மை கார்.. மை றோட்.. மை பெற்றோல். இந்த வார்த்தைகளின் சொந்தக்காரர் எனது ஊர் இங்கிலீஷ் தங்கராசா. அவர் கள்ளுக் கோப்பரேசனுக்குப் போகும்போது தமிழில் பேசுவார். திரும்பிவரும்போது அதிகம் இங்கிலீஷ் பேசுவார். அவரே தனது இங்கிலீசை அப்பப்போ தமிழாக்கமும் செய்வார். எனக்கும் நண்பர்களுக்கும் அவரை நன்றாகப் பிடிக்கும். தண்ணியடிச்சால் பறக்கும் தூசணவார்த்தைகளை வெறிக்குட்டிகளிடமிருந்து கேட்டுப் பழகிய எமக்கு, தங்கராசா அந்த றூட்டிலை வராத ஒருவர் என்றளவில் மனம்விட்டுச் சிரிக்க வைக்கும் நகைச்சுவையாளனாகத் தெரிந்தார்.
கள்ளுக் கோப்பரேசனில் வெளிப்படையாகத் தண்ணியடிக்க வருபவர்களில் தங்கராசா மட்டும் இங்கிலீசு பேசக்கூடியவர். அதனால் அவர் “அறிவுபூர்வமாக” கேள்விகள் கேட்டு தவறணையை கலக்கிவிடுவார். “தம்பி என்ரை கேள்விக்கு ஒருத்தனாலையும் பதில் சொல்ல முடியாமல் போய்ச்சுது தம்பி. நோபொடி.. நோபொடி… நோ ஆன்ஸ்வர்…” என்றெல்லாம் அவர் சொல்லும் அபிநயம் சுவாரசியமானதாக இருக்கும். சுழல் காற்றில் ஆடும் ஒற்றைமரம்போல நின்றுகொண்டு “ஐ ஆம் ஸ்ரெடி.. தம்பி” என்பார். சைக்கிளும் அவரோடு சேர்ந்து அல்லாடும். கைவிடமாட்டார்.
இப்படியாய் கள்ளுத் தவறணையில் ஒரு இன்ரலெக்சுவலாக அவர் வகித்த பாத்திரத்தில் ஒரு நாள் அடிவிழுந்தது. இன்னொருவர் கேட்ட கேள்விக்கு எங்கடை தங்கராசாவால் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது. பதறியடித்து எமது வாசிகசாலையடிக்கு ஓடிவந்தார்.நாங்கள் காட்ஸ் விளையாடிக்கொண்டிருந்தோம் “தம்பி.. என்னை மடக்கிப் போட்டாங்கள்… விடக்கூடாது. இப்ப எனக்கு ஒரு கேள்வி சொல்லித்தாங்கோ… தம்பி விடக்கூடாது …சொல்லுங்கோ“ என்றார். பக்கத்தில் இருந்த என் நண்பன் கேள்வியொன்றை சுடச்சுடத் தயாரித்தான். ஒரு தடியின்ரை நீளம் எவ்வளவு தெரியுமா?. இதுதான் கேள்வி. தங்கராசாவுக்கு மட்டுமில்லை, எனக்கும் தூக்கிவாரிப் போட்டது. பதில் தெரியவில்லை. அவன் சொன்னான்… தடியின்ரை நீளம் அதின்ரை ஒரு நுனியிலையிருந்து அதின்ரை நடுச்சென்ரரின்ரை நீளத்தின்ரை இரண்டு மடங்கு என்றான்.
தங்கராசா சைக்கிளிலை தாவி ஏறினார். இந்தா பார் மடக்கிறன் என்றபடி பறந்து போனார். எனக்கு பதில்கள் அவிழத்தொடங்கியது. தடியின்ரை நுனியிலையிருந்து அதின்ரை கால்வாசிப் புள்ளி நீளத்தைப்போலை 4 மடங்கு… அதின்ரை எட்டிலொரு பங்கின்ரை புள்ளித் தூரம்போலை எட்டு மடங்கு… என அவிழ்ந்தது. நல்லவேளை அப்ப நான் பள்ளிக்கூட புத்தகத்தைத் தவிர மற்றதுகளைப் படிக்கிறயில்லை. ஒருவேளை பின்நவீனத்துவம் அப்பிடி இப்பிடி எண்டு அரைகுறையாக வாசிப்புத் தெளிப்பும் இருந்திருந்தால்… இது ஒரு பின்நவீனத்துவப் பதில் எண்டு தங்கராசாவுக்கு சொல்லிக் குடுத்திருப்பன். தங்கராசாவுக்கு போஸ்ட் மொடேர்ணிசம் எண்டு இன்னொரு இங்கிலீசு வார்த்தையும் தெரிஞ்சிருக்கும்.
கள்ளுத் தவறணையிலிருந்து வெற்றியோடு திரும்பிவந்த தங்கராசா “நோபொடி ஆனஸ்வர் தம்பி. மடக்கிப்போட்டன்…“ என்றபடி நடுரோட்டிலை நின்றார். அந்த றோட்டாலை வருகிற யாராவது ஒருவர் “தங்கராசா.. நடுறோட்டிலை நிக்கிறாய்.. விலத்தி நில்லன்… நான் எப்பிடி போறது” என்று சொல்லவும், தங்கராசா “மை கார்.. மை றோட்.. மை பெற்றோல்…நீயென்ன கேட்கிறது? ” என தனது இங்கிலீசைப் பேசவும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு நின்றார்.