குழந்தைகளை குறிப்பிடாதீர்கள்!
*
குழந்தைகளை குறிப்பிடாதீர்கள்
மரணித்த குழந்தைகளை பெயரிடாதீர்கள்
மக்களுக்கு அந்தப் பெயர்கள் தெரியக் கூடாது
அந்தக் குழந்தைகளின் பெயர்கள் மறைக்கப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாக இருக்க வேண்டும்
அந்தக் குழந்தைகள் பெயரிலிகளாகவே இந்த
உலகத்தை விட்டு நீங்க வேண்டும்
மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயர் எவருக்குமே தெரியக் கூடாது.
மரணித்த அந்தக் குழந்தைகளின் பெயரை எவருமே உச்சரிக்கக் கூடாது
அந்தக் குழந்தைகளுக்கு பெயர்கள் இருந்தன என்பதை
நினைத்துப் பார்க்கவும் கூடாது.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை
தெரிந்து வைத்திருப்பது ஆபத்தானது என்பதை
மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை தெரிந்து வைப்பதிலிருந்து
மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்கள் ஒரு
காட்டுத் தீயைப் போல பரவிவிடக் கூடும்.
அந்தக் குழந்தைகளின் பெயர்களை
மக்கள் தெரிந்து கொண்டால் அது
அவர்களுக்கு பாதுகாப்பற்றது
மரணித்த அந்தக் குழந்தைகளை பெயரிடாதீர்கள்
மரணித்த அந்தக் குழந்தைகளை நினைவுகூராதீர்கள்
மரணித்த அந்தக் குழந்தைகளை நினைக்காதீர்கள்
அவர்களை,
“மரணித்த குழந்தைகள்” என சொல்லாதீர்கள்!
2014 இல் காஸாவில் இஸ்ரேலிய குண்டுவீச்சில் 150 குழந்தைகள் கொல்லப்பட்டார்கள். மனித உரிமை அமைப்பான B’Tselem அந்தக் குழந்தைகளின் பெயர்களை உள்ளடக்கி ஒரு விளம்பரத்தை உருவாக்கி, அதை இஸ்ரேலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முயற்சித்தார்கள். அது அதன் நிர்வாகத்தால் தடைசெய்யப்பட்டது. இதுகுறித்து பிாத்தானிய கவிஞர் Michael Rosen அவர்கள் எழுதிய கவிதைதான் மேலே உள்ளது.
*
2024 டிசம்பரில் காஸாவில் Community Training Centre for Crisis Management (CTCCM) இனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நம் ஆன்மாவை அழவைக்கிறது.
காஸாவில் உயிர்தப்பி இருக்கும் குழந்தைகளில்,
- 79 வீதமானோர் கொடுங் கனவால் அவதிப்படுகிறார்கள்.
- 87 வீதமானோர் கொடுமையான அனுபவத்தை சந்தித்திருக்கிறார்கள்
- 38 வீதமானோர் படுக்கையில் சிறுநீர் கழிகிறது
- 96 வீதமானோர் தாம் கொல்லப்படுவோம் என நம்புகிறார்கள்.
இந்தக் கடைசி வரியைவிட வேறென்ன வார்த்தைகள் வேண்டும், அவர்களின் வலி குறித்து உணர?
*
2023 ஒக்ரோபரிலிருந்து 2025 ஜனவரி வரை வெறியாட்டம் ஆடிய இஸ்ரேலின் குண்டுவீச்சில் -உத்தியோகபூர்வ கணக்கெடுப்பின்படி- கொல்லப்பட்ட 47000 பேர்களில் 15000 க்கு மேற்பட்டவர்கள் குழந்தைகள். 1948 இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட நாக்பா படுகொலையிலிருந்து இன்றுவரை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வெறியாட்டத்தில் கொல்லப்பட்ட குழந்தைகள் இலட்சத்தை தாண்டியிருக்கும் என்பது வேறு கதை. இன்னும் முடிந்தபாடில்லை!
(தகவல்: the tricontinental. org)