இலக்கியச் சந்திப்பு பற்றிய வியாக்கியானங்கள் அவரவர் மொழியில் வைக்கப்பட்டு வருகின்றன. அதன் பொசிற்றிவ் அம்சங்களை மறுதலிக்க முடியாதது ஒருபுறம் இருக்க, அதன் வேலைமுறைகள் பற்றி கேள்விகள் இருக்கின்றன. உரையாடல் என்று வருகிறபோதுகூட இந்த 24 வருட காலப் பகுதியில் நாம் எவ்வாறான சனநாயகப்பட்ட முறையில், தொனியில், உடல்மொழியில் விவாதிக்கப் பழகியிருக்கிறோம். முரண்பாடுகளை கையாளப் பழகியிருக்கிறோம்.
மொட்டைக் கடுதாசி போடும் சகுனிமுறை தமிழ்த்தனத்தின் நீட்சியாகவே புகலிடத்திலும் பிரசுரங்களிலிருந்து நூல் தொகுப்பாக வெளியிடுவதுவரை அவதூறு, அவதூறுக்குப் பதில்(!) என்று வளர்த்துவிட்டிருக்கிறோம். முரண்பாடுகளை கையாளும் இந்தவகை அணுகுமுறை எந்த இடதுசாரித்தனத்தின் வழிமுறை?
சாத்திரியும் ரயாகரனும் இலக்கியச் சந்திப்பு பற்றியும் அதன் பங்குபற்றுநர்கள் பற்றியும் எழுதிய விடயங்கள் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகள். அதை இ.சந்திப்பில் வைத்து கேட்டது சரியான அணுகுமுறை. அவர்கள் அதற்கு பதிலளித்திருக்க வேண்டும். (அதுபற்றிய விபரம் எனக்கு இன்னமும் தெரியாது) சாத்திரி இலக்கியச் சந்திப்பில் பங்குபற்றுவதற்கு என்ன முன்நிபந்தனையை இலக்கியச் சந்திப்பு வைத்திருக்க வேண்டும் என விவாதிக்க முன்வந்தால் ஏதாச்சும் பிடிபடலாம். கடந்த காலத்தில் புலிப் பொறுப்பாளர்கள்கூட இலக்கியச் சந்திப்புக்குள் ஹீரோயிசத்துடன் வந்து குந்தியிருந்தார்கள். புஷ்பராசா அதற்கு துணையாகவும் இருந்தார். அவர்களை தடைசெய்யும் கருத்தியல் நியாயம் எதுவும் இலக்கியச் சந்திப்புக்குக் கிடையாமல் இருந்தது அதன் பலம்.
சாத்திரி கேள்விகளை முகம்கொடுத்திருக்க வேண்டும். பதிலளித்திருக்க வேண்டும். அதுதான் அவரது அரசியல் நேர்மை. (இல்லாதபோது அவரது பலவீனம் அது. அவர் பற்றிய மதிப்பீடு எம்மிடம் இருக்கும்.) இதை அவர் செய்யாதபோதும்கூட இலக்கியச் சந்திப்புக்குள் வருவதற்கு அவருக்கு தடைபோட எதுவுமேயில்லை. அரச அதிகாரத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளித்த ஞானமோ, தலித் முன்னணி செயற்பாட்டாளர்களோ இலக்கியச் சந்திப்பில் பங்குபற்ற இருக்கும் சுதந்திரம் புலியாதரவாளருக்கும் இருக்கிறதுதானே.
புலியாதரவாளர்கள் அல்லது அதிலிருந்து பிரிந்து வந்தவர்கள் எங்களின் கருத்துக்களோடு ஒத்தோடுகிறபோது அல்லது எங்கள் எழுத்துக்களுக்கு, அரசியல் கருத்துகளுக்கு சாட்சியாய் முகிழ்க்கிறபோது இந்த சுயவிமர்சன சலசலப்பே கேட்பதில்லை. இலக்கியச் சந்திப்பின் நெகிழ்ச்சித் தன்மை பற்றி வியாக்கியானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் கருத்துக்குள் எந்த அமைப்பு வடிவத்தையும் நிறுவிக்கொள்ளாதது எனவும் அதற்குள் நிர்வாக முறைமைகள் இல்லையெனவும் அதற்குள் மேலாண்மை சக்திகள் இல்லையெனவும் அது ஒரு கருத்துக் களம் எனவும் யாரும் வரலாம் கருத்துச் சொல்லலாம் என்றெல்லாம் குலைத்துப்போட்ட பரப்பில் யார்யாரை நடந்துபோகக்கூடாது என சொல்ல வருகிறீர்கள்?