பலஸ்தீன காஸா பகுதியில் போரை நிறுத்தி இஸ்ரேலுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க ட்றம்ப் அரசினால் வரையப்பட்ட சமாதானத் தீர்வு பற்றிய பேச்சு இப்போ பேசுபொருளாகியுள்ளது. இந்தக் கூற்றில் இரண்டு கதையாடல்கள் இருக்கின்றன. ஒன்று காஸாவில் நடப்பது ‘போர்’ என்றதான கதையாடல். அங்கு நடப்பது போரல்ல. ஓர் இனப்படுகொலை என்பதே உண்மை. மற்றைய கதையாடல், இஸ்ரேலுக்கு கமாஸ் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பது என்பது.
மிகப் பெரும் படுகொலையோடும் ஆக்கிரமிப்போடும் 1948 இல் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அந்தப் பேரழிவு “நாக்பா” என அழைக்கப்படுகிறது. சுமார் ஏழு இலட்சம் பலஸ்தீனர்களை 500 கிராமங்களிலிருந்து விரட்டி, பலரை கொலைசெய்து பெறப்பட்ட ஆக்கிரமிப்பு இரத்த நிலத்தில் இஸ்ரேல் பிறந்தது. அதிலிருந்து தொடரும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகள், கொலைகள், கைதுகள், வலிந்த குடியேற்றங்கள் என்பவற்றால் பலஸ்தீன மக்கள் பாதுகாப்பு உணர்வை இழந்தனர். ஏற்கனவே இருந்த பலஸ்தீனம் என்ற நாட்டை -அந்த மண்ணிலேயே உருவாகிய- இஸ்ரேல் என்ற நாடு பாதுகாப்பற்றதாக மாற்றியது. அதையும் தாண்டி பலஸ்தீனம் என்ற நாடே இல்லாமலாக்கப்பட்டது. அது துண்டாடப்பட்டு காஸா, மேற்குக் கரை என சுருக்கப்பட்டது. இன்று பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்கக் கோரி போராட வேண்டிய வரலாற்று அவலம் நேர்ந்திருக்கிறது.
காஸா நிலப்பகுதியை தனது கட்டுப்பாட்டுள் வைத்து அதை ஒரு திறந்தவெளிச் சிறையாக மாற்றி, அவர்கள் அங்கிருந்து வெளியேறவோ வேறு நாட்டிலிருந்த பலஸ்தீனர்கள் அங்கு வரவோ அனுமதி மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல், அவர்களுக்கான நீர் வழங்கல், மின்சாரம், உணவு, மீன்பிடி எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி தனது கட்டுப்பாட்டினுள் வைத்துக் கொண்டிருந்த நாடு இஸ்ரேல். இந்த ‘திறந்தவெளிச் சிறை’ நிலைமையுள் பிறந்து வளரும் ஒருவர் தனது இருப்பை தக்கவைக்க அடிமையாக இருக்க வேண்டும் அல்லது போராட வேண்டும். முடியாதபோது தன் வலுவுக்கு எட்டியவரையில் மீறல் செய்ய வேண்டும். ஒக்ரோபர் 7 இல் நடந்தது ஒரு உக்கிரமான மீறல்தானே ஒழிய, இஸ்ரேலின் ‘பாதுகாப்பை அச்சுறுத்தும்’ வெளிப்பாடு அல்ல. (இதைச் சொல்கிறபோது, அதில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய அப்பாவிப் பொதுமக்களை புறக்கணிப்பது என்பதாகாது). அதனால்தான் “அந்த மீறலை நான் கண்டிக்க மாட்டேன். அந்த நிலைமைக்குள் நான் பிறந்து வளர்ந்திருந்தால் எவ்வாறாக வினையாற்றியிருப்பேன் என்பது எனக்குத் தெரியாது. இதை உங்கள் ‘பயங்கரவாதம்’ குறித்த கதையாடலால் விளங்கப்படுத்த முடியாது” என அறியப்பட்ட யூத புத்திஜீவியான பின்கல்ஸ்ரைன் அவர்கள் கூறியிருந்தார்.
கமாஸிடமிருந்து இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் என்பது இட்டுக்கட்டப்பட்ட கதையாடல். வசதிக்கேற்ப ‘பயங்கரவாதம்’ என்பதை வரையறுத்து ,கமாஸ் ஒரு பயங்கரவாதக் குழு என்பவர்களும் உளர். கமாஸ் ஒரு கெரில்லா போராட்ட முறைக் குழு என்ற கண்ணோட்டம் உள்ளவர்களும் உளர். அதனிடம் ஓர் அரச வன்முறை இயந்திர கட்டமைப்புக் கிடையாது. போர் விமானங்களும் கிடையாது. ஏன் டாங்கிகூடக் கிடையாது. ஒக்ரோபர் 7 மீறலை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி “கமாஸ் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்ற கதையாடலை உருவாக்கி, பலஸ்தீனத்தை முற்றாக விழுங்க நடத்துகிற ஒரு தொடர் நடவடிக்கைதான் போய்க் கொண்டிருக்கிறது. அது இனப்படுகொலைவரை சென்றிருக்கிறது.
உலக வீதிகளில் மக்கள் இடையறாது இதற்கு எதிராக குரல் எழுப்பியும் அந்தந்த நாடுகள், குறிப்பாக மேற்குநாடுகள், தமது மக்களுக்கு ஏய்ப்புக் காட்டுகிற விதமாக “பலஸ்தீனத்தை அங்கீகரிக்கிறோம்” என நடத்திய நாடகத்தை ட்றம்ப் இன் சமாதானத் திட்டம் அம்பலப்படுத்தியிருக்கிறது. அந்த திட்டத்தில் பலஸ்தீனம் என்ற நாட்டை எந்த இடத்திலும் அங்கீகரிக்கவில்லை என நெத்தன்யாகு கூட திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். ஆனால் “அங்கீகரிப்பு” கதைவிட்ட மேற்குலக தலைவர்கள் அழகாக கள்ள மௌனம் காக்கிறார்கள்.
நோபல் பரிசுக் கனவு நாயகன் ட்றம்ப் உக்ரைன் ரசிய பிரச்சினையில் ஒரு தீர்வுக்கு வர இரு தரப்பையும் இணைக்க முயற்சித்தவர். ஆனால் காஸா பிரச்சினையை இஸ்ரேலுடன் மட்டும் பேசி சமாதானத்திட்டத்தை வரைகிறார். பலஸ்தீன மக்களையோ அவர்களது குரலையோ, காமாஸையோ, ஏன் தமது எடுபிடியான மொகமட் அபாஸையோகூட கலந்து பேசவில்லை. மத்திய கிழக்கின் தலையாட்டி நாடுகளின் ஒப்புதலை இன்னொரு ஆதாரமாக வைத்து ட்றம்ப் பேசுகிறார். இதற்குப் பெயர் சமாதானத் தீர்வு. இஸ்ரேலின் கள்ள எண்ணங்களை நிறைவேற்ற சியோனிச கும்பலும் அமெரிக்க எசமானும் சேர்ந்து ஒரு திட்டத்தை முன்வைத்து, அதை கமாஸ் 72 மணித்தியலாலத்துள் ஏற்றுக்கொள்ளாவிட்டலால் விளைவு பாரதூரமாக இருக்கும் என மிரட்டுகிறார், ட்றம்ப்.
பலஸ்தீனர்களின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்காத வெளிநாட்டுத் தலையீட்டை ஏற்றுக்கொள்ள வைக்கிறது இத் தீர்வு. பலஸ்தீனர்களுக்கு அதில் இடமில்லை. ட்றம்ப் தலைமையில் முன்னாள் போர்க் காதலன் ரொனி பிளேயரும் சேர்ந்து நிர்வகிக்கும் பொறிமுறையில் சில அரபுநாட்டு இராணுவங்களை வைத்து ஓர் அரசவன்முறை இயந்திரத்தை உருவாக்கி இயங்கப் போகிறதாம் காஸா நிர்வாகம். அதில் அங்கம் வகிக்கும் பலஸ்தீன நிர்வாகிகளுக்கு பயிற்சியை வழங்கி, புடம்போட்டு எடுத்து, ஆட்சியை கொடுத்துவிட்டு அவர்கள் விலகிவிடுவார்களாம். இந்த அணுகுமுறையை அப்பட்டமான “நவ காலனியம்” என்கிறார் அரசியல் விஞ்ஞானியான மியர்ஸைமர் அவர்கள்.
இத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், கமாஸ் உடன் அல்லது புதிதாக எழக்கூடிய போராட்டக் குழுக்களுடன் இந்த அரபு இராணுவம் மோதி அடிபட்டு, மத்திய கிழக்கினுள்ளே புதிதான முரண்பாடுகளை உருவாக்கிவிட்டு, இஸ்ரேல் வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் நிலை உருவாக சாத்தியம் உண்டு.
மக்கள்மயப்பட்ட ஒரு போராட்டக் குழு ஆக இயங்கும் கமாஸ் ஆயுதத்தைக் கீழே போட்டாலும்கூட, அவர்கள் அரசியலுக்கு வெளியே இருக்க வேண்டுமாம். அதாவது அவர்களைத் தவிர்த்து இந்த நிர்வாகம் இயங்கப் போகிறது. முதலில் எஞ்சியிருக்கும் இஸ்ரேலியப் பணயக் கைதிகளை கமாஸ் விடுவிக்க வேண்டும். பாதுகாப்பு நிலைக்குள் இயங்கும் கமாஸ் ஆயுதத்தை கீழே போட வேண்டும். தாக்குதல் நிலையில் இருக்கும் இஸ்ரேல் படிப்படியாக காஸாவை விட்டு வெளியேறுமாம். இதுதான் டிசைன்.
இதுகுறித்து பல அரசியலாளர்கள் தீவிரமாக கருத்துகளை முன்வைக்கிறார்கள். மூன்றாம் தரப்பு மத்தியத்துவம் என்பது வேறு. முன்றாம் தரப்பே சமாதானத் திட்டத்தை முன்வைப்பது என்பது வேறு. இங்கு “முன்வைப்பது” என்பது மென்மையான வார்த்தை. இந்த சமாதானத்திட்டத்தை ஒரு பேரத்தின் அடிப்படையிலும், பலஸ்தீனத் தரப்புக்கு விரல்நீட்டும் நிபந்தனைகள் அடிப்படையிலும் மட்டுமல்ல, மிரட்டலோடும் முன்வைத்திருக்கிறார், ட்றம்ப்!
