்க்கநிலையில் கீழ்மட்டத்தில் இருந்தவர்களாவர். நடுத்தர வர்க்கத்தினர் எல்லாம் மேற்குநாடுகளுக்கு செல்ல எந்த பொருளாதார வசதிவாய்ப்புகளும் அற்ற இவர்கள் தமிழகத்துக்கு சென்றார்கள். இன்றுவரை அதாவது 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர்கள் அகதி நிலையிலேயே வாழ விடப்பட்டிருக்கிறார்கள். மூன்றாவது சந்ததிகள்கூட இந்தியப் பிரஜையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேற்குலகில் அகதிகள்  என்ற அந்தஸ்து (அவர்கள் திருப்பி அனுப்பப்படாத பட்சத்தில்) படிப்படியான வதிவிட அனுமதி முறைமையினால் நிலைமாற்றம் அடைந்து இறுதியில் இந் நாட்டு பிரஜை அந்தஸ்தை பெற்றுக் கொடுக்கிறது. ஆனால் தமிழகத்தில் அகதியாக சென்றவர்களின் நிலை அவ்வகைப்பட்டதல்ல. மூன்று தலைமுறையை கண்டபின்னும் அகதிகளாகவே இருக்கிறார்கள். மேற்குலக, தமிழக அகதிகளின் அனுபவங்களும், வாழ்வுக்கான போராட்டங்களும், பொருளாதார நிலைமைகளும், வசதிவாய்ப்பு வாய்ப்பின்மைகளும், புறச்சூழல்களின் சாதகமும் சாதகமின்மையும், மனநிலைகளும் என எல்லாமும் முற்றாக வேறுபட்டவைகளாக இருக்கின்றன. அதனால் அவர்கள் “அகதிகள் இலக்கியம்” என்ற வகைமையை அறிவித்து நம்முன்னால் வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அது அவர்களின் தேர்வு.

இந்த 30 வருடத்துக்கு மேலான அகதி வாழ்வில் அவர்களிடமிருந்து 9 படைப்புகளே வந்திருக்கிறது. எழுதுவதற்கான வாசிப்பதற்கான சூழ்நிலை, வசதிகள், மனநிலை, பொருளாதாரம், தனிமை போன்றவை மேற்குலக அகதிகளுக்கு வாய்த்தது போல் அமைய இடமேயில்லை. இதற்குள்ளாலும் அவர்கள் எழுதத்தான் செய்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

தமிழக முகாம் அகதிகளிடமிருந்து வரும் எழுத்துக்கள் புலம்பெயர் இலக்கியத்துள் உள்ளமைவன. அவர்களின் எழுத்துகளின் மீதான -மேற்குலக தமிழ் இலக்கியவாதிகளின்- புறக்கணிப்பு அல்லது கண்டுகொள்ளாமை அடிப்படையில் வர்க்க மனோபாவம் கொண்டது. காரணம் மேற்குலக புலப்பெயர்வு பெருமளவில் நடுத்தர அல்லது மேல்தட்டு யாழ்ப்பாண சமூகத்திலிருந்து நிகழ்ந்தது. அத்தோடு யாழ் மையவாதத்தை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டிருப்பவர்களும் தமது வாழ்வியல் முறையை, நுகர்வுக் கலாச்சாரத்தை, கல்வித்துறைத் தேர்வுகளை யாழ் சமூக மனப்பான்மையுடனேயே அமைத்துக் கொள்ள முயல்கின்றனர். மேற்குலக வர்க்கப் பின்புலம் அதற்கு இன்னொரு உந்துதலாக அமைகிறது. இன்னொரு காரணமும் பரிசீலிக்கத் தக்கது. இங்குள்ள ஈழத் தமிழர்கள் பலரிடம் அவர்களை  அறியாமலேயே உள்ளுறைந்திருக்கும் காலனிய மனோபாவ பாதிப்புகளும், அதன்வழி மேற்குலக அகதியாக இருப்பதை தகுதியாக கொள்ளும் போக்கும் காணப்படுகிறது. இது இலக்கியவாதிகளிலும் உள்ளுறைந்திருப்பதான சந்தேகம் இருக்கவே செய்கிறது. தமிழக அகதிகள் முகாமிலிருந்து வந்த எழுத்துக்களை கண்டுகொள்ளாதிருந்தமைக்கு இதுவும் காரணமாகிறது எனலாம்.

சந்தை

புலம்பெயர் இலக்கியத்தை அளவுக்கதிகமாக முன்னிலைப்படுத்துவதின் பின்னால் இரு காரணிகள் இருக்கின்றன. ஈழப்போராட்டம் தமிழக மக்களிடம் ஏற்படுத்தியிருந்த ஆத்மார்த்தமான பாதிப்பும் ஒரு கழிவிரக்க நிலையும் ஈழம் என்ற சொல்லைச் சுற்றி ஒரு ஆதரவான மனநிலையைக் கட்டமைத்திருந்தன. அது உண்மைகளை விடவும் கதையாடல்களையே அதிகம் கொண்டிருப்பவை. இத் தளத்தின் மேல் கட்டப்பட்டதுதான் அந்தச் சந்தை. அதை பல தமிழக பதிப்பகங்கள் இனங்கண்டு பயன்படுத்தத் தொடங்கின. நல்ல பல படைப்புகள் வெளிவருகிற அதேவேளை, எந்த இலக்கிய தரமும் பார்க்காமலே காசை வாங்கி -அதிலும் ஏமாற்றுகள் செய்து- புலம்பெயர் எழுத்துகளை அச்சிட்டு வெளியிடுகிற வேலையையும் சில பதிப்பகங்கள் செய்கின்றன. இந்த சந்தை பணபலமற்ற தமிழக முகாம் அகதிகளின் இலக்கியத்தை புலம்பெயர் இலக்கியமாக கண்டுகொள்வதில் நாட்டமில்லாத அல்லது முன்னிலைப்படுத்தாத போக்கை கடைப்பிடித்திருக்கலாம். அதற்கான சாத்தியத்தை மறுத்துவிட முடியாது.

மலையக தமிழ் இலக்கியம்

அவர்கள் 200 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு காலனிய ஆதிக்கவாதிகளால் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் படக்கூடியதான அச்சத்தில் வைத்திருக்கப்பட்ட நிலை வரையிலான அல்லது இந்தியாவை தமது தாய் மண்ணாக உணர்ந்தவரையான காலப் பகுதியில் அவர்களின் வாய்மொழி இலக்கியம் உட்பட இலக்கியப் போக்குகள் அகதிநிலையை பிரதிலித்தன. நாடற்றவர்களாக அந்தரத்தில் வைத்து ஆட்டப்பட்ட அந்த மக்கள் தமது வலிந்த புலப்பெயர்வு தந்த அவலங்களை இலக்கியத்தில் பிரதிபலித்தார்கள். அதாவது அவர்கள் புலம்பெயர் தமிழ் இலக்கிய வகைமையின் முன்னோர் என்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் இலங்கைப் பிரஜைகளாக தம்மை உணரத் தொடங்கி பல வருடங்களாகிறது. இப்போ ஓர் இலங்கைப் பிரசையாக தமது உரிமைகளுக்கான வாழ்வியல் போராட்டம் அவர்களது. அவர்களின் இலக்கியம் புலம்பெயர் இலக்கிய வகைமையாக இருந்ததா இல்லையா என்ற விவாதத்தைத் தாண்டி அவர்களின் வாழ்வியல் யதார்த்த நிலைமை முற்றிலும் வேறான இடத்தை வந்தடைந்திருக்கிறது என்பதை கவனம் கொள்ள வேண்டும். அவர்களின் இலக்கியம் மலையகத் தமிழ் இலக்கியமாகி வியாபித்து வளர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. அதாவது ஈழத் தமிழ் இலக்கியத்தின் உள்ளார்ந்த ஒரு பிரிவாக தனித்தன்மையோடு விளங்குகிறது.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்ற வால் அடையாளத்தை அவர்களிடம் தக்கவைக்கிற வேலையில் இலங்கை அரசு, இந்திய அரசு, ஆர்.எஸ்.எஸ், இலங்கை இனவாத கட்சிகள், பேரினவாத அமைப்புகள், மலையக தரகு அரசியல் கட்சிகள் எல்லோருமே -தத்தமது அரசியல் நலன் சார்ந்து- கவனமாக இருக்கிறார்கள். அந்த மக்கள் இலங்கை மலையகத் தமிழர்கள். இலங்கைப் பிரசைகள். அவர்களது இலக்கியம் புலம்பெயர் இலக்கியம் அல்ல. மலையத் தமிழ் இலக்கியம்.

இவ்வாறே மலேசியத் தமிழர்களின் புலம்பெயர்வு நடந்து பல ஆண்டு காலமாகிவிட்ட நிலையில் அவர்களிடமிருந்து வருகிற எழுத்துக்களை அவர்கள் மலேசிய தமிழ் இலக்கியம் என்ற வகைமைக்குள்ளேயே அடக்குகின்றனர். புலம்பெயர் இலக்கிய வகைமைக்குள் அது வராது.

புலம்பெயர் இலக்கியத்தின் எதிர்காலம்

மேற்குலகில் இந்த சந்ததியும் அடுத்த சந்ததியில் ஒரு பகுதியினரும் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிற நிலையும் ஈழத் தொடர்புகளோடு அந்நியப்படப் போகும் மூன்றாம் நாலாம் சந்ததிகள் வேற்று மொழியிலும் தமிழ் அடையாளத்துக்கு வெளியே வேறு உள்ளடக்கத்திலும் எழுதப் போகிற நிலையும் புலம்பெயர் தமிழ் இலக்கிய வகைமைக்குள் பொருந்த முடியாததாக மாறும்.  இது அவர்களின் சர்வதேச மொழிகளில் (அதாவது அந்தந்த நாட்டின் மொழிகளில்)  அந்தந்த நாட்டின் இலக்கியமாகவே மிளிரும். ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளில் இரண்டாம் சந்ததியைச் சேர்ந்த சில படைப்பாளிகளின் அவ்வாறான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவை அந்தந்த நாடுகளின் இலக்கியமாக இருக்கிறது. அதே நேரத்தில் அவை தமிழ் அல்லாத புலம்பெயர் இலக்கியமாகவும் (Diaspora Literature) கருதப்படலாம். ஜேர்மனி மொழியில் நாவல்கள் எழுதியிருக்கும் -இரண்டாம் சந்ததியைச் சேர்ந்தவர்கள்- இருவர் தமது இலக்கியம் இரண்டு வகைக்குள்ளும் அடங்கும் என்கிறார்கள்.

ஆக புலம்பெயர் இலக்கியத்தின் எதிர்காலம் கேள்விக்குறியானது. மாறக்கூடிய அரசியல் பொருளாதார சூழ்நிலைகளால் புதிய புதிய புலம்பெயர்வுகள் நடக்குமா இல்லையா என்பதைப் பொறுத்தே அதன் நிலைப்பு அல்லது நிலையாமை இருக்கும். அந்த நிலைப்பு / நிலையாமை தமிழக முகாம் அகதி இலக்கியத்துக்கும் இருக்கும். தற்போது தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் இந்திய பிரஜையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒன்றுகலத்தல் நிகழும்போது அவர்களின் அகதி இலக்கியமும் தொடராது போகும். எப்படியோ புலம்பெயர் இலக்கியம் நிலைக்கிறதோ இல்லையோ தமிழ் இலக்கியத்தை விசாலிக்க வெவ்வேறு பரிமாணங்களை வழங்கியதாக, வழங்குவதாக அது இருக்கிறது. புலம்பெயர் இலக்கியம் புறக்கணிக்கப்பட முடியாமல் பேசுபொருளாகியதிலிருந்தே அதை விளங்கிக் கொள்ள முடியும். அது தமிழிலக்கியத்தில் தனது சுவடுகளை ஆழமாகவே பதித்திருக்கிறது.

  • ரவி (சுவிஸ்), 09.02.2023
  • நன்றி – Photo : Thamayanthi Simon (Norway)

One thought on “புலம்பெயர் இலக்கியம்”

  1. வணக்கம்
    தங்களின் கட்டுரை புலம்பெயர் இலக்கியத்தின் அடுத்தகட்ட பாய்ச்சலாக இருக்குமா அல்லது ஓயுமா என்ற கேள்விகளோடு இருந்தாலும் தமிழ் இலக்கியத்தின் விசாலமான பங்களிப்புக்கு புதிய பரிமாணங்களை தந்திருப்பதையிட்டு அமைதி கொள்வதாக இருக்கிறது. உண்மைதான். இன்றைக்கு அகதி இலக்கியம் குறித்து தங்களின் பார்வை வரவேற்கத்தக்க ஒன்றாக உள்ளது மற்றவர்கள் கள்ள மெளனிகளாக கடந்துவிடும் சூழலில். அகதிகள் இலக்கியத்தில் இன்னும் நிறைய படைப்புகள் வரவேண்டிய தேவைகளும் இருக்கின்றன. நீங்கள் சொல்வதுபோல் உள் மற்றும் புற அரசியல் நகர்வுகள் அவற்றை நசுக்கவும் செய்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி நாமும் தமிழுக்கு சிறு பங்களிப்பை செய்திருக்கிறோம் என்ற ஆசுவாசப்படுத்திக் கொண்டாலும் தமிழ் அகதி என்ற சொல் இன்னும் எம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது.

Leave a comment