நான் பாணன் அல்ல
பறையன் அல்ல
புலையன் அல்ல
நீ தம்புரானுமல்ல.
ஆயிலும் நீ ஒரு மயிருமல்ல!
வேடனின் தாயார் ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்த அகதி. தந்தையார் விளிம்புநிலை மனிதன். அவரது ஊர் கேரளத்தில் உள்ளது. இருவரும் மதுரையில் சந்தித்து காதலித்து குடும்பமாகின்றனர். பின் திருச்சூர் (கேரளா) திரும்புகின்றனர். சேரிப்புற வாழ்வு அவர்களது. வேடன் (ஹிரன் தாஸ் முரளி) அங்குதான் பிறக்கிறான். தாயார் இப்போ இவ் உலகில் இல்லை.
வேடன் ஒரு மக்கள் கலைஞனாக இன்று தன்னை உயர்த்தியிருக்கிறான். அவனது வலி ஈழத் தமிழனின் வலியல்ல. யாழிலிருந்து அகதியாய்ப் பெயர்ந்த தாயின் வலியை அவன் கேட்டு அறிந்திருக்கிறான். தந்தையின் மீதான சாதி ரீதியிலான ஒடுக்குதலையும் தமது விளிம்புநிலை வாழ்க்கையையும் அவன் வாழ்ந்தனுபவித்து உணர்ந்திருக்கிறான். ஒரு இளம் உள்ளத்தில் எதிர்காலம் குறித்து இயல்பாகவே விரியும் கனவுகளை துவம்சம் செய்கிற இந்த சமூக அமைப்புமுறையை, குறிப்பாக சாதிய ஒடுக்குமுறையை, அதன் கொடிய முகத்தை, அவைகள் தந்த வலியை அவனும் அனுபவித்தான். இதுவே அவனது கேள்விகளினதும் சிந்தனைகளினதும் விளைநிலம். பாடல்களின் வரிகளில் அவை பட்டுத் தெறிக்கின்றன.
அந்தப் பாடல்கள்தான் இன்று எல்லோர் மூளையையும் இதயத்தையும் ஊடுருவுகிறது. அவனது பாடல்கள் வியாபகமானவை. பலஸ்தீனம் குறித்து, மியன்மார் குறித்து, சிரிய அகதிச் சிறுவன் கடற்கரையில் இறந்து கிடந்தது குறித்து, அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் நிறவெறிப் பொலிசால் கொல்லப்பட்டது குறித்து, நிறவாதம் குறித்து, கறுப்புநிறம் சார்ந்த ஒதுக்கல் குறித்து, அடிமைத்தனம் குறித்து, போலி தேசியவாதம் குறித்து, வர்க்க வேறுபாடு குறித்து, பயங்கரவாதம் குறித்து எல்லாம் பேசுகிறான். அவன் தனது வலியின் மேல் நின்று இந்த ஒடுக்கப்படும் மக்களின் வலிகளை சர்வதேச மனிதனாகப் பார்க்கிறான். உணர்கிறான். பாடுகிறான்.
யசீர் அரபாத் முழங்கிய வாசகமான “ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் (சமாதானத்துக்கான) ஒலிவ் கிளையையும் தாங்கி நிற்கிறேன்” என்ற வாசகத்தையும் பாடுகிறான். யசீர் அரபாத் குறித்த விமர்னத்தோடு அவனது இந்த வரியை அணுகுவது அபத்தம். கலைஞன் என்ற வகையில் எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாகவே அதைப் பயன்படுத்துகிறான். அதேபோலவே ஈழத்தில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை, அதை எதிர்த்துநின்ற புலிகளை ஒருசில வரியில் பாடுகிறான்.
அவனது சர்வதேசியத்தன்மையை மறுத்து அவனை இழுத்துவந்து வீரத் தமிழன்டா. கேரளா தத்தெடுத்த யாழ்ப்பாணத் தமிழன்டா, புலிப்பால் குடித்தவன்டா, அதடா.. இதடா.. என்றெல்லாம் குறுக்குகிற முட்டாள்தனத்தை (ஈழ, புகலிட, தமிழக) தமிழர்கள் கைவிட வேண்டும். கேணைத்தனமான குறுந் தமிழ்த் தேசிய அரசியல் வியாதியிலிருந்து தொடங்கும் இந்த கூக்குரலுக்கு உரியவர்கள் சர்வதேசக் குரலாக ஒலிக்கும் வேடனுக்கு கிட்ட நெருங்கி வர பொருத்தமற்றவர்கள்.
ஓர் இனப்படுகொலையில் அழிக்கப்பட்ட துயர வரலாறும் வலியும் கொண்ட ஈழத் தமிழர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழும் மேற்குலகின் தெருக்களில் -ஒருமுறையல்ல பலமுறை- பலஸ்தீன இனவழிப்புக்கு எதிராக கிளர்ந்தெழும் ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுவது அபூர்வம். நானும் சூரிச் ஆர்ப்பாட்டங்களில் ஒவ்வொரு முறையும் தேடிப் பார்ப்பதுண்டு. ஊஹம்!. இதுதான் நம்மட தமிழ்த் தேசிய முகம்; இனவழிப்புக்கு எதிரான குரலின் முகம். இன்னொரு வகையில் சொன்னால் இதுதான் சர்வதேசியவாதியாக உணர்வது குறித்த கரிசனையின் அளவு. இதுக்கை போய் வேடனின் சர்வதேசக் குரலை புரிய எவ்வாறு முடியும். அவனை வீரத் தமிழனாக புனையும் முனைப்பு இந்த புரியாமையின்பாற் பட்டதுதான்.
மியன்மார் குறித்த வேடனின் பாடல் வரியில் பாய்ந்து தொங்கி, “நீங்கள் புத்த மதத்தை பேணி வாழ்ந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்க வேண்டி வந்திருக்காது” என தேசியத் தலைவர் சொன்னதாகவும், அதை வேடனின் வரிகள் பிரதிபலிக்கிறதாகவும் வேடனோடு முடிச்சுப் போட்டு கதைக்கிற அளவுக்கு சிலர் போயிருக்கிறார்கள். வேடனது சாதியம் குறித்த குரல்களால் வெகுண்டெழுந்த சங்கிகளின் நோக்கத்துக்கு இதே முடிச்சு நல்ல வசதியாகப் போக வாய்ப்பிருக்கிறது. அவனது குரலை ஒடுக்க சங்கிகள் கங்கணம் கட்டுகிறார்கள். வேடனுக்குப் பின்னால் இருக்கும் சக்திகள் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.
அதிகார வர்க்கங்களுக்கு விளிம்புநிலை மக்களின் தலைநிமிர்த்திய குரல்கள் எப்போதும் அச்சமூட்டுபவை. முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டியவை. அதுசார்ந்த நெருக்கடிகள் அவனுக்கு அருகிலேயே உள்ளன. இதுக்கை போய் ஈழ சென்றிமென்ற் பேசுபவர்கள் புகுந்துபோய் விளையாட என்ன மயிர் இருக்கிறது.
கேரளாவின் கேசரி இதழின் ஆசிரியர் என்.ஆர்.மது வேடனின் சர்வதேசக் குரலை மடைமாற்றி அந்த சர்வதேசியத்தன்மைக்கு பின்னாலுள்ள சக்திகள் ஜிகாதிகள் என கண்டுபிடித்துச் சொல்கிறார். உடலின் கறுப்புநிறத்தை வைத்தும் தன்னை ஒதுக்கியதற்கு எதிர்வினையாற்றுகிற அவன் தனது மேலங்கியின்றி மேடையில் நிமிர்ந்து நிற்பதை காபரே நடனம் என மது பரிகசிக்கிறார். இந்து ஐக்கிய வேதி தலைவர் சசிகலா ரீச்சர் “றப் இசையைப் பாட வேடன் யார்” என -றப் இசையின் வரலாறு தெரியாமல்- லூசுத்தனமாக கேட்கிறார். உங்கள் பாரம்பரிய கலைகளை விட்டுவிட்டு என்ன றப் பாடவேண்டியிருக்கிறது என்கிறார்.
2001 இல் வெளித்தெரியாதிருந்த வேடனின் “குரலற்றவர்களின் குரல்” (Voice of Voiceless) என்ற யூரியூப் பாடலில் வந்த வரியில் ஓரிடத்தில் “கபட தேசியவாதிகள்” என வருகிறது. அந்தச் சொற்களை முன்வைத்து, நான்கு வருட தூக்கம் கலைந்தெழுந்து இப்போ வந்து பொங்குகின்றனர் பாஜக வினர். பாலக்காடு பாஜக கவுன்சிலர் மினிமோல் வேடன் மோடியை போலி தேசியவாதி என பாடுகிறார் எனவும் இலங்கைவழி வந்த வேடனை என்.ஐ.ஏ இன்னும் ஏன் விட்டுவைத்திருக்கிறது என மத்திய அரசைக் கேட்கிறார். அந்த கபட தேசியவாதி என்பது நரேந்திர மோடியை பழித்த சொற்கள் என கண்டுபிடித்து வேடன் தேசத்துரோகி என்ற றேஞ்ச்சுக்கு போய் கேரள தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்துகின்றனர். சரி அப்படித்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே. உலகின் மிகப் பெரும் சனநாயக நாடு என பெயரெடுத்திருக்கும் இந்தியாவில் மோடியை விமர்சிக்க ஒரு இந்தியக் குடிமகனுக்குக்கூட உரிமை இல்லையா என்ன.
கேரள அரசு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் வேடன் பக்கம் நிற்கிறது. அது ஒரு பெரிய ஆறுதல். அதற்கான கட்சி அரசியல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம் என்றபோதும், அது வேடனுக்கான பாதுகாப்பு உணர்வு தரும் ஒன்றுதான். அத்தோடு மம்முட்டி, பிர்திவிராஜ் போன்ற பிரபலமான நடிகர்கள் வேடனுடன் நிற்கிறார்கள். “ஆயிரம் ஆண்டுகளாக நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டோம். இப்போ வேடன் பேசட்டும். அதைக் கொஞ்சம் கேளுங்கள்” என சங்கிகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மம்முட்டி. பிருதிவிராஜ் “வேடனின் குரல் அடிமைப்பட்டவர்களின் குரல். குரலற்றவர்களின் குரல்” என்றார்.
ஆனால் தமிழக நடிகர்களோ இசையமைப்பாளர்களோ (பிரகாஸ்ராஜ் தவிர) கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். திரையில் உசுப்பேத்துவது, தேர்தல் மேடையில் முழங்குவது என ஓடித்திரியும் நடிகர்களின் முகமூடிகளை வேடனின் யதார்த்தமான நேர்மையான குரல் அச்சுறுத்துகிறதோ தெரியவில்லை. தாமே தமது சினிமா களத்தின் ஆளுகைக்குள் இசையை வைத்திருக்கும் இவர்களுக்கு அதுக்கு வெளியில் வேடனின் சுயாதீனக் கலை புயலாக எழுவது சவாலாக இருக்கிறதோ என்னவோ. ஒருவேளை வேடனையும் இந்த சினிமாவுக்குள் இழுத்து வீழ்த்தி பத்தோடு பதினொன்றாக ஆக்கிவிட திட்டம் போடுகிறார்களோ தெரியவில்லை. நடக்கலாம். அது வேடனின் கையில் உள்ளது.
இப்படியாக வருகின்ற தடைகள், கள்ளமௌனம், உரிமை பாராட்டுதல், முடிச்சுப் போடுதல் எல்லாம் ஒன்றை புரியவைக்கிறது. விளிம்புநிலை மனிதர்களின் குரலை அங்கீகரிக்காத தன்மைதான் அது. அரசியல் களத்தில் மட்டுமல்ல கலைமேட்டிமையின் அல்லது கலையதிகாரத்தின் களத்திலும் அது நிகழத்தான் செய்யும். எல்லாவற்றையும் மேவி வருகின்ற விடாப்பிடியாக மக்கள் நலனை முன்னிறுத்தி எளிய மனிதர்களுக்காக ஒலிக்கிற இசை வடிவங்களை காலம் நீண்டும் மக்கள் கொண்டாடவே செய்வர். அதற்கு உதாரணமாக, எல்லா எதிர்ப்புகளையும் சந்தித்து அவற்றை உறுதியாக தாண்டி தன்னை நிலைநிறுத்திய றேகே இசைப் பாடகன் பொப் மார்லி நினைவில் வருகிறான். வேடனுக்கு அந்த துணிச்சல் வாய்க்குமா?. எதிர்காலம்தான் இதற்கான பதிலைத் தரும். இப்போதைக்கு “எல்லா குறுக்கல் வாதங்களிலிருந்தும் வேடனை விடுதலை செய்யுங்கள்” என்று கேட்கத் தோன்றுகிறது.
