நிம்மதியாக இருக்கப்போவதில்லை!

இஸ்ரேல் சியோனிஸ்டுகள் ஓரரசுக் கொள்கையை தீர்வாக ஏற்றுக் கொள்ளாமலிருப்பதற்கான காரணம் தூர நோக்குக் கொண்டதாகும். அப்படியான ஒரு இஸ்ரேலுக்குள் அரபு இன மக்களின் பெரும்பான்மை நிறுவப்படலாம் எனவும், அது தமது சியோனிச அரசுக்கு அழிவைத் தந்துவிடலாம் எனவும் அஞ்சினர். இதன் விளைவாக அவர்கள் இனச்சுத்திகரிப்பு செய்வதன் மூலம் காஸாவை முதலில் தரிசு நிலமாக இஸ்ரேலுடன் இணைக்கத் திட்டமிட்டார்களா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது.

ஹமாஸின் 2023 ஒக்ரோபர் தாக்குதலை சாதகமாகப் பயன்படுத்தி, காஸா மக்களை ஓய்வற்று குண்டுவீசி அழித்ததோடல்லாமல், அவர்களை வடக்கு காஸாவிலிருந்து விரட்டி தென் காஸாவுக்குள் நெருக்கி ஒதுக்கினார்கள். அவர்களை எகிப்திய சினாய் பகுதிக்குள் ஒதுக்கிக் கொண்டுபோக அவர்கள் எடுத்த முயற்சியை எகிப்து அரசானது தனது எல்லையை மூடி முறியடித்தது. அது இஸ்ரேலின் நோக்கத்துக்குக் கிடைத்த தோல்வி ஆகும். (அந்த எல்லைவரை இடம்பெயர்ந்த பலஸ்தீன மக்களின் மீதான எகிப்தின் மனிதாபிமானமற்ற செயலாகவும் இது இன்னொரு கோணத்தில் விமர்சிக்கப்பட்டது).

அத்தோடு இஸ்ரேல் அரசு காஸாவை அந்த மண்ணின் மனிதர்கள் வாழ முடியாத பிரதேசமாக மாற்றும் முனைப்பில் நீர்வழங்கலை கட்டுப்படுத்தினார்கள். உணவுகளை கட்டுப் படுத்தினார்கள். வைத்தியசாலைகள், பல்கலைக் கழகங்கள், வீடுகள் உட்பட 95 வீதத்துக்கு மேற்பட்ட கட்டடங்களை குண்டுவீசி தகர்த்தார்கள். இன்று ஒரு வைத்தியசாலைகூட அங்கு இல்லை.

இப்போ டொனால்ட் றம்ப் இன் அழுத்தத்தால் போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் உடன்பட்டதாக கதைகள் வருகின்றன. உண்மையில் இதன் பின்னால் சதித் திட்டம் இருக்கிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இந்த இனப் படுகொலையை செய்யும் இஸ்ரேலுக்கு தாராளமாக ஆயுத உதவிகளை வழங்கிக் கொண்டிருந்தது அமெரிக்கா. பைடன் கடைசிக்காலம் நிறுத்திவைத்த 2000 தொன் எடைகொண்ட ‘கொத்துக் குண்டை’ ட்றம்ப் மீண்டும் வழங்க உடன்பட்டிருக்கிறார். இது அவரே சொல்கிற போர்நிறுத்த நல்லெண்ணத்துக்கு ஒத்துப் போகிற செயலா என்ன.

அதுமட்டுமல்ல, காஸா மக்களை எகிப்தும் ஜோர்டானும் தற்காலிகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கட்டளைப் பாணியில் தெரிவித்திருக்கிறார். அந்த இரு நாடுகளும் அதை எதிர்த்திருக்கின்றன. இதுதான் அந்த “மூவரசுத் திட்டம்”. பலஸ்தீனத்தின் அழிவை சாத்தியமாக்கும் இன்னொரு கள்ள நோக்கம் கொண்ட வழிமுறையாக, “இஸ்ரேல், எகிப்து, ஜோர்டான்” நாடுகளைக் கொண்ட மூவரசுத் திட்டம் ஆகும். ‘தற்காலிகம்’ என்பதை நிரந்தரமானதாக்கும் கள்ள நோக்கத்துடன் எகிப்து மீதும் ஜோர்டான் மீதும் இந்த அழுத்தம் ட்றம்பின் முன்கதவாலும் இஸ்ரேலின் பின்கதவாலும் மேற்கொள்ளப்படுகிறதா என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. இடிபாடுகளை அகற்ற அவர்கள் காஸாவுக்குள் இருக்கப்படாதாம்.

ஆனால் தெற்கிலிருந்து வடக்கு காஸாவுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் மக்கள் “இது எமது மண். அதைவிட்டு நாம் எங்கும் போக மாட்டோம். இறந்தாலும் இங்கேதான் இறப்போம்” என ஊடகங்களுக்கு கத்திச் சொல்கிறார்கள். ட்றம்பின் ‘இடிபாட்டு காரணம்’ (இடிபாடுகளை அகற்றி மீண்டும் காஸாவை நிர்மாணிக்க மக்களை எகிப்து மற்றும் ஜோடானுக்குள் அனுப்பும் திட்டம்) பொதுப்புத்திக்கு தர்க்க ரீதியில் சரிபோல இருக்கலாம். அதன் ஆபத்து பலஸ்தீனத்தின் அழிவுக்கு வித்திடலாம் என்பதை புத்திஜீவிகள் சொல்லிச் செல்கிறார்கள். அதுகுறித்த முடிவை அந்த மக்களே எடுக்க வேண்டும்.

காஸாவில் அகதிகளாகவேனும் மக்கள் வாழ்கிறார்கள். ஹமாஸ் உம் வாழ்கிறது. தாம் கைப்பற்றிய -பலிக்கடாவான- இஸ்ரேல் பணயக்கைதிகளை இஸ்ரேலின் கொடுங் குண்டுவீச்சுக்கு இடையிலும் காப்பாற்றி வைத்து, இப்போ படிப்படியாக திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஹமாஸ் இயக்கத்தினர்!. இந்த இடிபாடுகளுக்குள்ளும் கூட, மனிதர் வாழத் தகுதியற்ற நிலமல்ல காஸா என்பதன் சாட்சிகள் இவை. அவர்கள் ஏன் தாம் விரும்பாமலே எகிப்துக்கு உள்ளும் ஜோர்தானுக்கு உள்ளும் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தால், அதில் தவறு என்ன இருக்க முடியும். அது அவர்களின் உரிமை.

அதுமட்டுமல்ல, 1993 இல் ஒஸ்லோ ஒப்பந்தத்தை ஐநா வாக்கெடுப்பின் மூலம் உலக நாடுகளும் மற்றும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் ஏற்றுக்கொண்டன. இதன்படி ஈரரசுத் தீர்வு என்பது 1967 இல் இருந்த நிலவரைவின் அடிப்படையில் பலஸ்தீனம், இஸ்ரேல் என்ற இரு நாடுகளை அங்கீகரித்தலாகும். சிறுபான்மை யூத இன மக்களுக்கு பெரும்பகுதி நிலத்தையும், பெரும்பான்மை பலஸ்தீனர்களுக்கு சிறுபகுதி நிலத்தையும் கொண்ட -பலஸ்தீனத்துக்கு பாதகமாக அமைந்த- தீர்வாக அது அமைந்த போதும், பலஸ்தீனத்தின் இருப்புக்கு அதை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் பலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யசீர் அரபாத் க்கு ஏற்பட்டது.

அதைக்கூட நடைமுறைப்படுத்தாமல் கிழக்கு ஜெரூசலத்தில் 236’000 பேரையும், மேற்குக் கரையில் 450’000 பேரையும் -அதுவும் குறிப்பாக சியோனிச மூளைச்சலவை செய்யப்பட்டவர்களை- ஆயுத அனுமதியுடன் குடியேற்றியிருக்கிறது, இஸ்ரேலிய அரசு!. இன்றுவரையான கணக்கெடுப்பு இது. இன்று அந்த அரசு விரும்பினால்கூட இந்த குடியிருப்பாளர்களை அகற்ற முடியாதளவு அவர்கள் தனிப் பெரும் சக்தியாக -அமெரிக்கா உட்பட்ட சர்வதேச சியோனிஸ்டுகளின் ஆதரவுடன்- வளர்ந்துள்ளார்கள். இவர்களே இன்றைய ஈரரசுத் திட்டத்தின் மிகப் பெரும் எதிரிகள்!

இன்றைய காஸா நிலப்பரப்பு 365 சதுர கி.மீ ஆகவும் மேற்குக்கரை 5’655 சதுர கி.மீ ஆகவும், அதாவது மொத்தமாக பலஸ்தீன நிலப்பரப்பு 6’020 சதுர கி.மீ ஆக சுருங்கியிருக்கிறது. இஸ்ரேலோ 20’770 சதுர கி.மீ பரப்பளவு நிலமாக வளர்ந்துபோயிருக்கிறது.

“இஸ்ரேல் நடத்தும் போரல்ல இது. அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து நடத்தும் போர்” என்கிறார் விஜய் பிரசாத் அவர்கள். “இஸ்ரேல் தனது நோக்கத்தில் தோல்வியடைந்திருக்கிறது” என்கிறார் சிக்காக்கோ பல்கலைக் கழக பேராசிரியரும் அறியப்பட்ட புத்திஜீவியுமான மியர்ஸைமர் அவர்கள். “இனச்சுத்திகரிப்பை செய்யும் இஸ்ரேலின் திட்டமும் தோல்வியடைந்திருக்கிறது. ஹமாஸை வேரோடு அழித்தொழிக்கும் திட்டமும் தோல்வியடைந்திருக்கிறது. இன்னும் சேர்த்துச் சொன்னால், லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாவை இல்லாமலாக்கும் திட்டமும் தோல்வியில் முடிந்திருக்கிறது” என்கிறார் அவர். ஈரானை பலவீனப்படுத்த நினைப்பது அணுவாயுதப் போரை விளிம்பில் கொணர்ந்து நிறுத்தவல்லது என அவர் எச்சரிக்கிறார்.

ஆக மொத்தம் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் பலஸ்தீன மக்கள் மட்டுமல்ல இஸ்ரேலிய மக்களும் நிம்மதியாக இருக்கப் போவதில்லை. ஏன், மத்திய கிழக்கும் நிம்மதியாக இருக்கப் போவதில்லை!

  • ravindran.pa
  • 01022025

Leave a comment