திரை விலக்கும் திரை
சூர்யாவின் நடிப்பிலும் ஜோதிகா-சூர்யா இணைந்த தயாரிப்பிலும் ஞானவேலின் திரைக்கதை இயக்கத்திலும் வெளியாகியிருக்கும் படம் ஜெய் பீம். எல்லோருமே கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை திரையிலும், அதன்பின்னரான அவர்களது பேட்டிகளிலும் காணக் கிடைக்கிறது. அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகை மாற்றிப் போட்டு உண்மைக்கும், பேசப்படாதவற்றைப் பேசுதல் என்ற துணிபுக்கும் நெருக்கமாக பாதையமைத்திருக்கிற திரைப்படங்களில் ஜெய் பீம் க்கும் ஓர் இடமுண்டு. அதனால் திரைப்படம் குறித்து பேசப்பட வேண்டிய தேவை அதிகமாகிறது. மிக அதிகளவிலான நேரம்ச விமர்சனங்கள் வந்தபடி இருக்கின்றன. அதற்கு தகுதியான படம் அது. கொண்டாடப்பட வேண்டியது.
ஒடுக்கப்பட்ட மக்களின் வழக்குகளில் எந்தக் கட்டணமுமின்றி தனது இடைவிடாத பங்களிப்பை செய்த வழக்கறிஞர் சந்துரு என்ற மனிதனின் கதையாக ஒரு புறமும், யாருமே கண்டுகொள்ளாத இருளர் சமூகத்தினை அவர்களது வாழ்நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த கதையாக இன்னொரு புறமுமாக பிணைந்து செல்கிறது. இருளர் சமூகத்தின் மீதான மோசமான ஒடுக்குமுறைகளை மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாற்றியது இப் படத்தின் வெற்றி.
தமிழ்நாடு முழுவதுக்குள்ளும் சுமார் ஒரு இலட்சம் இருளர் சமூக மக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்கள் ஓரிரு குடும்பங்கள் மட்டும் சேர்ந்துவாழும் நிலைகூட சில மாவட்டங்களில் இருக்கிறது. பாம்பு பிடித்தல், பாம்பு பூச்சி கடிக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்டு வைத்தியம் பார்த்தல், வயல்களில் வெள்ளெலிகளின் தொல்லைகளை இல்லாமலாக்கல் என அந்தத் தொழில்களுக்குள் அவர்கள் முடக்கி வைத்திருக்கப்பட்டார்கள். இதன் தேவைகள் நவீன தொழில்நுட்பங்களிலும் வைத்திய முறைகளிலும் குறைந்திருக்கிற போதிலும் அவர்களை அப்படியே கீழ்நிலையில் வைத்திருக்கிற சமூக ஒழுங்கு நிலவியபடியே இருக்கிறது. மேலும் ஆதிவாசிகள் என சொல்லக்கூடிய இந்த இருளர் சமூகத்தினர் கூடை முடைவது, முறம் முடைவது, ஈச்சம் பாய் பின்னுவது என்பவற்றை தொழிலாக செய்துவந்தார்கள். வருகிறார்கள். மரம் வெட்டுவது, கல் அறுப்பது என்பவற்றையும் செய்துவருகிறார்கள்.
‘முதனை’ என்ற சமவெளி குக்கிராமத்து இருளர் இன மக்கள் நெல் அறுவடைக் காலங்களில் கம்மாபுரம், குமார மங்கலம், கோபாலபுரம் போன்ற பக்கத்து கிராமத்துக்குச் சென்று அதில் கிடைக்கக்கூடிய கூலியாக நெல்லைப் பெற்று, வாழ்வாதாரத்துக்கான தேவையாக்குகின்றனர். வழமைபோன்று 1993 ஜனவரியில் கம்மாபுரம் சென்று ஒரு வீட்டில் தங்கியிருந்து, நெல் அறுவடையின்பின் மார்ச் மாதம் திரும்புகின்றனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நகை காணாமல் போய்விடுகிறது. கம்மாபுரம் பொலிஸ் இருளர் சமூகத்தினைச் சேர்ந்தவர்களில் ஒருவரான ராஜகண்ணுவை தேடி தமது ஆட்டத்தை ஆரம்பிக்கின்றனர். அவரையும் அவரது மனைவி செங்கனியையும் சுற்றி காலம் கவிழ்த்துக்கொட்டிய கொடுமைகளில் அவர்களது வாழ்வு சின்னாபின்னமாகியது. இந்த உண்மைக்கதையை ஜெய் பீம் பேசுகிறது.
இந்த வழக்கை கையிலெடுத்த சந்துரு அவர்கள் பல ஆண்டுகாலமாக விடாப்பிடியாக சட்ட ரீதியில் போராடுகிறார். 2006 இல் குற்றமிழைத்த 5 காவல்துறையினருக்கும் 14 வருட சிறைத்தண்டனை தீர்ப்பாகும்வரை அவர் ஓயவில்லை. அவர் இறுதிக் காலங்களில் நீதியரசராக தனது பணியை முடித்தார். சந்துரு அவர்களின் பாத்திரத்தில் சூர்யா திரையில் வருகிறார்.
இருளர் சமூக மக்களின் வாழ்விடங்கள் மலைக்குன்றுகளாகவோ, ஆற்றங்கரை குளக்கரையாகவோ, பொட்டல்காடுகளோகவோ, ஒதுக்குப்புறங்களாக இருக்கின்றன. பல இடங்களில் அவர்களது இருப்பிடத்துக்கு அருகாக செல்லும் மின்சாரம் இவர்களை எட்டிப்பார்ப்பதில்லை. குடிநீருக்காக அவர்கள் மயானம் வரை சென்றுவர வேண்டியிருக்கிறது என இந்த படப்பிடிப்பு நடந்த முதனை குக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். சொந்த நிலத்துண்டு இல்லை. றேசன் கார்ட் இல்லை. ஆதார் கார்ட் இல்லை. சாதிச் சான்றிதழ் இல்லை, வாக்களிக்கும் உரிமை இல்லை. அதனால் அரசியல்வாதிகளின் நடமாட்டமும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு மாநில அரசு இருக்கிறது. டில்லியில் ஓர் சனநாயக ஒன்றிய அரசு இருக்கிறது. அதற்கு வல்லரசாகும் கனவும் இருக்கிறது.
இருளர் சமூகமும் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்குள் சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்டிருக்கிறவர்களும் தமிழர்கள் என்ற அடையாளத்துள் வருகிறார்களா என்று தமிழ்த் தேசிய ஓட்டுநர்கள்தான் சொல்ல வேண்டும். அப்படியானால் இவர்களது பேரூந்துகள் இந்த வீதிகளாலும் போய்வருகிறதா என்பதையும் அவர்கள்தான் சொல்ல வேண்டும். இந்தவகை ஒடுக்கப்பட்ட ஆதிவாசிகள் மீதான ஒடுக்குமுறைகளையும் தமிழ்த் தேசிய விடுதலை என்ற சர்வரோக நிவாரணி குணமாக்கிவிடுமா என்பதையும் அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
ஜெய் பீம் படம் பார்த்து அழுவதற்கு மட்டும் உரியதாக இருப்பதை விடவும் கோபமுற வைக்கிறது. அது இந்திய ஒன்றிய அரசுமீது மட்டுமல்ல, தமிழக அரசு மீது மட்டுமல்ல, வாக்குகளை குறிவைத்து கலர்கலராக பேசும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் மற்றும் இனவாதிகள் மீதும்தான்!
பொதுவாக காவல்துறையானது அரசின் வன்முறை இயந்திரமாக இருப்பதே அதன் இயல்பும் அமைப்புமுறையும். எல்லா நாடுகளிலும் அது ஏற்றத்தாழ்வாக அதை செயற்படுத்தியபடியே இருக்கிறது. இனவாதம் நிலவுகிற நாட்டில் சிறுபான்மை இனத்தின் மீதும், நிறவெறி நிலவுகிற நாட்டில் வெள்ளையரல்லாத நிறத்தவர் மீதும், மதவெறி நிலவுகிற நாட்டில் சிறுபான்மை மதத்தின் மீதும், சாதிவெறி நிலவுகிற நாட்டில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் மீதும் என செயற்படுகிறபோது காவல்துறை அந்த அமைப்பில் பெறுகிற அதிகாரங்களோடு சேர்த்து, உளவியல் ரீதியில் பெறப்பட்ட மனக் கட்டமைப்போடும் வெறியோடும் செயற்படுகிறது.
உலகம் விஞ்ஞான வளர்ச்சியிலும் அறிவு வளர்ச்சியிலும் உளவியல் வளர்ச்சியிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த முறைமைகள் குற்றவாளியை கண்டுபிடிப்பதிலும் குற்றம் சாட்டப்படுபவரை புலனாய்வு செய்வதிலும் புதிய வழிமுறைகளை நடைமுறைக்குள் கொண்டுவந்துள்ளன. ஆனால் நூற்றாண்டு காலமாக குற்றவாளியையோ குற்றம் சாட்டப்படுபவரையோ இழுத்துவந்து ‘லாக் அப்’ இனுள் காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்து விசாரிப்பது, பாலியல் வன்புணர்வு செய்வது, கொலைசெய்வது என்பன எமது காவல்துறை கையாண்டுகொண்டிருக்கிற வழிமுறை!. அரசியல்வழியான அதிகாரம், சாதியமனநிலை, ஆணதிகார மனநிலை என்பன ஒருபுறமும், ஊழல், அரசியல் தலையீடுகள் இன்னொருபுறமுமாக சேர்ந்து செழிக்கிறது. இந்த நிலைமைகள் ஒரு பிற்போக்கான அரசு வடிவத்துள் காவல்துறையை நவீன உலகோடு பயணிக்கும் விதத்தில் துறைசார் அறிவூட்டுமா என்பது சந்தேகமானதே.
இந்துத்துவ அரசாகவும் அதன்வழி வந்த சாதியை அடிப்படைக் கட்டமைப்பாகக் கொண்ட அரசாகவும் இருக்கிற இந்திய நாட்டில் காவல்துறை தனது வன்முறை வெளிப்பாட்டை வீரியமாகவே காட்டும் என்பது தெரிந்த ஒன்றுதான். அதற்குள் இயங்குகிற நல்ல மனிதர்களை அந்தக் கட்டமைப்பு எப்படி சிக்கலான நிலைமைக்குள் தள்ளுகிறது என்பதையும், கீழ்நிலையில் காவல்துறையால் செய்யப்படுகிற கொலையைக்கூட மறைத்து அந்தக் கட்டமைப்பை காப்பாற்ற வேண்டிய தேவை உயர் மட்டம்வரை செயற்படுகிறது என்பதையும், அது கோருகிற சமரசங்களையும், சட்டத்துக்கு வெளியே நிகழ்த்துகிற வன்முறைகளையும் ஜெய் பீம் ஆணிவேரும் சல்லிவேருமாக பிடுங்கிக் காட்டுகிறது.
பெரும்பாலான படங்களில் காவல்துறையின் வன்முறைகளை கோரமாக மட்டுமே கமராவுக்குள் உள்ளடக்கும் முறை பார்வையாளாகளிடம் பயத்தை உருவாக்குகிறதே ஒழிய, அநியாயத்துக்கு எதிரான கோபத்தை உண்டாக்குவதில்லை. அடங்கி ஒடுங்கக் கோருகிற மனநிலையை மறையம்சமாக தந்துவிடுகிறது. அது ஒரு மனிதஜீவியின் போராட்டக் குணத்தை மழுங்கடிக்கக் கூடியது. ஜெய் பீம் படம் இந்த விடயத்தை மிக அவதானமாகக் கையாண்டிருக்கிறது. அது அழுகையைவிட கோபத்தை உருவாக்குகிறது. அதுவும் இந்தப் படத்தின் வெற்றி.
கம்யூனிச அல்லது இடதுசாரிய தத்துவங்களை படியாமலே அதை எதிர்க்கிற அல்லது நையாண்டி செய்கிற போக்கு பொதுவில் நிலவுகிற ஒன்று. அந்த புதிய சமுதாய அமைப்புமுறையை நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட புதியபுதிய எத்தனங்களில் நடைமுறை ரீதியிலும், குறைப்புரிதல்களின் அடிப்படையிலும், ஏற்கனவே நிலவிய அதிகார கட்டமைப்புகளின் சூழ்ச்சிகளினாலும், அது வளர்த்துவிட்டிருந்த மனக்கட்டமைப்புகளினாலும் அடைந்த வீழ்ச்சிகளை மட்டுமே வைத்து மதிப்பிடும் அரசியல் பார்வை போதாமையான ஒன்று. அதனால் பொதுமனம் அதை சாத்தியமற்றதென்று உள்ளுரைக்கிறது. நாம் இன்று அனுபவிக்கிற உரிமைகள் பலவும் இந்த இடதுசாரிய சிந்தனையாளர்களினால் -அதுவும் சிறுபான்மையாக இருக்கிற சந்தர்ப்பங்களில்கூட- போராடிப் பெறப்பட்டவை. இன்று இடதுசாரியக் கட்சிகளின் போக்குகள் ஆரோக்கியமற்றுப் போயிருக்கிற நிலைமை ஒன்று உண்டு என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால் அந்த சிந்தனைமுறை கட்சிகளையும் தாண்டி போராட்டக் குணத்தின் வேராக அழியாமலே தொடர்கிறது. தனிப்பட்ட ரீதியில்கூட பிரக்ஞைபூர்வமாக தமது வாழ்வை அமைத்துக்கொண்டுள்ள உதிரி இடதுசாரிகள் நம் வாழ்வில் எதிர்ப்பட்டபடியே இருக்கிறார்கள்.
ஜெய்பீம் படம் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றிக்கொண்டிருந்த வழக்கறிஞர் சந்துருவையும், இந்த அநியாயத்துக்கு எதிரான நீதிகோரி தொடர்ச்சியாகப் போராடிய சிவப்புக் கொடியையும் திரைக்கு முன்னே கொண்டுவந்திருக்கிறது.
ஆரம்பத்திலிருந்து காவல்துறை தண்டிக்கப்பட்ட வரையான நீண்ட காலப் பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். அதில் முக்கியமானவர் கோவிந்தன் அவர்கள். காவல்துறையின் தொடர்ச்சியான கொலைப் பயமுறுத்தலால் இந்த வழக்கு முடியும்வரை அவர் (39 வயது) திருமணம் செய்வதை தவிர்த்து வந்திருக்கிறார். தான் கைதுசெய்யப்பட்டால் அல்லது கொலைசெய்யப்பட்டால் வீணாக மனைவி பிள்ளைகளை தொல்லைக்கு உட்படுத்த நேரலாம் என்ற அச்சமே அதற்குக் காரணம் என பேட்டியொன்றில் கூறுகிறார். தீர்ப்பு வழங்கப்படுவதற்கு 6 மாதம் இருக்கும்போது அவரை அணுகிய காவல்துறை அதிகாரிகள் கடைசி பேரமாக 25 இலட்சம் ரூபாவை பாதிக்கப்பட குடும்பத்துக்கு தருகிறோம், இந்த வழக்கை கைவிட்டு சமரசம் செய்ய உதவும்படி கோரியபோது அவர்கள் அதை மறுத்துவிட்டார்கள். இறுதிவரை அதற்காகப் போராடியிருக்கிறார்கள். (இது படத்தில் இல்லாத செய்தி)
எளிய மக்களின் வாழ்வும் அவர்களது இருப்புக்கான போராட்டமும் ஆதிக்க மனநிலையை இயல்பாகக் கொண்டவர்களுக்கு வன்முறை நிரம்பியதாக தெரிகிறது. சட்டமும் அரசும் ஆதிக்கக் கருத்தியல்களும் கைவிட்ட, அவசியப்படும்போது இந்த மக்களின்மேல் வன்முறையை ஏவுகிற ஒரு முறைமையின் முன்னால் அநாதரவாக விடப்படும் நிலையில் தம்மீதான இந்தவகை ஒடுக்குமுறைகளின் மீதான கோபம் என்பதை ஒடுக்கப்படுபவர்கள் இழந்துவிட்டால் அவர்களுக்கு இருப்பு சாத்தியமற்றதாகிவிடும். அதனால் அந்தக் கோபம் ஓர் எதிர்வன்முறையாக நிலவுகிற சந்தர்ப்பங்கள் வெளிப்பட்டே தீரும். அதை குற்றமயப்படுத்தி ஆதிக்க சக்திகள் இன்னும் ஒடுக்குகின்றன. ஆனால் அந்த மக்களின் வாழ்நிலையும், மரபுவழி வந்த பண்பாடும், இயற்கையை மனிதர்களை மதிக்கிற குணாம்சங்களும் அவர்களுக்குள் வாழ்ந்தபடியே இருக்கின்றன.
இப் படத்தில் ஒரு கட்டத்தில் நாயகி வழக்கறிஞர் சந்துருவிடம் (சூர்யாவிடம்) உங்களுக்கு கட்டணம் வழங்க எனக்கு இயலாதநிலையே உள்ளது என சொல்கிறாள். வழக்கறிஞர் “உன்னிடம் யாராவது பாம்பு கடித்தவர் வந்தால் முதலில் கட்டணம் கேட்பியா அல்லது உயிரை காப்பாற்றுவியா” என கேட்பார். “அதெப்பிடி உயிர் முக்கியமில்லையா. அந்த பொலிஸ்காரருக்கு பாம்பு கடித்தால்கூட வைத்தியம் பார்ப்பேன். காசெல்லாம் வாங்க மாட்டேன்” என்பாள்.
ஒவ்வொரு மனித இதயங்களையும் ஊடுருவ வேண்டிய செய்தி இந்த உரையாடலுக்குள்ளால் அம்புபோல வருகிறது. அது பொது மனித மனங்களை மட்டுமல்ல, தனது குழந்தையை கொஞ்சுகிற, தனது மனைவியை தாயை சகோதரிகளை அரவணைக்கிற மனித இதயத்தை காக்கிச் சட்டைக்குள் போர்த்து வைத்திருக்கிற காவல்துறையினர் நாலு பேரிடமாவது ஓர் உள்ளசைவை ஏற்படுத்தினால், இப் படத்தின் வெற்றியும் முக்கியத்துவமும் இன்னும் வலுவடையும்.
ஒரு இந்தியப் பிரசையாக மதிக்கப்படாத, அடிப்படை உரிமைகள் மற்றும் வசதிகள்கூட மறுக்கப்பட்ட இந்த மனிதஜீவிகள் குறித்த ஒரு அரசின் கடமையை குறைந்தபட்சம் தமிழக அரசுக்காவது உணர்த்த முடிந்தால் அது ஜெய்பீம் க்கு இன்னொரு முக்கியத்துவத்தை வழங்கும். அதேபோல போட்டி கல்விமுறைமைக்குள் வைத்து காயடிக்கப்படும் இளம் சந்ததியினரை பாடப் புத்தகத்துக்கு வெளியே இருக்கும் உலகு குறித்த கரிசனையை ஒரு கொஞ்சமாவது ஜெய்பீம் ஏற்படுத்தட்டும்! அதீதமாகத் தெரிந்தாலும் கனவு கொள்வோம். கனவு மெய்ப்பட காலம் கொள்வோம். ஜெய்பீம் இன் கடைசிக் காட்சி இந்தக் கனவின் ஒரு குறியீடு!
- ரவி (04112021)
- thanks for photos : abp, film beat, the news minute, great andhra
Great. This picture is the milestone. Yesterday I also saw that movie.
திறமான விமர்சனம் ரவி. பாராட்டக்கூடிய ஒரு திரைப்படத்தை தந்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு 👌