இடது வளைவு..!!
Posted April 16, 2014
on:நீண்டகாலமாகவே மக்கள் சார்ந்து நியாயமாக குரல் எழுப்பி வந்தவர் வாசுதேவ நாணயக்கார. கவனிப்புப் பெற்ற இடதுசாரியாக வாழ்ந்தவர். மகிந்தவின் நண்பரான அவர் அரசுக்குள் உள்ளிழுக்கப்பட்ட காலத்திலிருந்து அவரது குரல்கள் அவஸ்தைப்பட ஆரம்பித்தன.
இருந்தபோதும் இடையிடையே அவரது மனச்சாட்சி திமிறித் திறந்துவிடுகின்றன. அப்படியேதான் அண்மையில் பொதுபல சேனாவுக்கும் அரசுக்குமான ஊடாட்டம் பற்றி விமர்சித்து எழுந்தது அவரது குரல். அதற்கான விலையாகக்கூட இருக்கலாம் மகிந்த முன்னான இந்த வளைவு.
பொறியில் அகப்பட்டிருக்கிறாரா அல்லது அதிகாரத்தை மெல்லச் சுவைக்கத் தொடங்கிவிட்டாரா வாசு என கேட்கத் தோன்றுகிறது. பயங்கரவாதம் பற்றியும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் பற்றியும் (சர்வதேச ரீதியில்) இடதுசாரிகளைவிட யாரும் ஆழமாகச் சென்று விவாதங்களை நடத்தியதில்லை. அப்படியொரு இடதுசாரிய சிந்தனைப் பாரம்பரியத்தை வாசு தொலைத்தது ஏற்கனவேயான ஓர் அவலம். தமிழ் மக்களின் இழப்புகளுக்கு வாசுவும் அரசியல் ரீதியில் பொறுப்புச் சொல்வதிலிருந்து தப்பிவிட முடியாது.
90 களின் ஆரம்பத்தில், அதிகாரம் மேலிருந்து அல்லாமல் கீழிருந்து மேலுக்கு வர வேண்டும் என நுண்ணரசியல் பேசிய பீரிஸ், சந்திரிகா அரசில் பங்குகொண்டபின் அந்தக் குரலையெல்லாம் முறிச்சுப் போட்டார். படிப்படியாக அசல் அரசியல்வாதியாகிய அவர் இன்று வந்து நிற்கும் இடம்..? அடுத்தது வாசுவாகவும் இருக்கலாம். வாசு தனது போராட்டக் குணாம்சத்தை முறிச்சுப்போட்டுவிட்டு இப்படி அமைத்துக்கொள்ளும் “வளைவு” அதற்கான ஒரு குறியீடாகவே தெரிகிறது.
ஒருவேளை மகிந்தவின் பேரரசு கவிண்டு கொட்டுப்படும்போது எல்லா இழுபாடுகளுக்கும் தான் பிலாக்காய்ப் பாலில் தொட்டுவிட்டதாக சொல்லி சுளையெடுத்துக்காட்டினாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அப்போது அவர் அசல் அரசியல்வாதியாகிவிட்டிருப்பார்.
வாசுவின் இடதுசாரியத்துக்கு வந்த கேடு இந்த வளைவு என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிவைக்க முடியும்.
http://maathalan.blogspot.ch/2014/04/sri-lankan-marxist.html?spref=fb
fb link :
Leave a Reply