காஸாவில் எஞ்சியிருந்த 48 பணயக் கைதிகளில் 20 பேரை கமாஸ் விடுவித்துவிட்டது. மிகுதி 28 பேரும் இஸ்ரேலிய குண்டுவீச்சின் போது இறந்துவிட்டார்கள் என கமாஸ் உறுதிப்படுத்திவிட்டது. அவர்கள் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்களோடு இறந்த உடலங்களாக இடிபாடுகளின் கீழ் சிதைந்துபோயிருப்பார்கள். 24 பணயக் கைதிகளின் உடலங்களும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. நான்கு உடலங்கள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு இஸ்ரேலிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்கள் எல்லோருமே உண்மையில் இறந்துவிட்டார்களா அல்லது கொஞ்சப் பேரை கமாஸ் வைத்திருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய எந்த ஆதாரமுமில்லை. அவர்கள் இறந்துவிட்டதாகவே எதிரிகளும் நம்புகிறார்கள். காஸாவே இடிபாடாகக் கிடக்கும்போது தேடுதல் என்பதற்கு ஏதும் அர்த்தம் இருக்குமா என்ன.
அதேபோல் இஸ்ரேலிய சிறையில் கொல்லப்பட்ட பலஸ்தீன கைதிகளின் உடலங்களும் வந்திருக்கின்றன. அவர்கள் மோசமான சித்திரவதைக்கு உட்பட்ட தடயங்கள் உடலில் இருப்பதாக ஐநா செயலாளர் நாயகம் அறிவித்திருக்கிறார். இஸ்ரேலிய சிறையிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் தாம் பறிகொடுத்த காலங்களின் மீதேறி மீண்டிருக்கிறார்கள். இறந்துவிட்டார்கள் என நம்பி இருந்த சில குடும்பங்களின் முன் மறுபிறவி எடுத்து வந்ததுபோல் சில கைதிகள் மீண்டு வந்திருக்கிறார்கள். சுமார் 30 வருடங்களாக, 20 வருடங்களாக கைதிகளாக இருந்தவர்களும் வந்திருக்கிறார்கள். மறுபக்கத்தில் கமாஸின் பிடியிலிருந்த பணயக் கைதிகள் இஸ்ரேல் போய்ச் சேர்ந்திருக்கிறார்கள்.
இருதரப்பிலும் இவர்களோடு தொடர்புடைய குடும்பங்கள் நட்புகள் என நெருக்கமானவர்கள் தமது கட்டியணைப்புக்குள்ளும் கண்ணீருக்குள்ளும் மகிழ்ச்சியை தெரிவித்து தீர்த்துவிட முடியாதபடி திணறிப் போய் நிற்கும் காட்சிகளை (இருதரப்பிலும்) பார்க்கிறபோது போரின் கொடுமையை சபிக்காமல் இருக்க முடியவில்லை. இன்னும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருப்பதாக சொல்கிறார்கள். எல்லோரையுமே விடுதலை செய்வது என்பது -ட்றம்ப் இன் ஆலோசகர்கள் வடிவமைத்து, நெத்தன்யாகுவுடன் மூடிய அறைக்குள் இருந்து வெட்டித் திருத்தப்பட்டு வெளிவந்த- போர்நிறுத்த உடன்படிக்கையின் விதிகளில் ஒன்று. அந்தக் கைதிகளும் முழுமையாக வந்து சேர்வார்கள் என நேரம்சமாகவே நம்புவோம்.
இஸ்ரேல் இதுவரை விடுவித்தவர்களில் பலரும் மேற்குக் கரை பலஸ்தீன கைதிகள். 250 அரசியல் கைதிகளும் இதற்குள் அடங்குவர். அவர்களில் 157 பேர் யசீர் அரபாத் வழிநடத்திய பி.எல்.ஓ (பலஸ்தீன விடுதலை அமைப்பு) இன் இராணுப் பிரிவான Fatah உறுப்பினர்கள் ஆவர். 65 பேர் கமாஸ் உறுப்பினர்கள். 1718 பேர் எந்த குற்றமுமில்லாமல் ஆயிரக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் ஒரு பகுதியினர். இதில் இரண்டு பெண்களும் 18 வயதுக்கு உட்பட்ட 5 சிறுவர்களும் அடங்குவர்.
இது இவ்வாறிருக்க இஸ்ரேலிய ஊடகங்கள் “கமாஸ் விடுவித்த 20 பேர்களிலும் ஒரேயொரு பெண் மட்டும்தான் உள்ளடங்குகிறார். இறந்தவர்கள் எல்லோரும் பெண்களாக இருக்கின்றனர்” என்ற அவதூறை முன்வைத்திருக்கின்றன. அப்பட்டான பிரச்சார உத்தி இது. ஒக்ரோபர் 7 இல் 251 பேர் கமாஸ் இனால் பணயக் கைதிகாக பிடிக்கப்பட்டு காஸாவுக்குக் கொண்டவரப்பட்டனர். அதில் 41 பேர் பெண்கள். நவம்பர் 2024 இல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் 31 பெண் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுவிட்டனர். இந்த அமளிக்குள் அதை வசதியாக சியோனிச ஊடகங்கள் மறைத்துவிடுகின்றன.
அதேநேரம் இந்த ஒப்பந்தம் ட்றம் எழுதிய போர்நிறுத்த தீர்ப்பேயொழிய, பலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வல்ல. பணயக்கைதிகளைத் தேடி நெத்தன்யாகு ஆடிய வேட்டை 76’000 பலஸ்தீனர்களின் உயிரைக் காவுகொண்டும், காஸாவின் பௌதீகக் கட்டமைப்புகள் எல்லாவற்றையும் நாசமாக்கியும் தோல்வியில் முடிந்தது. கடைசியில், எஞ்சிய பணயக் கைதிகளை மீட்க ட்றம்ப் இனூடாக நெத்தன்யாகு கண்டுபிடித்திருக்கிற (அல்லது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து கண்டுபிடித்திருக்கிற) வழிதான் இந்த ஒப்பந்தம்.
கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்ட ஒரு தேசத்தினை பாதுகாப்பு அரணாக கமாஸ் நின்று எதைச் சாதிக்க முடியும் என்ற இயலாமை, இரண்டு வருடங்களாக போர் துரத்தித் திரிந்த மண், உயிர்களை சப்பித்துப்பிய போர் அரக்கன், ஒவ்வொருநாளும் அங்குமிங்குமாக ஓடிய மக்களின் அவலம், கைதுசெய்யப்பட்ட அல்லது காணாமலாக்கப் பட்ட மனிதர்கள் குறித்த துயர், பட்டினி மரணம், குழந்தைகளின் தளிர் உடல்கள் சிதறிக் கிடக்கும் காட்சி, அதன் வலி, மருத்துவமனை தகர்ந்த நிலம். மருந்துகள் இல்லா உயிரறுநிலை, இந்த நிலைமைக்குள் நின்று கமாஸ் சிந்திக்க வேண்டிய தருணம் என எல்லாமுமாக ஒரு தற்காலிகமாகவேனும் அமைதிதேவைப்பட்டது.
சம்பந்தப்பட்ட இருதரப்பும் ஓர் உருப்படியான மூன்றாவது தரப்பின் துணையுடன் அமர்ந்திருந்து உரையாடி பேரம் பேசி புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு என்றெல்லாம் எட்டப்பட்ட ஒப்பந்தம் அல்ல இது. அது சியோனிச இஸ்ரேலின் தோற்றமும், அது ஏற்படுத்திய அழிவும் தொடர் சண்டித்தனமும், அகண்ட இஸ்ரேலுக்கான அயல்நாட்டு எல்லை ஆக்கிரமிப்பும், அத்தோடு அந்த நாடுகளின் இறைமையை தூசாக மதித்தல், குண்டுவீசுதல் என்ற தொடர் பயங்கரவாதச் செயற்பாட்டு வரலாறு கொண்ட நிலையில் இந்த சமாதான உருவாக்க வழிமுறையெல்லாம் சாத்தியமுமில்லை.
பணயக் கைதிகளை விடுவித்தலும், கமாஸை ஆயுதநீக்கம் செய்தலுமே இந்த ஒப்பந்தத்தின் கள்ள இலக்கு. இரண்டும் இஸ்ரேலின் காட்டுக் கத்தலாலும் காட்டுமிராண்டித்தனத்தாலும் இயலவில்லை. சர்வதேச அமைதிப்படை என்ற பெயரில் அமெரிக்கா தலைமையில் அதன் அடிவருடி அரபு நாடுகளின் படைகளும் கஸாவுக்குள் புகுந்து காலவோட்டத்தில் கமாஸ் ஒழிப்பில் இறங்கும் சாத்தியம்தான் மிக அதிகமாக உள்ளது. “கமாஸ் ஆயுதங்களை களைய வேண்டும். இல்லையேல் அந்த வேலையை நாம் செய்வோம்” என ட்றம்ப் மிரட்டுகிறார். இன்னொரு இடத்தில் தனது விமானத்தினுள் நின்று பத்திரிகையாளருக்கு சொல்கிறபோது, “அவர்கள் தாம் ஆயுதங்களைக் களைய கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள்” என்கிறார். ஒப்பந்தத்தில் என்னதான் எழுதப்பட்டிருக்கிறது. உடனடி ஆயுதக் களைவா அல்லது கால அவகாசத்தடனான களைவா என தெரியவில்லை.
இரு-அரசுத் (two-state) தீர்வின் மூலம் பலஸ்தீன அரசை அங்கீகரித்து, பகைநிலைமையை கணக்கில் எடுத்து எல்லைகளை கறாராக வகுத்து, அதன் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் எந்த அம்சமும் இந்த ஒப்பந்தத்தில் கிடையாது. அப்படியான நோக்கத்தில் ட்றம்ப் பேசியதும் கிடையாது. மாறாக சர்ச்சைக்குரிய ஜெரூசலமை ஏற்கனவே இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த ட்றம்ப் வரைந்த ஒரு சமாதான ஒப்பந்தம் என்னவிதமான அரசியல் சாணக்கியத்தைக் கொண்டதாக இருக்கும் என சொல்ல வேண்டியதில்லை.
தொடர்ச்சியாக இரு-அரசு தீர்வை எதிர்க்கும் நிகழ்ச்சிநிரலைக் கொண்ட சியோனிஸ்டுகளின் அண்மைக் கால சாட்சியாக நெத்தன்யாகு ஐநாவில் -வெறும் இருக்கைகளைப் பார்த்தபடி- பேசிய கடைசி உரை அமைந்திருந்தது. “பலஸ்தீன அரசை உருவாக்குவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்றார் நெத்தன்யாகு. இதுதான் வரலாறு. கமாஸ் உம் ஆரம்பத்தில் இரு-அரசுத் தீர்வை ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அதாவது கமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை, இஸ்ரேல் பலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. என்றபோதும் இரு-அரசுத் தீர்வை முன்வைத்து எல்லைகளை வரையறுத்த (யசீர் அரபாத் பங்குகொண்ட) ஒஸ்லோ ஒப்பந்தத்தை (1993) சிதைப்பதற்கு கமாஸின் ஓர்-அரசுத் (one-state) திடசங்கற்பம் தமக்கு உதவி செய்யும் என சியோனிஸ்டுகள் கணித்திருந்தனர்.அதனால்தான் கமாஸ் இன் தோற்றத்தை இஸ்ரேல் ஆதரித்து ஊக்குவித்தது. உதவிசெய்தது. Fatah க்கு எதிரான கமாஸின் சகோதர இயக்கப் படுகொலைக்கு எண்ணெய் ஊற்றியது. இப்போ கமாஸ் ஓர்-அரசுத் (one state) தீர்வு பற்றி பேசுவதில்லை.

பலஸ்தீன மக்களின் இறைமையை மதிக்க வேண்டும். அவர்கள் தம்மைத் தாமே ஆள உரிமை கொண்டவர்கள். ஆள்பவர்கள் யார் என்பதை அவர்களேதான் தீர்மானிக்க வேண்டும். கமாஸ் தாம் அதில் தலையிடப் போவதில்லை என்று திட்டவட்டமாச் சொல்லியிருக்கிறது. ஒரு சுதந்திரமான தேர்தலை நடத்த, உறுதிப்படுத்த ஐநாவால் முடியாதா என்ன. எப்போதும் நாகரிகத்தையும் ஜனநாயகத்தையும் கற்றுத்தர வகுப்பெடுக்கும் மேற்கின் காலனிய மனோபாவம் பலஸ்தீன அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்க வருகிறது. ஈராக்கைச் சிதைத்த போர்வெறியன் ரொனி பிளேயர் மேயராக (ட்றம் உடன்) இருப்பாராம். பிரிட்டிஸ் சாம்ராச்சியம் 1948 இல் உருவாக்கிய இந்தப் பிரச்சினை வளர்ந்து இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒரு குற்றவுணர்வுகூடக் கிடையாதா இந்த முன்னாள் காலனியவாதிகளுக்கு. பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்காத இந்த ஒப்பந்தம் நவகாலனிய கட்டமைப்புடன் முன்வைத்திருக்கிற செற் அப் இது. இந்த சூதாட்டம் பலஸ்தீனப் பிரச்சினையை இன்னும் சேறாட வைக்கும் சாத்தியமே அதிகம் உள்ளது.
சமாதான காலம் என வர்ணிக்கப்படும் இந்தக் காலத்தின் ஆயுள் எவளவு குறுகியதாய் அமையும் என தெரியாது. அது பலஸ்தீன மக்கள் மூச்சுவிடவும், தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும், நிம்மதியாய் இருந்து பசியாற உண்ணும் கனவை ஓரளவேனும் நிறைவேற்றும் காலமாகவும், குடும்பங்கள் ஒன்றுசேரும் காலமாகவும், இஸரேலினால் பிடித்துச் செல்லப்பட்ட கைதிகளின் வரவும் மகிழ்ச்சியும் கண்ணீரும் புத்துணர்வும் வாழ்தலின் மீதான உந்துதலும் என ஒரு மனிதஜீவியாய் அவர்களை தூக்கி நிறுத்தும் காலம். இது நீண்டு வளர வேண்டும். ஒரு தெளிவான அரசியல் தீர்வின் எல்லைவரை இது நீள வேண்டும் என அவாவுதல் ஒரு மனித வேட்கை. ஒரு கனவு. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும். பலஸ்தீனம் என்ற அரசை உறுதிசெய்வதுவரை போகாத எந்த ஒப்பந்தமும் நிரந்தரமான அரசியல் தீர்வை தரப்போவதில்லை, மீண்டும் நிம்மதியாக சனம் இருக்க வழிசமைக்கப் போவதுமில்லை என்பதை மட்டும் வேதனையோடு சொல்ல வேண்டியுள்ளது!

