இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் 2025
“போரின்றி அமையாது இவ் உலகு” என்ற எல்லைக்கு இந்த உலகம் பயணிக்கத் தொடங்கி நூற்றாண்டுகளாகிவிட்டது. இருந்த போதும் போருக்கு எதிரான குரல்களுக்கும் அதே வயதுதான். போர் வெற்றி என்பது ஓட்டை ஒடிசல் பாத்திரத்தில் இசை அமைத்து, அதை இனிமையானது என அரசுகளும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் பரப்பும் செய்தி. அவை மக்கள் இழந்த வாழ்வு குறித்தும் உளவியல் நெருக்கடிகள் குறித்தும், பண்பாட்டு அழிவுகள் குறித்தும் கணக்கெடுப்பதில்லை.
பலஸ்தீனம் இந்த நூற்றாண்டின் போரினுள் அகப்பட்டு சுழலும் ஒரு சுழி. குறிப்பாக 7 ஒக்ரோபர் 2023 இலிருந்து அது உச்சக் கட்டமடைந்து, காஸா மக்கள் சுமார் 47000 பேரைக் கொன்றும், பல ஆயிரக்கணக்கானோரை அங்கவீனர்களாக்கியும் உள்ளது. இஸ்ரேலிய மக்களையும் அது பாதிக்கவே செய்தது. இஸ்ரேலின் போர்வெறிக்கு இஸ்ரேலிய மக்கள் இருநூறு பேருக்கு மேல் பணயக்கைதிகளாக ஆக்கப்பட்டனர் . அவர்களில் சுமார் 100 பேர் ஏற்கனவே ஒரு போர்நிறுத்த ஒடிசல் ஒப்பந்தத்தின்போது விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகு இஸ்ரேல் தொடர்ந்த போரில் எஞ்சிய பணயக் கைதிகளில் சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மற்றையோர் நிச்சயம் உடல், உள பாதிப்புக்கு உட்பட்டிருப்பர். இவர்கள் குறித்தும் இஸ்ரேலிய அரசுக்கு உளசுத்தியாக கவலையில்லை. காஸா மக்களின் துன்பங்களும் இழப்புகளும் உளவியல் சிதைவுகளும் இஸ்ரேலிய மக்களின் இழப்புகளோடு ஒப்பிட முடியாதளவு பேரழிவு நிறைந்தது.
இவளவு நாள் உச்சபட்ச லெவலில் யுத்தம் செய்தும், பணயக் கைதிகளை இஸ்ரேலினால் மீட்க முடியவில்லை. அவர்கள் எங்கே இருக்கிறாாகள் என்ற ஒரு துப்பைக்கூட பலம் பொருந்திய மொசாட் படையாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் அதிருப்திகள் ஊர்வலங்களாக ஆர்ப்பாட்டங்களாக வெளிப்படுகின்றன. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளில், தீவிர சியோனிசவாத கட்சிகள் எந்த உடன்பாட்டுக்கும் அல்லது போர்நிறுத்தத்துக்கும் உடன்பட மறுத்தே வந்திருக்கின்றனர். அவர்களை திருப்திப்படுத்தாமல் நெத்தன்யாகுவுக்கு அரச வாழ்வு இல்லை. பணயக் கைதிகளை -அவர்கள் நினைத்ததுபோல்- மீட்டு மக்களை திருப்திப்படுத்தவுமில்லை. போர்க்குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவித்தும் விட்டது. சர்வதேசத்திடமிருந்து இஸ்ரேல் தனிமைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக அந்த நாடுகளின் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
இவைகளெல்லாம் உள்ளக நெருக்கடிகளாக இருக்க புறநெருக்கடிகளாக இருந்த ஹமாஸையும் ஹிஸ்புல்லாவையும் மட்டுமல்ல அதற்கு தூணாக நின்ற ஈரானையும் இஸ்ரேல் பலவீனப்படுத்தியுள்ளது. இப்போ அமெரிக்காவின் அழுத்தத்தினால் போர்நிறுத்த பேரத்துக்கு வரவேண்டிய தேவை எழுந்துள்ளது. 20ம் தேதி பொறுப்பேற்கவிருக்கும் ட்றம்ப் உம், பதவி உருகி முடியும் பைடன் உம் இந்த போர்நிறுத்த விடயத்தில் சங்கமித்திருக்கிறார்கள். கட்டார் தலைமையில் எகிப்தும் சேர்ந்து பல மாதங்களாக மேற்கொண்ட முயற்சியில் இந்த போர்நிறுத்த பேரம் ஒரு மைல் கல்லா அல்லது சுண்ணாம்புக் கல்லா என தெரியவில்லை. ஊடகங்கள் எல்லாம் போர்நிறுத்த ஒப்பந்தம் வெற்றி என அறிவிக்கின்றன.
போரால் களைத்து மரணத்தின் விளிம்புகளில் உலவித் திரிந்த பலஸ்தீன காஸா மக்களுக்கு இது ஒரு பெரும் மனவழுத்தத்திலிருந்தான விடுதலை. அதனால் கொண்டாடுகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சி நியாயமானது. இஸ்ரேலிய தரப்பும் இதை வரவேற்பதாக செய்திகள் சொல்கின்றன. இந்த போர்நிறுத்த பேரத்தை சரியாக முடிப்பதிலோ, கள்ளநோக்கம் கொண்டு சாதிப்பதிலோ இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த நோக்கமும் இல்லை என எதிர்பார்க்கவே முடியாது. அமெரிக்காவும் இஸ்ரேலும் பிரிக்க முடியாத அரசியல் பிணைப்பு கொண்டவை. எது எப்படியோ காஸா மக்களுக்கும் இஸ்ரேலியப் பணயக்கைதிகளின் உறவுகளுக்கும் போர்நிறுத்தம் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். அதனால் வரவேற்போம்.
இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் 3 கட்டங்களை உள்ளடக்கியது.
முதலாவது கட்டம்
- காஸாவில் இடம்பெயர்ந்து அகதிகளாக மக்கள் செறிவாக இருக்கும் இடங்களிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் வெளியேறுவர்.
- முதல் கட்டமாக 33 பணயக் கைதிகள் ஹமாஸ் இனால் விடுவிக்கப்படுவர்.
- அதற்கு பதிலீடாக இஸ்ரேலிய சிறையிலுள்ள 100 பலஸ்தீன மக்கள் விடுதலையாவர்.
இரண்டாவது கட்டம் - இன்னொரு தொகுதி பணயக் கைதிகள் விடுதலையாவர்.
- காஸாவிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேறும்.
- நிரந்தரமான போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கும்.
மூன்றாவது கட்டம் - காஸாவை முழுமையாக மீள கட்டியமைக்கும் பணி தொடங்கும்.
- இடம்பெயர்ந்து அல்லாடிய எல்லா மக்களும் காஸாவில் தத்தமது இடங்களுக்குத் திரும்புவர்.
- எஞ்சிய எல்லா பணயக் கைதிகளும் இஸ்ரேல் திரும்புவர்.
இந்த பேர்நிறுத்த ஒப்பந்தம் வரும் 19ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என செய்திகள் சொல்கின்றன. 20ம் தேதி ட்றம்ப் இந்தச் செய்திப் பரிசுடன் பதவியேற்பார் என்கிறார்கள். இருக்கட்டும். நெத்தன்யாகுவும் அவரது கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ள இந்த ஒப்பந்தத்தை அல்லது பேரத்தை அவர் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் முன்வைத்து அனுமதி பெற வேண்டும். அதற்காக இன்று காலை (16.01.25) கூடவிருந்த அமைச்சரவைக் கூட்டத்தை திடீரென இஸ்ரேல் அரசாங்கம் பின்போட்டுள்ளது. தீவிர சியோனிஸ்டுகளான இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரும் மற்றும் நிதி அமைச்சரும் அவர்தம் அரசியல் கட்சிகளும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றன. ஒருவேளை இது வாக்கெடுப்பில் வெற்றிபெற்று இது நடைமுறைக்கு வந்தால் தாம் அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதை எப்படி போர்நிறுத்தத்த பேரத்தில் பங்குகொண்ட சக்திகள் வெற்றிகொள்ளப் போகிறார்கள் என தெரியவில்லை.
இவையெல்லாம் நடந்து, காஸாவின் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கிற சக்திகளாக அந்த மக்கள் இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. அது ஹமாஸ் அல்ல எனவும் பலஸ்தீன மக்களின் இன்னொரு சக்தியாக இருக்க வேண்டும் எனவும் நெத்தன்யாகுவும் அமெரிக்காவும் சொல்கிறார்கள். இந்த சக்தி யார்?. இந்த இரு நாடுகளும் காஸாவில் ஒரு பொம்மை அரசை உருவாக்குவது நோக்கமா? அப்படி நிகழின், ஹமாஸின் எதிர்வினை என்னவாக இருக்கும்? பலஸ்தீன மக்களின் எதிர்வினை என்னவாக இருக்கும்?. சர்வதேசம் அங்கீகரித்த 1967 ஐநா வரைவின் படியான பலஸ்தீனம், இஸ்ரேல் என்ற “இரு அரசு” கொள்ளை நடைமுறையில் வருமா? என தொடர் நெருக்கடிகளையெல்லாம் வெற்றிகொள்ள மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.
என்றபோதும் அரசியல் தீர்வுகள் என்பது நமது விடுதலைப் போராட்டம் மோதியழிந்த “அடைந்தால் மகாதேவி அன்றேல் மரணதேவி” என்ற சூளுரைத்தலால் எப்போதும் எட்டப்படுவதில்லை. அது கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் அரசியல் வெற்றியை நோக்கி நகர்த்தும் அரசியல் சாணக்கியமும், அணுகுமுறையும் ஆகும். பலஸ்தீன தரப்பிலும் ஹமாஸ் இயக்கமும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் தாம் தோற்றுப் போகிற இடங்களையும் காரணங்களையும் இனம்கண்டு தமது போராட்டத்தை செழுமைப்படுத்தவும் அணுகுமுறைகளில் ஏற்பட்ட தவறுகளை அடையாளம் காணவுமான காலகட்டமாகவும் இந்த போர்நிறுத்தம் அமையலாம். எனவே இந்த போர்நிறுத்த பேரம் வெற்றியடைந்தால் அது பலஸ்தீன மக்களுக்கு ஒரு மைல்கல். தோல்வியடைந்தால் இஸ்ரேலுக்கு மைல் கல் அல்ல. அது இன்னுமின்னும் உலக நாடுகளிடமிருந்து தன்னை தனிமைப்படுத்தும் பாதகமான விளைவை அது சந்திக்கும்.
இப்போ பலஸ்தீனம், இஸ்ரேல் இரு பகுதி மக்களும் இந்த போர்நிறுத்த பேரத்தை வரவேற்று வீதிகளில் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றனர். நம்பிக்கையீனத்தை விடவும் நம்பிக்கையை முன்வைத்தல்தான் வாழ்தலின் அல்லது இருத்தலின் ஆதாரம். அவர்களின் அந்த மகிழ்ச்சியை புரிந்துகொள்வோம். வரவேற்போம். போர்நிறுத்த பேரம் நிரந்தர போர்நிறுத்த ஒப்பந்தமாகி இரு அரசு தீர்வை நோக்கி பயணிக்க அவாவுறுவோம்!
- ravindran pa
- 16012025
- Thanks for images: Aljazeera, nymag .com

