மாறிவரும் பூகோள அரசியல்
தான் ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரசியா போரை சமாதானம் மூலம் முடிவுக்கு கொண்டுவருவேன் என ட்றம்ப் தேர்தலுக்கு முன் கூறிவந்தார். அது அவளவு இலகுவில் முடியாமல் போனது. ஏன், இப்போதும் அது சாத்தியமற்றது என்பதிலிருந்து சாத்தியமானது என்ற எல்லைக்கள் வந்தபாடில்லை. அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என பலரும் நினைத்திருந்தார்கள். அது உண்மையில் நேற்றோவுக்கும் ரசியாவுக்கும் இடையிலான நிழல்யுத்தம் என்ற வியாபகத்தைக் கொண்டது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்கான அச்சுறுத்தலாக ரசியா இருக்கிறது என அமெரிக்காவால் ஒருபோதும் பர்க்கப்படவில்லை. மாறாக ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலென உருவாக்கப்பட்ட புனைவுக் கதையாடலைக் கொண்டு போருக்கான சூழலை உருவாக்கி ரசிய ஆக்கிரமிப்பை சாதித்ததுதான் நடந்தது.
வரலாற்று ரீதியில் தன்னை ஐரோப்பாவாகவே உணர்ந்து செயற்பட்ட ரசியா 2000 ஆண்டளவில் நேற்றோவில் சேர விண்ணப்பித்திருந்தது. அது நேற்றோவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதற்கான பௌதீகக் காரணம் ரசியா மிகப் பெரும் பிரதேச அளவைக் கொண்டது என்பது ஆகும். அதேநேரம் அவர்களது மனக்கட்டமைப்பானது ரசியா மீது வரலாற்று ரீதியிலான அச்சம் கொண்டிருக்கிறது. ரசியா கம்யூனிச நாடு இல்லை என்றபோதும் சோவியத் வழி உருவாகிய கம்யூனிச வெறுப்பு மனநிலையின் தொடர்ச்சியும் ஐரோப்பாவை விட்டு அகலவில்லை.. இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகளை தோற்கடித்து மொஸ்கோவுக்கு வெறித்தனமாக முன்னேறிய கிட்லரின் படைகளை சோவியத் யூனியன் எதிர்கொண்டு, 27 மில்லியன் மக்களின் உயிர் அர்ப்பணிப்பை பெரும் விலையாகக் கொடுத்து தோற்கடித்திருந்தது. அந்த சாகசம் ஐரோப்பியர்களின் மனக்கட்டமைப்பில் சோவியத் இன் மையமாக செயற்பட்ட ரசியா மீதான கள்ளப் பயம் ஒன்றினையும் ஏற்படுத்தியிருந்தது. ரசியாவை பலவீனப்படுத்தி கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற பிரமை அவர்களை தொற்றிக் கொண்டது. அதனால்தான் 1989 இல் கொர்பச்சேவ் க்கு நேற்றோ கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் ஓர் அங்குலம்கூட நேற்றோ ஜேர்மனை விட்டு ரசியா நோக்கி நகராது என கொர்பச்சேவ் நம்பினார். இந்த பேச்சில் மிக முக்கியமாக அமெரிக்க வெளிநாட்டமைச்சர் ஜேம்ஸ் பெக்கர் அவர்களும் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார்.
கம்யூனிசத்தை எதிர்கொள்ளவென 1949 இல் உருவாக்கப்பட்ட (அமெரிக்க-மேற்கு ஐரோப்பிய கூட்டான) நேற்றோ கூட்டமைப்புக்கு எதிர்நிலையாக, (சோவியத் யூனியன்- கிழக்கு ஐரோப்பிய கூட்டணியான) வார்சோ கூட்டமைப்பு 1955 இல் உருவாக்கப்பட்டது. 1989 இல் வார்சோவை கலைத்துவிட கொர்பச்சேவ் முடிவுசெய்தபோதுகூட நேற்றோவைக் கலைத்துவிட அவர் கோரவில்லை. சோவியத் இன் வீழ்ச்சி, அதாவது முதலாளித்துவம் காட்டி வெருட்டிய ‘கம்யூனிச’ கட்டமைப்பும் வீழ்ச்சியடைந்தபோது நேற்றோவுக்கான தேவை இல்லாமலாகியது. அது வாழ்வா சாவா என்ற நிலையில் கிடந்தபோது அதை உயிர்ப்பூட்டி வளர்க்க புதிய எதிரிகள் தேவைப்பட்டார்கள். அது ரசியாவாக இருந்தது. எனவே ‘நேற்றோ விரிவாக்கம்’ அதை உயிர்ப்பித்தது. அதற்கெதிராக ரசியா பலமுறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது. அதையெல்லாம் தனக்கான ரொனிக்காக எடுத்துக் கொண்டு நேற்றோ விரிவாக்கத்தை ரசிய எல்லைவரை கொண்டுபோய் சீண்டுவதன் மூலம் ரசியா எதிரியின் இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. சோவியத் வீழ்ச்சிவரை இருதுருவ முகாமாக இருந்த உலகம் அமெரிக்காவின் கையில் ஒருதுருவ உலகமாக மாறியது.
2010 களில் உருவான அரபுவசந்த நிறப் புரட்சியை ரசியாவுக்குள் காண மேற்குலகம் ஆசைப்பட்டது. அல்லது அது நடக்கும் என நம்பியது. இதன் அங்கமாக 2014 இல் ஒறேஞ்ச் புரட்சி என அழைக்கப்பட்ட ‘மைடான்’ கிளர்ச்சியை உருவாக்கி, ஒரு ஆட்சிக் கவிழ்ப்புச் சதியை உக்ரைனில் அமெரிக்கா நிறைவேற்றியது. உக்ரைனும் ரசியாவும் சகோதர நாடுகளாக இருந்ததால் நிறப்புரட்சி ரசியாவுக்குள் இலகுவில் சாத்தியமாகும் என அவர்கள் நம்பி ஏமாந்தனர். அந்த ஆட்சிக் கவிழ்ப்பில் வந்தவர்தான் பெற்றோ புறொசெங்கோ என்பவர். உசாரடைந்த ரசியா மூன்று நாள் போர் தொடுத்து கிரைமியாவை தமதாக்கியது.
கிரைமியா செங்கடலால் சூழப்பட்ட ஒரு குடாநாடு. சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த -கடற்படைத்தளமாக இருந்த- இக் குடாவை சோவியத் சிதைவின்போது, ரசியா-உக்ரைன் இடையிலான பாதுகாப்பு உடன்பாட்டின் அடிப்படையில் உக்ரைனுக்கு வழங்க ரசியா ஒப்புக் கொண்டது. எதிர்பாராத விதமாக 2014 ஆட்சிக்கவிழ்ப்புடன் அமெரிக்க சார்பு அரசு உருவாகியதால், தமக்கிடையேயான உடன்படிக்கையை மீறி கிரைமியா அமெரிக்காவின் அல்லது நேற்றோவின் கைக்கு போய்விடலாம் அல்லது அவர்களின் இராணுத் தளமாக மாற்றப்படலாம் என ரசியா அச்சமடைந்தது. போர்தொடுத்து கைப்பற்றியது. புறொசெங்கோவின் அரசு டொன்பாஸ் உள்ளடங்கிய கிழக்கு உக்ரைனில் வாழ்ந்த ரசிய மொழிபேசும் சிறுபான்மையினரை பயங்கரமாக ஒடுக்கியது. சுமார் 14000 பேர் அவரது ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்டனர். எல்லாமே அமெரிக்காவினதும் நேற்றோவினதும் நிகழ்ச்சிநிரலுடன் நடத்தப்பட்டது. இதற்கெதிரான ரசிய சிறுபான்மையினப் போராட்டக் குழுக்களுக்கு ரசியா உதவிசெய்தது.
2008 இல் றுமேனியாவில் நடந்த நேற்றோ மாநாட்டில் ஜோர்ஜ் புஸ் யூனியர் உக்ரைனை நேற்றோவோடு இணைக்கும் திட்டத்தை முன்மொழிந்தபோது, அதை வன்மையாக எதிர்த்தவர்கள் ஜேர்மன் சான்சலர் அங்லா மேர்க்கல் உம் பிரான்சின் சாக்கோசியும் ஆவர். இது ரசியாவுடனான மோதலில் கொண்டு போய் நிறுத்தும் என அவர்கள் அன்றே எச்சரித்திருந்தார்கள். அதுவே இறுதியில் நடந்தது. உக்ரேன் நேற்றோவினது ஆடுகளமாக மாறியது. நேற்றோவின் விரிவாக்கத்தை ஆரம்பத்திலிருந்து எச்சரித்து வந்தது ரசியா. அது வரைந்த சிவப்புக் கோட்டுக்குள் நேற்றோ உக்ரைனின் முதுகில் பிடித்து தள்ளி போருக்குள் மாட்டிவிட்டது.
ட்றம்பின் வருகைக்குப் பின் ஏற்படுகிற மாற்றங்கள் யாரும் இலகுவில் எதிர்வுகூற முடியாத அதிரடிகளாக வெளிப்படுகிறது. அது அவரின் தனிப்பட்ட குணாம்சமாக எடுத்துக்கொள்ளப்பட முடியுமா என்பது கேள்விக்குறியாக இருப்பினும், சீனாவினதும் பிரிக்ஸ் அமைப்பினதும் எழுச்சி உலக ஒழுங்கையும் ஒருதுருவ உலகையும் அசைத்துப் பார்க்கும் நிலைக்கு வருவதை கவனத்தில் எடுத்து அமெரிக்கா தன்னை தகவமைத்து தனது உலகாதிக்க நிலையை (ஒருதுருவ ஒழுங்கை) பேண சில அசைவுகளை செய்யவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடே MAGA (Make America Great Again) என்ற கோசமாகும். அதை அவர் பொருளாதாரப் போராகவே அறிவிக்கிறார். எனவே இதுவரை அரசியல் போராக இருந்த நிலையை மாற்றி போருளாதாரப் போர் என்ற நிலைக்குள் வருகிறபோது, அரசியல் நண்பர்களாகவும் அமெரிக்காவின் இழுவை வண்டிகளாகவும் இருந்த கனடா, ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் இடம் ஆட்டம்காணத் தொடங்கியிருக்கிறது. இது மீண்டும் தடத்தில் ஓடுமா இல்லையா என்பதை எதிர்வுகூற முடியாதுள்ளது.
மூன்று பெரும் ஆதிக்கசக்திகளாக அமெரிக்கா சீனா ரசியா உள்ளன. தன்னை ஐரோப்பா என அடையாளப்படுத்தி உள்ளமைந்திருந்த ரசியாவை ஆசியா நோக்கி தள்ளியதோடல்லாமல் சீனாவின் நண்பனாகவும் ஆக்கியது, நேட்டோவினதும் மேற்குலகத்தினதும் அணுகுமுறை!. இதை ட்றம்ப் சரியாகவே கணித்திருக்கிறார். அவர் ரசியாவை தன் பக்கம் இழுக்க முடியாவிட்டாலும்கூட, ஒருவேளை சீனாவுடன் அமெரிக்கா போர் தொடுக்க வேண்டி ஏற்பட்டால், ரசியாவை அதில் ஈடுபடாமல் பிரித்து வைத்திருக்கவாவது சில தந்திரோபாயங்களை செய்தாக வேண்டி இருக்கிறது. நிக்சன் காலத்தில் அவர் அப்போதைய சோவியத் யூனியனுடன் சீனா உறவு கொண்டுவிடாதபடி சீனாவுடனான உறவைப் பேணிய தந்திரோபாயத்தை செய்தார். அதையொற்றிய வழிமுறையை ட்றம்ப் இப்போ சீனாவின் பக்கமாக ரசியாவை தள்ளாதிருக்க முயற்சி எடுக்கிறார்.
அது எந்தளவு சாத்தியமாகும் எனத் தெரியாது. ஏனெனில் அமெரிக்கா மீதான அபிப்பிராயத்தை புட்டின் அவளவு இலகுவாக மாற்றிக் கொள்வாரா என்பது கேள்விக்குறி. இது இப்படியிருக்க, ட்றம்ப் இன்னொரு படி மேலே போய் G-7 பணக்கார நாடுகளின் கூட்டமைப்பில் ரசியாவையும் உள்ளடக்கி G-8 அமைப்பாக மாற்றவேண்டும் என ஒரு முன்மொழிவை வைக்கிறார். ரசியாவின் எல்லைவரை நேற்றோவை கொண்டு போனது பிழை என்கிறார். ரசியா அதுகுறித்து பாதுகாப்பு அச்சம் கொண்டதை புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார். என்னவிதமான குத்துக்கரணம் இது. இவைகளெல்லாம் ட்றம்பின் ஒரு தந்திரோபாய அணுகுமுறை. எனவே உக்ரைனை கைவிட ட்றம்ப் முடிவு செய்திருக்கிறார். உக்ரைன் போரில் அமெரிக்க ஆதிக்கம் அற்ற நேட்டோவை வைத்து ஐரோப்பா என்ன செய்யப் போகிறது என்ற மிகப் பெரும் கேள்வி எழுகிறது.
புரூசல்ஸில் 12.2.25 அன்று நடந்த நேற்றோ பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் Pete Hegseth அவர்கள் மிகத் தெளிவான செய்தியொன்றை ஐரோப்பாவுக்கு தெரிவித்துள்ளார். “நாம் நேற்றோவை பலப்படுத்த வேண்டும். அதற்கான பங்களிப்பு ஐரோப்பாவிடமிருந்து அதிகரிக்க வேண்டும்” என்பதை வலியுறுத்திய அதேவேளை, உக்ரைன்-ரசிய போர் சமாதான வழியில் நிறுத்தப்பட வேண்டும் என்றார். 2014 இல் இருந்த உக்ரைன் எல்லையை திரும்ப பெறுவது சாத்தியமில்லை எனவும், கிரைமியாவை உக்ரைன் திரும்பப் பெறுவது சாத்தியமில்லை எனவும், உக்ரைன் நேற்றோவில் சேர்வது என்பது நடைபெறாத காாரியம் எனவும் அவர் சொன்னதோடு மட்டும் நிற்கவில்லை. உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதத்தை ஐரோப்பாதான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும், “நாம் (அமெரிக்கா) அதில் பங்கேடுக்க மாட்டோம்” என்றும் சொல்லியிருக்கிறார். ஒருவேளை உக்ரைனில் சமாதானப் படையை நிறுத்தும் நிலை உருவானால், அது ஐரோப்பிய, ஐரோப்பியரல்லாத படைகளாக இருக்க வேண்டும். எந்தச் சந்தர்ப்பத்திலும் ‘நேற்றோ’ என்ற லேபலின் கீழ் அது இருக்கக் கூடாது என்றார்.
இதேநேரம் மூனிச் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க துணை ஜனாதிபதி JD Vance அவர்கள் ஐரோப்பாவுக்கு (வெளிப்பாட்டுச் சுதந்திரம் உட்பட) ஜனநாயகம் பற்றி காட்டமாக வகுப்பெடுத்திருக்கிறார். என்னவிதமான கோமாளித்தனமும் அதிகாரத்துவமும் இது!. ஐரோப்பாவை இது அதிரவைத்திருக்கிறது. ஐரோப்பிய-அமெரிக்க உறவை பாதிக்க வைக்கக்கூடியளவு இந்த உரை அமைந்திருக்கிறது
பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும், பெரியண்ணன் உறவிலும் அமெரிக்காவில் தங்கியிருக்கும் ஐரோப்பா இந்த அதிரடி கூற்றுகளில் ஆடிப் போயிருக்கிறது. அமெரிக்காவின் இச் செய்தியானது ரசியாவிடம் தாம் தோற்றுப் போய்விட்டதை, அதன் யதார்த்தத்தை- வெளிப்படுத்துவதாக அமைகிறது எனவும், தற்போதைய “ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு” தகரத் தொடங்கியிருக்கிறது எனவும் அரசியல் விஞ்ஞானி மியர்ஸைமர் அவர்கள் கூறுகிறார். அமெரிக்காவின் மீது தொங்குநிலையில் ஐரோப்பா நிற்பதிலுள்ள ஆபத்தை ஏற்கனவே மக்ரோன் உணர்ந்திருந்ததால், ஐரோப்பாவுக்கான தனி இராணுவத்தை கட்டமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தில் முன்னர் முன்வைத்திருந்தார். அமெரிக்காவில் பாதுகாப்புக்கும்கூட தங்கியிருந்த ஒரு இழுவை வண்டியாக ஐரோப்பா இருக்கிறது. அமெரிக்கா கூப்பிட்ட இடங்களுக்கெல்லாம் இழுபட்டு போர்க்களம் ஏவியவர்கள் ‘நேற்றோ’வினர். அதாவது ஐரோப்பிய நாடுகளும் கனடாவும். இந்தவகை தொங்குநிலைதான் கனடாவையும் 51 வது மாநிலமாக ட்றம்ப் முன்மொழியும் திட்டமாகும் என்பது வேறு கதை.
“ரசியாவை பலவீனப்படுத்துவது” என்பது ஐரோப்பிய நலனிலிருந்து எழுந்ததால், அதை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என்றவாறான அணுகுமுறையோடு அமெரிக்கா தன்னை அதற்குள்ளிருந்து வெளியே இழுத்துக்கொண்டுவிட்டது. அது தனது தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டது. எதிர்காலத்தில் தன்னை உலக அதிகார சக்தியாக பேண வேண்டிய அரசியல் வியூகங்களை அது முதன்மைப்படுத்தத் தொடங்கியுள்ளது. அதனால்தான் அது ஐரோப்பாவோடு குடும்பச் சண்டையில் ஈடுபட்டாலும், நேற்றோவை உறுதியாக மேலும் கட்டமைக்கும் உறுதியுடனேயே இருக்கிறது.
சமாதானத்தை விட்டுக் கொடுப்புகளுடன் உக்ரைன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துகிறது. இதை ஐரோப்பா ஏற்றுக் கொண்டால் “ரசியாவைப் பலவீனப்படுத்த வேண்டும்” என்ற ஐரோப்பிய நோக்கத்தை நடுவழியில் விட்ட அவமானம் ஏற்பட்டுவிடும். ட்றம்ப் சொல்வதை ஏற்க மறுத்தால், அமெரிக்கா ஐரேப்பாவின் பாதுகாப்பை நடுவழியில் விடவைத்த தவறை ஐரோப்பா செய்ததாகிவிடும்.
அதேநேரம் அமெரிக்காவை ஐரோப்பா ட்றம்பின் கண்களுக்கு உள்ளால் பார்க்கவில்லை. “ஒரு ஆழ் அரசின் (deep-state) கட்டுமானத்தை பலவீனப்படுத்தி, அரசு (state) வடிவத்துள் நிறுத்த முனையும் ட்றம்ப் இன் முயற்சி இன்னும் நான்கு வருடங்களுக்குள் காலாவதியாகிவிடும்; மீண்டும் பழைய அமெரிக்க-ஐரோப்பிய தேன்நிலவு நடக்கும்” என ஐரோப்பிய ஒன்றியம் கருத இடமுண்டு. ட்றம்பின் காஸா குறித்த, கனடா குறித்த, கிறீன்லாண்ட் குறித்த, பனாமா கால்வாய் குறித்த அதிரடிகளை அமெரிக்க மக்கள்கூட ஏற்றுக்கொள்வார்களோ தெரியாது. ஆழ் அரசின் (deep state) தலைமைக் காவலரான சிஐஏ அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையை வகுத்து எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளையும் போருக்குள் தள்ளுகிற வரலாறு கொண்டது. எனவே ‘ஆழ் அரசு’ (deep-state) வடிவத்தின் அழிவை அல்லது அரசு (state) வடிவ உருமாற்றத்தை அது ஏற்றுக்கொள்ளும் என நம்ப இடமில்லை.
எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கிறபோது சமாதான இலக்கை ட்றம்ப் சாதிப்பது என்பது ஐரோப்பாவின் (பலவீனப்பட்ட) கைகளில் வந்து நிற்கிறது. இந்த யுத்தத்தை அமெரிக்காவானது நேற்றோ சகிதம் வழிநடத்திக் கொணர்ந்து, இப்போ ஐரோப்பாவையும் பலிக்கடாவான உக்ரைனையும் கைவிட யோசிப்பது ஒரு அவலச்சுவையாக மேடையேறியிருக்கிறது. போர் தொடங்கி சிலநாட்களில் இஸ்தான்புல் பேச்சுவார்த்தையை குழப்பி செலன்ஸ்கியை வெளியேறவைத்தது அமெரிக்காவும் பிரிட்டனும்தான். அப்போது தாம் நேற்றோவில் சேராமல் நடுநிலையாக இருப்போம் என செலன்ஸ்கி உடன்பாட்டுக்கு வர தயாராக இருந்தார். டொன்பாஸ் ரசிய சிறுபான்மையினருக்கான அதிகாரப் பகிர்வை முன்வைத்து வரையப்பட்ட முனிச் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ரசியா முன்வைத்திருந்தது. செலன்ஸ்கி அதையும் ஒப்புக்கொண்டிருக்கவோ அல்லது மாற்று தீர்வுகளை நோக்கியோ போக இந்த பேச்சுவார்த்தை வழியாட்டியிருக்கவும் கூடும். இவைகள் நடந்திருந்தால், உக்ரைனில் இவளவு அழிவுகளும் உயிர்ப்பலிகளும் ஏற்படாமல் செலன்ஸ்கியால் தவிர்த்திருக்க முடியும். மேற்குலகின் பலிக்கடாவாகப் போய், வந்தடைந்திருக்கும் ஒரு துயர வரலாறை எழுத வேண்டி வந்திராது.
ஐரோப்பாவுக்குள்கூட சுவிஸ் உம் ஆஸ்திரியாவும் நேற்றோவில் இணையாமல் நடுநிலையாக இருக்கின்றன. ரசியாவின் சகோதர நாடாக இருந்த உக்ரைனுக்கு ஏன் முடியாமல் போனது. அது ஐரோப்பாவினதும் நேற்றோவினதும் சூழ்ச்சியால் நிகழ்ந்தது. அந்த சூழ்ச்சி 2014 இல் அரங்கேறி அதன் தொடர்விளைவுகள் 2022 போரில் கொணர்ந்து நிறுத்தியது. உக்ரைன் அதிபர் இந்த சூழ்ச்சி வலைக்குள் மாட்டுப்பட்டு தனது நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றார். இன்று இருபது வீத நிலப் பிரதேசங்களை ரசியாவிடம் பறிகொடுத்து, நேற்றோ அங்கத்துவமும் இல்லாமல் தொடங்கிய இடத்தில் வந்து நிற்கிற அவலம் நிகழ்ந்துள்ளது. இவையெல்லாம் உக்ரைன் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்திற்கு அருகாமையில் செலன்ஸ்கியை நிறுத்தியிருக்கிறது. ட்றம்பின் தீர்வை அவர் ஏற்றுக்கொள்வும் முடியாத நிலையில் மேற்குலகம் அவரை சூழ்நிலையின் கைதியாக மாற்றியுள்ளது. மறுகரையில் ரசியாவை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்த வகைதொகையின்றி போட்ட பொருளாதாரத் தடை ‘பூமராங்க்’ ஆக மாறி ஐரோப்பாவை தாக்கியுள்ளது. மிக முக்கியமாக தொழில்நுட்ப ரீதியில் பலமாக தன்னை நிலைநிறுத்தி வைத்திருந்த ஜேர்மனி பலத்த அடிக்கு உள்ளாகியிருக்கிறது.
ட்றம்பின் சமதானத் திட்டத்தை செலன்ஸ்கி ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடத்து, 2014 இல் நிகழ்த்தியதுபோல் இன்னொரு ஆட்சிமாற்றத்தை அமெரிக்கா நிகழ்த்தி தனது பெரியண்ணன் பாத்திரத்தை நிரூபிக்கவும் இடமுண்டு. அதன் அறிகுறியாக அண்மையில் உக்ரைன் பாராளுமன்றத்தில் -2014 இன் அமெரிக்க சதிநாயகன்- புறொசெங்கோவின் ஆதரவாளர்கள் குழப்பம் விளைவித்ததையும், செலன்ஸ்கிக்கு எதிராக கோசம் எழுப்பியதையும் கண்டோம்.
இவ்வாறான நிலைமைகளை பார்க்கும்போது, உக்ரைனுக்கு சமாதானம் அவளவு எளிதில் கைகூடுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உக்ரைனின் இறைமையை ரசியா அங்கீகரிக்கும் விதத்திலும், ரசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உக்ரைன் நேற்றோவின் களமாக அமையாத உத்தரவாதத்துடனும், டொன்பாஸ் ரசிய சிறுபான்மையினர் குறித்த உடன்பாடுகளுடனும் இருபக்க விட்டுக் கொடுப்புகளுடன் சமாதானம் உருவாகுமா?
- ravindran.pa
- 17022025
- Thanks for image: Aljazeera
