புகலிட நாடுகளிலிருந்து விடுமுறை போலவொரு நினைப்புடனும், வாழ்ந்து திளைத்த மண் அதன் மனிதத் தொடர்புகள் என ஒரு கலப்பான அனுபவத்தை பெறும் அங்கலாய்ப்புடனும் இலட்சம் பேருக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் இலங்கை போய் வருகிறார்கள். மேற்குலக வாழ்வின் இயந்திரத்தனமான வாழ்வும், அந்தந்த நாட்டு சமூகங்களோடு தகவமையும் (integration) ஆற்றலின்மை மற்றும் காலநிலை தருகிற ஒருவித அந்நியத்தன்மையும் அவர்களுக்கு இவ்வாறான பயணத்தைத் தூண்டுகின்றன. அது புரிந்துகொள்ளப்படக்கூடியது.
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு புகலிடத்திலிருந்து குரல்கள் கவிதைகளாகவும் அஞ்சலிக் குறிப்புகளாகவும் முகநூல் எங்கும் பரவிப்போய்க் கொண்டிருந்தன. முள்ளிவாய்க்கால் அவலத்திலிருந்து தப்பிப் பிழைத்த விடுதலைப் புலிப் போராளிகளும் வெகுமனிதர்களும் குடும்பத் தலைவiர்களையிழந்த 96000 பெண்களும் அந்த மண்ணில் -அங்கவீனர்களாயும் வாழ்வாதத்தின் மோசமான நிலையிலும்- வாழ்வோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தொகுதியினர் சிறையில் வாடுகிறார்கள். இவர்களை முள்ளிவாய்க்கால் நிகழ்வு நினைவுகூராதா என்ன. இருந்துவிட்டுப் போகட்டும்.
இதே புகலிடத் தமிழர்கள் அந்த மண்ணுக்குப் போகிறபோது கொஞ்சம் ஆடம்பரச் செலவைக் குறைத்தாவது ஒவ்வொரு குடும்பத்துக்கு உதவ முன்வந்தாலே அவர்களின் வாழ்வில் பெரும் மாற்றம் துரிதகதியில் ஏற்படும். (ஏற்கனவே உதவிசெய்துகொண்டிருக்கும் புகலிடத் தமிழர்களுக்கான பதிவல்ல இது).
எழுத்தில் தனது உணர்வுகளையோ உணர்ச்சிகளையோ வெளிப்படுத்தச் சொல்கிற மனம் அவர்களுக்கு உதவிசெய்து கைகொடுப்பதிலும் அவாவுகிற பகுதிக்குள்ளும் இரத்தம் பாய்ச்சவேண்டும். புகலிடத் தமிழர்களின் மில்லியன் கணக்கான பணத்தைச் சுருட்டிய புகலிட புலி இயக்கப் பொறுப்பாளர்கள் அதை 2009 க்குப் பின் தத்தமது சொத்தாக்கினர். இவர்களிடம் தமது பணத்தை பறிகொடுத்த நிலையிலும் மனச்சாட்சியுள்ள புகலிடத் தமிழர்கள் உதிரிகளாகவோ சிறு குழுக்களாகவோ உதவுகின்றனர். எனக்குத் தெரிய புலியின் அரசியலோடு சதா உடன்பாடற்று இருந்தவர்கள் கூட வன்னிக்குள் கைவிடப்பட்ட போராளிகளுக்கும் மக்களுக்கும் உதவிசெய்கிறார்கள் என்ற விசயத்தை ஒரு தகவலாக இங்கு பதிவிடுகிறேன்.
முகநூலில் கண்ணீரால் உணர்வுபூர்வமாக எழுத முடிகிற மனதிடம் அந்த எழுத்திற்கான ஒரு செயற்பாடு பிறக்கவில்லையெனில் எழுத்தை நாம் சந்தேகித்தே ஆகவேண்டியிருக்கும். தமிழினியின் தாயாரையே நல்லூர்த் திருவிழாவில் கடலை விற்று சீவியம் நடத்த விட்டவர்கள் நாம் என்ற விசயத்தை சாத்தியிருக்கிற இதயத்தின் மூலைக் கதவைத் திறந்து மெல்ல சொல்லிவிடு முள்ளிவாய்க்கால் காற்றே !
19052018
FB link : https://www.facebook.com/ravindran.pa?ref=bookmarks