கடந்த வெள்ளியன்று (28.02.2025) அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவர்களுக்கும் ட்றம் மற்றும் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் அவர்களுக்கும் இடையில் யாரும் எதிர்பாராத விதத்தில் விவாதம் முற்றியது. இது பேசப்படும் பொருளாக ஊடகங்களிலும் அரசியலாளர்களிடமும் புத்திஜீவிகளிடமும் மாறியிருந்தது. இது ஏதோ அந்த இடத்தில் தோன்றிய முரண்பாடாகத் தெரியவில்லை. இதற்கு முன்னராக மூடிய அறைக்குள் தொடங்கிய ஒன்றாகவே கருத இடமுண்டு.
இராஜதந்திரங்கள் பலவும் சம்பிரதாயபூர்வமாக மக்கள் கண்களில் சாந்தமான ஜனநாயக அணுகுமுறை போலவும், நான்கு பக்க சுவர்களுக்குள் வல்லான் அழுத்தங்களினாலும் பயமுறுத்தல்களினாலும் நிறைவேற்றப்படுகிற அரங்க நிகழ்வுகளாகும். இது பல நாடுகளிலும் காலங்காலமாக தொடர்கிற ஒன்று. இந்த இரட்டைத்தன்மை வாய்ந்த இராஜதந்திர வடிவத்தின் சம்பிரதாய மீறலானது வெளிப்படையில் செலன்ஸ்கியை அவமானப்படுத்தியதாக எம்மை வந்தடைகிறது. கணவன் மனைவி சண்டையை வீதிக்கு கொண்டுவருவது போன்ற செயல்தான் அன்று நடந்தது. இது திட்டமிடப்பட்டு ட்றம்ப் குழுவால் நிகழ்த்தப்பட்டதாகவே எனக்குப் படுகிறது.
இந்தக் கள்ளத்தனமான செயற்பாட்டை செலன்ஸ்கி ஓர் இராஜதந்திரியாக இருந்திருந்தால் அந்த இடத்தில் தவிர்த்திருக்க முடியும். அதே பாசாங்கை அவர் செய்திருக்கலாம். ஆனால் அவர் நேரடித்தன்மை அல்லது வெளிப்படைத்தன்மை வாய்ந்தவராக இருந்தார். போரில் நலிந்துபோய் செய்வதறியாது பரிதவிக்கும் ஒரு நாட்டுத் தலைவரின் உளவியல் அழுத்தத்தை நாம் புரிந்துகொண்டால், அவர் அவ்வாறு பேசத் தலைப்பட்டதையும் புரிந்துகொள்ளலாம். இந்த உளவியலை ஒரு கருவியாக ட்றம்ப் குழு பாவித்து உணர்ச்சிமயமான சூழலுக்குள் தள்ளினார்கள். அவரது உடை குறித்தும்கூட அங்கு நின்ற இராசதந்திரி ஒருவர் (பெயர் தெரியவில்லை) பிரஸ்தாபித்து, அது அமெரிக்காவை அவமானப்படுத்துவது போன்றது என்று முட்டாள்தனமாக சொல்லவும் செய்தார். இந்த ஆத்திரமூட்டும் சூழ்நிலைக்குள் செலன்ஸ்கி வீழ்ந்தார். ட்றம்ப் “உன்னிடம் துருப்புச் சீட்டு இல்லை. அது என்னிடமே இருக்கிறது” என சொன்னபோது, செலன்ஸ்கி அதை தனது நிலையில் நின்று புரிந்து, “இது துருப்புச் சீட்டு விளையாட்டல்ல. நான் சீரியஸாக பேசுகிறேன்” என அர்த்தப் பிறழ்வோடு சொல்ல நேர்ந்தது. அதை நாம் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.
ஐரோப்பாவில் நின்று வீரம் பேசிய பிரான்சின் மக்ரோனும் பிரித்தானியாவின் ஸ்ராமரும் தனித்தனியாக ட்றம்பை சந்தித்தபோது சம்பிரதாய நடிப்பை செவ்வனே செய்துவிட்டுத்தான் வந்தார்கள். அடிக்கடி ஒவ்வொரு கோணத்தில் கையைப் பிடிப்பது, தோளில் தட்டுவது, தடவுவது, துடையில் தொட்டு கதை சொல்வது, வெகுளித்தனமாக இளிப்பது என அவர்கள் காட்டிய உடல்மொழி கேவலமாக இருந்தது. இது செலன்ஸ்கிக்கு வாய்க்கப் பெறவில்லை.
ஓவல் அலுவலக சந்திப்பிலிருந்து கோபத்தோடு வெளியேறிய செலன்ஸ்கியை அந்த சூடான வார்த்தைப் பரிமாறல்களின் ஈரம் காயுமுன்னர், பிரித்தானிய பிரதமர் ஸ்ராமர் அழைத்து கட்டியணைத்து வரவேற்றார். ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் கனடா தலைவர் ஆகியோருடனான ஒரு திடீர் சந்திப்பை இலண்டனில் நிகழ்த்திக் காட்டினார். “இந்தா பார் நீ உதாசீனப்படுத்திய செலன்ஸ்கியை நாங்கள் கௌரவித்துக் காட்டுகிறோம்” என ஒரு வீம்புச் செய்தியை ட்றம்ப் க்கு காட்ட வேண்டும் என்பது போல் அது இருந்தது.
அதைத் தாண்டிய பிரச்சினை என்னவென்றால் இந்த சுடுதண்ணிச் செயற்பாடானது செலன்ஸ்கியை இன்னொரு பொறியுள் விழ வைத்திருக்கிறது. ஒரு கையால் இராணுவ உதவிகளை கொடுத்தபடி, இன்னொரு கையால் சமாதான முயற்சி செய்யும் விநோதமான அணுகுமுறை ஸ்ராமரினதும் மக்ரோன் இனதும் திட்டமாக இருப்பது ஒரு முரண்நிலை செயற்பாடாகும். அத்தோடு சமாதானப் படை என்ற பெயரில் ஸ்ராமரும் மக்ரோனும் உக்ரைனுக்கு படை அனுப்ப துடியாய்த் துடிக்கிறார்கள். ஒரு நிழல் போரை நடத்தி உக்ரைனை இந்தப் பேரழிவுக்குள் விட்டுவிட்டவர்கள் அவர்கள்!. உக்ரைனுக்கு படையனுப்பி அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்நிபந்தனையாக சமாதானம் உருவாக்கப்பட வேண்டும். அத்தோடு ஐநா என்ற ஒன்று இருப்பதே இவர்களுக்கு மறந்துபோய்விட்டது. இவர்கள் நினைப்பதுதான் சர்வதேச விதிகள் என்பதற்கு இது இன்னொரு உதாரணம் ஆகும். ஐநா அனுப்பிய அப்படியான படைகள் பிரச்சினைக்குள் சிக்கிய ஏழை நாடுகளுக்கு அனுப்பப்பட்டு செக்குமாடாய் செயற்பட்டது இன்னொரு வரலாறு. உருப்படியாக எதுவும் நடந்ததில்லை. பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அவற்றால் பண்பாட்டு ரீதியில் பாதிப்புத்தான் ஏற்பட்டிருக்கிறது.
அத்தோடு சமாதானப்படை அனுப்பும் முயற்சியை ரசியா நேற்றோவின் விஸ்தரிப்புவாதமாக எடுத்துக் கொள்ளவே செய்யும். இது சமாதானத்தை கேள்விக் குறியில் நிறுத்திவிடும். சமாதானம் என்பது இப் பிரச்சினையின் மூலவேர்களை கண்டறிந்து அதை களைவதில்தான் நிலைத்து நிற்கும். ஐரோப்பாவின் செயற்பாடு இதற்கு எதிர்த்திசையில் பயணிக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு சமாதானம் அல்ல முக்கியம். “ரசியாவை பலவீனப்படுத்துவது” என்ற தமது இலக்கை முடிந்தவரை உக்ரைன் மக்களின் சாம்பலிலிருந்தாவது உயிர்ப்பித்து அடையத் துடிப்பதுதான்.
“ரசியா சோவியத் யூனிய சாம்ராச்சியத்தை மீண்டும் நிறுவத் துடிக்கிறது. அது ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அழித்தொழிக்கக் கூடியது. உக்ரைனின் போராட்டமானது எங்களுக்கும் (ஐரோப்பாவுக்கும்) சேர்த்த போராட்டம்தான்” என அவர்கள் மக்களின் மூளைக்குள் கட்டியெழுப்பத் துடிக்கும் கதையாடலில் உண்மையில்லை என்பது இந்தத் தலைவர்களுக்குத் தெரியும். இதற்கு புட்டின் போர் ஆரம்பித்தபோதே பதில் கூறியிருந்தார். “சோவியத் இன் அழிவு குறித்து கவலைப்படாதவருக்கு இதயம் இல்லை. சோவியத் மீண்டும் உருவாகும் என சொல்பவர்களுக்கு மூளை இல்லை” என்றார். சோவியத் இன் அழிவு 1990 இலிருந்து அமெரிக்காவின் ஒற்றைத் துருவ உலக ஒழுங்கை நிறுவியது. எதிர்க் கடை இல்லாத வியாபாரமாய் அடுத்தடுத்து அமெரிக்கா போர்களை உற்பத்திசெய்து விற்றது. இவைதான் இந்தக் காலப் பகுதியில் நடந்த துயர நிகழ்வுகள்.
இந்த மூன்று வருடத்திலும் அமெரிக்காவுடன் சேர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் இறைத்த இராணுவ உதவிகளானது போரில் ரசியாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனபோதும் கூட, இப்போ அமெரிக்கா இல்லாத இந்த கூட்டணியால் என்னத்தை பிடுங்கிவிட முடியும். அது அவர்களுக்குத் தெரியாததல்ல. இது செலன்ஸ்கிக்கு தெரியாமல் போவதுதான் வருத்தமளிக்கிறது. அன்றைய இலண்டன் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பத்துக்கு மேற்பட்ட நாடுகளுக்கு மேல் பங்குபற்றவில்லை. அநேகமும் அந்த நாடுகள் ஏழை கிழக்கு ஐரோப்பிய நாடுகள். ஹங்கேரியின் பிரதமர் விக்ரன் ஓவன் அவர்கள் வெளிப்படையாகவே மேற்கு ஐரோப்பிய நாடுகள் “போர் வெறியர்கள்” என பேட்டியொன்றில் மிக அண்மையில் சொல்லியிருக்கிறார். இத்தாலி பிரதமர் மெலோனி அவர்கள் ட்றம்ப் க்கு ஆதரவாக இருக்கிறார்.
இவ்வாறாக, பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை குலையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் தலைமைப் பாத்திரத்தை வகிக்கும் பெரியண்ணன் இல்லாத நேற்றோவானது பலத்தை இழக்க நேர்ந்துள்ளது. (அது சிலவேளை ட்றம்ப் ஆட்சிக் காலத்தின் பின் மீண்டும் தடத்தில் ஓடலாம்). இந்த மூன்று வருடத்திலும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய நிதி 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியைவிட அதிகமானதாகும்.
சுயத்தை அமெரிக்காவிடம் அடகுவைத்திருக்கும் ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதம் அரைவாசியும் அமெரிக்காவில் தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஐரோப்பாவுக்கென சுயாதீனமான வெளிநாட்டுக் கொள்ளை கூட இல்லை என்கிறார் அமெரிக்கப் பேராசிரியர் ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள். இந்த சீத்துவத்துள் தோல்வியடைந்து கொண்டிருக்கும் உக்ரைனுக்கு (பிரித்தானியா உட்பட்ட) ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவதாக செலன்ஸ்கிக்கு வாக்குறுதி அளிக்கிறார்கள். தலைவர்கள் தேர்தலில் முளைத்து தேர்தலில் மறைபவர்கள். அவர்கள் வருவர், போவர். உக்ரைன் போரால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நாடு. அந்த நாட்டின் இராணுவம் உட்பட மக்களின் உயிர்கள் திரும்ப முளைக்கப் போவதில்லை.
எல்லாமே சுரண்டல்தான். எரியிற நெருப்பில் எஞ்சியதை பிடுங்கிற எத்தனம். பெரும் கனிம வளங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிற உக்ரைனின் வளங்களை கொள்ளையிடும் நுட்பம் தெரிந்தவர்கள் அவர்கள். உதவியளிக்கிறோம் என சொல்லி உக்ரைனுக்குள் ஆயுதங்களை இறைத்துவிட்டு, இப்போ தாம் வழங்கிய உதவிக்கு உக்ரைனின் வளங்களை பிய்ச்சுப் பிடுங்கிற போட்டியில் இறங்கியிருக்கிறார்கள், அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிரான்சும்!. இனி ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளும் கிளம்பலாம். போரில் அழிவுண்ட ஒரு நாடு தன்னை கட்டியெழுப்ப அதன் கனிமவளங்கள் உதவும் என்ற ஓர் அறம்கூட இந்த நாடுகளிடம் கிடையாது. காலனிய காலத்திலிருந்து அவர்களின் மூளையைத் தொடரும் களவு மனநிலையும் அதிகாரத்துவ உளவியலும் நீங்கப் போவதில்லை என்பதை இது காட்டுகிறது.
பிரித்தானியா இப்போ பார்த்திருக்கும் வேலை இன்னமும் உக்ரைனுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிற வேலை. ரசியா மீதான பொருளாதாரத் தடை மூலமாக உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரசிய சொத்துகளிலிருந்து (சர்வதேச விதிமுறைகளை மீறி) 2.84 பில்லியன் பவுண்ட்ஸ் இனை எடுத்து உக்ரைனுக்கு கடனாக வழங்க பிரித்தானியா முன்வந்துள்ளது. இது புதிய சிக்கல்களை உருவாக்க வல்லது. சமாதானப் பாதைக்கு குறுக்கே போடப்படுகிற பாறாங் கற்கள் இவை.
மக்ரோன் ட்றம்ப் இனை சந்தித்தபோதும் ரசியாவின் உறைநிலை சொத்துக் குறித்து தடுமாற்றத்துடனும் வெகுளித்தனமான அவரது உடல்மொழியுடனும் ஒன்றைச் சொன்னார். தாம் உறைநிலையில் வைத்திருக்கும் ரசியாவின் சொத்துக்களை தாம் எடுப்பது சர்வதேச விதிமுறைக்கு முரணானதுதான் என்றாலும், தாம் உக்ரைனுக்கு அளித்த உதவிக்காகவும் உக்ரைனை ரசியா அழித்ததற்காகவும் அதை தமக்கு விட்டுக் கொடுத்தால் super என சொன்னார். அதன்போதுதான் ட்றம் “ஓம் அவர்கள் (ஐரோப்பிய ஒன்றியம்) தங்கடை பணத்தை திருப்பி எடுக்கப் பார்க்கினம்.. எடுப்பினம்” என நையாண்டி செய்யும் உடல் மொழியில் சொன்னார். உடனே மக்ரோன் “இல்லையில்லை. நாம் உக்ரைனுக்கு கடனாகவும் அன்பளிப்பாகவும் உதவியாகவும் அதாகவும் இதாகவும்..” என சொற்களை தடுமாறவிட்டுக் கொண்டிருந்தார்.
உக்ரைனின் கனிமவள பேரத்தில் (அமெரிக்காவுடன்) பிரித்தானியாவும் பிரான்சும் பங்கெடுக்கலாம் என ஊகிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து ஐரோப்பா சார்பாக சமாதான வரைவு ஒன்றை தயாரித்து அதை நேரில் ட்றம்ப் உடன் கலந்தாலோசிக்க உள்ளோம் என்கிறார்கள். உக்ரைனுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதத்தை தந்தால், தான் கையெழுத்திடுகிறேன் என செலன்ஸ்கி சொல்லியிருந்தார். ட்றம்ப் திட்டவட்டமாக மறுத்திருந்தார்.கனிமவள உடன்படிக்கையில் செலன்ஸ்கி கையெழுத்திடாமல் அமெரிக்காவிடமிருந்து தப்புவது கடினம். அதேபோல் அமெரிக்காவின் சமாதான முயற்சிக்கு செலன்ஸ்கி பச்சைக் கொடி காட்டாவிட்டால் அவரின் பதவி கைமாறப்பட்டு செய்துமுடிக்கப்பட அமெரிக்க உளவுத்துறைக்கு நேரம் ஆகாது. அதனால் செலன்ஸ்கி “மீண்டும் வருகிறேன்” என ட்றம்புக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்.
தலையை முந்நூற்றி அறுபது பாகையில் திருப்பித் திருப்பி பார்த்தாலும் இதற்குள் ஒளிந்திருக்கும் இரத்தப் பிசாசை கண்டறிய முடியாமல் இருக்கிறது. திரைமறைவில் என்னவெல்லாம் அரங்கேறுகிறதோ தெரியவில்லை.
இன்று இறைமை என்பது களவாடப்பட்டு அழகாக உச்சரிக்கப்படுகிற வார்த்தையாக உருமாறியிருக்கிறது. வலிமையற்ற நாடுகளுக்கு இறைமை என்பது சொல் அலங்காரம் மட்டுமே. ஐரோப்பாவே அமெரிக்காவை விட்டு இறைமையுள்ளதாக மாற வேண்டும் என குரல் எழுப்புகிறபோது, வலிமையற்ற நாடுகளுக்கு இது எம்மாத்திரம். வலிமையுள்ளவர்களை சார்ந்திருப்பதே வலிமையற்றவர்களின் இறைமை என்பதுதான் ஓரவஞ்சனையான அரசியல் நியதியாக உள்ளது. ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தைக் காப்பாற்ற உக்ரைனுக்குள் -அதாவது ரசிய எல்லைவரை- படையனுப்பத் துடிப்பவர்கள், ரசியா தனது பாதுகாப்பு உத்தரவாதம் கருதி உக்ரைன் நேற்றோவில் சேராமல் நடுநிலையாக இருக்கக் கோருவதை எந்த தர்க்கம் கொண்டு நிராகரிக்கிறார்கள்.
உதாரணத்துக்கு பிரான்ஸின் எல்லையோரம் ஏதாவதொரு நாட்டில் ரசியாவோ சீனாவோ படைத்தளம் அமைத்து ஏவுகணையை அல்லது அணுவாயுதத்தை நிற்பாட்டினால், பிரான்ஸ் அமைதியாக இருந்துவிடவா போகிறது. ஆக, போரற்ற உலகில்தான் சமாதானம் உயிர்வாழும். மனிதகுலம் மேம்படும். இது யதார்த்ததில் சாத்தியமில்லாமல் ஆகியிருக்கிறது. வலியவர்களின் உலகம் இது. அவர்களுக்கொரு நீதி. மற்றவர்க்கொரு நீதி. எனவே இதற்குள் இராஜதந்திரம் என்ற வெட்டியோடல்தான் ஜனநாயக மேக் அப். “அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என எந்த நாடோ விடுதலை இயக்கமோ பயணிக்க முடியாது. அது தற்கொலைக்கு ஒப்பானது. உக்ரைனுக்கும் இது விதிவிலக்கல்ல. எதிர்கால உக்ரைனாக மாறும் அபாயமுள்ள தாய்வானுக்கும் இது விதிவிலக்கல்ல.
சோவியத் அழிவோடு வார்சோ ஒப்பந்த நாடுகளின் இராணுவக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டபோதே “நேற்றோ” மரணப் படுக்கைக்குப் போயிருக்க வேண்டும். அதை உயிர்ப்பிக்க நேற்றோ விஸ்தரிப்பு தேவைப்பட்டது. கம்யூனிச பூச்சாண்டி கலைந்தபின் மற்றைய நாடுகள் மேல் அதிகாரம் செலுத்த அவர்கள் தொடர்ந்து காப்பாற்றிய இராணுவ அரக்கன்தான் நேற்றோ அமைப்பு. 1990 க்குப் பின்னான எல்லாப் போர்களையும் இந்த அரக்கனையும் அதன் சாரதியான அமெரிக்காவையும் தவிர்த்து வியாக்கியானப் படுத்தவே முடியாது.
எனவே இந்த மேற்குலகிடமிருந்து விடுபட்டு ரசியாவும் உக்ரைனும் -இருவரும் உடன்படக்கூடிய- மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பிரச்சினையின் மூல வேர்களைக் களைந்து சமாதானத்தை நோக்கி இயன்றவரை முயற்சிப்பதுதான் சிறந்த வழி!
- ravindran.pa
- 04032025
- https://marumoli.com/சமாதான-தேவதையும்-போர்ப்/
- Thanks for image: Aljazeera
