30 வருட கால ஆயுதப் போராட்டம், போர் என களேபரப்பட்ட ஒரு பூமியில் போரை புரட்டிப் போடுகிற போரிலக்கியமும் இல்லை. தத்துவ வளர்ச்சியும் இல்லை. சர்வதேச அளவில் அறியப்பட்ட விமர்சகர்களுமில்லை. சிந்திக்கத் தூண்டுகிற ஆய்வாளர்களுமில்லை.
போரே இல்லாத காலங்களில் கைலாசபதி, சிவத்தம்பி என வளர்ந்து வந்த விமர்சன மரபும் அறுத்தெறியப்பட்டது. ஒரு தத்துவ நூலையே கையில் ஏந்தி சைக்கிளில் போக அனுமதித்திராத ஓர் ஆயுத பூமி எதை விட்டுவைத்தது. அந்தப் பூமியை சிருஸ்டிக்க உதவியவர்களிடம் அல்லது கண்டும் காணாமல் விட்டவர்களிடம் அவை சரணடைந்தும் விட்டனவா என எண்ணத் தோன்றுகிறது.
ஈழத்தில் அரசியல் ஆய்வுகள் என்பதே பெரும்பாலும் பொதுப்புத்திக்குள் இயங்குகிற அவலம் இன்றையது. தனக்கு முன்னால் கருத்துகளை இருத்திவைத்து உரையாடுகிற ஒரு விமர்சன மரபுக்குப் பதிலாக, நபர்களை இருத்திவைத்து உரையாடுகிற விமர்சன மரபுதான் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கிறது. அரசியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதுபவர்களின் தத்துவப் புலமை வேறெங்காவது வெளிப்பட்டு பார்த்திருப்பீர்களா?. அதற்கான கடின உழைப்பு உள்ளதா?
விமர்சனங்களையும் தாண்டி, தமிழக புத்திஜீகள் பலரிடமிருந்த கடின உழைப்பு ஈழத்தவர்களிடம் இருக்கிறதா?. அவர்களிடமிருந்தே (தமிழில்) நாம் கற்றுக்கொண்டோம். கற்றுக்கொண்டிருக்கிறோம். புத்தக அலுமாரியை நிரப்புகிற அரசியல்,ஆய்வு நூல்கள் பெருமளவில் அவர்களுடையதாகவே இருக்கிறது. அந்தளவிலாவது திருப்தி அடையலாம்.
தனக்கு எதுவுமே தெரியாது என்று நம்புகிற அல்லது கொஞ்சம்தான் தெரியும் என நம்புகிற, அதுகுறித்து கவலைகொள்கிற (அதாவது அறிவதிகார அழிப்பு செய்கிற) ஒருவர்தான் தத்துவ வாதியாக வரமுடியும் என சோக்ரட்டீஸ் சொன்னது பொருத்தமான ஒன்று. ஏனெனில் அந்த மனநிலை அல்லது மனவளம் கொண்ட ஒருவர்தான் தொடர்ந்த தேடலில் ஈடுபடுவர். அவரே தத்துவவாதியாக உருவாக முடியும் என்பதே அவர் சொல்ல வருவது. ஒரு அரசியல் ஆய்வை, விமர்சனத்தை, கட்டவிழ்ப்பை ஆழமாக நிகழ்த்திக் காட்டுவதற்கு தேவைப்படுகிற கருவி பொதுப்புத்தியைத் தாண்டிய தத்துவம்தான். அதை நாம் (நானும் அடங்கலாக) எந்தளவில் கற்றுவைத்திருக்கிறோம் என்றால் திருப்தியான பதில் இல்லை.
எழுதுவது தப்பில்லை. அது நடக்கவும் வேண்டும். எல்லாம் தெரிந்துதான் எழுத வேண்டுமென்பதில்லை. எல்லாம் தெரியும் என எழுத வருவதுதான் பிழை. “யாருக்கு இது தெரியும்? எத்தனை பேருக்கு இது தெரிந்திருக்கிறது?” என்று தொடங்கி… அபத்தமான வகைப்படுத்தல்களை பொதுப்புத்தியிலிருந்து உருவி உள்ளடக்குகிறபோதே ஆய்வு மரணித்து விடுகிறது. போகிற போக்கில் பிரபாகரன், பிள்ளையான், கருணா என (பெயர்களின் பின்னிணைப்பாக ‘இயம்’ களைச் சேர்த்து) ஒரு தத்துவப் பரம்பரையைக்கூட இவர்கள் சிருட்டித்துக் காட்டினாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
சொல்லத் தோன்றியது. வேறேதுமில்லை !