பூகோள அரசியல் நகர்வில்

Kishore Mahbubani

*

ரசியா உக்ரைனுக்குள் ஆக்கிரமிப்புச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதில் கருத்து வேறுபாடில்லை. உண்மையில் இந்தப் போர் தவிர்த்திருக்கக் கூடியது. இதை தடுக்க முடியாமல் போனதற்கான ஒரு காரணம் பூகோள அரசியலின் மீதான ஐரோப்பாவின் திறனற்ற தன்மை ஆகும். தனது அயல் நாடான ரசியாவோடு இன்னும் ஆயிரக் கணக்கான வருடங்கள் வாழப்போவது ஐரோப்பா. அதனால் ரசியாவின் பாதுகாப்பு கரிசனையையும் அவர்கள் கவனம் கொண்டிருக்க வேண்டும். நேற்றோ அமைப்பின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தை ஆரம்பத்திலிருந்தே ரசியா எச்சரித்து வந்தது. அரசியல் விஞ்ஞானிகளான மியர்ஸைமர், ஜெப்ரி ஸக்ஸ் ஆகியோர் தொடர்ச்சியாக மிக விபரமாக இதை விளங்கப்படுத்தி இருக்கிறார்கள். ஐரோப்பிய தலைவர்கள் இதை தொடர்ச்சியாக அசட்டை செய்தே வந்திருக்கிறார்கள். இந்த பூகோள அரசியல் குறித்த திறனற்ற தன்மையின்மையால் மிக உயர்ந்த விலைகளை இப்போ ஐரோப்பா கொடுக்க வேண்டி வந்திருக்கிறது.

எல்லா பூகோள அரசியல் முட்டைகளையும் அமெரிக்கா என்ற ஒரு கூடைக்குள் போடக் கூடாது. எல்லா வல்லரசுகளும் தனது நலனைத்தான் முதன்மையில் வைக்கும். இங்கும் அமெரிக்கா தனது நலனைத்தான் முதன்மையில் வைக்கிறதேயொழிய ஐரோப்பாவினது நலனையல்ல. அது ஒருபோதும் தனது நலனை தாரைவார்த்து ஐரோப்பாவை காப்பாற்றாது. இதன் அப்படையிலேயே அதாவது ஒரு மேல்நிலை வல்லரசுத் தலைவர் என்ற அடிப்படையிலேயே ட்றம் இப்போ நடந்துகொள்கிறார். புத்திசாதுரியமற்ற ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்காவின் நேற்றோ விரிவாக்கத்துக்கு மிக ஆர்வத்துடன் ஆதரவளித்தார்கள்.

பூகோள அரசியல் என்பது மிகவும் குரூரமான ஒன்றாக இருக்கிறது. பூகோள அரசியலில் சில விடயங்கள் தெளிவானவையாக உள்ளன. அதுதான் அமெரிக்கா உட்பட்ட எல்லா வல்லரசுகளும் தமது நலனை முதன்மையில் வைப்பார்கள் என்பது முக்கியமான விடயம். அவர்கள் தமது நண்பர்களுக்காக தமது நலனை தாரைவார்க்கவே மாட்டார்கள். ஐரோப்பாவானது தனது நலனை அமெரிக்கா முதன்மையில் கொள்ளும் என நம்புவது அப்பாவித்தனமானதும் பிழையான மதிப்பீடு கொண்டதுமாகும்.

ஐரோப்பிய தலைவர்கள் ஆற அமர இருந்து தாம் ஏன் இவளவு அப்பாவித்தமாக இருக்கிறோம் என்பதை தமக்குள் தாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

என்னால் மூன்று பரிந்துரைகளை வைக்க முடியும்.

1. நேற்றோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து ஆலோசனை நடத்துதல். இதன் மூலம் உலகுக்கு ஒரு சமிக்ஞையை அனுப்ப முடியும். ஐரோப்பா தனது மூலோபாயமான அணுகுமுறையாக சுயாதீனமாக இயங்குவதான சமிக்ஞை அது.

2. ரசியாவோடு மூலோபாய அணுகுமுறையில் பேரம் பேசுவது.

3. சீனாவோடு மூலோபாய அணுகுமுறையில் பேரம் பேசுவது

அதாவது ஐரோப்பா தனது காலில் நின்று செயற்படுவதுதான் தேவையே ஒழிய அமெரிக்காவின் காலில் அல்ல. ஐரோப்பா நேற்றோவை விட்டு விலகுவதன் மூலம் அமெரிக்காவுக்கும் ஒரு செய்தியை சொல்ல முடியும். “நீ எனது நலனை கவனத்தில் எடுக்காதபோது, நான் அப்படியொரு அமைப்பில் (நேற்றோவில்) இருக்க வேண்டும் என நினைப்பது விவேகமானதல்ல” என்ற செய்தியே அது.

பூகோள அரசியல் நகர்வில் எல்லா வகையான சாத்தியப்பாடுகளையும் மேசையில் முன்வைக்க வேண்டும், அது நினைத்துப் பார்க்க முடியாததாயினும்கூட!. ஐரோப்பிய தலைவர்கள் ரசியாவின் கரிசனை குறித்த எதையுமே கவனமெடுத்ததில்லை. ஒரு நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூட முனைந்ததில்லை.

இன்று அமெரிக்கா அதிகார நிலையில் முதலாவது இடத்தில் உள்ளது. வரலாற்றில் யாரும் எப்போதும் முதலாமிடத்தில் நின்றுபிடித்ததில்லை. பூகோள அரசியல் என்பது எப்போதும் மாற்றமடைந்து கொண்டிருக்கும். எப்போதுமே மாறாத ஒன்று இருக்கிறது. அதுதான் உங்கள் அயல்நாடு. அதாவது ரசியா. ரசியா ஒரு பலம் பொருந்திய நாடு. தன்னை மீள மீள கட்டமைக்கக் கூடிய வலுவான நாடு. அது ஒருபோதும் மறைந்து போய்விடாது. ஐரோப்பியர்கள் அந்த நாட்டுடன் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் அயலவராக இருப்பர். அமெரிக்கா அதிவல்லரசு நிலையில் இல்லாமல் போனாலும்கூட ரசியா அயல்நாடு என்பது மாறாது. எனவே அவர்கள் அமெரிக்காவை பின்தொடராமல் சுயாதீனமாக இருப்பதே மிக புத்திசாதுரியமானதாக இருக்கும்.

ஐரோப்பாவுக்கு அடுத்த அச்சுறுத்தலாக இருக்கப் போவது ரசியா அல்ல. அது ஆபிரிக்காவின் சனத்தொகை பெருக்கத்தால் நிகழப்போவதாக இருக்கும். 1950 இல் ஆபிரிக்க சனத்தொகையைவிட ஐரோப்பிய சனத்தொகை இரண்டு மடங்காக இருந்தது. அது தலைகீழாக மாறி இப்போ ஐரோப்பாவைவிட ஆபிரிக்கா இரண்டரை மடங்கு அதிக சனத்தொகையை எட்டிவிட்டது. 2100 இல் அது பத்து மடங்காக அதிகரிக்கும் என கணக்கிடப்படுகிறது. ஆபிரிக்காவின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவாவிட்டால் மத்தியதரைக் கடல்வழியாக பெருமளவு ஆபிரிக்க அகதிகள் ஐரோப்பாவுக்குள் வரும் நிலை ஏற்படும்.

இந்த அகதிப் பேரலையை எப்படி தவிர்க்கலாம்?. எல்லையில் வைத்து கொல்வதாலல்ல. ஆபிரிக்காவின் அபிவிருத்திக்கு உதவுவதே அதற்கான வழிமுறையாக இருக்கும். அத்தோடு ஆபிரிக்காவில் முதலீடு செய்யும் எந்த நாட்டையும் ஆதரிக்க முன்வர வேண்டும். முதலீட்டின் ஒவ்வொரு துளியும் ஆபிரிக்காவுக்கான கொடையாக இருக்கும். அதேபோல் ஐரோப்பாவுக்கான கொடையாகவும் இருக்கும். எனவே ஐரோப்பா புத்திக்கூர்மையுடன் செயற்பட வேண்டும். அவர்கள் ஆபிரிக்காவில் சீன முதலீடுகளை வரவேற்க வேண்டும்.

அதிர்ச்சிதரக் கூடியது என்னவெனில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஊர்சுலா வொண்டர்லைன் அவர்களும் ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் அனலீனா பர்பொக் அவர்களும் நடந்து கொள்கிற விதம்தான். அவர்கள் ஆபிரிக்காவில் சீனாவின் முதலீட்டை கடுமையாக விமர்சிப்பதன் மூலம் ஐரோப்பாவின் நலனுக்கு எதிராக செயற்படுவதை தாமே அறியாமலிருக்கிறார்கள். உண்மையில் இந்த சீன முதலீடு ஐரோப்பிய நலனுக்கு சாதகமான விளைவையே கொண்டுவருகிறது. எனவே ஐரோப்பாவானது ஆபிரிககாவில் சீனா செய்யும் முதலீட்டை ஆதரித்து செயற்பட வேண்டும். அமெரிக்காவும் ஆபிரிக்காவலில் சீன முதலீட்டை எதிர்க்கிறது. அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பியர்களும் எதிர்க்கிறார்கள். ஐரோப்பாவின் அப்பாவித்தனமான அல்லது புத்திசாதுரியமற்ற வெளிநாட்டுக் கொள்கைக்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். அண்மையில் ஸ்பெயின் அரசானது சீனா பற்றிய சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்கையை ஐரோப்பா வகுக்க வேண்டும்; அதற்கான நேரம் வந்துவிட்டது என சொல்லியிருந்தது.

அடுத்து, சீனாவின் BRI (Belt and Road Initiative) உலக வீதி பற்றியது. கடந்த பத்து வருடங்களாக ட்ரில்லியன் கணக்கான முதலீட்டுடனும் 150 க்கு மேற்பட்ட நாடுகளின் ஒப்புதலுடனும் தொடங்கப்பட்ட மிகப் பிரமாண்டமான திட்டம் இதுவாகும். அமெரிக்க அரசு ஒவ்வொரு நாட்டினதும் கதவுகளைத் தட்டி “இந்த BRI திட்டத்தில் இணைய வேண்டாம்” என சொல்லி வருகிறது. பெரும்பாலான உலக நாடுகளும் தமது வர்த்தகத் தொடர்புகளுக்கான கட்டுமானங்களை விருத்தி செய்ய இத் திட்டம் தமக்கு உதவும் என்கின்றனர். எனவே இணைய வேண்டாம் என அமெரிக்கா சொல்வது விவேகமான செயல் அல்ல. யப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற சில நாடுகளும் இதில் இணையாமல் இருக்கின்றன. அது அவர்களின் உரிமை. அவர்கள் தாமாக அதைச் செய்ய முடியும்.

இந்தோனேசியாவை எடுத்துப் பாருங்கள். அது விரைவாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடு. சீனாவின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள அதிவிரைவு புகைவண்டியானது ஜகார்த்தாவை புத்துயிர்ப்பாக ஆக்கியிருக்கிறது. அமெரிக்காவை விட இந்தோனேசியா குறைந்த வருமானம் கொண்ட நாடு. ஆனால் அந்த நாடு இப்போது அமெரிக்காவினதை விட வேகமான புகைவண்டி பாவனையை சாத்தியமாக்கியுள்ளது. இது வெறும் (வர்த்தக ரீதியிலான) கட்டுமான சாதனை மட்டுமல்ல. அது பொதுமக்களை உளவியல் ரீதிலும் உந்தித் தள்ளக்கூடியது. “எனது நாடு அதிவேக புகைவண்டியை உருவாக்க முடியும் எனின், ஏன் எம்மால் மற்ற விடயங்களிலும் முன்னேற முடியாது” என்ற நம்பிக்கையை உருவாக்குவதுமாகும்.

இந்த BRI இனை அமெரிக்கா எதிர்ப்பது விவேகமான செயல் அல்ல. மாறாக அமெரிக்கா இத் திட்டத்தை வரவேற்பது அமெரிக்காவுக்கு நல்லது. அமெரிக்காவில் கட்டுமானங்கள் பலவும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ளது போல் அமைந்திருக்கிறது. விமான நிலையங்கள், புகையிரத நிலையங்கள் பலவும் இதில் அடக்கம். சில பாலங்கள் தகர்ந்து வீழ்ந்து விடுகின்றன. எனவே BRI திட்டத்தை எதிர்ப்பதை விடவும் அமெரிக்கா அதை பயன்படுத்த முனைவதே நல்லது. இது நினைத்துப்பார்க்கக்கூட முடியாத ஒன்றுதான் என்றபோதும், இந்த சாத்தியப்பாட்டை அல்லது வழிமுறையை அந்நாடு தனது எதிர்காலத்தை முன்னிட்டு ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு நல்லதாக அமையும்.

அமெரிக்கா சீனாவுடனான பூகோள அரசியல் போட்டியில் இறங்கியிருக்கிற நாடு. அமெரிக்கத் தலைவர்கள் வருவர்… போவர். ஆனால் வெளிநாட்டுக் கொள்ளை ஒன்றாகவே இருக்கும். அரசுக் கட்டமைப்பு அதையே பேணுகிறது. பைடனும் ட்றம்ப் உம் இரு வேறு வித்தியாசமான கொள்கையுடையவர்களாக இருக்கிற போதும், BRI திட்டத்துக்கு இருவரும் எதிராக இருக்கிறார்கள். சீனாவின் எழுச்சியை தடுத்து நிறுத்தும் நோக்கமே இருவருக்கும் இருக்கிறது/ இருந்தது.

சீனாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக் கூடாது. சீனாவானது 4000 வருடங்களுக்கு மேற்பட்ட மிக பழமையானதும் தொடர்ச்சி கொண்டதுமான நாகரிகத்தை கொண்ட நாடு அது. இன்று தொழில்நுட்ப ரீதியிலும் உற்பத்திமுறைமைகளிலும் முன்னணிக்கு வந்திருக்கிறது. பல அமெரிக்கர்களும் சீனாவை குறைத்து மதிப்பிடுகிற பெரும் தவறை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க சீன பூகோள அரசியல் போட்டியை முன்வைத்து சீனாவும் அமெரிக்காவை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது. அமெரிக்க சமூகம் குறிப்பிடத்தக்க வெற்றிகரமான நிலையில் இருக்கிறது. 2000 ஆவது ஆண்டில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் பொருளாதார நிலையில் சமமாக இருந்தவை. இன்று ஐரோப்பாவானது அமெரிக்கப் பொருளாதாரத்தின் மூன்றில் இரண்டு என்ற நிலைக்கு பின்தங்கியிருக்கிறது. அமெரிக்காவானது தவிர்க்க முடியாத வல்லரசாக நீடிக்கிறது. அமெரிக்கா வலுவான தொழில்நுட்ப புதுமைக் கலாச்சாரத்தை (Innovative Culture) கொண்ட நாடு. அந்த கலாச்சாரம் அமெரிக்காவுக்கு பொருளாதார பலத்தை அளிக்கிறது.

இன்று மிக பயங்கரமான விவகாரமாக இருப்பது தாய்வான் பிரச்சினை ஆகும். அரசியல் ரீதியில் சூடான நிலையில் உள்ளது. காரணம் சீனாவுக்கு தன் மீதான நூற்றாண்டு அவமதிப்பின் (Centuary of Humilation) வாழும் சின்னமாக தாய்வான் இருப்பதுதான். 1842 இலிருந்து 1949 வரை சீனா உலக அதிகார சக்திகளால் பிய்த்துப் பிடுங்கப்பட்ட அவமானப்படுத்தப்பட்ட வரலாறைக் கொண்டது. சீன மக்களின் நினைவுகளில் இந்த நூற்றாண்டு அவமதிப்புத் தாக்கம் ஒவ்வொரு சீனரின் மனதில் எவளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்பதை அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கை வகுப்பாளாகள் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

1895 இல் சீனா யப்பானிடம் அவமானகரமாக தோற்றதுடன் தாய்வான் தனியான தீவாக ஆக்கப்படுகிறது. சீனாவின் பார்வையில் தாய்வானை தன்னுடன் மறு இணைப்பு செய்யாமல் விட்டால், தன் மீதான ‘நூற்றாண்டுகால அவமதிப்பு’ இன்னமும் முடித்துவைக்கப்பட வில்லை என்று அர்த்தமாகும்.

இதன் அர்த்தம் ஓரிரவில் தாய்வானை சீன பெருநிலப் பரப்புடன் இணைத்துவிடுவது என்பது அல்ல. உண்மையில் சமாதானத்தை உருவாக்க சிறந்த வழி இப்போதுள்ள ‘அரசியல் அந்தஸ்தை’ மாற்றம் செய்யாமலே, தாய்வான் சீனா இருவருமே தாம் சீன மக்கள் குடியரசை (People’s Republic of China) பிரதிநிதித்துவப் படுத்துபவர்களாக இருப்பதுதான். அது தாய்வானும் சீனாவும் ஒரு நாடு என்பதை உறுதிப்படுத்துவதாகும்.

தாய்வான் சுதந்திரம் பெற்ற தனிநாடாக தன்னை அறிவிக்குமாயின், அது தாய்வான் மேல் சீனா போர் தொடுக்கக்கூடிய நிர்ப்பந்தத்தை உருவாக்கிவிடும். இது மிக ஆபத்தானது. அதேநேரம் அப்படி உருவாகும் தாய்வான் என்ற சுதந்திர நாடு உலகிலிருந்து தனிமைப்படுத்தப் பட்டுவிடும். சீன கடவுச்சீட்டு உலகின் 150 நாடுகளுக்கு மேல் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கிறது. ‘தாய்வான் குடியரசு’ என்ற நாட்டினால் உருவாக்கப்படக்கூடிய கடவுச்சீட்டு மிக சொற்ப நாடுகளாலேயே ஏற்றுக்கொள்ளப்படும் நிலைஉருவாகலாம். அது தாய்வான் இன்று பெற்றிருக்கும் தனது அரசியல் அந்தஸ்து நிலையிலிருந்து விலகி தன்னை தானே தனிமைப்படுத்தியதாகிவிடும். தாய்வானின் புத்திசாதுரியமான அணுகுமுறை என்னவெனில் தனது இன்றைய அரசியல் அந்தஸ்தை முடிந்தளவு தக்கவைப்பதாகும்.

பைடன் தாய்வானுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை தருவதாக சொன்னது மிக ஆபத்தானது. “தாய்வான் தனது சுதந்திரத்தை அறிவிக்க தாம் ஆதரவாக இருப்போம்” என அமெரிக்க அதிபர் எவராயினும் சொன்னால், அது விவேகமற்ற செயலாகும்.

இறுதியாக ஒன்றை சுருக்கமாகச் சொல்லலாம். சீனா மிக பழமைவாய்ந்ததும் தொடர்ச்சி கொண்டதுமான நாகரிகத்தைக் கொண்ட நாடு என்பதை அமெரிக்கா முதலில் உணர வேண்டும். சீனா இவ்வளவு காலமும் எப்படி தப்பிப் பிழைத்தது? எப்படி இவளவு நெகிழ்தன்மையுள்ள நாகரிக வளர்ச்சியை கொண்டிருக்கிறது?. சீன அரசிடம் அதிக மதிநுட்பம் இருந்ததுதான் அதற்குக் காரணம். உள்நாட்டிலும், அயல்நாட்டுடனும் வெற்றிகரமாக தன்னை சமாளித்துக் கொண்டிருக்கிறது. எனவே இவற்றை கவனத்தில் எடுத்து சீனாவை மதிப்புடன் கையாள்வதுதான் சரியாக இருக்கும். அமெரிக்கா தனது கொம்பை நுழைப்பதையோ மதிப்பின்றி நடப்பதையோ, அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வதையோ விட்டுவிட வேண்டும். அமெரிக்கர்கள் மற்றைய நாடுகளுக்குப் போய் அந்த நாடுகளிலுள்ள மக்கள் சீனா பற்றி என்ற பேசுகிறார்கள் என்பதை கேட்டறிய வேண்டும். பெருமளவான நாடுகளும் சீனாவிடம் பெருமதிப்பு வைத்திருக்கிறார்கள். எனவே சீனாவுடன் தான் உடன்படாவிட்டாலும், அமெரிக்கா சீனாவை மதிப்புடன் கையாள வேண்டும்.

சீனா 4000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாறு கொண்டது. இன்னும் பல ஆயிரம் வருடங்கள் அது நீடிக்கும். ஒரு 250 வருட வரலாற்றைக் கொண்டது அமெரிக்கா என்ற சுதந்திர நாடு. உலக வரலாற்றிற்கு அது ஒரு குழந்தை. மிக நீண்ட வரலாறு கொண்ட சீனாவை அது மதித்தாக வேண்டும்!.

*

  • ravindran.pa
  • 11032025
  • Thanks: mahbubani .net

Leave a comment