இஸ்ரேலின் கோர முகமும் மனித இழிவுச் செயல்களும் புளோற்ரீலா போராட்டக்காரர்களை அச்சமூட்டி அனுப்பிவைத்திருக்கின்றன. கடந்த புதன் கிழமையிலிருந்து வெள்ளிக் கிழமை வரை புளொற்ரீலா வள்ளங்கள் முழுவதும் இஸ்ரேல் கடற்படையால் கட்டம் கட்டமாக முற்றுகையிடப்பட்டு, அவற்றில் பயணம் செய்த 437 செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த அமளிக்குள்ளும் 3 கப்பல்கள் தமது சமிக்ஞைகளை மாற்றி மாற்றி முயற்சிசெய்து பயணித்தும்கூட அவை காஸா கடற்கரையிலிருந்து 130 மைல் தூரத்தை மட்டுமே எட்டித் தொட முடிந்தது.
சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட எல்லா செயற்பாட்டாளர்களும் நெகவ் பாலைவனத்திலுள்ள உயர் பாதுகாப்புக் கொண்ட இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டார்கள். இச் சிறையில் பலஸ்தீன கைதிகள் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு விசாரிக்கப்படுவது வழமை. சுவர்களில் இரத்தக்கறைத் தடயங்கள் இருக்கின்றதாக சிறையிடப்பட்ட செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மூன்று நாட்களாக தண்ணீர்கூட கொடுக்காமல் பலர் விடப்பட்டிருந்தனர். சிலர் கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் மணித்தியாக் கணக்கில் முழங்காலில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
சனிக்கிழமை துருக்கி விமான நிலையத்தை வந்தடைந்த ஒரு தொகுதி செயற்பாட்டாளர்களில்; சிலர் தாம் கிறேற்றா தூர்ண்பேர்க் இஸ்ரேலிய படையினரால் சித்திரவதை செய்யப்பட்டதையும் மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதையும் கண்டதாக விபரித்திருக்கிறார்கள். “நீ ஒரு சிறிய பேபி” என வேறு கிண்டல் செய்திருக்கிறார்கள். அவரை இஸ்ரேலிய கொடியினால் போர்த்தி ஒரு வெற்றிக்கோப்பை போல பாவனை செய்ததாகவும், தலைமயிரில் பிடித்து அடித்து இ;ரேலியக் கொடியை முத்தமிடச் செய்ததாகவும் கூறியிருக்கின்றனர். கொடியை கையில் கொடுத்து உயர்த்திப் பிடிக்கவிட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டார்களாம்.
இத்தாலிய செயற்பாட்டாளர் கூறுகையில் இஸ்ரேலிய படையினர் தன்னை குரங்குபோல நடத்தியதாக கூறுகிறார். துருக்கி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான இக்பால் குர்பினார் என்ற பெண் சொல்கிறபோது, “அவர்கள் எங்களை நாய் போல நடத்தினர். எங்களை மூன்று நாட்களாக பசியில் விட்டனர். தண்ணீர்கூடத் தரவில்லை. நாங்கள் கழிப்பறையிலிருந்த நீரையே பருக வேண்டி ஏற்பட்டது. மிக மோசமான வெக்கையில் கருக வேண்டியிருந்தது” என்கிறார். புளொற்றீலாவில் பயணம் செய்த இத்தாலி அமைச்சரான ஆர்ரூரோ ஸ்கொற்றோ சொல்கிறபோது, “வள்ளத்திலிருந்த நாம் சட்டப்படிதான் செயற்பட்டோம். வள்ளத்தை காஸாவுக்கு பயணம் செய்ய தடையாக செயற்பட்டவர்கள்தான் சட்டவிரோதமாக நடந்தார்கள்” என்கிறார். 437 செயற்பாட்டாளர்களுடன் சென்ற 40க்கு மேற்பட்ட இந்த வள்ளங்கள் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து முற்றுகையிடப்பட்டு செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காஸாமீதான கடல் முற்றுகையை ஊடறுத்து காஸாவுக்குள் தம்மாலியன்ற உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் கொண்டு செல்ல துணிச்சலுடன் சென்ற இச் செயற்பாட்டாளர்களையும் கிறேற்றா துர்ண்பேர்க் ஐயும் கௌரவித்தும் இப் போராட்டப் பயணத்தையும் கொண்டாடி சமூகவலைத் தளங்கள் எழுதுகின்றன. காஸா இனப்படுகொலைக்கு எதிராக மக்கள் ஐரோப்பிய வீதிகளிலும் ஜப்பான், அவுஸ்திரேலிய வீதிகளிலும், தென்கொரிய வீதிகளிலும், அமெரிக்க வீதிகளிலும் நாளுக்கு நாள் பெருகியபடிதான் உள்ளனர்.
ஆனாலும் என்ன. இந்த எழுச்சியை சமாளிக்க இந் நாட்டுத் தலைவர்கள் சூழ்ச்சிகரமாக நடந்துகொள்வதுதான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பலஸ்தீனத்தை அங்கீகரிக்கிறோம் என குண்டி மண்ணைத் தட்டியபடி எழுந்த மேற்குலகத் தலைவர் தொடங்கி, சமாதானத் திட்டம் என புதிய படம் காட்டும் ட்றம்ப் வரை களமாடுவதை சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. காஸா மக்களை எகிப்தின் சினாய்ப் பகுதிக்குள் துரத்துவதும் ,மேற்குக்கரையை அங்கு திட்டமிட்டு குடியேற்றப்பட்ட சியோனிச குடியேற்றவாசிகள் அரித்துத் தின்னவுமான திட்டங்களுடனும் அண்டை நாடுகளை எல்லை ஆக்கிரமிப்புச் செய்தும் அகண்ட இஸ்ரேலை நிறுவத் துடிக்கிறார்கள் சியோனிஸ்டுகள். மத்தியகிழக்கின் ஐரோப்பாவாக இஸ்ரேலை பேண மேற்குலகும் அவர்தம் வெள்ளை மேலாதிக்க மண்டைகளும் பெருமிதமும் இஸ்லாமிய எதிர்ப்புணர்வும் எல்லா கடப்புகள் வழியாகவும் வரத்தான் செய்கின்றன.
இந்த செயற்பாட்டாளர்களின் துணிச்சலான செயற்பாட்டையும், வயதை மீறிய போராட்டக் குணமும் அறிவும் செயற்திறனும் கொண்ட கிரேற்றாவையும் கொண்டாடாமல் இருக்க முடியவில்லை.
புளோற்றீலா கூட்டுப் பயணத்தின் இலக்கு காஸாவை தொடாதிருக்கலாம். ஆனால் ஓர் அரக்கத்தனமான அரசின் முகத்தையும் அதன் வெறிபிடித்த மனிதவிரோத செயற்பாட்டையும் இன்னொரு கோணத்தில் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. அடக்குமுறை எவளவு வீரியமாக இருக்கிறதோ, அதை எதிர்கொள்ளும் போராட்டக் குணமும் வீரியமாகவே எழும் என்ற செய்தியின் ஒரு குறியீடாயும் இதை எடுத்துக் கொள்ளலாம். மனிதம் சாகவில்லை என அறைந்து சொல்வதுபோல் உலகத் தெருக்களை நிறைத்து மாதக் கணக்கில் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தும் மக்களுக்கு புளோற்றிலா போராட்டம் மிகப் பெரும் உந்துதலை கொடுத்தே இருக்கிறது. காஸா மக்களுக்கு உங்களுடன் மனிதநேயம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியை சொல்லியிருக்கிறது. இவை எல்லாவற்றுக்குமாக புளோற்றீலா வரலாற்றில் பதியப்படும்!
