பெரியார் போலவே காந்தியும் மேலோட்டமாகவே எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது. அம்பேத்கார், பெரியார் போலவே காந்தியும் எனக்குப் பிடித்த தலைவர்களில் ஒருவர். வாழ்வு என்பது செயல்களால் மட்டுமல்ல செயல் மறுப்புகளாலும் அமைவது என நிகழ்த்திக் காட்டியவர் காந்தி என்பதால் போராட்டக் குணம்கொண்டவர்கள் காந்தியை வெற்றுச்சொற்களால் கடந்து செல்ல முடியாது. வலிமையான மைய அரசைவிட தன்னிறைவான கிராமங்களை உருவாக்குவது பற்றி பேசிய காந்தி எனக்கு முக்கியமானவர்.திணிக்கப்பட்ட ஒழுங்குகள் அச்சம் உள்ளவரைதான் நிலைக்கும் என்ற காந்தி முக்கியமானவர். நாம் கீழானவர்களாக உணராதபோது ஆள்பவர்கள் நமக்கு மேலானவர்களாக தம்மை உணர முடியாது என்ற நுண்ணரசியலை வெளிப்படுத்திய காந்தி எனக்கு முக்கியமானவர்தான். தமக்குள் விடுதலை அறத்தை கொண்டிராத தனிமனிதர்களும் சமூகமும் அரசியல் விடுதலையின் வழியாக எதனையும் பெற்றுவிட முடியாது என்பதை வௌ;வேறு வடிவங்களில் விளக்கிக் காட்டிய காந்தி எனக்கு முக்கியமானவர்தான். காந்தியத்தை கோட்பாட்டுப் புரிதலுக்கு உட்படுத்தி அதை ஏற்கவும், எதிர்க்கவும், கட்டவிழ்க்கவும் முடியாத அறிவுச் சோம்பேறித்தனத்திற்கு ஒப்பீட்டுப் பதிவுகள் ஒரு கேடு. பிரேமின் “காந்தியைக் கடந்த காந்தியம்” நூலை இவர்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
Day: October 2, 2019
வெறுமை
நிலாவொளியை இரகசியமாய் முத்தமிட்டு
கிறங்கிப் போய்விடுகின்ற
கடல் அலைகளின் கள்ள அசைவுபோல்
அவளின் தோல் சுருக்கங்களுக்கு இடையே
வாழ்ந்துபட்ட அனுபவம் துலங்கிக்கொண்டிருந்தது.
தன்னைத் தாங்குவதில் மூன்றாவது காலாய்
ஒரு கைத்தடியைத் தன்னும் அவள் மறுத்திருந்தாள்.
அனுபவத்தின் பாரம் அவளை
மெல்ல நடந்துகொள்ள அனுமதித்தது.
காணும்போதெல்லாம்,
ஒரு புன்னகையை அவள் சிந்தியபடி
எனை எதிர்கொள்வாள்.
எனது கைமணிக்கட்டை பிடித்து பேச தொடங்குவாள்.
எனது அவசரம் மணிக்கட்டின் பிடியை கடிந்துகொள்வதால்
செல்லுபடியாகிற ஒரு காரணத்தோடு
ஒவ்வொரு முறையும் அவளை கடந்து செல்வேன்.
என்றாவது ஒருநாள்
அவளுடன் ஆறஅமர இருந்து பேச வேண்டும்.
அவள் காட்டுகிற இன்னொரு உலகத்தை தரிசித்துவிட வேண்டும் என்ற
கனவு எனது அறிவின்மையால் கலைந்து போனது.
அவள் தனியாக வாழ்ந்து கழித்த அறை
வெறுமையாய்க் கிடந்தது.