தோழர் பரா – இரங்கல் செய்தி

இன்று இந்த இறுதிநிகழ்வில் கலந்தகொள்ளமுடியாமல் போனது நான் எதிர்பாராத ஒன்று. அதனால்; எனது இரங்கல்செய்தியை தோழர் பராவின் இறுதிச்சூழலுக்குள் அனுப்பிவைத்துள்ளேன்.
—————————

புலம்பெயர்ந்து வாழ்தல் ~பாய்விரித்தால் படுத்துறங்கும் நாய்ச்சாதி| என்று பழிக்கப்பட்ட காலங்களை, அதன் ஈழஅறிவினை தூசாய்த் தட்டிவிட்டது மாற்றுக் கருத்துக்களின் முளைப்பும் அதன் தொடர்ச்சியும் என்பது நம்பக்க நியாயம். ஆம் இந்த உழைப்பு ஆரம்பகாலங்களில் வித்தாய் இடப்பட்டதில் தோழர் பரா அவர்களின் பணி புகலிடத்தில் தொடங்கிற்று.

சுமார் இருபைத்தைந்து ஆண்டுகள் அது சஞ்சிகைகள், இலக்கியச் சந்திப்பு, ஜனநாயகத்துக்கான குரல்கள், சந்திப்புகள், மனிதஉரிமை மீறல்களின் அம்பலப்படுத்தல்கள், தலித் மாநாடு… என பரந்து விரிந்து செல்வதற்கான வித்தை 80 களின் ஆரம்பத்தில் ஊன்றிவளர்த்தவர்களில் பராவுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

எமது முந்தைய தலைமுறையாக அவர் இலங்கையிலேயே இடதுசாரியச் சிந்தனை முறையில் வளர்ந்து இயங்கி சாதாரண மனிதவாழ்வின் எல்லையைத் தாண்டியவர்களில் அவரும் ஒருவர். இதே செயல் துடிப்பு புகலிடவாழ்வில் தொடர்ந்தது. தலைமுறை இடைவெளியை அழித்தவர் அவர். அடுத்த தலைமுறையை கோரைப் புற்களாக பார்க்கும் அனுபவவாத மிரட்டல்களை அவர் ஒருபோதும் கற்றுக்குட்டித்தனமாக எடுத்தவரல்ல. ஒரு நண்பனாக ஒரு தோழனாக ஏன் ஒரு குழந்தையாகக்கூட பழகும் வல்லமையும் இயல்பும் அவரை சிரித்த முகத்துடன் எம்மிடம் காண்பிக்கும். காண்பித்தது.

விடுதலை அரசியல், இடதுசாரியச் சிந்தனை என பேசிப்பேசியே குழுவாதம கொண்டு; விமர்சனத்தை முட்கம்பிகளில் தொங்விட்டு இறுதியில் மனிதாபிமானம்கூட அற்றுப்போன நிலைகளில் வாழும் புத்திஜீவிகளிடை பரா அவர்களின் நேர்மையும் மனிதநேயமும் பளிச்செனவே தெரிகிறது. அரசியலை வாழ்வாய் வரித்துக்கொண்டவர் அவர். இன எல்லைகள் சாதி எல்லைகளை தாண்டி அவர் பேசியதைவிட, செய்து காட்டியது அதிகம்தான். தனது குடும்பத்தையே அரசியல்மயப்படுத்திய அவரின் ஆளுமையும் செயல்நேர்மையும் மதிக்கப்படவேண்டியவை. இறுதிவரை அதை இயல்பான வாழ்வாய் வாழ்ந்து காட்டியவர் பரா அவர்கள்.

ஒரு மனிதஜீவி மரணித்த சூழல் அந்த ஜீவியின் நல்அம்சங்களை உரசிப்பார்த்துவிட வைத்துவிடுகிறது, அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டுகொள்ள வைத்துவிடுகிறது. பரா அவர்களின் மரணம் உரசிக்காட்டியதை இந்த இறுதிஅஞ்சலி வெளிப்படுத்தி நிற்கிறது. புகலிட இலக்கியம் உள்ளவரை, குரல்வளைகளின் மீதான அச்சம் நிலவும்வரை பரா அவர்களின் நினைவும் எம்முடன் வாழும்.

பெரிதாக கிழித்துவிடுவதற்கு எம் மண்டைக்குள் விரிந்திருப்பது பனை ஓலைகளல்ல… நாம் வேர்கொண்டு நிற்பது மனிதஇருப்பின்மீதான அக்கறையில்தான் என்றபடி உறக்கமுற்ற எம் தோழர் பரா அவர்களிற்கு எனது இறுதி அஞ்சலிகள்! -ரவி (சுவிஸ்)

நினைவுவெளியில் பரா அவர்கள்

கடந்த ஒக்ரோபரில் பாரிசில் நடந்த தலித் மாநாட்டில் தோழர் பரா அவர்களை சந்தித்திருந்தேன். நீண்ட இடைவெளியின்பின் அவரை அப்படியேதான் நான் கண்டேன். சிரித்த முகத்துடனேயே இப்போதும் அவர் என்னிடம் வந்தார். சுவிசில் எல்லாம் ஓய்ந்துவிட்டதா என்ற ஆதங்கத்தடன் அவர் பேச்சைத் தொடங்கினார். இந்த வயதிலும் அவரின் கவலை எல்லாம் இப்படியேதான் இருந்தது. அது எனக்கு ஒருவித குற்ற உணர்வைத் தந்தது. அவரின் சிந்தனை உலவும் இந்த வெளிகளுக்கு மேலால் எதையும் முக்கியமாக்கிவிட என்னால் முடியாமல் இருந்தது. தலித் மாநாட்டின் நிகழ்ச்சிக்கு அவர் தயாரிப்புகளுடன் வந்திருந்தது அவர் தனது முதுமையை எதிர்த்த போராட்டமாகவே எனக்குப் பட்டது. தனது வாழ்வை இந்த வெளிகளில் அவர் பதித்திருந்தார். அதனால்தான் அவரால் வயதுகடந்து ஒரு நண்பனாகவும் பழகமுடிந்தது.

பனியின் உதிர்வுகளுக்கும் நிறம்மீதான உத்தரிப்புகளுக்கும் இடையில் திருகித் திருகி உச்சரிக்கப்பட்ட வாழ்வினிடை வேர்விடப் போராடிய வாழ்வு எம்மது. இருத்தலுக்கானது என்றளவில் தாண்டிய துயரினிடை அரசியலை ஒரு சமூக விஞ்ஞான வாழ்வாய் வரித்துக்கொள்வதில் முயற்சி செய்தோரும் தோற்றுப்போனோரும் என்றெல்லாம் போக மிஞ்சியவரைக் கண்டால் முரண்பாடுகளையும் தாண்டி ஒரு பிடிப்பு வருகிறது. பரா அவர்களை நான் காணும்போதெல்லாம் இந்தப் பிடிப்பு அதிகமாகவே என்னிடம் தொற்றிக்கொள்ளும். வயதை அவர் கண்டுகொள்ளாதபடி அவரது அரசியல்வாழ்வு எம்மிடம் அவரைக் காண்பிக்கும். இயங்கிக்கொண்டே இருந்தவர் அவர். மாற்றுக் கருத்துகள்… அரசியல் விவாதங்கள்… இலக்கிய நிகழ்வுகள்… கலந்துரையாடல்கள்… சந்திப்புகள் என்றெல்லாம் நீண்டு வளர்ந்திருந்தார் அவர். இலக்கியச் சந்திப்பின் ஒரு வேராக அவர் இருந்தார் என்பதும் மனிதஉரிமைகளில் அக்கறை கொண்டிருந்தார் என்பதும் அவரைவிட்டுப் பிரிக்கமுடியாததாகிவிட்டது.

ஒன்றும் நாம் பெரிதாகப் புடுங்கிவிடவில்லைத்தான். அக்கறையுற்றிருந்தோம்… குரலாக ஒலித்தோம்… புகலிட இலக்கியமாக வெளிப்பட்டோம்… கேள்விகளாக நின்றோம்… என்றெல்லாம் சொல்லிநிற்கும் ஒரு சாட்சி பரா அவர்கள். இந்த வாழ்வில் எங்களை நாம் வீணடித்துவிட்டோம் என்றெல்லாம் தோழர்கள் நண்பர்களாகக்çட இல்லாமல் ஓடியபோதெல்லாம் உரம்தரும் சக்திகளாக நின்றோரில் பரா அவர்கள் முக்கியமானவர்கள். தான் மட்டுமன்றி குடும்பத்தையே தான் உலவிய இந்தப் பொதுவெளிகளில் எமக்கு அறிமுகப்படுத்தியவர்.

இன்று அவர் நம்மிடை இல்லை. நினைவுகளை தந்துவிட்டுப் போயிருக்கிறார். புலம்பெயர்வாழ்வின் அள்ளுப்படல்கள் அவர் உலவிய வெளியில் ஒரு எதிர்க்காற்றாய் உலவும்வரை அவரின் நினைவு இன்னுமின்னும் விரிந்தபடி அசையும். புலம்பெயர் இலக்கியம் ஒரு பதிவாய் இருக்கும்வரை பரா அவர்களின் பணியும் பதிவாய் இருக்கும். உமாகாந்தன், கலைச்செல்வன், புஸ்பராசா… இன்று பரா… இப்படியே உதிர்வுகளின் காலம். மரணம் அவர்களின் உடல்களை சருகாய் எடுத்துச் சென்றது. நாம் நினைவுகளை பத்திரப்படுத்துகிறோம்.

கணவனின்; இழப்பில் துயருறும் மல்லிகா அன்ரிக்கும், தந்தையின் இழப்பில் துயருறும் உமா, சந்தூஸ் க்கும் மாமாவின் இழப்பில் துயருறும் முரளிக்கும் எமது அரவணைப்புகள், எம்மையெல்லாம் உங்களுடன் பிணைத்தபடி தனது இழப்பை துயருறச் செய்த பரா அவர்களின் வெளிகளில் நாம் நடந்தபடி..!
– ரவி, ரஞ்சி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: