எனது வாசிப்பு
ஒரு போரின்போது மக்கள் அல்லோல கல்லோலப்பட்டு நாட்டுக்குள் மாறிமாறி இடம்பெயர்கிறார்கள். அயல் நாட்டுக்கு இடம்பெயர்கிறார்கள். தூர தேசங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இலங்கையிலும் போர் துரத்திய தமிழ் பேசும் மக்கள் இவ்வாறே ஆனார்கள். மேற்குலகுக்கு புலம்பெயர்ந்தோர் எல்லோரும்அரசியல் அகதிகளா பொருளாதார அகதிகளா என பலர் கேள்வி எழுப்புவதுண்டு. வெறும் பொருளாதாரக் காரணிகளால் போர்ப் பிரதேசத்திலிருந்து மேற்குலகுக்கு இடம் பெயர்பவர்களை அரசியல் அகதிகள் எனலாமா என்ற விவாதம் இங்கும்கூட நடைபெறுகிற ஒன்று. பொருளாதாரப் பிரச்சினை என்பதும் ஓர் அரசியல் பிரச்சினைதான் என்ற எதிர்வாதமொன்றும் வைக்கப்படுவதுண்டு. (எனக்கு இதில் உடன்பாடு உண்டு).
இந் நாவல் இதற்கான ஒரு விடையை தருகிறதாக எனக்குப் படுகிறது. பொய்யாக ஒரு கதையைச் சொல்லி தாம் நேரடியாக இராணுவத்தாலோ புலிகளாலோ பாதிக்கப்படுவதாகக் கூறி சாதித்தாலொழிய அரசியல் தஞ்சம் கேள்விக்குள்ளாகிவிடும். அப்படியாக அகதி வாழ்வைத் தொடங்குபவர்கள் -தாம் விரும்பினாலும்கூட- தனி பொருளாதாரக் காரணிகளை நிவர்த்திக்கும் வேலையில் மட்டும் பயணிக்கவே முடியாமல் போகிறது. அது ஈழப் போராட்ட அரசியலை, அதன் சிந்தனை முறையை இழுத்துக்கொண்டுதான் பயணிக்கிறது. அது அவர்களின் புதிய வாழ்வியலையும் பாதிக்கிறது. நவமகனின் போக்காளி என்ற இந்த நாவல் அதை சிறப்பாக வெளிக் கொணர்கிறது.
வாழ்க்கைச் சந்தடியில் பொது இயக்கம் கொண்டு ஓடிக்கொண்டே இருந்த குணா சற்று நின்று நிதானித்து பிள்ளைகளை கவனித்தான். அவர்கள் வளர்ந்துவிட்டிருந்தார்கள். முந்தநாள் பிறந்தது போலிருக்கிறது. அதற்குள் மகளுக்கு பத்து வயது முடிந்துவிட்டது. நாட்டுக்குப் போய்விடலாம் என்ற அவனது கனவும் கானல் நீராகிப் போனது. இரட்டைத் தோணிகளில் கால்வைத்து தத்தளித்துக் கொண்டிருந்தவன் கால்கள் இரண்டையும் ஒற்றைத் தோணியில் தூக்கிவைத்து ஒட்டுண்ணி வாழ்வுக்கு தன்னை தயார் பண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் அதுவும் இலகுவானதாய் இருக்கவில்லை. (பக்.515)
புலம்பெயர்ந்தபின் இவர்கள் அனுபவிக்கிற பிரச்சினைகள் புதிய வடிவங்களை எடுக்கின்றன. மேற்குலகுக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு மொழிவழி, கலாச்சாரவழி என ஆதரவுத் தளம் ஏதும் கிடைக்கவில்லை. ஓர் அந்நியமாதல் நிலவியது. ஆனால் பொருளாதார ரீதியிலும் பாதுகாப்பு ரீதியிலும் உத்தரவாதம் கிடைத்தது. அந்நியர்களாக, இந்த நாடுகளுக்கு புதியவர்களாக, காலநிலைக்கு புதியவர்களாக, பழக்க வழக்கங்களுக்கு புதியவர்களாக, முன்னுதாரணம் ஏதுமற்ற வாழ்வியலுள் புகுபவர்களாக வாழ்வு தொடங்குகிறது. இத்தோடு சேர்த்து நிறவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய புதிய பிரச்சினை சேர்ந்துகொள்கிறது. ஆனாலும் காலனிய மனோபாவத்துக்குப் பலியான மனநிலையில் நிறவாதத்தின் அரசியலை அதன் நுண் களங்களை புரிய முடியாதவர்களாகவும், அதுகுறித்த அறிவு விளக்கம் அற்றவர்களாகவும் கணிசமானோர் இருந்தனர், இருக்கின்றனர்.
மேற்கூறிய காரணிகளின் திரட்சி தோற்றுவித்த உள நசிவுகளை சுமந்து கொண்டு வாழும் நிலை அவர்களை பின்தொடர்ந்தபடியே இருக்கிறது. இந்தப் பின்னணியில் வாழ்வு அவர்கள் எண்ணியபடி இல்லாமல், ஊகித்தறியமுடியாத திருப்பங்களுடன் நகர்கிறது. புதிய புதிய பிரச்சினைகளையும் கலாச்சார ஒழுங்கமைவுகளையும் எதிர்கொண்டு அவர்கள் தனியர்களாய், பின் இணையர்களாய், பின் பிள்ளைகளோடு குடும்பங்களாய் ஆகின்றனர். இந்த வளர்ச்சி நெடுகிலுமே முன்னுதாரணமற்றதும் அவை குறித்த அனுபவமோ அறிவோ அற்றதுமான நிலை வாழ்வின் இறுதிவரை துரத்திக் கொணர்ந்து முதுமைக்குள் தள்ளி வீழ்த்திவிடும் வரையான கதையை போக்காளி நாவல் விபரிக்கிறது. சுமார் 30 வருட அகதி வாழ்வின் இந்தக் கதையை வாசிக்கும்போது அதேவகை அனுபவங்களை தரிசித்த அல்லது தரிசித்துக் கொண்டிருக்கும் நிலைமைகளின் பொதுத் தன்மையை இன்னொரு நாட்டில் இருக்கும் நான் உணர்ந்துகொண்டே இருந்தேன். வாசிப்பின்போது பழைய ‘நான்’ உடன் வாழ்ந்து கொண்டு இருந்தேன்.
பொருளாதார ரீதியில் ஒரு சாதாரண தொழிலாளியின் சம்பளத்தில், இன்னும் சொன்னால் வறுமைக் கோட்டின் மேலும் கீழுமாய் இயங்கும் ஒரு பொருளாதாரத்தில், வாழ்க்கை நடத்தும் நிலையில்தான் புகலிட வாழ்வு நகர்கிறது. ஒரு சுவிஸ் பிராங் அல்லது நோர்வேஜிய குரோணர் ஒரு இலங்கை ரூபாவுக்கு சமமாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். யுத்தம் இந்த எல்லைவரை வந்திருக்கவே இடமில்லை. அதைவிட இந்த அகதியர்களது குடும்பங்கள் இலங்கையில் என்ன நிலையில் இருந்திருப்பார்கள். இலங்கைக்கு எடுத்த எடுப்பிலெல்லாம் போய் வர பணவசதி இருக்குமா. சுருங்கச் சொன்னால் இந்த பணப் பரிவர்த்தனை (கரன்சி) மாற்றம் இல்லையெனின், போராட்ட வரலாறு இந்தப் பிரமாண்டத்தை அடைந்திருக்காது. அதேநேரம் இந்தப் பேரழிவையும் சாத்தியப்படுத்தியிருக்காது என்றுகூட யோசிக்க வைக்கிறது.
இந்த நாவலின் நாயகன் குணா. நாவலாசிரியர் நவமகன் 1988 இலிருந்து தொடங்கி 2019 வரையான தனது புகலிட வாழ்வு அனுபவங்களை கட்டிச் சுமந்து நாவலில் ஏற்றியிருக்கிறார் என நினைக்கிறேன். புலம்பெயர்வது என்பது உடல் சார்ந்த -பௌதீக ரீதியிலான- பிரதேச மாற்றம் மட்டுமல்ல. உளம் சார்ந்த ‘நான்’ இனதும் மாற்றமும் போராட்டமும் ஆகிறது. ‘நான்’ என்பதே எண்ணங்களால் கட்டமைக்கப்பட்டதுதான். எனவே புலப்பெயர்வு என்பது அந்த ‘நான்’ இனைப் பிரிந்து -ஒரு வீட்டை கட்டுவது போல்- வாழ்வை கட்டுதலல்ல. அந்த ‘நான்’ இன் இடப்பெயர்வானது ஒரு தொலைதூரத்தில் எல்லாவழியிலும் அந்நியத்தை உணர்ந்தபடியும், புதிய புதிய சிக்கல்களை எதிர்கொண்ட படியும் எப்படி நகர்கிறது என்பதை ஆசரியர் நவமகன் குணாவினூடாகவும் அவரது மனைவி ஆதிரா ஊடாகவும் சொல்கிறார். எனவே அவர் விட்டுவந்த போராட்ட பூமியின் எண்ணங்களோடு அவரது பழைய ‘நான்’ இங்கும் வருகிறது. அந்த பழைய எண்ணங்களை புத்துருவாக்கம் செய்தபடி நகரும் ‘நான்’ க்கு இப்போ நேரடி சாட்சிகளோ அனுபவங்களோ கிடையாது. அந்தப் எண்ணப் பசிக்கு விடுதலைப் புலிகள் குறித்த மாயைகளும் உண்மைகளும் பிரச்சாரங்களும் தீனியாகின்றன.
இந்த நான் அல்லது நான்களின் திரட்சியாக இந்த நாவல் சொல்வனமாகிறது. புகலிடத்தாரை போராட்டம் பாதிக்கிறது. போராட்டத்தை புகலிடத்தார் பாதிக்கின்றனர். அதன் அடிப்படையில் இரு வரலாறும் சமாந்தரமாகப் பயணிக்கின்றன இந் நாவலில்.
நாவலின் அத்தியாயங்களே ஆண்டுகளால்தான் குறிக்கப்படுகின்றன. 1988 இலிருந்து 2009 வரையான விடுதலைப் புலிகளின் போராட்ட களத்தின் தாக்குதல்களை, தனிநபர் கொலைகளை, வெற்றியை தோல்வியை, அவைகள் குணாவிடமும் அவனது நண்பர்களிடமும் ஏற்படுத்துகிற உற்சாகத்தை சோர்வை, குருட்டு நம்பிக்கைகளை, விசுவாசத்தை, நியாயப்படுத்தல்களை, மொக்குத்தனங்களை, மனிதாபிமானத்தை, சாகசங்களை, கொலைகளை கொண்டாடுவதை, அரசியற்ற சிந்தனை முறையை என பெரும் வெளியை இந் நாவல் பூராவும் காண முடியும். இந்த வழியிலேயே எழுச்சியும் வீழ்ச்சியுமான எண்ணங்கள் அவர்களது ‘நான்’களை கட்டமைத்தபடியே செல்கிறது. வெவ்வேறு இயக்கங்களுடன் சம்பந்தப்பட்ட மாறுபட்ட பாத்திரங்களினூடாக இக் கதைகளை சொல்லி நகர்த்துகிறார் நவமகன், தனது போக்காளி நாவலில்!.
இந்தப் பொதுப் போக்கின் ஒரு வகைமாதிரியாக குணாவின் பாத்திரம் வருகிறது. மேற்குலக புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளை ஆதரித்த பலரினதும் ஒரு வகைமாதிரியான பொதுமகன் குணா. இதற்கு வெளியில் சிந்திக்கிற அரசியல் புரிதல் கொண்ட அழுத்தமான ஒரு பாத்திரம் விஸ்வா. விஸ்வாவும் குணாவின் நண்பனாக இருக்கிறான். அவனது தாக்கமும் குணாவின் மனிதநேய பண்புகளும் அவனது ‘நான்’ இனை பாதித்தபடியே இருக்கிறது. ஆனாலும் குணாவின் உணர்ச்சிவகை நிலைப்பாடுகளும், நம்பிக்கைகளும், எதிர்பார்ப்புகளும் அவனை சூழ்ந்தபடி நகர்வதுதான் அவனது வாழ்வு என்றாகிறது.
2009 பேரிடியாய் தாக்கிய தோல்வியை ஒப்புக்கொள்வது என்பதை அவனது ‘நான்’ ஏற்க மறுத்து அவனை சிப்பிலியாட்டுகிறது. அந்த உளவியல் சிதைவு குடும்பத்தை சமாந்தரமாகவே பாதிக்கிறது. அவன் முன்னரைப் போல் இல்லை. எடுத்ததுக்கெல்லாம் கோபப்படுவதும், எரிஞ்சுவிழுவதும், ஒரு கட்டத்தில் (முதன்முறையாகவும் கடைசிமுறையாகவும்) தனது மனைவி மீது வன்முறை பிரயோகிக்குமளவுக்கு போவதும், எப்போதுமான பதைபதைப்பும் என மாறிக்கொண்டிருந்தான். அது குடும்பத்தை பாதிக்கத் தொடங்குகிறது. அந்நிய மண்ணில் பிறந்து, அதன் கலாச்சாரத்துள் வாழுகிற, அந்த கல்விமுறையுள் வாழ்க்கையை தொடங்குகிற தனது பிள்ளைகளை எதிர்கொள்வது சிக்கலாக மட்டுமல்ல, அதிர்ச்சி தருவனவாகவும்கூட அமைந்துவிடுகிறது. எமது கலாச்சார மனத்தையும் பிள்ளைவளர்ப்பு முறைமையையும் தலைக்குள் வைத்துக் கொண்டு, பிள்ளைகளை புரிந்துகொள்வது, அவர்களுடனான முரண்பாடுகளை தீர்ப்பது சிக்கலாக இருக்கிறது.
பாலியல் ரீதியிலான, ஏன் காதல் குறித்தான மதிப்பீடுகளையெல்லாம் பிள்ளைகளில் ஏற்றிப் பார்த்து பதட்டப்படுகிற நிலை இருக்கிறது. கல்யாண விடயத்தில் சாதியை தாண்டி செயற்பட முடியாமல் அவதிப்படுகிறான். பிள்ளைகளோ இந்தப் புதிரை அவிழ்க்க முடியாதவர்களாக, அதேநேரம் பெற்றோர் மீதான அன்பை இழந்துவிடாதபடி இருக்கப் போராடும் மனமுள்ளவர்களாக இரண்டு கலாச்சார மனங்களுக்கு இடையில் நசிபவர்களாக அந்தரிக்கிறார்கள். இவற்றை அற்புதமாக நாவல் விபரிக்கிறது. இந்த புது அனுபவங்களை பெறாமல் புகலிட வாழ்வு அமைந்திருக்க வாய்ப்பே இல்லை.
கள்ள விசாவில் ஜேர்மன் வந்து, பின் பிரான்ஸ் க்கு போய், அங்கிருந்து ஜேர்மனிக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, பின் டென்மார்க் ஊடாக நோர்வேயை சென்றடைகிற அகதிவழிப் பயணம் என்பது ஆபத்தான வழி கொண்டது. புகையிரத கழிவறையின் கூரைக்குள் மறைந்தபடி முடங்கிக் கிடந்து எல்லை கடப்பது, விமானத்தின் சக்கரத்தை அணைத்தபடி எல்லை கடப்பது, பவுசர்களுக்குள் ஒரு சிறு துவாரக் காற்றை பகிர்ந்து கும்பலாய் எல்லை கடப்பது, பாரவூர்தியின் கொன்ரைனருக்குள் குறுகியிருந்து எல்லை கடப்பது என்பது போன்ற பயங்கரமான சாகசமான பயணங்களை மேற்கொண்டு அகதிகள் வருவது நிகழ்கிறது. இந்தவகைப் பயணங்களில் இறந்துபோனவர்கள் கணிசமானோர். இதையெல்லாம் தாண்டி வந்து இறங்கி தஞ்சக் கோரிக்கையை கேட்டபின்னும் திருப்பி நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சம் எழுகிறது. இதை மேவிய இன்னொரு அச்சம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த நாவலின் நாயகன் குணா புகையிரத கழிவறைக் கூரைக்குள் ஒளித்து பயணித்த அனுபவத்தை இந்த நாவல் பதட்டத்துடன் வாசிக்க வைக்கிறது.
தனியாக தொடங்கும் குணாவின் அகதிப் பயணம் பின் திருமணத்தோடு அவனைப் பிணைக்கிறது. பின் வாழ்வு குழந்தைகளுடன் குடும்பமாகப் பயணிக்கிறது. பிள்ளைகளோடு ஏற்படும் இடைவெளி தலைமுறை இடைவெளி என்ற எல்லையைத் தாண்டி நகர்கிறது. இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இருப்பது உலகப் பொதுமையானது. ஆனால் ஒரு அகதிக்கு இதனுடன் சேர்ந்து புதிய மொழி, புதிய கலாச்சாரம், முற்றாக வேறான சமூகம், பழக்கவழக்கங்கள், ஒழுங்குகள் என மேலதிக தடைகள் வருகின்றன. இவை இந்த சமூகத்துடன் மட்டுமல்ல, பிள்ளைகளுடனும் இணைவாக்கம் அடையவோ அவர்களை புரிந்துகொள்ளவோகூட விடாமல் படுத்துகிற கொடுமையை இந் நாவல் பரந்த அறிவுடன் சொல்லிச் செல்கிறது. முதலாளித்துவ வளர்ச்சி அடையாத, அதன் சமூகப் பெறுமதியை அறியாத சிந்தனையுடன் இலங்கையிலிருந்து வந்த ஓர் அகதியானவர் -வளர்ச்சியடைந்ததாகச் சொல்லப்படுகிற- முதலாளித்துவ சிந்தனை முறைக்குள் தன்னை பொருத்திக் கொள்வதில் சந்திக்க வேண்டியிருக்கிற இடர்ப்பாடுகள் உளநசிவுகள் இன்னொரு புறமாக திக்குமுக்காட வைக்கிறது.
தாம் புலம்பெயர்ந்து வந்தபோது தமது தாய் தந்தையர் சகோதரம் நண்பர்கள் என்போரின் விம்பங்களை நினைவுச் சட்டகத்துள் தொங்கவிட்டுக் கொண்டு வருகிறார்கள். தனது குடும்ப நிலையை அந்த மனோரம்யமான மனநிலையை (சென்ரிமென்ரை) காவி வருகிறார்கள். தான் வாழ்ந்த சமூகத்தின் அசைவியக்கத்தை அப்படியே படம்பிடித்துக் கொண்டு வருகிறார்கள். இவைகள் எதையும் மாறா நிலையில் கற்பனை செய்துகொண்டு, அதனதன் இயங்கியலையும் இற்றைப்படுத்தல்களையும் கண்டுகொள்ள முடியாதவர்களாக மாறா எண்ணங்களுடன் வாழ்கிறார்கள். அதனால்தான் ஊருக்கு காலம் கழித்துச் சென்றுவிட்டு வந்து “அங்கை இப்பிடி மாறிப் போய்ச்சு அப்பிடி மாறிப் போய்ச்சு… நாங்களெல்லாம் முந்தி…” என ஒப்பீட்டு கதையாடல்களை தொடங்கி விடுகின்றனர். தாம் நாட்டைவிட்டு வெளியேறியபோது காவி வந்த கலாச்சார மதிப்பீடுகளை கட்டிக் காக்கும் ஒருவித பதற்றத்துடன் இருக்கிறார்கள். அதை கொண்டாட்டங்களில் பிரமாண்டத்தினூடாகக் கட்டிக் காக்க கலாச்சார மனம் வழிகாட்டுகிறது. இந்த நிலையில் அவர்களின் கண்முன்னே அவர்களது குழந்தைகள் வளர்ந்து, தமது கலாச்சார மதிப்பீடுகளை அச்சுறுத்துவதுபோல பிரமை கொள்கிறார்கள். இந் நாவலில் விஸ்வா தவிர நாவலின் நாயகனான குணா உட்பட மற்றைய எல்லோரும் இதை பிரதிபலிக்கிறார்கள். இதை நேர்த்தியாக நாவலில் பல இடங்களிலும் காண முடியும்.
ஒன்றைச் சொல்லியாக வேண்டும். நூலை வாசிக்கிறபோது புலம்பெயர் வாழ்வின் கதை என்றளவில் நாவல் தரும் அழகியலை மேவி, விடுதலைப் போராட்ட நிகழ்வுகளின் கதையாடல்கள் ஓர் ஆவணம் போல எழுகிறதான உணர்வு எனக்குப் பட்டது. அது செய்திகளாலும், உரையாடல்களாலும் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது தகவல்களின் மிகுதி காரணமாக இருக்கலாம். இந்த புலம்பெயர் வாழ்வில் நாற்பது ஆண்டுகளைக் கடந்திருக்கும் எனக்கு வாசிப்பு அனுபவம் இந்த பார்வையைக் கொடுக்கிறதாகவும்கூட இருக்கலாம். இதைத் தாண்டிய மாறுபட்ட வாசிப்புகள் நிச்சயமாக இருக்கவே செய்யும்.
மேற்குலகின் ஐரோப்பிய மையவாதமும், வெள்ளை மேலாதிக்க பெருமிதமும் சேர்ந்து -காலனிய காலத்திலிருந்து இன்றைய நவ காலனியம் வரையாக- நிறுவி வைத்திருக்கும் நிறவாதம் நாம் கடக்க முடியாத ஒன்று. அதுகுறித்த அனுபவங்கள் எனது வாசிப்பில் தவறிப் போயிருந்தது. நாட்டுக்கு நாடு இதன் அளவும் தாக்கமும் வேறுபட்டு இருக்கிறபோதும், ஐரோப்பிய மக்களின் பொது மனநிலையில் அதன் வெளிப்பாடுகள் நுண்மையாகவும் சில வேளைகளில் நேரடியாகவும் வெளிப்படுவது இன்றும்கூட நாம் காணும் அனுபவம். நாவலில் நான் அதை தரிசிக்கவில்லை. ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்பதை இந்த எதிரம்சங்கள் நிராகரிப்பதில்லை. அந்த அச்சம் தேவையற்றது.
நாவலின் உள்ளடக்க இயங்குதலையும், அது கொண்டலைக்கிற மனதையும் தாண்டி நாவல் இப்படியோர் முடிவை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பட்டது. அந்த முடிவை ஒரு குறியீடாய்க் காணவும் முடியவில்லை. இது எனது வாசிப்பு அனுபவம் சார்ந்த கருத்து மட்டுமே.
மேற்குலகுக்கு புலம்பெயர்ந்த அகதி வாழ்வினை அதன் தடங்களை ஒரு பெரும் விரிந்த பார்வையில் விரிந்த பரப்பில் முன்வைக்கிறது போக்காளி. நாவல்கள் வெறும் புனைவுகள் மட்டுமல்ல. வரலாற்றின் வேர்களினூடாக பயணிக்கும் ஆற்றல் கொண்டது. அந்தக் காலகட்டத்தின் ஒரு சமூகத்தை, அதன் மாற்றங்களை, அழிவுகளை, உருவாக்கங்களை, நிலைப்படுத்தலை என பலதையும் அது வரலாற்றினுள் சேர்த்துவிடுகிறது.
மேற்குலகுக்கு புகலிடம் தேடி வந்த மூத்த தலைமுறையின் வாழ்வுப் பயணத்தை மிக விரிவாகவும், பல தளங்களுக்குள் உள் நுழைந்தும் சித்தரிக்கும் நாவல் போக்காளி. நவமகனின் பெரும் உழைப்பும், கடந்த காலத்தோடு மீண்டும் வாழ்ந்து எழுதலும் இன்றி இந் நாவல் 680 பக்கங்களில் விருட்சமாகி இருக்க வாய்ப்பில்லை. புகலிட இலக்கியத்தில் தனக்கான ஓர் இடத்தை தேடிக்கொண்ட படைப்பு இது. வாழ்தல் என்பது புறத்தால் மட்டுமன்றி, அகத்தாலும் மேற்கொள்ளும் பயணம் என்பதை புரியாமல் அல்லது சக மனிதர்களுக்கு ஏற்றுக் கொள்ளாமல், புகலிடத்தாரை வெறும் காசு மரங்களாகப் பார்ப்போர் முக்கியமாக வாசிக்க வேண்டிய நூல்களில் இதுவுமொன்று!.
- ravindran.pa
- 09052025
போக்காளி (நாவல்)
நவமகன் (ஆசிரியர்), நோர்வே.
கருப்புப் பிரதிகள் (வெளியீடு)
680 பக்கங்கள்
