கொடுந் துயரம்

பகடிவதையின் மனவக்கிரம் ஒரு பல்கலைக் கழக மாணவனை தற்கொலை செய்ய வைத்த காலம் காயுமுன், கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட பதினாறு வயது பாடசாலை மாணவி ஒருத்தி தற்கொலை செய்கிறாள். இவை தற்கொலை என்ற வகைமைக்குள் அட்டவணைப்படுத்தப் படலாம். ஆனால் யதார்த்தத்தில் இவைகள் கொலைகள்.

அந்த மாணவன் நிர்வாணமாக நிறுத்தப்பட்டு ஒரு கும்பல் வன்முறை வக்கிரத்தின் நடுவில் சுழன்றோட விடப்படுகிறான். இங்கு இந்தச் சிறுமியை தனியார் வகுப்பில் (ரியூசன்) மாணவர்களுக்கு நடுவில் வைத்து அவமானப்படுத்துகிறான் ஒரு ஆசிரியப் பதர். இரண்டுமே பாலியல் வக்கிர மனோபவாவமும், அவமானப்படுத்தி இரசிப்பதுமான ஆணாதிக்க மனக்கட்டமைப்பு நிகழ்த்திய கொலைகள்.

பல்கலைக் கழக பகடிவதை ஒன்றின்போது முன்னர் ஒருமுறை பேசப்பட்ட விடயமாக இருந்த ஒன்றை இங்கு ஞாபகப்படுத்தலாம். ஒரு பல்கலைக் கழகத்தில் நடந்தது இது. நான்கைந்து மாணவன்கள் தத்தமது இடுப்பைச் சுற்றி கட்டிய நூலில் முன்பகுதியில் வாழைப்பழத்தை தொங்கவிடுகின்றனர். அது காற்சட்டையின் சிப்ற் இருக்கும் பகுதிக்கு முன்னால் தொங்குகிறது. ஒவ்வொருவர் முன்னும் ஒவ்வொரு மாணவிகளை முழங்காலில் இருத்துகின்றனர் அவர்கள். அந்த மாணவிகள் பின்னால் கையைக் கட்டியபடி அந்த வாழைப்பழத்தை கடித்துத் தின்ன வேண்டும். அதைச் சுற்றி கொஞ்ச மாணவர்கள் இரசித்துக் கொண்டு நிற்கின்றனர்.

என்னவிதமான வக்கிர மனது ஆணாதிக்க சமூகத்தில் நிலவுகிறது என்பதற்கு இது ஒரு மறக்க முடியாத காட்சி. இவன்கள் ஆசரியன்களாகவோ பேராசிரியன்களாகவோ சேவைத்துறைகளிலோ வரும்போது என்னதான் நிகழும். இத் தொழில்களில் கிடைக்கும் அதிகாரமும் சமூக அங்கீகாரமும் மேலதிகமாகச் சேரும்போது இந்தப் லும்பன்கள் எதைச் செய்வார்கள். இந்தவகைப் லும்பன்கள் மட்டுமல்ல, ஆணாதிக்க வக்கிரம் பிடித்த சமூகப் பொறுக்கிகளும் சந்தர்ப்பம் தேடி அலைகிறார்கள். அல்லது சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்கள்.

ஒரு பெண்ணை இந்த வக்கிர மனோபாவத்துக்கு வெளியில் வைத்து சக மனிதஜீவியாக பரஸ்பர மதிப்புடன் பழக விடாதபடி நிலவும் தடைகள் உடைக்கப்பட வேண்டும். அதற்கு மாணவர்கள் சிறுவயதிலிருந்தே கற்றுக்கொள்ளவும், அதை வாழ்வியலாக வரித்துக் கொள்ளவுமான தொடக்கத்தை ஆசிரியர்களே தொடங்க வேண்டும். அப்படியொரு சமூகத்தை உருவாக்க தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டிய ஆசிரியன் ஒருவன் செய்யும் இந்தவகை பாலியல் கிரிமினல்தனத்துக்கு சட்ட ரீதியில் இரட்டிப்புத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்த மாணவி சென்ற வருடம் (கொழும்பில்) படித்த பாடசாலையில் ஒரு கணித ஆசிரியனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறாள். “வெளியில் சொன்னால் உன்ரை எதிர்காலத்தை இல்லாமல் பண்ணிப் போடுவன்” என எச்சரித்து அனுப்புகிறான் அவன். அவள் அதை தனது பெற்றோர்க்கு சொல்லி அழுகிறாள். பொலிசாரால் அந்த லும்பன் கைது செய்யப்படுகிறான். பின் விடுதலை செய்யப்படுகிறான்.

படிப்பு விளையாட்டு என எல்லாவற்றிலும் ஆர்வம் காட்டிய அந்தச் சிறுமியை அவையெல்லாம் விட்டு விலகுகிறது. பெற்றோர்கள் கவுன்சிலிங்குக்கு அனுப்புகிறார்கள். சக மாணவர்களுக்கு படிப்படியாக தெரியவரும்போது எல்லோரும் அவளை தனிமைப்படுத்துகிறார்கள். இதன்மூலம் அவள் மேலதிகமாக உளவியல் சித்திரவதைக்கும் உள்ளாகிறாள்.

வன்முறை புரிபவர்களை விட்டுவிட்டு, அவனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை தண்டிக்கும் வகையில் உளவியல் பாதிப்புக்கு உள்ளாக்க முடிகிற முரண்நிலை ஆணாதிக்க கருத்தியலுக்குள் வைத்துத்தான் நிகழ்த்தப்படுகிறது என்பதே முக்கியமானது. அவளை வேறு பாடசாலைக்கு மாற்றுகிறார்கள் பெற்றோர். அவள் தனியார் வகுப்புக்கும் படிக்கப் போகிறாள். அங்கும் -அந்த கணிதபாட ஆசிரியனின் நண்பனாக இருக்கும்- ஒரு லும்பன் அவளை நிற்க வைத்து மற்றைய மாணவர்களுக்கு முன் அவமதிப்புச் செய்கிறான். எதுவரை ஓடுவது அவள். அவள் தனது மரணம்வரை ஓடினாள்.

தமக்கு நேரும் கொடுமையை அல்லது பாலியல் சம்பந்தமான பிரச்சினைகளை -பெற்றோரை விடவும்- துணிந்து நம்பிக்கையோடு ஆசிரியர்களிடம் போய்ச் சொல்லி ஆறுதல் அடையும் அல்லது ஆலோசனைகள் கேட்கும் அல்லது உளவழிச் சிகிச்சைபெறும் நிலை இந்த புகலிட நாடுகளில் காணப்படுவதை நினைத்து பெருமை கொள்ள வேண்டி இருக்கிறது. இது ஏன் நமது நாடுகளில் சாத்தியமாகாமல் இருக்கிறது என ஆதங்கப்பட வேண்டியும் இருக்கிறது. “என்ன.. ஒரு வாத்தி வேலைகூடக் கிடைக்கயில்லையா உனக்கு” என சொல்லவைக்குமளவுக்கு ஆசிரியத்துவமும் அரசியல் செல்வாக்கும் பிணைந்துபோய்க் கிடக்கிறது. நேர்மையான வழியிலும் கடின உழைப்பிலும் சேவை மனப்பான்மையுடனும் ஆசிரியத் துறைக்கு வரும் ஆசான்களுக்கு நாம் தலைவணங்க வேண்டும்.

இந்த தனியார் வகுப்பு நடத்தும் லும்பன் கடந்த பாராளுமன்றத்தில் என்பிபி வேட்பாளராக கொழும்பில் போட்டியிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனுக்கெல்லாம் அந்த அதிகாரமும் கிடைத்திருந்தால் எப்படி நடந்துகொள்வான்?. இனம் மொழி மதம் கடந்து திறமையானவர்களை ஊழல் இலஞ்சம் இல்லாதவர்களை கழுவியெழுத்து தேர்தலில் களமிறக்கியதாக அல்லது பதவிகள் வழங்கியதாக சொன்ன என்பிபி இது விடயத்தில் வெளிப்படையாக பேசவேண்டிய கடப்பாடு உள்ளது. இதை வைத்து என்பிபிக்கு எதிரான பிரச்சாரம் செய்வது இன்னொரு அயோக்கித்தனம். அதேநேரம் ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சி தனது கட்சி சார்பாக இதுகுறித்து வெளிப்படையாகப் பேசி, கட்சியிலிருந்து இவனைப் போன்றவர்களை தூக்கி எறிய வேண்டும். சிறுமிக்கு நீதி வழங்கும் முறையில் அரசியல் தலையீடு எதுவுமின்றி நடந்து கொள்ள வேண்டும். கல்வி முறைமைகளில் ஆசிரிய நியமனங்களில் செழுமையாக்கம் செய்ய வேண்டும்.

பாடசாலை ஆசிரியன்களிலிருந்து பல்கலைக் கழக விரிவுரையாளன்கள் வரை இந்தவகை மனவக்கிரம் படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது தம்மை அர்ப்பணித்து சேவையாற்றும் ஆசிரியர்களை, விரிவுரையாளர்களை அவர்களின் சமூகப் பங்களிப்பை புறந்தள்ளக்கூடிய மனநிலையை மக்களிடம் தோற்றுவிக்காதபடி பேண, குற்றமிழைத்தவர்களுக்கு இரட்டிப்புத் தண்டனை வழங்க சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுதல் நல்லது.

தமக்கு நடந்ததை வெளிப்படையாகப் பேச ஒரு பெண்ணுக்கு இந்த ஆணாதிக்கச் சமூகம் சுதந்திர வெளியினை அங்கீகரித்து வைத்திருக்கவில்லை. அவ்வப்போது பொதுவெளிக்கு வருகின்ற இதுபோன்ற சம்பவங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட பெண்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களின் குரலாகவும் எழுந்து இந்தச் சிறுமியின் மரணம் எழுப்பியிருக்கிற கேள்விக்கு அரசும் சமூகமும் என்ன பதிலை வழங்கப் போகிறது!

  • 06052025

Leave a comment