அமெரிக்காவின் நரித்தனம் உக்ரைனில் அரங்கேறுகிறது. 2000 களிலிருந்து -குறிப்பாக 2008 இலிருந்து- ரசியாவை சீண்டியபடி இருந்த அமெரிக்கா ரசியா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான சூழலை படிப்படியாக உருவாக்கி உச்ச நிலையில் கொணர்ந்து விட்டது. ரசியா ஆக்கிரமித்தது.
நடுநிலையாக இருந்த உக்ரைனை நேற்றோ அமைப்பில் சேர்க்க வேண்டும் என ஜோர்ஜ் புஷ் 2008 இல் றுமேனியாவில் நடந்த நேற்றோ மாநாட்டில் முன்மொழிந்தார். உக்ரைன் மறுத்தது. ஜேர்மனியும் பிரான்ஸ் உம் இது ரசியாவுடனான போரை உருவாக்கும் ஆபத்தை கொண்டது என எச்சரித்தன.
2014 இல் அமெரிக்கா உக்ரைன் ஆட்சி கவிழ்ப்பை செய்து தனக்கு தலையாட்டும் அரசை நிறுவியது. பின்னர் செலன்ஸ்கி உக்ரைன் அதிபராக ஜனநாக முறையில் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டார். அவரும் அமெரிக்காவின் எடுபிடியாக இருந்தார். நேற்றோவில் உக்ரைனை சேர்க்கும் முயற்சியை -மக்கள் விருப்பத்தை அறிவதற்கான வாக்கெடுப்பு இன்றி- தன்னிச்சையாக முடிவுசெய்தார்.
உக்ரைன் நடுநிலையாக இருக்கவேண்டும் எனவும், நேற்றோ தனது எல்லைவரை வருவது ரசியாவுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையும் எனவும் திரும்ப திரும்ப புட்டின் வலியுறுத்தினார். புட்டினின் இந்த சிவப்பு எச்சரிக்கை கோட்டை உக்ரைன் தாண்டியதால் ரசியா உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்தது. உக்ரைன் இதை எதிர்பார்து இருக்கவில்லை.
போர் தொடங்கி 7 நாளின் பின் செலன்ஸ்கி தாம் நேற்றோவில் சேர மாட்டோம் நடுநிலையாக இருப்போம் என அறிவித்து ரசியாவுடனான (இஸ்தான்புல்) பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டார். உடனே அமெரிக்காவும் பிரித்தானியாவும் செலன்ஸ்கியை பேச்சுவார்த்தை மேசையைவிட்டு வெளியேறுமாறும், தாம் போருக்கு உதவி செய்வதாகவும் கூறி உக்ரைனை அழிவுக்குள் தள்ளினர்.
இவ்வாறாக இந்தப் போரை கனடா ஐரோப்பா சகிதம் 3 வருடமாக நடக்கவிட்டு நாட்டை நாசமாக்கி மக்களை மரணிக்கவிட்டு உக்ரைனை தமது நலன் சார்ந்து பலிக்கடா ஆக்கினர். இப்போ செலன்கி சர்வாதிகாரி எனவும் அவர்தான் இந்த போருக்கு முழுக் காரணம் எனவும் ட்றம்ப் வாய்கூசாமல் பேசுகிறார். இனி தான் உதவிசெய்ய மாட்டேன் எனவும் இதுவரை தாம் செய்த உதவி 450 பில்லியனுக்கான திரும்பச் செலுத்தலாக உக்ரைன் நாட்டின் கனிமவளத்தில் 50 வீதம் தமக்கு சொந்தமாகும் என ஒரு எதேச்சாதிகார ஒப்பந்தம் ஒன்றிற்கு செலன்ஸ்கி கையெழுத்திட வேண்டும் என்றும் ட்றம்ப் மிரட்டுகிறார். (450 பில்லியன் என்பது பொய் எனவும் உண்மையில் 100 பில்லியன் எனவும் சொல்லப்படுகிறது).செலன்ஸ்கி உடன்படாத படத்தில் உக்ரைனில் இன்னொரு ஆட்சி கவிழ்ப்பை செய்து அமெரிக்கா தனது இலக்கை சாத்தியமாக்கும் என ஊகிக்க இடமுண்டு. செலன்ஸ்கி ஒரு தேர்ந்த அரசியல்வாதி அல்ல என்பதாலும் போருக்கு வழங்கப்பட்ட உதவிகளில் பெரும் ஊழல் நடந்திருப்பதாலும் செலன்ஸ்கி அமெரிக்க கொள்ளைக்கு உடன்பட நேரலாம்.
அமெரிக்கா களவெடுக்க இருப்பது போக மிகுதி வளத்தை களவெடுக்க பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரு பகுதியும் “சமாதானப்படை” அல்லது “உக்ரைனின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படை” என்ற பெயரில் உக்ரைனுக்குள் போக ஆயத்தமாகின்றனர். இதுதான் மேற்குலகின் மேக்அப் ஜனநாயகம்.
சும்மா கிடந்த சங்கை எடுத்து ஊதி மேற்குலகம் உக்ரைனை நாசமாக்கிய வரலாறு இது. வண்டியை ஓட்டிய அமெரிக்கா இப்போது ஐரோப்பாவை கழற்றி விட்ட பின்னும், ஐரோப்பா இப் போரை இல்லாமலாக்கி சமாதான வழியில் உக்ரைனை மீட்க தயாரில்லை. அவர்கள் உக்ரைனின் கோவணத்தையும் உருவ தயாராகின்றனர். ஐரோப்பாவை அமெரிக்காவின்றி சுயாதீனமான வண்டியாக ஓடவைத்து காட்டும் ஆரம்பப் புள்ளியை நலிந்துபோன உக்ரைனிலிருந்து தொடங்கிக் காட்டும் கங்கணத்தோடு நிற்கிறார்களோ என்று இன்னொரு பக்கத்திலும் யோசிக்க வேண்டியிருக்கிறது.
உக்ரைனுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நேரடி போர் அல்ல இது என்பதை -நேற்றோ குடும்பத்தின் பெரியண்ணனாக இருக்கும்- அமெரிக்காவின் மிரட்டல்களும், உக்ரைனை புறம்தள்ளி ட்றம்ப்- புட்டின் பேச்சுவார்த்தை நடைபெறுவதும் தெளிவாக நிரூபிக்கிறது. இந்த பேச்சுவார்த்தை அணுகுமுறையில் ட்றம் புட்டின் இருவருமே தவறிழைக்கிறார்கள். இதை எதன் பெயரிலும் நியாயப்படுத்த முடியாது. செலன்ஸ்கி ஒரு அவல நாயகனாக தோற்றமளிக்கிறார். பாவம் உக்ரைன் மக்கள்!
- ravindran.pa
- 23022025
- Thanks for image: wired
