அதர் இருள்

அகரன் பிரான்ஸ் இல் இருக்கும் ஓர் இளம் எழுத்தாளர். பாரிசின் -குறிப்பாக லாசப்பலின்- தமிழ்வாழ்வுச் சூழலிலிருந்து தூரத்தில் வதியும் சந்தர்ப்பம் கிடைத்ததாலோ என்னவோ, அவரது எழுத்துக்களின் உள்ளடக்கம் தமிழ்ப் பரப்புக்குள் குறுகி நிற்கவில்லை. தமிழ்ப் புலம்பெயர் இலக்கியத்தில் ஒரு விசாலத்தை அவரது எழுத்துக்கள் காட்டிநிற்கின்றன. அவரது எழுத்துநடை அலாதியானது. இந்த அம்சங்கள் அகரனது தீவிர வாசகனாக என்னை ஆக்கியது என நம்புகிறேன்.

அதர் இருள் என்ற அவரது முதலாவது (குறு)நாவலை வாசித்தபோதும் அது என்னை ஏமாற்றவில்லை. அகதிமனநிலையானது மொழி, பண்பாடு, உடல்நிறம் என எல்லாவற்றையும் தாண்டி உணர்வின் ஆழத்தில் எப்படி சங்கமிக்கிறது என இந் நாவலின் உள்ளடக்கத்தை மையப்படுத்திவிடலாம்.

போர்நிலமாக இருந்த இலங்கையில் தனது குடும்பத்தை ஒட்டுமொத்தமாக இழந்த வேந்தனுக்கு அவனது நண்பனின் தாய் இன்னொரு புதிய தாயாகிறாள். வீரச்சாவடைந்த தனது சொந்த மகனின் பிரிவு பிளந்துவிட்ட வெறுமையை நிரப்ப வேந்தன் அவளுக்கு மகன் போலாகிறான். உயிர்காக்க வைத்து பிரான்சுக்கு அனுப்புகிறாள். பிரான்சில் உக்ரேனிய அகதித் தாயின் மகளாக உதித்த பஸ்கலினின் தாயின் மரணம் பிளந்துவிட்ட வெறுமையின் இடைவெளியை நிரப்ப வேந்தன் வருகிறான். இயற்கை பேரன்பை எப்படி விதைக்கிறது என குறிப்பிட்டுச் செல்கிறார் நாவலாசிரியர்.

பஸ்கலின் ஒரு “விஞ்ஞான அகதி” என நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். 1986 இல் நடந்த செர்னோபில் அணு உலை விபத்தில் பஸ்கலினின் தகப்பன் -அவள் முகம் பார்க்க முன்னரே- இறந்துவிடுகிறான். தாய் பிரான்சுக்கு புலம்பெயர்கிறாள். வேந்தன் எப்படி பஸ்கலினுக்கு அறிமுகமாகிறான், அவர்களை எது முதல் பார்வையில் இணைத்தது, எப்படி வாழ்வை அவர்கள் பற்றிப் பிடிக்கிறார்கள், அந்த அகதிநிலை உணர்வுகளின் பிணைப்பு அதிர்ச்சிகளை எப்படி செரிக்கிறது, ஆபத்தை புறந்தள்ளி வாழ்தலின் மீது எப்படி சாகசத்தை நிகழ்த்துகிறது என நாவல் ஓர் அகதி அடிமரத்தின் கிளைகளாகப் பிரிந்து விரிகிறது. அகதி மனநிலையில் தொடங்கிய எமது புலம்பெயர் வாழ்வின் மனநிலைகளை கொழுவி இழுத்து இறுதிவரை பயணிக்கிறது.

செர்னோபில் அனர்த்தம் தன் தந்தை தாயின் வாழ்தலை கவிழ்த்து மூடியது மட்டுமன்றி, பஸ்கலினையும் வாழ்தலிலும் நுனிவிரலால் எட்டிப்பிடித்துவிடுகிறது. விஞ்ஞானம் தொழில்நுட்பம் என்பவற்றின் மீது வெறுப்பே ஏற்படும் மனநிலையை அவை தோற்றுவித்துவிடுகிறது. வேந்தனது குடும்பத்தின் வாழ்தலை போர் கவிழ்த்து மூடிவிட்டிருந்தது. இப்போ வேந்தன்-பஸ்கலின் வாழ்தலை 2022 இல் தொடங்கிய உக்ரைன்-ரசிய போர் என்ன செய்கிறது என பதைபதைக்கும் கணத்தில் நாவல் எம்மை அறுத்துவிடுகிறது. தொடரக்கூடிய சாத்தியங்களோடு கதையை நாமே கற்பனையில் எழுதிச் செல்ல வைத்துவிடுகிறதது.

ஒரு அகதி மட்டுப்படுத்தப்பட்ட (பிரெஞ்சு மொழிச்) சொற்களை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு உணவகங்களில் வேலைதேடி போகும்போது ஒரு படபடப்பு வரும். வேலை கிடைக்குமா என்ற படபடப்பை விடவும், தெரிந்துவைத்திருக்கும் சொற்களுக்கு வெளியே முதலாளி பேசினால் அல்லது கேள்விகேட்டால் என்ன செய்வது என்ற படபடப்பு மூளையை அரிதட்டில் வீசிவிட்டிருக்கும். அந்தக் காட்சியை நாவலாசிரியர் அழகாக மொழிந்திருக்கிறார். எம்மை வேந்தனாக அந்த இடத்தில் நிற்கவைத்துவிடுகிறது பழைய நினைவுகள்!.

கோப்பை கழுவுதல், மலசலகூடம் துப்பரவு செய்தல் என்பவற்றை சாதியமனநிலையிலான மனக்கட்டமைப்புக்கு வெளியில் வைத்து இயல்பானதாய்க் காண உயர்சாதி மனநிலை விடுவதில்லை. அதனால் அவ் வேலைகளை தாமே இயல்பாய்ச் செய்ய அவர்களை அது விடுவதில்லை. முதலாளி உணவகத்தில் கோப்பை கழுவுவதையும் அந்த மனநிலை ஆச்சரியத்தோடு பார்க்க வைத்துவிடுகிறது. இதை ஒரு மேற்குநாட்டவருக்கு விளங்கப்படுத்தவும் முடியாதளவு அந்த மனநிலை இறந்த உள்ளுடனின் கோது போன்றது. அகரன் வேந்தனின் வேலைத்தளத்தில் தமிழ் வாசகரை நிற்கவைத்து உங்களுக்கு ஏதாவது புலப்படுகிறதா என கேட்பதுபோல் சம்பவங்களை பேசவிடுகிறார்.

போரின் பிதுக்கலாக மட்டுமன்றி, அணுசார்ந்த தொழில்நுட்பங்களின் பாதிப்புகள், சுற்றுச்சூழல் மீதான தாக்குதல்கள், ஆயுத உற்பத்திகள்.. என்பவையெல்லாம் எவ்வாறான வெறுப்புகளை மனிதர்களின் வாழ்தலில் விட்டுச் செல்கின்றன என்பதையும் இந்த குறுநாவல் தன்னுள் அடக்கிவிடுகிறது.

இந்தப் பூமியை பிரித்து பட்டா போட இவர்கள் யார்?

இந்த நதியை விலைபேச இவர்கள் யார்?.

இரு அகதிகளுக்கு இடையில் விழுந்தெழும்பும் இந்த கேள்விகளை நாவல் போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது.

கொஞ்சப் பாத்திரங்களோடு உருவாகியுள்ள இந் நாவலின் கிளைபிரிதல்களும், மொழிக் கையாள்கையும், அகதிசார் உணர்வுத்தளத்தில் பேச முயல்தலும் ஒரு அழகியலை தோற்றுவிக்கிறது. முன் பின் வசனங்களோடு ஒத்திசைவாய் சொற்கள் பொருந்துகிறபோது அகரனது மொழிக் கையாள்கை புதிய இரசனையைத் தருகிற அதேநேரம், சொற்கள் ஒத்திசைவாய்ப் பொருந்தாதபோது சிறு இடறலாகவும் அமைந்துவிடுகிறது என்பது என் அவதானம். இது ஒரு குறையல்ல. பயிற்சியோடு செழுமைப்பட்டுவிடும்.

வேற்றுநாட்டு சூழலுள் சிக்கிய மொழியற்ற ஒரு அகதியினது (வேந்தனது) வாழ்வுமொழியை பேசுவதும், மொழி தெரிந்தாலும்கூட அகதிப் பரம்பரையாகவும் அனாதையாகவும் இருப்பவரது (பஸ்கலினினது) வாழ்வுமொழியைப் பேசுவதும், இவற்றுக்கு இடையிலான ஊடாட்டங்களும் என இந் நாவல் தமிழ்ப்பரப்பின் எல்லையைத் தாண்டி ஓர் அசல் புலம்பெயர் இலக்கியமாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது.

  • 29052023

குறிப்பு : நாவலின் தீவிரத்தன்மையை அதன் உள்ளக வடிவமைப்பு கவனத்தில் உள்ளக வெளிகளை கட்டிறுக்கமாகக் கையாண்டிருக்கலாம் என சொல்லத் தோன்றுகிறது.

வெளியீடு : வம்சி, பக்கம் : 136

Leave a comment