நேற்றைய தினம் (21.04.2019) இலங்கை வரலாற்றில் பயங்கரவாதம் இன்னொரு பரிமாணத்தை நிறுவியிருக்கிற அச்சம்தரும் நாளாகியது. பெரும்பாலும் உதிரிப் பயங்கரவாத தாக்குதல்கள் அல்ல இவை என்பதை தாக்குதலின் எண்ணிக்கைகளும் அதன் தன்மைகளும் நேரத் திட்டமிடல்களும் நாட்தேர்வும் குண்டுகளின் வலுவான சேதம் தருகிற தன்மைகளும் தற்கொலைத் தாக்குதலும் உணர்த்துகின்றன. எனவே இது இலங்கைக்குள்ளால் திடீரென கிளம்பிய பூதமல்ல. இதற்கு ஒரு அந்நியப் பின்னணி இருக்க சாத்தியம் இருக்கிறது.
இவ்வாறான தேர்ந்த தெரிவுநிலைகளை கொண்டிருக்கிற இந்த சர்வதேசப் பயங்கரவாதம் அதை செயற்படுத்துவதற்கான கருத்தியல் அடிமைகளை அல்லது பொருளாதார அடிமைகளை உள்ளுரிலேயே தேடும். அதுவும் அந்த உள்ளுரின் அரசியல் சமூக முரண்பாடுகளின் பலவீனமான கண்ணிகளில் அதற்கான மனிதர்களை தேடுவது இலகுவாகிறது. எமது கடந்தகால போராட்ட வரலாற்றில் நடாத்தப்பட்ட பயங்கரவாத செயல்களின்மீது இதற்கான சில சந்தேகங்கள் தொடர்ந்தபடிதான் உள்ளன. சிங்கள அல்லது முஸ்லிம் மக்கள் மீதான கூட்டுக் கொலையை அல்லது இனப்படுகொலையை தமது போராட்டத்தின் அம்சமாக விடுதலைப் புலிகள் கொண்டிராத போதிலும், யாழிலிருந்து ஒரே இரவில் முஸ்லிம் மக்களை வெளியேற்றியதும் அனுராதபுரப் படுகொலையும் காத்தான்குடிப் படுகொலையுமாக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதச் செயல்களின் பின்னணி சர்வதேச பேரம்பேசல் சார்ந்தது என ஒரு மதிப்பீடு இருக்கிறது. வெறும் பயங்கரவாதத்தை செயல்முறையாகக் கொண்ட (முஸ்லிம்) மதவெறியர்களிடம் சர்வதேச பேரம்பேசல் என்பது எளிதானது.
மத வெறியர்களின் மனிதகுல விரோத உசுப்பேத்தல்கள் மதத்தின் பெயரால் செய்யப்படுகிறது. அதன் அளவு சிறு பகுதியாக இருக்கிறபோதும், சாமான்ய மனிதரின் பொதுப்புத்தியில் அது இலகுவில் தாக்கம் செலுத்தவல்லது. அதை அடையாளம் காட்டி எதிர்த்து நிற்கிற சூழல் இலங்கையில் அச் சமூகம் சார்ந்த புத்திஜீகளினதும் சமூகப் பொறுப்பாளர்களினதும் கைகளில் பெருமளவு தங்கியுள்ளது. அதை முஸ்லிம் சமூகம் சரிவரச் செய்ததாகத் தெரியவில்லை.
விடுதலைப் போராட்டத்தின்போது ஆயுதத்தை அதிகாரத்தில் வைத்த புலிகளின் அராஜகங்களுக்கு எதிராக அல்லது ஜனநாயகவிரோதப் போக்குகளுக்கு எதிராக தமிழ்ச் சமூகத்தில் விமர்சனப் போக்கு ஒன்று தொடர்ச்சியாக தக்கவைக்கப்பட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அது உயிரைக் காவுகொடுப்பதுவரை போயும் உள்ளது. ஆனால் இலங்கையில் மற்றைய மதங்களை எதிர்நிலையில் நிறுத்தி முஸ்லிம் மதவெறியர்கள் பேசிக்கொண்டிருக்கிறபோது, எதிர்நிலை செயற்பாடுகள் அதே சமூகத்திடமிருந்து பெரியளவில் வெளிப்பட்டதில்லை. அங்கு சமூகப் புத்திஜீவிகளுக்கும் சமூகப் பொறுப்பாளர்களுக்குமான களம் வெறுமையாகவே உள்ளது. தமிழ் மக்களை மட்டுமல்ல, சிங்கள மக்களையும் பலிகொண்டிருக்கிற இத் தாக்குதல்கள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான கருவியாக அல்லது அதன் போர்வையில் கோத்தபாய போன்ற கடும்போக்காளர்களை ஆட்சிக்கு கொண்டுவர வழிவகுக்கவும்கூடும். இதன் விளைவுகள் முஸ்லிம் சமூகத்தை மோசமாகப் பாதிக்கலாம். நாட்டையும் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கலாம்.
தீவிரவாதப் போக்கை பிரதிநிதித்துவப் படுத்தி இயக்குபவர்கள் அல்லது அதிகாரநிலையில் பேணுபவர்கள் தனது உயிரை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு அதற்குப் பலியாகிப் போகிற சாமான்யரின் உயிரையே காவுகொடுப்பது வரலாறு நெடுகிலும் தொடரும் ஒன்று. பலிக்கடாவாகிப் போகிற சாமான்ய மனிதரை வைத்துக்கொண்டு அல்லது பலிகொள்கிற பயங்கரவாதியை வைத்துக்கொண்டு அவரது அடையாளம் சார்ந்த மொழிபேசுபவர்களையோ மதத்தையோ பண்பாட்டையோ சேர்ந்த சமூகத்தை தீவிரவாதத்துடன் பொதுமைப்படுத்துவது பொதுப்புத்தியின் அறியாமை. பயங்கரவாதங்களோ எதிர்ப்பயங்கரவாதங்களோ ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாக அலகாக (அரசுகளோ, பயங்கரவாத அமைப்புகளோ) தன்னை நிறுவி வைத்திருக்கிற போது அதை செயற்படுத்தும் கடைநிலை இராணு வீரனோ அல்லது சாமான்யரோ இந்த நிறுவனமயப்பட்ட அமைப்பின் உயர் அதிகார பீடத்துடன் நேரடி தொடர்பில் வைத்திருக்கப்படுவதில்லை. அது படிநிலைகளினூடாக அவனை வந்தடைபவை.
எனவேதான் இவ்வாறான பயங்கரவாத நிகழ்த்துதலின் பலிக்கடாவாக இருப்பவர்களின் அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு, பயங்கரவாதத்தின் மூலத்தை அல்லது மூலவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒரு பொது மனிதஜீவி விடப்படுகிறார். இன்னொருவகையில் சொன்னால் -அரசுகள் போலல்லாது, பயங்கரவாத அமைப்புகள் சிலசந்தர்ப்பங்களில் உரிமைகோரினாலன்றி- அம்பை எய்தியது யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒரு பொது மனிதஜீவி விடப்படுகிறார். உலகம்பூராவும் இதே நிலைமைதான். தற்போது இலங்கையில் நடத்தப்பட்டிருக்கும் இந்த பயங்கரவாதத் தாக்குதலும் இதற்குள்தான் தன்னை இருத்திக்கொள்ளும் நிலை இருக்கும். இந்த இடங்களில் அரசியல் மதிப்பீடுகளானது சாத்தியப்பாடுகளை மட்டுமே வெளிக்கொணர உதவுகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதல் வெளிப்படையாக பார்க்கிறபோது மதங்களை மையப்படுத்தியதாக தெரிகிற போதும் அதன் உள்நோக்கம் அதற்கு வெளியிலானது என தோன்றுகிறது. கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான மத ரீதியிலான முரண்பாடுகள் இலங்கையில் கூர்மையடைந்திருக்கவில்லை. ஒரு தர்க்கத்துக்காக இவ்வாறாக பிரதியீடு செய்தாலும்கூட, தனிச் சிங்கள பகுதியிலுள்ள தேவாலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை. சரி தமிழ் மக்களுக்கெதிரான முஸ்லிம் பயங்கரவாதம் என எடுத்துக்கொண்டால்கூட அது தமிழ்மக்கள் தம்மை அடையாளப்படுத்துகிற மதமான இந்துசமயத்தின் கோவில்களை இலக்காகக் கொள்ளவில்லை.
ஆனால் இத் தாக்குதல்களில் இலக்காக இருந்திருப்பது தேவாலயங்கள் மட்டுமல்ல ஐந்து பெரிய நட்சத்திர விடுதிகளுமாகும். இது கவனப்படுத்தப்பட வேண்டியது. நாட்டில் எத்தனையோ பெரிய தேவாலங்கள் இருக்கிறபோதும், தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற தேவாலயங்கள் மதங்களுக்கிடையிலான மோதல்களை உருவாக்கவல்ல இடத்தேர்வு கொண்டது. அத்தோடு சுற்றுலாத் தொடர்பு கொண்டவை. அசுர வேகத்தில் வளர்ந்துவரும் இலங்கையின் சுற்றுலாத்துறை அந்நியச் செலாவணியில் முக்கிய பங்கை ஆற்றுகிறது. இந்த சுற்றுலாத்துறை மட்டக்களப்பில் வேகமான வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கிறது. சுற்றுலா களிப்பில் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த மேற்கத்தையர்கள் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். அதே இயேசுவை கடவுளாகக் கொண்ட கிறிஸ்தவர்களும் ஓதொடொக்ஸ் மதத்தைச் சேர்ந்தவர்களுமான கிழக்கு ஐரோப்பியர்கள் இன்னொரு பெரும் பகுதியாக இருக்கிறார்கள்.
சிறீலங்கா புதிய உற்சாகமூட்டும் சுற்றுலாத் தலமாக பிரபல்யப்படுத்தப்படுவதுடன் அங்கு செல்வது ஒரு trend ஆக இங்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே இயேசுநாதர் ஒரு இலக்காகவும், சுற்றுலா பயணிகளின் தங்குமிடமான வகைமாதிரி விடுதிகள் இன்னொரு இலக்காகவும் அமைந்திருக்கிறது. ஒரு நாட்டின் பாதுகாப்பு தலைநகரத்திலே அச்சறுத்தப்படுவது ஒட்டுமொத்த நாட்டின் மீதான பாதுகாப்பின்மையை சுற்றுலாப் பயணிகளுக்கு ஊட்டவல்லது. உதிரித் தாக்குதல்கள் சம்பவங்களாக கடந்து போகலாம். ஆனால் இவ்வாறான தொடர் தாக்குதல்கள் ஒரு பயங்கரவாதப் போக்கினை அதன்மூலமான பாதுகாப்பின்மை அச்சவுணர்வை எப்போதுமே மனதில் நிறுத்திவைத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் தன்மை கொண்டது. இதன்மூலம் சுற்றுலாத்துறையை வீழ்ச்சியடையச் செய்வதுமட்டுமல்ல, வெளிநாட்டு முதலீடுகளையும்கூட கொஞ்சமாவது எச்சரிக்கை நிலைக்குள் கொண்டுவந்து மட்டுப்படுத்த முடியும். அதாவது இலங்கையின் பொருளாதார இலக்காக இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிற ஒரு சாத்தியத்தை இதனூடு மதிப்பிட முடிகிறது.
கடந்த வரலாற்றுக் காலங்கள் போலன்றி உலகமயமாக்கலின் ஒழுங்குக்குள் போர்ப்பட்ட நாடுகள் அமைதியடைந்து வளர்ச்சி நோக்கி தன்னை புதுப்பித்து முன்னேறுகிற உதாரணங்கள் கிடையா. அந் நாடுகள் எல்லாமுமே ஒரு பாதுகாப்பின்மையை உணரவைக்கிற நாடுகளாகப் பேணப்படுகின்றன. முக்கியமாக சீனாவின் ஆதிக்கம் பலமாக நிறுவப்பட்டிருக்கிற இலங்கையில் அமைதி நிலவுவது இந்தியாவுக்கு (மேற்குலகுக்கும்தான்) உவப்பானதல்ல. இடையிடையாவது கொந்தளிப்பான நிலைக்குள் இலங்கை பேணப்படுவது அது தன் தலையீட்டை தக்கவைத்துக்கொள்ள உதவும். சீனா 1.2 பில்லியன் இலங்கையின் அபிவிருத்திக்கென கடன்கொடுத்திருக்கிறது. இந்தியா 1.3 பில்லியனை இலங்கையின் புகையிரத போக்குவரத்தை முற்றாக புனர்நிர்மாணிக்கவென வழங்க இருக்கிறது. இந்திய நாட்டின் ஏழ்மையில் உழலும் மக்களை புறந்தள்ளி அது இலங்கைக்கு இந்தளவு கடனை வழங்க முன்வருவதன் அரசியல் இந்த பிராந்திய மேலாதிக்க அரசியல்தான்.
இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடக்கலாம் என்ற எச்சரிக்கையை இந்தியா மூன்று நாட்களுக்குமுன் இலங்கைக்கு அறிவுறுத்தியிருக்கிறது. தாக்குதல் நடந்தபின் சுப்ரமணியசுவாமி இந்தியாவில் பிஜேபியின் ஆட்சிக்கான தேவையை இலங்கைச் சம்பவம் உணர்த்துவதாக செப்புகிறார் என்பதை இங்கு மேலதிக தகவல்களாக சொல்லிவிடலாம்.
இலங்கையானது தான் போருக்குள் உழலவேண்டி வந்த இனப்பிரச்சினைக்கான தீர்வை நேர்மையாக முன்வைத்து செயற்படுத்தி முன்னேற முடியாத பலவீனமான உள்ளுடன் கொண்டதாக இருக்கிறது. வெளித் தோற்றத்தில் ஒரு அமைதியை கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிற ஒரு நாடாகவும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தன்னை விற்று அபிவிருத்தி ‘மேக்கப்’ போட்டு தான் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிற ஒரு நாடாகவும் உலகின் கண்ணில் காட்சி தருகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தவெறியர்கள் சிலரின் சிறு கலவரம் தவிர கடந்த பத்து வருடங்களில் ஒப்பீட்டளவில் அமைதிநிலவுகிற நாடாக அது காட்சியளிக்கிறது.
இந்தச் சம்பவம் நடந்தவுடன் இரத்ததானம் செய்ய இலங்கையின் எல்லா பகுதியிலிருந்தும் மக்கள் முண்டியடித்து வைத்தியசாலைகளுக்கு சென்றிருக்கிறார்கள். இன மத மொழி வேறுபாடுகளை புறந்தள்ளி அவர்களை அசைத்துவிடுகிற இந்த மனிதாபிமானம் சுனாமியின் போதும் வெளிப்பட்டது. ஏன் 1983 கலவரத்தின்போதும்கூட வெளிப்பட்டது. தெற்கில் 3’000 தமிழர்கள் பலியாகிய துயரம் மறக்கப்பட முடியாது என்பதை நினைவில் தாங்கிக்கொள்ளும் அதேநேரம், 30’000 க்கு மேற்பட்ட தமிழர்கள் உயிர்காப்பாற்றப்பட்டு தமிழ்ப் பகுதியை வந்தடைந்தனர் என்பதை புறந்தள்ளவும் முடியாது. ஒவ்வொரு தமிழரின் உயிர்காப்பாற்றலிலும் ஒன்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களின் உதவி கிடைத்ததை அதை அனுபவித்து தப்பிவந்தவர்களிடம் கேட்டால் கதைகதையாகச் சொல்வார்கள். கலவரம் நடந்து ஒருசில மாதத்துக்குள் எல்லா தமிழர்களும் சிங்கள பகுதிகளுக்கு திரும்பி மீண்டும் படிப்படியாக தமது அலுவல்களை மேற்கொண்டனர். இந்த வளமான மனிதாபிமானம் இலங்கை சமூகத்தில் காணப்படுகிற நேரம்சம் கொண்டது. இதை நாம் பற்றிப்பிடித்துக்கொள்ள வேண்டும்.
இரத்தமும் சதையும் கொண்ட மனிதர்கள் கருத்தியல் அடிமைகளாக மாறுகிறபோது வன்முறை அவர்களின் திண்ணையில் மெல்ல வந்து குந்திவிடுகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தின் கீழ்நிலைக்கு தமது அரசுகள் காரணம் என்பதை புரியவிடாது அரசியல் குறுக்குவழியில் உசுப்பேத்தல்களை இனரீதியாக மொழி ரீதியாக அரசு மேற்கொள்வது தொடர்கதையாக இருக்கிறது. இதுவிடயத்தில் அரசு மதவாத இனவாத போக்குகளுடன் சமாந்தரமாகப் பயணிக்கிறது. இந்த வெளியில் மக்கள் மேயவிடப்பட்டிருக்கிறார்கள். பரந்துபட்ட சமூக அறிவை வழங்காத கல்விமுறை பரந்துபட்ட அடிப்படை அறிவைக்கூட வழங்க வக்கற்றதாக இருக்கிறது. இது சமூகத்தின் பொதுப்புத்தி மட்டத்தை அசைக்கும் அல்லது மேல்நிலைக்குக் கொண்டுவரும் பலத்தை வழங்குவதில்லை. அது கேள்விகளை கொன்றுபோட்டுவிடுகிறது. விமர்சனங்களை வெறுக்கிறது. சமூகத்தோடு ஒத்தோடுதல் என்பது இலகுவானதாக மனிதமூளைக்குள் அறிவித்துவிடுகிறது.
விமர்சனங்களின் மூலம் தன்னை புதுப்பித்துக்கொள்ளாத தத்துவங்கள், நம்பிக்கைகள் (மத நம்பிக்கைகள் உட்பட) எல்லாமும் வன்முறைக்கு வழிவிட்டுக் கொடுக்கும் நிலையையே ஏற்படுத்துகிறது. அதற்கு தூய்மைவாதம், புனிதம் என்பவற்றை கொண்டாடுகிற இனவாதக் கருத்தியல் மட்டுமல்ல, மதவாதக் கருத்தியலும் விதிவிலக்கில்லை. அவைகள் கற்பிதங்களை உருவாக்கி கக்குபவை. குறைந்தபட்சம் கட்சிகளையோ இயக்கங்களையோ கூட்டுமனநிலைப் போக்குகளையோ விமர்சனபூர்வமாக பார்க்கவும், அதனடிப்படையில் செயலுருவாக்கம் செய்ய முடியாத அல்லது செய்யத் தயங்குகிற ஒரு சமூகத்துக்கு ‘வழிபாடும்’ ‘விசுவாசமும்’ தமக்குள் ஓர் பயங்கரவாதத்தை ஒளித்துவைத்திருக்கிறது என்பது புரியாது. இது முஸ்லிம் சமூகத்துக்கும் பொருந்தும். தமிழ்ச் சமூகத்துக்கும் பொருந்தும். சிங்கள சமூகத்துக்கும் பொருந்தும். இதனடிப்படையில் பார்க்கிறபோது, இன்று பொதுப்புத்தியோடு கச்சைகட்டிக்கொண்டு நிற்கும் எல்லாத் தரப்பினரும் அச்சமூட்டியபடிதான் இருக்கின்றனர்.
போதும்! இனியும் மக்கள் கோடு பிரித்து நின்று எமக்குள் அடிபட்டு கிழிபடுவது வேண்டவே வேண்டாம் !
– ரவி (22042019)
FB Link : https://www.facebook.com/ravindran.pa/posts/2738864986184578