எதைச் சொல்ல?

இஸ்ரேல்- ஈரான்

குறிப்பு: 23.06.2025 சுடுமணலில் பிரசுரிக்கப்பட்ட இக் கட்டுரை update உடன் சேர்த்து 28.06.2025 மீள எழுதப்பட்டுள்ளது.

13.06.2025 அன்று முதன்முதலில் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதலை இஸ்ரேல் தனித்து எடுத்த முடிவு போல ஊடகங்கள் சித்தரித்திருந்தன.  அமெரிக்காவுக்கு தெரியாமல் இஸ்ரேலின் எந்த அணுவும் நகராது என்ற உண்மையை அவைகள் செய்திகளுள் புதைத்து விட்டன. இத் தாக்குதலின் மையப் பாத்திரத்தை அமெரிக்காவே வகித்தது என அரசியல் அறிஞரான ஜெப்ரி ஸாக்ஸ் (Jeffry Sachs) உட்பட்ட புத்திஜீவிகள் சொல்கிறார்கள். இத் தாக்குதலுக்கு ஒருசில நாட்களுக்கு முன்னரே அமெரிக்கா 300 ஏவுகணைகளை இஸ்ரேலுக்கு கொடுத்திருந்தது என “வோல் ஸ்றீற் ஜேர்ணல்” (Wall Street Journal) செய்தி வெளியிட்டிருந்தது. உக்ரைனுக்கு தருவதாக பைடன் காலத்தில் ஒப்புக்கொண்ட 20000 ட்ரோன்களை ஒருசில வாரங்களுக்கு முன்னர் ட்றம்ப் மத்திய கிழக்குக்கு மடைமாற்றிவிட்டதாக செய்திகள் வந்திருந்தன. அது எங்கே போனது என்ற விபரம் இதுவரை தெரியாது. இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்க போர் விமானங்கள், கடற்படை போர்க் கருவிகள், தரைப்படையின் விமான எதிர்ப்பு கருவிகள் எல்லாமே தயார் நிலையில் வைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

ஈரானின் எல்லைக்குள்ளேயே மொசாட் இரகசியமாக ட்ரோன்களை இயக்கும் நிலையமொன்றை உருவாக்கி வைத்திருந்தது என்பதும், அது சம்பந்தமாக (இந்தியர்கள் உட்பட) 20 க்கு மேற்பட்டோர் கைதானது என்பதும் ஈரான் மீதான விமானத் தாக்குதல் நடந்த பின்னர் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள். உலகுக்கு மட்டுமல்ல ஈரானுக்குக் கூட இந்த சதி அரங்கேற்றம் அதிர்ச்சியான செய்தியாக அமைந்திருந்தது. ஈரானின் விமான எதிர்ப்பு தளபாடங்களை செயலிழக்கச் செய்யும் வேலையை செய்யவும், முக்கியமான தலைவர்கள் இருந்த இடத்தை அறியவும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதாவது இஸ்ரேலின் விமானத் தாக்குதலை துல்லியமாக செய்து முடிக்க இத் தொழில்நுட்பம் பாவிக்கப்பட்டிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் ரசிய எல்லைக்குள் ஆழ ஊடுருவி ரசிய விமானத் நிலையங்களில் வைத்து அவற்றை அழித்தொழிக்க இதேவகை திட்டமே செயற்படுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை வருட காலமாக இத் திட்டமிடல் நடத்தப்பட்டது என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குறிப்பிட்டிருந்தார். இதில் உக்ரைன் உளவுப்படை மட்டுமல்ல, பிரித்தானிய உளவுப்படையும் சம்பந்தப்பட்டதாக ரசியா குற்றஞ் சாட்டியிருந்தது. சிஐஏ உம் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் வெளிவந்திருந்தன. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, பிரதியெடுத்தது போன்ற இந் நிகழ்வில் ஈரானிலும் சிஜஏ யும் மொசாட் உம் சேர்ந்து செயற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

இத் தாக்குதலைத் தொடர்ந்து உலகமே எதிர்பாராதளவு ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் அமைந்திருந்தன. “நரகத்தின் வாசல் கதவை திறந்திருக்கிறீர்கள்” என ஈரானிய மதத் தலைவர் கூறியதை ஏவுகணைகள் காவிச் சென்று இஸ்ரேல் முழுவதும் பரப்பின. அதை தொடர்ந்து 21.06.2025 அன்று ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் (Fordow, Natanz, Isfahan) மீது அமெரிக்கா தாக்குதலை நடத்தியது. 13600 கிலோ எடையுள்ள 14 பாரிய குண்டுகளை  B-2 விசேட விமானங்கள் தாங்கிவந்து இந் நிலைகளைத் தாக்கின. செங்குத்தாக 60 மீற்றர் வரை ஊடுருவி வெடித்துச் சிதறும் இந்தவகைக் குண்டு (Bunker Buster) அமெரிக்காவிடம் மட்டுமே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அணுசக்தி நிலையங்களின் மீதான இத் தாக்குதல் தொடங்கப்பட்டதன் நோக்கம் என்ன?. ஈரானின் அணுச்சக்தி தளங்களை அழிப்பது, அதன் மூலம் இஸ்ரேலின் பாதுகாப்பை, பிராந்தியப் பாதுகாப்பை, இன்னும் மேலே போய் உலகின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது என்ற விளம்பரப் பலகையை நெத்தன்யாகு தொங்கவிட்டு அமெரிக்காவை இறைஞ்சினார். இதேநேரம்; இந்த அணுசக்தி நிலையங்கள் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை, அதற்கான உயர் யூரேனிய செறிவூட்டலை தடுக்க, ஒரு உடன்பாட்டு ஒப்பந்தத்துக்கு வர ட்றம் ஈரானுடன் 5 சுற்றுகளாக பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார் என்பது கவனிக்கத் தக்கது. அது முறிவடையவில்லை. பிறகு எப்படி அந் நிலையங்களை தாக்குகிற முடிவை ட்றம் எடுத்தார் என்ற கேள்வி முக்கியமானது.

அத்தோடு தனக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு தர வேண்டும் எனவும் அந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தார். தான் பதவிக்கு வந்து 24 மணி நேரத்துள் ரசிய-உக்ரைன் இடையில் சமாதானத்தை கொண்டு வருவேன் என சமாதானத் தேவனாக படம் காட்டியபடி பதவியேற்றவர் அவர்.  அப்படியிருக்க, அவர் இஸ்ரேலின் பொறிக்குள் அகப்பட்டுவிட்டார் எனவும், அவரது மாறாட்டமான பேச்சுகள் நிலைப்பாடுகளை வைத்தும் அமெரிக்கத் தாக்குதலை சிலர் விளங்கப்படுத்துகின்றனர்.

அதேநேரம் இதை இன்னொரு கோணத்தில் புரிந்துகொள்வதற்கு ‘ஆழ்-அரசு’ (Deep State) குறித்த புரிதல் முக்கியமானது. அரசாங்கம் (Government) என்பதும் அரசு (state) அல்லது ‘ஆழ்-அரசு’ (Deep State) என்பதும் ஒன்றல்ல. அரசு ஆனது அரசாங்கங்களை ஒரு கருவியாகக் கையாளும் நிலை உள்ளது. இது ஏதோ தலைவர்களை பொம்மையாக வியாக்கியானப் படுத்துவதல்ல. ஜனாதிபதி தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தை (ஆழ்-அரசுடன் முரண்படாமல் அல்லது இன்னும் வீரியமாக்கி) செயற்படுத்த முடியும். எனவே ட்றம்ப் க்கும் ஒரு முக்கிய பாத்திரம் இருக்கிறது. அதனால் ட்றம்ப் மீதான பொறுப்புக் கோரல், மற்றும் விமர்சனம் நிச்சயம் இருக்கும்.

2017 இல் புட்டின் சொன்ன கதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது. “அமெரிக்க ஜனாதிபதிகள் பல திட்டங்களோடு பதவிக்கு வருவர். பிறகு என்ன நடக்கும். கறுப்பு நிற உடையுடனும், நீல கழுத்துப்பட்டி (ரை) உடனும், கையில் ஒரு குறுஞ் சூட்கேஸ் உடனும் ஒரு ‘மனிதர்’ வருவார். அவர் புதிய ஜனாதிபதிக்கு நிலவும் யதார்த்தத்தை விளங்கப் படுத்துவார். அதன்பிறகு பதவிக்கு வந்தவர்களின் திட்டங்கள் காணாமல் போய்விடும். பிறகு அதை நீங்கள் காதால் கேட்கக்கூட முடியாமல் போய்விடும்” என்று சுவைபட ‘ஆழ்-அரசு’ குறித்து புட்டின் சொன்னார்.

அமெரிக்க ‘ஆழ்-அரசு’ என்பது சிஐஏ, பென்ரகன் மற்றும் உளவு நிறுவனங்கள், அதி பணக்காரக் குழு (Billionare), மேட்டுக்குடிகள் (Elites), இராணுவ தளபாடத் தரகர்கள் என்போரைக் கொண்டது. இந்த அதி பணக்காரர் குழுவுக்குள் சியோனிச லொபியும் அடங்கும். அது பலமானதும்கூட. இந்த ஆழ்-அரசுப் பங்காளர்களே அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை வழிநடத்துபவர்கள். மக்களால் இவர்கள் தெரிவுசெய்யப் படுவதில்லை. அரசாங்கங்கள் மாறிக் கொண்டிருப்பது போல் அரசு/ஆழ்-அரசு மாறிக் கொண்டிருப்பதுமில்லை. இந்த ஆழ்-அரசு ட்றம்பின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக் கனவையும் ஈரானின் அணுசக்தி நிலையங்களில் வைத்து பறித்துக் கொண்டுள்ளது என சொல்லமுடியுமா தெரியவில்லை. இந் நடவடிக்கையானது ஒரு நாட்டின் இறைமையை மீறியதும், சர்வதேச சட்டத்துக்கு முரணானதும் ஆகும். தனது இரண்டு முறையான பதவிக் காலத்தில் 6 நாடுகளின் மீது குண்டுகள் போட்ட ஒபாமாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறபோது, ட்றம்ப் க்கும் அது கிடைக்கலாம். யாரறிவார்.

இவர்களின் கனவு இந்த அணுசக்தி நிலையத் தகர்ப்பு அல்ல.  அது மக்களுக்கு சொல்லப்பட்ட காரணமே ஒழிய உண்மை அதுவல்ல. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பினால் (IAEA) தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. “ஈரான் அணுகுண்டை தயாரிக்கும் நிலைக்கு யுரேனியச் செறிவூட்டலை செய்யவில்லை” என அவர்கள் சான்றிதழ் வழங்கியிருந்தனர். அமெரிக்க உளவுப்படைகளும் அதை உறுதிப்படுத்தியிருந்தனர். எனவே காரணம் அதுவல்ல. பல வருடங்களாக நெத்தன்யாகு செய்துகொண்டு வந்த பிரச்சாரம் மட்டுமே அது. “இன்னும் இரண்டு வாரத்தில் ஈரான் அணுகுண்டை தயாரித்துவிடும்” என்பது அவரது மந்திரமாக அவருடன் ஒட்டிக் கொண்டுவிட்டது.

இதெல்லாம் ஆழ்-அரசு கும்பலுக்கு தெரியாததல்ல. அவர்களின் இலக்கு ஈரானில் தலைமையை மாற்றும் சதி வேலை செய்வதிலேயே (ஆட்சிக் கவிழ்ப்பு) இருக்கிறது. 1945 இலிருந்து இன்றுவரை 64 ஆட்சி மாற்றச் சதிப் புரட்சிகளை பல்வேறு நாடுகளில் அங்கேற்றியவர்கள் அவர்கள். இச் சதியின் பட்டியலில் ஈரான் விடயத்தில் நெத்தன்யாகுவும் இணைந்து கொண்டிருந்தார். அதை அவர் வெளிப்படையாகவே உச்சரித்தது செய்திகளாக ஏற்கனவே வந்தவை. சர்வாதிகாரி ஷாவை 1953 இல் சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்குக் கொணர்ந்தவர்கள் ஆழ்-அரசுக் கும்பலான CIA உம் M-16 உம் ஆவர். (M-16 என்பது பிரித்தானிய உளவுப்படை). ஷா மேற்குலகின் அடிவருடியாக ஈரானை ஆட்சி புரிந்தார். அவரை தூக்கியெறிந்த ஈரானியப் புரட்சி 1979 இல் நடந்தது.

அதன்பின் ஈரான் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரியாகவே நிலைநிறுத்தப்பட்டது. இப்போதும் ஓர் அடிவருடியை ஈரானினின் ஆட்சி பீடத்தில் நிலைநிறுத்துவதே ஆழ்-அரசின் வகைமாதிரி சதித் திட்டம். அரசின் இந்தவகை எல்லா நடவடிக்கைகளையும் ஜனாதிபதி காரணங்களை சோடித்து, வரலாறுகளை புனைந்து மக்கள் முன் வைப்பதும், சதி நடவடிக்கைகளுக்கு கையெழுத்து இட்டு அங்கீகரிப்பதுமான ‘ஜனநாயகக்’ கடமையை செய்ய வெண்டியிருக்கும். அவர்கள் பதவிக்கு வர முன் கூவிய திட்டங்களெல்லாம் பிறகு காணாமல் போகும் என்பது இதைத்தான். ஆட்சிக்கு வர முன்னர் சிஐஏ இனை விமர்சித்தவர் ட்றம்ப். ஈராக் யுத்தத்தை விமர்சித்தவர் அவர். இப்போ?

16.06.2025 அன்று ட்றம்ப் திடீரென தெஹ்ரானிலிருந்து எல்லோரும் வெளியேறிவிட வேண்டும் என அவரது சமூகவலைத் தளத்தில் அறிவித்தார். 10 மில்லியன் சனத் தொகையைக் கொண்டது இத் தலைநகரம். இந்த பெருந்திரளை அலையவிடுவதன் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து, ஆட்சிமாற்ற சதியை அரங்கேற்றுவதே ஆழ்-அரசின் நோக்கமாக இருந்தது. இருக்கிறது. அதையே ட்றம்ப் அறிவித்தார். இதற்கும் அணுசக்தி நிலைய தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம். அவை தெஹ்ரானுக்கு பல காத தூரம் வெளியில் இருப்பவை. ஏன் அந்த மக்கள் வெளியேற வேண்டும்?. அத்தோடு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர்  “தெஹ்ரான் இன்னொரு பெய்ரூத் ஆக மாற்றப்படும்” என அறிவித்திருந்தார். 2011 அக்டோபர் மாதம் பெய்ரூத் இல் ஆட்சியை கவிழ்த்ததோடு, லிபிய ஜனாதிபதி கடாபி கேலப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். ஏற்கனவே 2006 இல் ஈராக் இலும் இதேவகை குரூர நாடகமே அரங்கேற்றப்பட்டது.

ஈரானின் ஆட்சி மாற்றம் அல்லது சதி என்பது இஸ்ரேலுக்கு தன்னைச் சூழவுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈராக்கிலுள்ள ஈரான் ஆதரவுக் குழுக்கள், யேமன் நாட்டின் ஹவுதி போன்ற அமைப்புகளை பலமிழக்கச்செய்ய அவசியமானதாக இருக்கிறது. இதன்மூலம் பலஸ்தீனத்தை முழுமையாக கைப்பற்றுவது மட்டுமன்றி லெபனான் சிரியா என இன்னும் அகலக் கால்வைத்து தனது அகண்ட இஸ்ரேல் கொள்கையை அவர் நடைமுறைப்படுத்துவது இலகுவாக இருக்கும். மற்றைய அயலவர்களாக இருக்கும் அரபுநாடுகளின் தகிடுதத்தம் போல் இல்லாமல், பலஸ்தீனப் போராட்டத்துக்கான விடாப்பிடியான ஆதரவை வழங்கிவரும் ஈரானையும் அதே கும்பலுக்குள் தள்ளி, பலஸ்தீனப் போராட்டத்தை பலவீனப்படுத்தி தனது ஒற்றை-அரசு (One-State) கனவை மெய்ப்படுத்த முனைகிறது நெத்தன்யாகு கும்பல். அத்தோடு தனது பிராந்திய வல்லரசு நிலையை உருவாக்கிப் பேண ஈரான் பலவீனப்படுத்தப்பட வேண்டும். தனக்கான அதிகாரச் சமநிலையில் -தன் போலவே- ஈரான் அணுகுண்டு வைத்திருக்கும் நாடாகவும் வரக்கூடாது என்ற நோக்கமும் பலமானதாக இருக்கிறது.

ஆனால் அமெரிக்காவுக்கோ நோக்கம் வேறானது. அமெரிக்க பெற்றோ டொலர் உட்பட்ட, டொலர் மைய வர்த்தகத்தை பிரிக்ஸ் (BRICS) நிராகரித்தததாலும், பிரிக்ஸ் பலமான பொருளாதார அமைப்பாக மாறிவருவதாலும் அதை எதிர்கொள்ள, ஈரானின் எண்ணை வளத்தை முடக்க அல்லது தன் பக்கம் மடைமாற்ற ஈரானில் ஓர் எடுபிடி ஆட்சி தேவைப்படுகிறது. “ஈரான் நாடு பலமான எண்ணெய் வளத்தின் மீது குந்தியிருக்கிறது” என ட்றம்ப் அண்மையில் சொன்னது இதை ஆதாரப்படுத்துகிறது. எனவே அமெரிக்காவும் இஸ்ரேலும் “ஈரானின் ஆட்சி மாற்றம்” என்ற புள்ளியில் வெவ்வேறு பாதையால் வந்து ஒன்றிணைந்துள்ளனர்.

வெறும் 250 வருட வரலாறு கொண்ட அமெரிக்கா 5000 வருட வரலாறு கொண்ட ஈரானையும் அதன் பண்பாட்டு மனக்கட்டமைப்பையும் புரிந்துகொள்ள முடியாமலிருக்கிறது. அந்த மனக்கட்டமைப்பின் உறுதியோடுதான் ஈரான் 1979 இலிருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், பொருளாதாரத் தடைகளைத் தாண்டியும் தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. உலகமே அதிர்ச்சியடைய வைத்த அவர்களின் ஏவுகணை தொழில்நுட்பத்தின் சூட்சுமம் அங்கிருந்து தோற்றம் பெற்ற ஒன்றுதான்.

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த காலம் போல், இன்றைய காலத்தை தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும் பரம்பலும் நேர்கோட்டில் வைத்திருக்கவில்லை. அத்தோடு இதுவரையான எந்தப் போரிலும் அழிவுகளையும் வெறியாட்டங்களையும் அமெரிக்கா சாதித்ததேயல்லாமல், ஒரு போரில் கூட வெற்றிபெற முடியவில்லை. எந்த நாட்டையும் உருப்படியாக முன்தள்ளிவிடவில்லை. அது அவர்களின் நோக்கமுமல்ல.  இதுதான் வரலாறு. ஈரான் மீது படையெடுத்தாலும் இறுதியில் இதேதான் முடிவாக இருக்கும். உலகம் முழுவதும் 750 க்கு மேற்பட்ட படைத்தளங்களை நிறுவி தீன் போட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கா உலகின் மிகப் பலம் பொருந்திய இராணுவ கட்டமைப்பைக் கொண்ட நாடு. போதாதுக்கு நேட்டோ இராணுவக் கட்டமைப்பு வேறு. இதற்கு வெளியில் உள்ள நாடுகள் அணு ஆயுதத்தை வைத்திருப்பதே தமக்கான பலம் என்ற தவிர்க்க முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளன. வடகொரியா தன்மீதான மேற்குலகின் ‘நொட்டுதலை’ அமைதியடையச் செய்ய அணுவாயுத உற்பத்தியை (அணுகுண்டை) கையிலெடுத்தது போல, ஈரானையும் அதே நிலைக்குத் துரிதமாகத் தள்ளிவிடுவதைத்தான் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் அடாவடித்தனம் செய்து முடிக்கும்.

இதுகுறித்து அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான மியர் ஸெமர் (John Mearscheimer) அவர்கள் கூறுகிறபோது ஒன்றைச் சொன்னார்.

“ஈரான் நினைத்தால் அணுவாயுதத்தை உருவாக்குவதை யாரும் தடுக்க முடியாது. அந்தளவு அறிதிறனையும் (Know-How), வல்லமையையும் ஈரான் கொண்டுள்ளது. நாம் (அமெரிக்கா) அதை முழுமையாக அழித்தாலும்கூட, அவர்கள் மலையின் கீழ் அதை திரும்ப நிர்மாணிக்க வல்லவர்கள். எனவே தாக்குதல் நடவடிக்கையால் இதைத் தடுக்க முடியாது. மாறாக அது இன்னும் அணுவாயுதத்தை உருவாக்கும் நிர்ப்பந்தத்துக்கு ஈரானைத் தள்ளும் வேலையைத்தான் செய்யும். உண்மையில் அவர்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் எதிர்கொள்ள அணுவாயுதத்தை வைத்திருக்க வேண்டும். வடகொரியா அதற்கு ஒரு சிறந்த உதாரணம். இந்த 12 நாள் யுத்தம் தருகிற பாடம் என்னவென்றால், ஈரான் அணுகுண்டை உருவாக்கி வைத்திருந்திருந்தால், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை தாக்கியிருக்க சாத்தியமில்லை என்பதே” என தொடர்கிறார்.

இதன் அர்த்தம் அணுகுண்டை ஒரு தீர்வாக முன்வைப்பது என்பதல்ல. அணுகுண்டு மனிதகுல விரோதி. அணுகுண்டு இல்லாத உலகம் அழகானது. பாதுகாப்பானது. ஆனால் அதை சில நாடுகள் உருவாக்கி வைத்திருக்கின்றன. அவற்றை முற்றாக அழித்தொழித்துவிட அவர்கள் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. அதுகுறித்து எந்த ஒப்பந்தமோ உடன்பாடோ செய்ய அவர்கள் ஒருபோதும் முன்வரவில்லை. இனியும் அப்படித்தான். அந்த அரக்கனை தம்முடன் வைத்துக் கொண்டு, அதை எந்தச் சங்கிலியால் கட்டிப் போட்டு வைத்திருப்பது என்றே பேசுகிறார்கள். தேவையானபோது அவிழ்த்துவிட அவர்கள் தயங்கப் போவதுமில்லை என்பதே அதன் அர்த்தம். இதுவே யதார்த்தம் (reality) என்கிறபோது, அதை எப்படி எதிர்கொள்வது என்ற நிலையிலிருந்து, தவிர்க்க முடியாமல் வந்தடைய வேண்டியிருக்கிற கருத்துகளாகவே ஜோன் மியர்ஸைமரின் அணுகுண்டு குறித்த கருத்துகளை நோக்க வேண்டும்.

ஈரானில் நடந்த 1979 புரட்சி மேற்கின் விசுவாசியான ஷா இன் 26 வருட கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. ஷா இன் அணுசக்தி உற்பத்தியை அமெரிக்கா ஆதரித்திருந்தது. அதேநேரம் முன்னெச்சரிக்கையாகவும் செயற்பட்டிருந்தது. 1968 இல் ஷா இன் அரசாங்கம் NPT (Non-Proliferation Treaty) என்ற ஒப்பந்தத்தில் கைச்சாந்திட்டிருந்தது. இவ் ஒப்பந்தப்படி அணுசக்தியை சமாதான வழிமுறையில் மக்கள் பயன்பாட்டுக்கு உற்பத்தியாக்கிப் பயன்படுத்த முடியும். ஆனால் அணுவாயுதத்தை (அணுகுண்டை) உருவாக்க முடியாது என்பதாகும். இந்த ஒப்பந்தத்தை 1979 புரட்சியின் பின்னான ஈரான் அரசாங்கமும் தொடர்ந்து ஏற்றுக் கொண்டது. ஆனாலும் மேற்குலகை அணுவாயுதச் சந்தேகம் தொடர்ந்தபடிதான் இருந்தது.

2015 இல் மீண்டும் JCPOA என்ற ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு 2016 இலிருந்து நடைமுறைக்கு வந்தது. இது ஐநாவின் IAEA அமைப்புடன் சமாந்தரமான ஓர் ஒப்பந்தம் ஆகும். ஈரான் அணுசக்தி தொழில் நுட்பத்தை மட்டுப்படுத்தப்பட்ட அளவில், அதாவது அணுகுண்டை தயாரிப்பதற்கான நிலைக்கு யுரேனியத்தை செறிவூட்டாமல், பாவிக்க இந்த ஒப்பந்தம் NPT போலவே வரைவுசெய்யப்பட்டது. அதேநேரம் தொடர்ச்சியாக ஈரான் மீதான மேற்குலகின் பொருளாதாரத் தடைகளை அகற்றுவதற்கான உடன்பாடையும் இது சேர்த்திருந்தது. இந்த ஒப்பந்தம் ஐநாவின் பாதுகாப்புச் சபை நாடுகளான அமெரிக்கா, சீனா, ரசியா, பிரான்ஸ், பிரித்தானியா நாடுகளும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் சேர்ந்து ஈரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தமாகும். இஸ்ரேல் இதை கடுமையாக எதிர்த்தது. ட்றம்ப் முதலில் ஆட்சிக்கு வந்தபோது 2018 இல் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை விலக்கினார். பொருளாதாரத் தடை கடுமையாக்கப்பட்டது. இஸ்ரேலிய சியோனிச லொபியின் அழுத்தத்தால் ட்றம்ப் இதிலிருந்து விலகியதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

மத்திய கிழக்கில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்ற நாட்டின் வயது 77 மட்டுமே. எனவே களவாடப்பட்ட நிலத்தில் தனது இருப்புக் குறித்த அச்சத்தோடுதான் இஸ்ரேல் ஒவ்வொரு நாளும தூக்கத்துக்குச் செல்கிறது. அதன் உருவாக்கம் சியோனிஸ்டுகள் பிரித்தானியாவுடனும் அமெரிக்காவுடனும் சேர்ந்து நிகழ்த்திய ஒன்று. எனவே மத்திய கிழக்கில் அதன் பூர்வீக நாடுகளை மேவிய பிராந்திய அதிகாரத்தை அது நிறுவத் துடிக்கிறது. அதற்கு சவாலாக உள்ள ஒரேயொரு நாடு ஈரான்தான். எனவே ஈரான் அதன் நிரந்தர எதிரியாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. இஸ்ரேல் அணுகுண்டை தயாரிப்பதை மேற்குலகம் கண்டுகொள்ளவில்லை. மாறாக ஏற்றுக் கொண்டது. அதற்கு சவாலாக ஈரான் வந்துவிடக் கூடாது என்பதே அமெரிக்காவின் கரிசனையும் ஆகும். ஈரானில் 1968 இல் ஷா இன் அரசாங்கம்- தனது எடுபிடி அராசாங்கம் இருந்தபோதும், முன்னெச்சரிக்கையாக NPT ஒப்பந்தத்தை உருவாக்கிவிட்டிருந்தது.

மத்திய கிழக்கின் பேட்டை ரவுடியாகவும், கிற்லரைவிட குரூரமான உயிர்கொல்லியாகவும், அதேவகைப்பட்ட கிற்லரின் ‘யூத இன அழிப்பு சித்திரவதை முகாம்’ (Concentration Camp) போன்று காஸாவை திறந்தவெளிச் சிறைச்சாலையாக உருவாக்கி குழந்தைகளையும் பலஸ்தீன மக்களையும் ஆயுதத்தாலும், குண்டுகளாலும், பட்டினியாலும் கொலைசெய்யும் இஸ்ரேல் அணுகுண்டை வைத்திருக்க முடியுமெனில், எந்த நாட்டின் மீதும் இதுவரை வலிந்து தாக்குதல் தொடுக்காத, எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காத ஈரானிடம் ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்விக்கு தார்மீக நியாயம் எதையும் எவராலும் சொல்ல முடியுமா என்ன.

அதனால் ஒரு கதையாடலை உருவாக்குகிறார்கள். 1996 இலிருந்து அந்தக் கதையாடலின் முரட்டுத் தாத்தாவாக நெத்தன்யாகு இருக்கிறார். “இஸ்ரேல் என்ற நாடு வரைபடத்திலிருந்து துடைத்தழிக்கப்படும்” என ஈரான் சொல்லி வருகிறதாக 30 வருட காலமாக அந்தத் தாத்தா சொல்லிக் கொண்டே வயதாகிப் போய்விட்டார். இப்போதும் சொல்கிறார். இஸ்ரேல் முழு பலஸ்தீன நிலப்பரப்பையும் மட்டுமல்ல, அயல்நாடான லெபனான், சிரியா நாடுகளின் எல்லையைத் தாண்டிய விஸதரிப்பையும் உள்ளடக்கிய one-state கனவுடனும் வெறியாட்டத்துடனும் பயணிக்கும் நாடு. இந்த நாசிச நோய்க்கூற்று மனோபாவத்தின் மறுத்தானாகவே ஈரானின் கூற்றை புரிய முடிகிறது. இல்லை, ஈரானின் இலக்கு அது என எடுத்துக் கொண்டாலும், ஈரான் போலவே, “பலஸ்தீனம் என்ற நாடே வரைபடத்திலிருந்து துடைத்தழிக்கப்படும்” என சொல்லிக் கொண்டிருக்கும் சியோனிச அரசுக்கு, ஈரானின் “இஸ்ரேல் என்ற நாடே வரைபடத்திலிருந்து துடைத்தழிக்கப்படும் என்ற” வசனத்தினைக் காட்டி, ஈரானுக்கு அணுகுண்டை மறுக்கும் தர்க்கம் முரண்நகை கொண்டது இல்லையா. அதைச் சொல்ல இங்கே இஸ்ரேலுக்கு என்ன தார்மீக அறம் எஞ்சிக் கிடக்கிறது.

இந்தப் போர் மூலம் வந்தடைந்திருக்கிற இன்றைய நிகழ்வுகளின் விளைவு அணுகுண்டை தயாரிப்பதற்கான நிர்ப்பந்தத்துள் ஈரானை கொணர்ந்து விட்டிருக்கிறது. எனவே NPT யிலிருந்து விலகுவதற்கான பாராளுமன்ற ஒப்புதலையும் அது பெற்றிருக்கிறது. விழுந்தடித்து ஓடிவந்த அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் உருவாக்கி வைத்திருந்த தனது அணுசக்தி விளைபொருட்களை உடடியாக ஒப்படைக்க வேண்டும் என கிளம்பியிருக்கிறது. யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை தெளிவாக செய்திகளில் பார்க்க முடியவில்லை. ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA யிடமா அல்லது அமெரிக்காவிடமா என்பது ஒரு கேள்வி.

இங்கே சுவாரசியமான ஒரு முரண்நகை இருக்கிறது. ஈரானின் அணுசக்தி நிலைங்களை Bunker Buster குண்டுகளால் முற்றாக தகர்த்துவிட்டோம், எதுவும் மிஞ்சவில்லை என சொன்ன ட்றம்ப், இப்போ ஈரான் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என கோருவது கேலிக்குரியது. அப்ப ‘குண்டுக் கதை’ என்ன அம்புலிமாமாக் கதையா. அடுத்தது, இந்த வெருட்டலை ஈரான் மீது ஏவ அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் யார் உரிமையைக் கொடுத்தார்கள். ஐநாவும் அதன் அமைப்பான IAEA யும் இதுபற்றி என்ன சொல்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

மத்திய கிழக்கின் அரபு நாடுகள் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் பின்வழியாலும் முன்வழியாலும் வரவேற்றுக் கொண்டு இருப்பவை. அவை அவர்களின்  அதிகாரத்தை ஏற்று சேவகம் செய்யத் தயாராக இருக்கின்றன. மத்திய கிழக்கில் ஈரான் தீர்மானகரமான சக்தியாக வருவதை மனதளவில் ஏற்றுக் கொள்ளாதவை. உலக தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தம்மை இற்றைப்படுத்தாமல் அல்லது இற்றைப்படுத்த முடியாத இயலாமையுடன், திறமையின்மையுடன் காலம் கழிப்பவர்கள் அவர்கள். அந்தத் தாழ்வுச் சிக்கலே அவர்களின் மனத்தடையாக இருக்கின்றது எனலாம்.

இருந்தபோதும் ஈரான்  தனித்துவிடப்பட்டிருக்கிற ஒரு நாடு அல்ல. ஈரானின் தோல்வி பிரிக்ஸ் இன் பொருளாதார வளர்ச்சியின் மீதான தாக்குதலாக அமையும் என்பதால் பிரிக்ஸ் நாடுகள் -குறிப்பாக சீனாவும் ரசியாவும்- இராணுவ ரீதியிலோ இராஜதந்திர ரீதியிலோ கைகட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்குமா என்ற பெரும் கேள்வி இருக்கிறது. ரசியா கடைசியாக உதிர்த்த வார்த்தைகள் இதைக் காட்டுகின்றன. “ஈரானுக்கு அணுவாயுதங்களை கொடுக்க சில நாடுகள் தயாராக இருக்கின்றன. அத்தோடு ஈரான் அணு ஆயுதங்களை இனி உற்பத்தி செய்யும் செயல்முறைகளை உருவாக்கும்” என்பதே அது.

அதனால் இன்னொரு கோணத்தில், அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக (Uni-Polar World) அதிகாரமானது, பல் துருவ உலக (Multi-Polar World) அதிகாரமாக மாறும் நிலைமாற்றத்தின் பாதையிலும் ஈரான் மீதான அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் அணுகுமுறையைப் பார்க்க இடமுண்டு. அதாவது அமெரிக்க சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிப் பாதையின் இன்னோர் அறிகுறியாகவும் இவைகளைப் பார்க்க முடியும். இஸ்ரேலின் தரப்பில் பார்த்தால், நிராகரிக்கப்பட்ட அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவும், பாதுகாப்பின்மையை தானே தனக்கு ஏற்படுத்திய அவலம் நிறைந்த நாடாகவும், ஏன் சியோனிசத்தின் வீழ்ச்சிப் பாதையில் செல்லும் நாடாகவும் கூட பார்க்க இடமுண்டு. இந்த சூட்சுமமான பூகோள அரசியலில் தொங்கவிடப்பட்டிருக்கிற பலஸ்தீன மக்களின் தரப்பில் எதைச் சொல்ல?.

Leave a comment