சுடுமணல்

குமிழி- நாவல் மீதான வாசிப்புகள்

Posted on: August 27, 2020

//இது நம்மவர் கதை மட்டும் அல்ல நம்மளை பற்றிய கதையும் கூட// – பரதன் நவரத்தினம்

//குமிழியை படிக்கும் போதும் இதயம் பாரமாகி நெற்றி சுடுவதைத் தவிர்க்க முடியவில்லை// – பாரதி சிவராஜா

//இது வெறும் கதையல்ல. நம் போராட்ட வாழ்க்கையின் ஒரு பகுதி. இதனை முழு மூச்சுடன் ஒரே வாசிப்பில் வாசித்துவிடக் கூடிய எழுத்துநடையும் சுவாரசியம் என்பதைவிட அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இறுதியில் என்ன நடக்கும் நடந்தது என்ற கேள்வியும் ஏக்கமும் நிறைந்திருக்கும் சொற்களைக் கொண்டவை. கதை சொன்னவர் இப்பொழுது உயிருடன் இருந்து எழுதிய போதும் அவருக்கு என்ன நடந்தது? நடக்கும்? என்ற உணர்வு மேலோங்கியிருக்குமளவிற்கு உயிரோட்டம் நிறைந்த ஒரு அனுபவப் பகிர்வு// – மீராபாரதி

//ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல் மிகுதியை பின்னர் வாசிக்கலாம் என புத்தகத்தை வைத்துவிட முடியாத படி ஒவ்வொரு வரியும் உள்ளீர்க்கும்// – புதியவன்

//மொழி எல்லைகளைக் கடந்து தேசத்தின் எல்லைக்கோடுகளைக் கிழித்துக்கொண்டு குமிழி பயணிக்கும் இடங்கள் ஒரு தேர்ந்த அரசியல் பாடமாக தன்னை எழுதிப் பார்த்திருக்கிறது// – புதியமாதவி

//யதார்த்த விவரணை போய்க்கொண்டே இருக்கச் சட்டென முத்தாய்ப்பாக ஒரு வரி முன்னுள்ள வரிகளை அணைத்தையும் அள்ளி முடித்து ஒரு மூட்டையாக்கி எடுத்துவைத்துவிட்டு அடுத்தப் பத்திக்குச் செல்லும் எழுத்தாளரின் எழுத்துள் வசீகரங்களும் ஹாஸ்யங்களும் நிறையே அடுக்கப்பட்டுள்ளதை வாசகர்கள் நிச்சயம் காணக்கூடும்// – அரியநாச்சி

//இது கதையாயின் அருமை. சாட்சியமெனில் தேவையானது. வரலாறாயின் விமர்சனமுண்டு// – டேவிட் கிருஸ்ணன்

********

வாசிப்பு-1

 • பரதன் நவரத்தினம் (கனடா)

ஆர்வமீதியில் முதல் பிரதியை நந்தாவிடம் பெற்றுக்கொண்டு வந்தும் நாலு ஐந்து பக்கங்களுக்கு பின் தொடக்கூட நேரம் இல்லாமல் போய்விட்டது.நேற்றிரவு மீண்டும் தொடங்கி அதிகாலை இரண்டு மணியளவில் முடித்து விட்டேன்.இப்போ புத்தக வாசிப்பு நன்றாக குறைந்துவிட்டது , இது நம்மவர் கதை மட்டும் அல்ல நம்மளை பற்றிய கதையும் கூட , எப்படிவாசிக்காமல் விடுவது!

ஏற்கனவே கழகம் பற்றி புதியதோர் உலகம் ,சீலனின் வரலாறு ,முகபுத்தக பதிவுகள் என்று பலது வாசித்து இருந்தாலும் போராடச்சென்ற ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமான கதை ஒன்று இருக்கு .குமிழி வாசிக்கும் போது அதையே தான் உணர்ந்தேன். நன்கு பழகிய சூழலில் நெருங்கி பழகியவர்களுடன் ஆனால் மாறுபட்ட அனுபவங்களுடன் கதை நகருது. சிலர் சொந்தப் பெயரிலும் பலர் ஒரு எழுத்து மாற்றத்திலும் ஏன் வருகின்றார்கள் என்று புரியவில்லை.

இலங்கை கலவரப்பாதிப்பு என்று தொடங்கி இயக்கம் பின்தளம் பயிற்சி மீண்டும் தளம் வெளிநாடு என்று முடியுது.கழகத்தின் கதை என்றாலே அராஜகம் தான் .அராஜகம் இல்லாத கழகத்தை கற்பனை பண்ணிக்கூட வருகுதில்லை.பயிற்சி எடுக்க வந்த இடத்தில் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத சவுக்கு மரங்கள் நிறைந்த காடுகளின் மத்தியில் என்ன நடக்குது ஏது நடக்குது புரியாமல் எவரையுமே நம்பி வாய் திறக்க முடியாத சூழலில் சிக்குப்படுவம் என்று எந்தப்போராளி நினைத்தான்.

ஆனால் அதற்குள்ளும் நல்ல நட்புகளும் அறிவார்ந்த தோழமைகளும் கடவுள்களாக நம்பி உபசரித்த தமிழ்நாட்டு உறவுகளும் இந்த ரணகளத்திலும் ஒரு சிலுமிசம் போல காதலும் என்று கதை நகருது. நான் மிகவும் ரசித்து வாசித்த பகுதி தோழர் காஸ்ரோவிற்கும் ரகுவிற்குமிடையில் நடக்கும் உரையாடல்கள் தான் குறிப்பாக சந்ததியார் பற்றிய காஸ்ரோவின் நிலைப்பாடு.

மேலிடத்தில் இருந்த சிலரை பற்றி எழுதும் போது சற்று பக்க சார்பாக இருக்கோ என்ற எண்ணமும் எனக்கு வந்து போனது உதாரணமாக எந்திரனைப் பற்றி ஒரு இடத்தில் “தான் சார்ந்த மத்திய குழு அந்தஸ்து அதன் பெயரிலான அதிகார சுகிப்பு ஒரு கீழணி போராளியான தன்னிடம் இருந்து வேறுபடுத்திக்காட்ட ஒரு நிழல் எல்லை கோட்டை பேணவே செய்தது”.

எல்லா விடயமும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தான் பலர் இருந்தார்கள் என்று நம்புகின்றேன்.குமிழி ரகு போராடப்போய் பட்ட அவலங்களை எழுதிய விதம் தான் என்னை மீண்டும் அந்த நினைவுகளுடன் ஊசலாட வைத்திருக்கின்றது.

“வெற்றிகளுக்கு பொறுப்பேற்கும் உசாருடன் போன நீ இப்போ தோல்விகளுக்கு பொறுப்பேற்காமல் நழுவுவது என்ன நியாயம்”.

 • 21082020

fb link : https://www.facebook.com/parathan.navaratnam/posts/10158020750930376


***

வாசிப்பு-2

 • பாரதி சிவராஜா (லண்டன்)

பாதி படித்து விட்ட பாரத்தின் நடுவில்…

உண்மைகளோடு தொடர்பான விடையங்களைப் படிக்கும் போது விடய தன்மைக்கு ஏற்ப எமக்குள் உந்தி தள்ளும் உணர்வோட்டங்குளும் மிக தாக்கத்துக்குரியதாக அமைந்துவிடுவதுண்டு. அதுவும் இரத்தமும் சதையுமான எமது மண்ணும் மக்களும் துயரங்களான பாத்திரங்களாக அரசியலில் வரலாற்றில் வஞ்சிக்கப்பட்டவர்களா படிக்கும் நோ அதிகமானது. விடுதலை நோக்கிய போராட்டத்தை எல்லோருக்குமானதாக நேசித்த பலரின் கனவு களத்திலேயே சிதையும் காட்சிகள். இன்னும் வலிப்பதாலும் அழியாததாலும்தானே அவை வடுக்கள் என்றாகிறது.

(ஆனால் புனைவுகள் எம்மக்குள் எழுதுவோரின் ‘கைவண்ணம்’ அது அவரல்ல-என்ற உள்பிசகள், எழுத்தாளரை இன்றைய நவீன உலகம் இலகுவாக முகம் காட்டும், அடையாளப்படுத்தும் வெளிப்படுத்தும், விவாதிக்கும்- தளங்களை வாசகர்களுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. எனவே சமூக வலைத்தளங்கள் இல்லாத காலங்களில் அவர்கள் மீதிருந்த எழுத்தாளனை ‘எழுத்தாகவே’ நம்பும் போக்கு குறைந்து அது அவர்கள் ‘திறமை’ அதுவாகவே அவர்கள் அதுவாக இருப்பதில்லை என்றளவில் வாசகர்கள் விழிப்படைந்ததில் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.)

ஆனால் உண்மை அனுபவங்களோடு தொடர்பான எழுத்தை அப்படி படிக்க முடிவதில்லை. அதிலும் இடது சாரிய அரசியலையும் அமைப்புத்துறை தொடர்பான கோட்பாடுகளையும் அதிகாரத்துக்கு எதிரான மன நிலை போக்கையும் பெற்றுவிட்டால் ‘குமிழி’ போன்ற அனுபவ அரசியல் புத்தகங்கள் தரும் அதிர்வு என்பதைச் சொற்களில் கொண்டுவந்திட முடிவதில்லை.

// சமூக விரோதி’ மனிதன் சுடப்பட்ட இந்த நாளிலிருந்து அரச உளவாளிகள் எனச் சந்தேகப்பட்டவனை, இராணுவ முகாம் இருந்த பெரு வீதியால் நடந்து வந்தவனை, எனத் தொடங்கி பிறகு மன நோயாளர்களை, பால்வினைத் தொழிலாளர்களை, ஓரினப் புணர்சியாளர்களை, கோழிப்பிடித்தவனை பசியால் களவெடுத்தவனை எல்லாம் அந்த கார்போர்ட் மட்டை துரத்தித் திரிந்தது… மாணிக்கம் அதனிடம் அகப்பட்டிருந்தால் எப்படியாய் சிதைந்திருப்பான்…..//

இத்தகைய மனப்போக்கை இன்றும் நாம் ஆயுதம் இல்லாத அமைப்புகளிடம் எதிர் நோக்க முடியும். ஆயுதம் இருந்திருந்தால் மண்டையில் போட்டிருப்பார்களோ என்று சொல்லுமளவு ஈழ அரசியல் அமைப்புகள் ஒருவரை ஒருவர் இழுத்து விடவும் அந்த இடத்தைப் பிடிக்கவும் எதை வேண்டுமானாலும் கையில் எடுப்பர் என்பதைக் காண முடியும்.‘அமைப்பைக் காப்பாற்ற’ என்ற தாரக மந்திரத்துக்குள் எல்லாம் அடங்கிப்போகும்…குமிழி இப்படிச் சொல்கிறது..

// ‘இராணுவ இரகசியம்’ என்ற வன்முறை வசதி கொண்ட சூழலுக்குள் விடப்பட்டிருந்தார்கள். அநியாயம் என்று தெரிந்திருந்தாலும் கூட அணி திரள முடியாதவாறு தனிமனித உறவு நிலைகள் புனைவு அறிமுகங்கள் வெளிப்படைத்தன்மையற்ற நிலை என்பன கவனமாகப் பேணப்பட்டிருந்தன…//

அங்கத்தவர்களிடம் அனுமதிக்கப்படாத வெளிப்படைத்தன்மைப் போக்கு கட்டப்பஞ்சாயத்தை விட மோசமானது. அதிகாரம் படைத்தவர்களில் எல்லாவகை சேட்டைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் விசுவாசிகளை உருவாக்கவல்லது. விசுவாசிகள் மக்களுக்கன அரசியலின் சாபக்கேடு. சமூக மாற்றத்துக்கான போர் குணத்தில் அறையப்படும் முதல் ஆணியும் அது…. எமது போராட்டம் விட்டுச் சென்ற எச்ச சொச்சங்களாகத் தொடர மீதமிருப்பது அது மட்டும்தானா என்ற கேள்வி எழுவதை நாடு கடந்த அமைப்பு அனுபவ அரசியலும் எழுப்புகிறது.

‘புதியதோர் உலகம்’ படித்துக் கொண்டிருக்கும் போது அந்த புத்தகம் வேண்டி நின்ற சமூகமும் அது கொண்டிருந்த மனித நேயத்தின் நோக்கமும் அதை எழுதிய கோவிந்தன் பின் அதற்காகவே கொல்லப்பட்டார் என்ற தகவல்- இதயத்தை இறுகிக்கொண்டே இருந்தது. ஆனால் அந்த ஒரு கனதியைத் தவிர்த்தாலும் குமிழியை படிக்கும் போதும் இதயம் பாரமாகி நெற்றி சுடுவதைத் தவிர்க்க முடியவில்லை. எமது போராட்ட வரலாற்றில் பதியப்பட வேண்டிய அனுபங்கள் படிக்கப்பட்டு களையப்பட வேண்டிய பலகீனங்கள்.

fb link : https://www.facebook.com/barathy.siva/posts/3478955438832769


***

வாசிப்பு-3

 • மீராபாரதி (கனடா)

குமிழி – உடைந்த கனவு

புனைவுகளைவிட சொந்த அனுபவக்குறிப்புகளை வாசிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அந்தவகையில் (சுவிஸ் அல்லது மனிதம்) ரவி எழுதிய குமிழியை உடனடியாக வாங்கி வாசித்ததில் அதிசயமில்லை. அதேநேரம் இதனை வாசிப்பதற்கு இன்னுமொரு காரணமும் ஆர்வமுள்ளது. எனது பதின்மங்களில் (84-85) இறுதியில் இணைந்து செயற்பட்ட முதல் இயக்கம். எனது இருபதுகளின் (88-94) ஆரம்பத்தில் எனது தந்தை (செயற்பட்டல்ல) வேலை செய்த இயக்கம். எனது இருபதுகளின் இறுதியில் (97-99) இணைந்து செயற்பட்ட தமிழீழ மக்கள் கட்சி உருவாக காரணமாக இருந்த தீப்பொறி கருக்கட்டிய இயக்கம். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் எனது வாழ்க்கையில் பங்குவகித்த இயக்கத்திலிருந்த ஒருவரின் அனுபவத்தை வாசிப்பது மனதுக்கு நெருக்கமானது. இது வெறும் கதையல்ல. நம் போராட்ட வாழ்க்கையின் ஒரு பகுதி. இதனை முழு மூச்சுடன் ஒரே வாசிப்பில் வாசித்துவிடக் கூடிய எழுத்துநடையும் சுவாரசியம் என்பதைவிட அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் இறுதியில் என்ன நடக்கும் நடந்தது என்ற கேள்வியும் ஏக்கமும் நிறைந்திருக்கும் சொற்களைக் கொண்டவை. கதை சொன்னவர் இப்பொழுது உயிருடன் இருந்து எழுதிய போதும் அவருக்கு என்ன நடந்தது? நடக்கும்? என்ற உணர்வு மேலோங்கியிருக்குமளவிற்கு உயிரோட்டம் நிறைந்த ஒரு அனுபவப் பகிர்வு. அதேநேரம் இது முழுமையான அனுபப் பகிர்வும் அல்ல என ரவி குறிப்பிடுகின்றார். தான் அன்று எழுதிய குறிப்புகளை பாதுகாத்த நண்பர் பாதுகாப்புக் காரணங்களினால் அவற்றை எரித்துவிட இன்றுவரை நினைவுகளில் இருப்பதையும் அந்த நினைவுகளினுடாக சில உண்மைகளை உணர்த்துவதற்கும் சில பாத்திரங்களைப் புனைத்துள்ளார். இப் பாத்திரங்கள் புனையப்பட்டாலும் இவர்களைப் போல பலர் பல்வேறு இயக்கங்களின் வரலாற்றில் பங்களித்துள்ளார்கள் என்றால் மிகையல்ல.

விடுதலைக்காக தம் அடையாளங்களை இழந்தவர்கள் இறுதியில் தம்மையே தமது வாழ்க்கையையே இழந்தார்கள். இவ்வாறான பலர் இன்று பல்வேறு அடையாளங்களில் வாழ்கின்றார்கள். ஒவ்வொரு காலத்தில் எங்கே யார் யாருடன் இருந்தார்களோ அவர்களுக்கு என ஒரு அடையாளம். இன்னுமொரு காலத்தில் இன்னுமொரு அடையாளம். ஒருவரே பல பெயர்களைக் கொண்டார்கள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அடையாளம் அனுபவங்கள் இருக்கின்றன. இவை ஒருவரின் பலமுனை அடையாளங்கள். குமிழியில் வரும் பாத்திரங்களுக்கும் அவ்வாறுதான். ஆனால் குமிழி உடைந்தபோதும் அது உருவாக்கிய அடையாளங்கள் மட்டும் நீர்ஆவியாக அவர்களைப் பின்தொடர்கின்றன. ஈழம், இலங்கை, தமிழகம், புலம் பெயர்ந்த தேசங்கள் எனத் தொடர்கின்றன.

ஒவ்வொரு இயக்கத்திலும் இந்தப் படைப்பில் வருகின்ற பாத்திரங்களைப் போலப் பலர் இருந்திருக்கின்றனர். தலைமைத்துவத்தின் மீதான விசுவாசம், கேள்வியின்றிப் பின்தொடர்பவர்கள், அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்கள், சந்தேகங்களைக் கேட்பவர்கள், கேள்விகளை முன்வைப்பவர்கள் புதியதைத் தேடுபவர்கள் எனப் பலவகையினர். இவர்களின் இவ்வாறான பண்புகளுக்கு ஏற்ப அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டனர். இதுவே இவர்களின் நிகழ்கால எதிர்கால வாழ்க்கையை மட்டுமல்ல உயிருடன் இருக்கலாமா இல்லையா என்பதையும் தீர்மானித்தது.

புளொட்

84, 85களில் கழகம் நமக்கு ஒரு பிரமாண்டம். எல்லா இயக்கங்களையும் விட அதிகம் அங்கத்தவர்களைக் கொண்டது என்ற பெருமை. பின்தளத்திலிருந்து ஒரு படையாகப் போராளிகள் வரப்போகின்றார்கள் என்ற மகிழ்ச்சி. இதற்காக ஓடி ஓடி பொருட்கள் சேர்த்தோம். கப்பலில் ஆயுதங்கள் வருகின்றன என்ற நம்பிக்கை. ஆயுதங்கள் வந்தவுடன் ஈழம் பிறந்துவிடும் என்ற கனவு. ஆனால் இவை எல்லாம் ஒரு குமிழி என்பதை காலம் கடந்துதான் புரிந்துகொண்டோம். அது உடைந்தபோது ஏமாந்தோம், ஏமாற்றப்பட்டோம் என்பதே உண்மை.

தலைமை மீதான நம்பிக்கை. அவரிடமிருந்த ஆற்றல்கள் தொடர்பான பெருமிதம். விசுவாசம். ஆனால் இவை எல்லாம் ஒரு குமிழியைப் போல ஒரு நாள் வெடித்துச் சிதறின. நாம் செய்வதறியாது திகைத்தோம். மாற்று வழிகளை அறிந்திலோம்.  அவரவர் வசதி வாய்ப்புகள் தொடர்புகள் சிந்தனைகள் என்பற்றுக்கு ஏற்ப புதிய வாழ்வை தேடல்களை ஆரம்பித்தோம். இவ்வாறான நேரங்களில் சில உடன் செயற்பட்டவர்களும் குறிப்பாக குடும்ப அங்கத்தவர்களும் தம் உறவுகளை நண்பர்களைப் பாதுகாக்க பட்ட கஸ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. குறிப்பாக அம்மாக்களின் அர்ப்பணிப்பு சொல்லிமாளாது. அவர்களைப் பற்றியும் இந்த நூல் குறிப்பிட்டுச் செல்வது முக்கியமானது.

சிலர் அல்லது பலர் போராட்டத்தையே மூட்டை கட்டிவைத்துவிட்டு தம் வாழ்வை தம் குடும்பத்தை காப்பாற்ற சென்றனர். அவர்களைக் குற்றம் சொல்வதில் எந்தப் பயனுமில்லை. சரியான நம்பிக்கையான தலைமை இருப்பின் கேள்விகளின்றி போராட இவர்களைப் போன்ற பலர் வந்திருப்பார்கள். ஆரம்பத்தில் அப்படி வந்தார்கள். கட்டாய இராணுவ சேவைக்கு அல்லது ஆட்பிடித்தலுக்கு எல்லாம் அவசியமே இருந்திருக்காது. ஆனால் அவ்வாறான ஒரு தலைமை நமது போராட்டத்திற்கு வாய்க்கவில்லை. இருந்த தலைமைகளும் அந்த நம்பிக்கையைத் தரவில்லை. விளைவு குமிழியின் மாயத்தோற்றம் உடைய நாம் தோற்றுப் போனோம்.

புதியதோர் உலகம் - நூலகம்

புதியதொரு உலகம் 85யில் வந்தது. ஆனால் எந்த ஒரு இயக்கமும் அதற்கு முக்கியத்துவம் அளித்து அதை ஒரு பாடமாகக் கற்று தம்மை மறுசீரமைக்க முயற்சிக்கவில்லை. முடிவு போராட்டமே தோற்றகடிப்பட்டது. ஆனால் நமக்குள் உருவாக்கப்பட்ட வடுக்கள் ;ஆறாவடுக்களாக இன்னும் நமக்குள் வேதனையளித்துக் கொண்டிருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்தக் குமிழி.

மிகக் கவலைக்கிடமான விடயம் என்னவெனில் இந்தப் பாடங்களைக் கற்று அதிலிருந்து புதிய பாதையை உருவாக்கிய தீப்பொறியும் சரி அதன் நீட்சியான தமிழீழ மக்கள் கட்சியும் கூட தம்மை சீரமைக்கவில்லை. மீண்டும் தனிநபர்களால் கட்சி சீரழிக்கப்பட ஏது வழி சமைத்தது? அமைப்புத் துறையா? தன்னிலைவாதமா? கோட்பாடுகளின் குறைபாடா? இவை எதிர்கால அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான கேள்விகள். மேலும் இக் கட்சியை விட்டு விலகிய பின் கடந்த இருபது வருட காலத்தில் அக் கட்சியில் இருந்தவர்களின் செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது இவர்களை நம்பியா நாம் செயற்பட்டோம் என்ற உணர்வே எஞ்சி நிற்கின்றது.

இயக்கங்களின் அக மற்றும் இடையிலான முரண்பாடுகள் தொடர்பாக முதன் முதலாக வந்த நூல் புதியதொரு உலகம் எனலாம். இதன் பின் செழியன், எல்லாளன், புஸ்பராசா, புஸ்பராணி என்பவர்கள் தமது அனுபவங்களை நூலாக வெளியிட்டார்கள். குணாகவியழகனின் நஞ்சுண்ட காடும் ஒரளவு விமரசனங்களை முன்வைத்துள்ளது.  நேசன் போல சிலர் இணையங்களின் தொடராக எழுதினர். போர் முடிவுற்றபின்னர் தமிழ்கவியின் ஊழிகாலம், அப்புவின் வன்னியுத்தம் மற்றும் சிலரின் படைப்புகளும் புலிகளை விமர்சித்தன. அதேநேரம் புலிகளில் இருந்தவர்கள் யாரும் தம் இயக்கத்தின் மீது கறாரான விமர்சனங்களை இதுவரை முன்வைக்கவில்லை எனலாம். ஆனால் தூரதிர்ஸ்டவசமாக எந்த ஒரு இயக்கமும் குறிப்பாக இறுதிவரை போராடிய புலிகள் இயக்கம் உட்பட யாரும் வெளிவந்த விமர்சனங்களிலிருந்து எதையும் கற்றதாகத் தெரியவில்லை. ஏன் இன்று இருக்கின்ற அரசியல் கட்சிகளும் கற்றதாகத் தெரியவில்லை. விளைவு மக்கள் யாருமற்ற அநாதைகளாக கைவிடப்பட்டுள்ளார்கள்.

கடந்த காலங்களிலிருந்து கற்காத நாம், அந்த அனுபவங்களை படிப்பினைகளாக கொள்ளாத நாம், சரியான தலைமைத்துவத்தை வழங்காத, அல்லது உருவாக்க முடியதா நாம், இந்த நூல்களை வாசித்து ஏதாவது பயனை அடைவோமா என்றால் அது கேள்விக்குறியே. இந்த நூலும் பத்தோடு பதினொன்றாக நமது புத்தக அலுமாரிகளை அலங்கரிக்கும். அவ்வளவுதான். இவ்வாறு அவநம்பிகையாக உணர்ந்தாலும் இவ்வாறு எழுதுவதும் விமர்சிப்பதும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் செய்கின்றோம். ஒடுக்கப்பட்ட சுரண்டப்படுகின்ற அனைத்து மனிதர்களும் விடுதலை பெறவேண்டியது தவிர்க்கப்படமுடியாதது. அதற்காக தொடர்ந்தும் போராட வேண்டியது மனித வாழ்வின் நியதி. ஆகவே தொடர்ந்தும் எழுதுவோம். செயற்படுவோம். தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல. அதிலிருந்து நாம் கற்றுக் கொண்டால்.

 • 27082020

பி.கு. இந்த நூலிலும் விடியப் பதிப்பகம் தனது பதிப்புரையில் இனக் கலவரம் என ஒடுக்குமுறையாளர்களின் சொற்களைப் பயன்படுத்தியிருப்பது கவலைதருவதாகும். இவ்வாறான நூலிலாவது சொற்களை நாம் பிரக்ஞைபூர்வமாகப் பயன்படுத்த வேண்டும். சிங்கள் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் வரை தமிழர்கள் சிங்கள அரசின் துணையுடன் தாக்கப்பட்டார்கள். இக் காலங்களில் தமிழர்கள் திருப்பித் தாக்கவில்லை. ஆகவேதான் இனக் கலவரம் என்ற சொல் பொருத்தப்பாடானது மட்டுமல்ல இது ஒடுக்குமுறையாளர்கள் முன்வைத்த மேலாதிக்க சொல் எனலாம். இதனை நாம் தொடர்ந்தும் பயன்படுத்தாது சொற்களைப் பிரக்ஞைபூர்வமாக தேர்வு செய்வது அவசியமாகும்.

மேலும் சில சொற்களுக்கான விளங்கங்களை நூலின் ஆரம்பத்திலும் அடைப்புக்குறிகளுக்குள்ளும் குறித்துள்ளார் ஆசிரியர். இதனைத் தவிர்த்து அதன் விளக்கத்தை கதையினுடாகவே எழுதிச் சென்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நூலை உடனடியாக எம்மிடம் சேர்த்த ஜீவனுக்கு நன்றி.

நாம் சென்ற முதல் இயக்கம் 
மீண்டும் சென்ற இயக்கம்
இன்று முக்கியமான நாள்
கொலை செய்தவர்கள் யார்?

fb link : https://www.facebook.com/notes/மீராபாரதி-வகசெ/குமிழி-உடைந்த-கனவு/10157954280512362/


***

வாசிப்பு-4

 • புதியவன் இராசையா (லண்டன்)

அட்டைப்படம் போலவே எல்லாமே தெளிவற்றுப்போய், நாவலில் சொல்லப்படுவது போல சுனாமி போல் கொன்றொழித்து பாலைவனமாக போன ஒரு தேசத்தின் கதை.

இது புளட் அமைப்புக்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு. இங்கே புளட் என்ற இயக்கப்பேரை நீக்கி விட்டு வேறு எந்த இயக்கத்தின் பெயரைப் போட்டாலும் அச்சரம் பிசகாமல் பொருந்தும்.

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டபோதெல்லாம் வரும் அச்சத்தை சொல்கிற இடத்தில் உயிர் உறைந்து போகும் ஒரு வித வலி.

கோவிந்தனின் புதியதோர் உலகம் முதல் முதல் புளட்டின் வெளித்தோற்றத்தை கிழித்துத் தொங்கப்போட்டது. (அதே கோவிந்தனை பின் புலிகள் சிதைத்துப் போட்டதையும் அறிந்தவர்களுக்கு தெரியும்) இப்போ குமிழி….

” புலியின் உளவாளி என்ற உரப்பலில் தோழர்கள் உண்மையறியாது குழம்பி நின்றார்கள். மீட்பர்கள் அடித்தார்கள்.குதறினார்கள். சுந்தரம் படைப்பிரிவு என்று பெயர் சூடிக்கொண்ட அவர்கள் சுமார் ஆறு ஏழு பேரும் ஒரு பந்தைப் போல மதனை உருட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள்……

மனதைத் திடப்படுத்திக்கெண்டு வாசிக்கத் தொடங்குங்கள். அருமையான படைப்பு. தோழர் ரவி நல்ல எழுத்தாற்றல் மிக்கவர் என்பது தெரியும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல் மிகுதியை பின்னர் வாசிக்கலாம் என புத்தகத்தை வைத்துவிட முடியாத படி ஒவ்வொரு வரியும் உள்ளீர்க்கும் .
நாவலை வாங்க விரும்பினால் Ravindran Pa தொடர்பு கொள்ளுங்கள்.

 • 28082020

fb link : https://www.facebook.com/puthiyavanra/posts/10163937532500697


***

வாசிப்பு-5

 • தேவன் (சுவிஸ்)

உடைந்து போன கனவுகளின் துகள் ஆனேன். நாவல் ( வரலாறு) எப்போதும் முடிக்கும் வரை பதட்டத்திலேயே வைத்த்திருந்தது. வரலாறு , கனவு போலவே தொக்கி நிற்கிறது . உள்ளேயும் வெளியேயும் அறிந்த அதிகமான தகவல் உண்டல்லவா ? அது நாவல் இடையில் நிற்பது போல் உணர்வைத்தந்தது. 35 வருடத்தின் பின் தொகுப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று, ரவியால் சாத்தியமாக்கப் பட்டுள்ளது. புனைவு இல்லாத உண்மை!

ஜேம்ஸ்பொண்ட் சாகச வர்ணனை இல்லை. அந் நேரத்தில் யதார்த்தமான படம்காட்டலையும், நெல்லியடி சந்தியை கடக்கும் போது வெள்ளிச் சங்கிலியோடு முகத்தையும் காட்டியதான ஜம்பத்தையும் உரித்துக் காட்டியது, இன்றய முதுர்வின் வல்லமையல்லாமல் வேறில்லை.

“மாற்றம் என்பதே மாறாதது” என்பது போல, தோழர் சன்முகதாசனின் “தவறுகள் இல்லாத தூய்மையான போராட்டம் எங்கேயும் நடந்ததில்லை. தவறுகளுக்கு ஊடாகத்தான் அது பயனிக்கும். அது தவறுகளை அடையாளம் கண்டு தன்னைத் தானே திருத்தி படிப்படியாக முன்னேறும்” என்பதுவும் தொடர்ந்துகொண்டே போகும் .

பெண் போராளிகளும் இருந்தார்கள் என்பதைவிட, அவர்களின் மனநிலை எப்படியாக இருந்தது என்றோ , அவர்களின் சுதந்திரம் எவ்வாறாக இருந்தது என்றோ, நீங்களும் தேடினால் , நீங்களும் எனது நண்பர்களே !


***

வாசிப்பு-6

 • மாலினி மாலா (யேர்மனி)

உண்மைகளுக்கு உறங்கிவிடாத சக்தி இருப்பதைப்போல் உறங்கவிடாத சக்தியும் உண்டு. என் உறங்காத இரவொனறைச் சுவீகரித்துக் கொண்ட இந்தக் ‘குமிழி’ இன்னும் எத்தனை கேள்விகளை, அதையொட்டிய சிந்தனைகளை குமிழி குமிழியாக எனக்குள் உருவாக்கி மனதுக்குள் வெடித்து வெதும்பவைக்கப் போகிறதோ தெரியவில்லை.

போராட்டமும் அதன் பின்னுமான காயங்கள் தானே இங்கு முன்னணியில் இடம்பிடிக்கின்றன. என் நீண்டகாலத் தேடலான ஆயுதப்போரின் ஆரம்பப்பின்னணிபற்றிய ஒரு காயப்பட்டுக் கசங்கிய வாக்குமூலமாக நகர்கிறது குமிழி.ஒரு எழுத்துப்படைப்பு என்னை வாசி எனத்தூண்ட, பாதியில் மூடி வைத்துவிடாதே எனப் பிடிவாதம் கொள்ளவைக்கும் முக்கிய அம்சங்களுக்குள் அது நம்பும்படியான சம்பவங்களையும், மொழிவளத்துடன் கூடிய தொய்வற்ற எழுத்துநடையையும் கொண்டிருத்தல் அவசியம் என நினைக்கிறேன். கடைசிவரிவரை குமிழி என் கைவிட்டு இறங்கச் சம்மதிக்கவில்லை.

சலனமற்று சீராக நகரும் அருவியில் காயப்பட்டுக் காயப்பட்டு நகர்ந்து தன்னைவடிவமைத்துக்கொண்ட கூழாங்கல் ஒன்றின் தண்ணீருக்குள் கலைந்த கனவுபோல், கலந்த கண்ணீர் போல் நகர்கிறது குமிழி.நூல் முறைப்படி வெளியாகுமுன் அதன் முடிச்சுகளை நான் பொதுவெளியில் பிரித்துக்காட்டல் தர்மமல்ல எனக் கருதுவதால் இத்துடன் நிறுத்திக்கொண்டு அதன் வெளியீட்டு நிகழ்வின் பின் தொடர்கிறேன்.


***

வாசிப்பு-7

 • புதியமாதவி (மும்பை)

குமிழி = எல்லா பொய்களையும் நம்பிய உண்மை !

இண்டைக்கும் அதே கனவா, அப்பா?தலைமுடியை வருடி கேட்கும் மகளிடம்என்ன சொல்வது?மகளே…கனவுகள் என்னைத் துரத்துகின்றன என்றா?கனவுகளைத் தொலைத்த நினைவுகள் துரத்துகின்றன என்றா?வாழ்க்கையைக் கனவுகளில் தொலைத்துப்போனஎங்கள் தலைமுறையின் கதறலை இரவைக்கிழிக்கும் ஈனக்குரலை..தலைகீழாக தொங்கவிடப்பட்டு கிழிந்துதொங்கிய மதனின் உடலில் நானும் இருந்தேன் என்றா,,!மகளே.. எதைச் சொல்வது..?எதைச் சொல்லாமல் விடுவது?சொன்னால் புரியுமா உனக்கு?

எனக்கே இன்னும் புரியாத குமிழியைஅப்படியே உன் கைகளில் தருவதற்குள்உடைந்துப் போகிறது குமிழியின் முகம். மகளே, அறிவாயோ அந்த மந்திரக்கிழவிவாசலில் வந்து நிற்பதை? அவளுக்குள் நான்நுழைந்துவிடும் போது..

மகளே.. “ நான் இப்போ என்னவாக இருக்கிறேன், யாராக இருக்கிறேன். அவள் எனது கதையைகிழித்து தொங்கும் சிலந்தி வலையாய் அவளே விரித்து போட்டுவிட்டு சென்றுவிட்டாள்.

குமிழி…

நாவலா, சுயசரிதையின் முதல் அத்தியாயமா? நாவலெனில் எது புனைவு? சுயசரிதை எனில் எது குமிழி?!

” நீ காணாமல் போய்விட்ட தாக நினைத்திருந்தேன்”

“எனக்கு அழிவில்லை”

“வெற்றிகளுக்கு பொறுப்பேற்கும் உசாருடன் போன நீ இப்போ தோல்விகளுக்கு பொறுப்பேற்காமல் நழுவுவதுஎன்ன நியாயம்?”

“களைத்துவிட்டேன், நம்பிக்கையை தொலைத்துவிட்டேன். நான் எனது உயிர் குறித்தே இப்போ கவலைப்படுகிறேன். நான் வாழ வேண்டும். எனக்கு இருத்தல் மீது ஆசை வந்திருக்கிறது. மரணத்தை வெறுக்கிறேன்”

“நானும் தான்! “

“ஆடை களைவது போல் எல்லாவற்றையும் களைந்துவிட்டு ஒரு வெற்று மனிதனாக வாழ இலகுவில் உன்னால் முடியாது. எனக்கு உன்னை நன்றாகவே தெரியும். நொருங்கிப் போவாய்.” (பக் 208)

ஈழப்போராட்டம் இயக்கங்களின் வரலாறுமுகாம்களில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த இளைஞர்கள். இயக்கங்களில் வைக்கப்பட்ட அவர்களின் பெயர்களுக்கும் செயல்களுக்கும் சம்பந்தமேஇல்லை என்பதுடன் முடிந்துவிடுகிறதா. இயக்கங்கள் பேசிய சமத்துவத்திற்கும் இயக்கங்களில் புழங்கிய “அண்ணே, பெரிசு,பெரியவர்” இவைகளுக்கும் கூட தொடர்பில்லை.

“எல்லா பொய்களையும் நம்பியது கூட பொய்யில்லை”

எது உண்மை? உண்மை பொய்களால் கட்டமைக்கப்பட்டதா?பொய்களை உண்மைகளாக்க முடியுமா? உண்மைகள் ஏன் பொய்களின் முகங்களில் குமிழியாக ஒட்டிக்கொண்டன?உண்மைகள் ஏன் குமிழியாகிவிட்டன? துருத்திக்கொண்டு தெரியும் புடைப்பாக, வீக்கமாக, நீர்மேல் குமிழியாக ஒரு தலைமுறையின் இளமை.

கரும்புள்ளிகள் துரத்த வேகமெடுத்து ஆரம்பித்த பயணம்… பனிப்பிரதேசத்தின் கனவுகள் துரத்த விழித்துக்கொள்கிறது.

“நான் கட்டடக் கலைஞனாகி பின் எனது உழைப்பால் இந்தக் குடும்பத்தைத் தாங்குவது , எனது சகோதரிகளுக்கான சீதனத்தால் அவர்களை மீட்பது போன்றவற்றுக்கான சாத்தியத்தைவிட ஒரு சுதந்திர சோசலிச தமிழீழம் உருவாகினால் என் போன்றே எல்லோருக்கும் மீட்சி கிடைக்கும் என்று நம்பியதும் பொய்யில்லை. எனது என்ஜினியர் கனவை பழிவாங்கிய அரசுக்கு எதிராக கோபம் கொண்டதும் பொய்யில்லை. கொலையுண்ட சக மாணவர்களில் என்னைக் கண்டதும் பொய்யில்லை. மண்ணுக்காய் மரித்தவர்களின் சாம்பலிலிருந்து தமிழன் என்ற அடையாளத்துடன் நான் எழுந்ததும் பொய்யில்லை. வண்ணை ஆனந்தனின் வெளவால்கள் எனக்கு திசைகாட்டியதும் பொய்யில்லை. எல்லா பொய்களையும்நம்பியதும் பொய்யில்லை”

ஆம்… குமிழி… உண்மைகள் பொய்யான கதை.

குமிழி.. கனவுகள் குமிழியாக உடைந்துப்போன வரலாற்றின் ஒரு துண்டு.

குமிழி.. புனைவல்ல.குமிழி.. நிஜம்.

உடைந்து உடைந்து .. உண்மைகளும் உடைந்து எல்லாமே உடைந்துப் போன காலத்தில் மந்திரக்கிழவி வந்து கனவுகளின் திரைகளை விலக்கி வைத்திருக்கிறாள்.

ரகு, மதன், பாண்டி, லெனின், கஸ்ரோ,உமாமகேஸ்வரன், ஜோன், சந்ததியார், சேகர், சதா எல்லோரும் வருகிறார்கள்..

“அரசியல் அறிவூட்டப்படாத இராணுவம்ஒரு போதும் சோசலிச விடுதலையைப் பெற்றுத் தரப்போவதில்லை. வெறும் இராணுவ அதிகாரம் சொந்த மக்களுக்கு எதிராகவே தனது துப்பாக்கியைத் திருப்பக்கூடியது. அது விடுதலை அடைந்தால் கூட அதைச் செய்யும்” (பக் 93)

இராணுவத்தால் கட்டமைக்கப்படும் ஒவ்வொரு தேசமும் சொந்த மக்களுக்கு குமிழியாகிவிடுகிறது. தன் மக்களையே கொன்று குவித்து இராணுவ ரகசியங்களைக் காப்பாற்றிக் கொள்கிறது அரசாங்கம். மொழி எல்லைகளைக் கடந்து தேசத்தின் எல்லைக்கோடுகளைக் கிழித்துக்கொண்டு குமிழி பயணிக்கும் இடங்கள் ஒரு தேர்ந்த அரசியல் பாடமாக தன்னை எழுதிப் பார்த்திருக்கிறது. சித்தாந்தங்களை அனுபவத்துடன் உரசிப் பார்க்கும் போது எது குமிழி ஆகிறது? அனுபவங்களா அல்லதுஅரசியல் சித்தாந்தங்களா!

கரும்புள்ளிகளாக துரத்தும் குமிழியின்பின்னணி பாடலாக இப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.. “தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா…”


***

வாசிப்பு-8

 • அரியநாச்சி (புதுவை)

குமிழியை வாசித்துமுடித்ததும் Between the first and the last nothingness என்ற வரிதான் நினைவில் முதலில் தெறித்தது. அதனால் மீண்டும் ஒருமுறை வாசித்துவிடலாமென மூடிய நாவலைத் திறக்கப் போனபோது, இன்னொருமுறை ரகு, ஜோன் மற்றும் பலரையும் வேம்பு, பூனை போன்ற பலதையும் வரிவரியாகச் செதுக்கி முடித்துவிட்டு உட்கார்ந்திருக்கும் எழுத்தாளரை இழுத்து மீண்டும் வீட்டுக்கும் போராட்டத் தளத்திற்கும் இடையிலான ஊசலாட்டத்தில் விட்டு once more செயல்பட வைக்க மனமற்று நாள் குறிப்பிடாது மறுவாசிப்பை தள்ளிவைத்துவிட்டேன்.

குமிழியைப் படித்துப்பெற்றதன் சாரம் வாசகனுக்கும் இருக்குந்தானே. அப்பட்டமாக வெளிக்காட்டிக்கொள்ளாத செருக்கை வாசகனுக்குள் பற்ற வைத்திருக்கும் நாவல் ஒரு நியாயத்தைச் செய்திருப்பதை மனம் ஏற்கிறது. கடைசிப் பக்கத்தில் தெளிவாகச் சொல்லிச்சென்றாலும் 35 வருடகாலக் காத்திருப்பின் பின்புலத்தில் நிகழ்ந்த உழைப்பு நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது.

அமைதியாக ஏதோ சொல்ல வருவதுபோலவே தோற்றங்கொண்ட குமிழியின் சாம்பல்நிற அட்டையின் சைலென்ஸ், மூர்க்க எதேச்சதிகார அரசின் காட்டுத்தர்பாரினால் சகிப்பின் எல்லைவரைச் சென்று, அமைதியான விடுதலைக்கு வாய்ப்பற்று வாழ்க்கையைப் பணயம் வைத்து மாற்று வழியில் அனைத்துச் சாத்தியங்களையும் பரிட்சித்துப் பார்க்க பயிற்சியில் ஈடுபடுகிறவர்களைப் பற்றிச் சொல்வதற்கு வேகமாக, அதேசமயம் அழுத்தமாகப் படபடத்து அழைக்கிறது.

ஊரிலுள்ள இளைஞர்கள் ஏதோவொரு வகையில் ஏதோவொரு இயக்கத்தோடு தம்மை இணைத்துக்கொண்டு பொது இலக்கான இனவிடுதலை நோக்கி சதா இயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒரு இயக்கத்தினருக்கும் இன்னொரு இயக்கத்தினருக்கும் அடிநிலையில் எல்லாம் பொதுவாக இருப்பதைக் கட்டமைக்கும் ஆசிரியர், மேல்மட்டம் இரகசியம் என்ற பெயரில் குற்றத்தை நிரூபிக்காமல் மேற்கொள்ளப்படும் தண்டனைகளையும், கொலைகளையும் நடக்கும் பூடகங்கள் அனைத்தையும் சோசலிசத்திற்கு எதிரானதென உணர்த்துகிறார், ‘அவர்களும் போராளிகள் தானே’ எனுமிடத்தில். நிறையக் கேள்விகள், எல்லாமே சக மனிதனின் இருத்தலையும் சுதந்திரத்தையும் அங்கீகரிக்கக் கோரும் கோரிக்கையாகவே மறைவில் நின்று கேட்டுக்கொண்டே இருக்கிறார், நாவலாசிரியர்.

ஒரு கதாபாத்திரம் தனக்குத்தானே பேசிக்கொண்டாலும் கூட அங்கே ஒரு சந்தேகமும் தடுமாற்றமும், பயமும், சுதந்திரமின்மையும் சூழ்ந்திருப்பது தெளிவாக வெளிப்படுகிறது. போராளிகள் தலைமையின் ஒற்றைச் சாட்டைக்கு கட்டுப்பட்டு ஓடும் குதிரைகளாக பயிற்சியின்போது வேண்டுமானால் சாத்தியப்படலாம், ஆனால் முடிவெடுக்கும் நிலையில் ட்ரிகரை அழுத்தும்போது. அமைப்புக்குள்ளேயே ஒரு போர் நிகழ்கிறது, தாமே தம் கட்டமைப்பைச் சிதைத்துக்கொள்வது நிகழ்கிறது.

மனதுக்கள் பற்றி எரியும் விடுதலைக்கான தேடல் கூட்டுச்சேரும்போது கலந்துவிடும் மனவித்தியாசத்தால் அமைப்புக்குள் சதா ஒரு தீர்க்கமின்மை நிலையாகத் தங்கியிருப்பதை முகாம்களில் நடக்கம் உரையாடல்கள் வழி அறியலாம். எதிரும் புதிருமான எண்ணம் கொண்டவர்களாகவே கூட்டுச் சேர்ந்தவர்கள் அவரவர் புள்ளியில் மறைந்துபோகும் வரை இருந்திருக்கிறார்கள். அமைப்பும் எல்லாக் கருவிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இசையை வெறும் முடிவுறா இசைக்குறிப்பாகவே விட்டுக்கலைந்துபோகிறது. பாதி சிகிச்சையில் எழுந்து சென்றுவிட்ட நோயாளியைப் போல் இன்னமும் சமூகம் அவதியில் இருப்பதற்கு இதெல்லாமும் காரணமாக இருக்கலாம்.

இங்கே தமிழகத்தில் ஆட்சி பீடத்திற்காகப் போட்டுக்கொண்டிருக்கும் சண்டையால் எதிராளிக்கு இடமளித்துவிட்டு நிலத்தைக் காட்டிக்கொடுத்து ஏமாந்து கிடப்பதும் அப்படியானவொரு அணுகுமுறையினால் இருக்கலாம். கல்வியில் தரம் கோர்ப்பதாக நுழைந்த அதே உத்தி இங்கே இப்போது தமிழகத்திற்குள் நுழைந்து விஷத்தைத் தடவிக்கொண்டிருக்கிறது. நீங்கள் கடந்துவிட்ட இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.

போராட்டக்காரர்களின் பிரதிநியாகப் பேசும் எழுத்தாளர் பெரிய பிரயத்தனமில்லாமல் லகுவாகத் தன்னை ஒரு நிதானமான நிலையில் தக்கவைத்துக் கொள்கிறார். ஒருவேளை அது அவரது இயல்பாகவும் இருந்திருக்கக் கூடும். இல்லையேல் பக்கத்துக்குப் பக்கம் வரிக்கு வரி மசாலாப் படங்களைப் போல வெட்டுக்குத்தும் இரத்தக்களரியும் இரணகளரியுமாகக் கவிச்சை அடித்திருக்கும். அது இல்லை.

கதையில் சந்தேகத்திற்கு இடமானவர்கள் அல்லது அதிகார அடுக்கில் ஏதாவதொரு நிலையில் உள்ள நபர் தனக்குக் கீழுள்ளவர்களை அச்சத்திலேயே வைத்திருப்பதற்காகக் கொண்டு செல்லப்படுபவர்கள், திடீரென ஒரு நாள் காணாமல் போவார்கள். தப்பித்துச் சென்றதாகப் பேச்சு அடிபடும், ஆனால் ஆட்கள் காணாமல் போவதெல்லாம் கொலைகளின் கணக்கில் பின்னர் உறுதிப்படுத்தப்படும்.

வலிகளும் வேதனைகளும் மிகவும் கனக்குறைவானச் சொற்களையும் காட்சிகளையும் கொண்டே கட்டமைத்து மிக அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்த தயங்கவில்லை. உண்மையில் எளிமையான, எங்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சொற்கள்தான். ஆனால் கோர்த்திற்கும் அமைப்பினால் மிகவும் கூர்மையானதாகத் தன் காரியத்தை ஆற்றிவிட்டுக் காத்திருக்கும், காட்சிகள் 30 அத்தியாயங்களிலும் இடம்பெற்றுள்ளன.

நாவலைத் தொடர்ந்து வரும் நாவலாசிரியரின் அக்கறையும் கரிசனமும் தன்னைதானே பளிச்சென வெளிச்சம்போட்டுக் காட்டிக்கொண்டிருக்காமல் உணர்த்தவேண்டியவற்றை உணர்த்தவல்ல சொற்களைச் சரியாகப் பிரயோகித்து உணர்த்திவிட்டுப்போவதெல்லாம் தேர்ந்த எழுத்தாளர்களின் நடையில் கண்டிருக்கிறேன். எப்போதும் பரபரப்பு, எப்போதும் இரகசியம், எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் சூழலாக இருந்தாலும் ஒருவித அமைதி பரவியிருக்கப் பார்த்துக்கொள்ளும் உத்தியும், கவித்துவமான வருணைகளுக்கும் உளவியல் விவரணங்களையும் சைலண்டாக மடித்துப்போட்டு வாசகனை “ஆ!”வென ஆச்சரியப்படுத்த தவறவில்லை. வேம்பிலிருந்தே ஆரம்பிக்கிறது இந்த பரிவு. அடிக்கடி வந்துபோகும் பூனையின் நெளிவுசுலுவகளோடு விளக்கப்படும் உளவியல் விவரணைகள், ஏறக்குறைய அனைத்துப் பக்கங்களிலும் அழகிய வரிகளில் பூத்து மனக்கும் இன்னபிறவும் ஒரு மாதிரியான ரசிப்பு மனநிலையில் கிடத்தித் தாலாட்டுகிறது.

குமிழி நினைவலைகளைப் பிரித்துப்போட்டு அனைவரையும் பிரிண்ட் பக்கங்களின் ஊடாக வாசிக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு வாழ்க்கையும் மிகமுக்கியமான பகுதிகளைத் தனக்குள்ளே உருட்டித்திரட்டி எப்போதெல்லாம் சாவகாசம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் எடுத்துவைத்து அசைபோடுவதாக இருந்தாலும், கண்முன் பரவவிடும் எழுத்தின் நேர்த்தி. இது ரவி அவர்களது முதல் புத்தகம் என்றால் நம்புதற்கில்லை. யதார்த்த விவரணை போய்க்கொண்டே இருக்கச் சட்டென முத்தாய்ப்பாக ஒரு வரி முன்னுள்ள வரிகளை அணைத்தையும் அள்ளி முடித்து ஒரு மூட்டையாக்கி எடுத்துவைத்துவிட்டு அடுத்தப் பத்திக்குச் செல்லும் எழுத்தாளரின் எழுத்துள் வசீகரங்களும் ஹாஸ்யங்களும் நிறையே அடுக்கப்பட்டுள்ளதை வாசகர்கள் நிச்சயம் காணக்கூடும்.

நான் என்னிலிருந்து ஆரம்பிக்கும்போதுதான் எந்தளவிற்குக் குமிழியுள் நிறைந்துள்ள எழுத்தின் அருகாமையைச் சௌகரியமாக உணர்கிறேன் என்பது புரிகிறது. வெக காலத்திற்கு முன்பு எங்கேயோ எப்போதோ கேட்டுப்பழகிய சொற்களின் வாடையை மீண்டும் பெறுகிற சுவாரஷ்மே குமிழி எனக்கு. ஒருவேளை என் அப்பா வழி மூதாதையர்கள் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்து எங்கள் மரபணுவுக்குள் கடத்திவிட்டிருக்கலாம். இதெல்லாம் ஆசிரியரின் வாசிப்பு எத்தகையதாக இருந்திருக்கிறது என்பதை அடையாளங்காண உதவியிருக்கலாம்.

நாம் பெரும்பாலும் பேசுவதை வாழ்வதில்லை. வாழ்வதையும் பேசுவதில்லை. இந்த முரண் அதிகரித்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் நேரிடையாக வார்த்தைகளில் படிந்திருக்கும் அழுக்குகளைக் களைந்துவிட்டு மணக்க மணக்க விடிகின்ற பக்கங்களாகப் பொழுதுகளை வாசிக்கும் லயிப்பு சுகமே. B,H,L முகாம்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் நுழைந்து அடுத்தடுத்த முகாம்களுக்கு இடமாறும்போதெல்லாம் ஒன்றிலிருந்து இன்னொன்றின் சௌகரியங்களும், வலிவேதனைகளும் அங்கேயே கொட்டிக்குமிக்காமல் கூடவே சுமந்தலைந்து கொரோனா காலத்தில் இயல்பிற்கு மீறிய ஓய்வு தாக்கும்போது அந்த நேரத்தைத் தனதாக்கிக்கொண்டு குமிழி விருந்து படைத்திருப்பது சுவாரஸ்யம். அன்பும் வாழ்த்துக்களும் !


***

வாசிப்பு-9

 • டேவிட் கிருஸ்ணன் (பிரான்ஸ்)

நீண்ட காலத்துக்கு பின் நண்பன் குட்டியின் வேண்டுகோளுக்கு இணங்கி, குமிழி் என ஒரு புத்தகத்தை நேற்று வாசித்து முடித்தேன். எனது பார்வையில் புத்தகம் பற்றி சில வரிகள்…

சுய குறிப்பிலேயே ஆசிரியர் ரகு ஒரு கைதேர்ந்த எழுத்தாளர் என்பது புரிகிறது. இலகுவான மொழி, குழப்பம் இன்றி கதை நகர்வு, வார்த்தை நாகரீகம் என அனைத்திலும் ரகு கவனமாகவே பயணம் செய்கிறார். சில பக்கங்களில் கதை நிஐ கதையாக போவது புரிகிறது. தனது அறிமுகத்தை கைதி எண் போட்டு தான் யார் என்பதை பதிவு செய்கிறார். என்னையும் பல ஆண்டுக்கு பின் நினைவுகளை நினைக்க வைக்கிறது குமிழி. கதை கழகமாக மாறி ஒரு சிலரை முன் நிறுத்தியே சம்பவங்கள் தொடர்கிறது. சில கதாபாத்திரம் எனது மிக நெருங்கிய நட்புகள், அன்றும் இனறும்! கவனமாக எழுதி உள்ளது புரிகிறது. ரகுவுக்கு எனது வாழ்த்துக்கள்!

இது கதையாயின் அருமை.

சாட்சியமெனில் தேவையானது.

வரலாறாயின் விமர்சனமுண்டு !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Follow சுடுமணல் on WordPress.com

Archives

Blog Stats

 • 25,847 hits
%d bloggers like this: