குழாயடி அரசியல்

சிரியா

சிரியாவின் ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்கு ஆற்றிய இன்னொரு காரணியானது “பைப்லைன் அரசியல்” (அதாவது இயற்கை எரிவாயுக் குழாய் அரசியல்) என சொல்லப்படுகிறது. இதன் அரசியல் ஆட்டநாயகர்கள்; துருக்கி, அமெரிக்கா, கட்டார், ஈரான் நாடுகளாகும். ரசிய-உக்ரைன் போருக்கு முன்னரே, ஐரோப்பாவுக்கு ரசியா குழாய் மூலம் வழங்கிக் கொண்டிருந்த எரிவாயு வியாபாரத்தின் இடத்தை தாம் கைப்பற்றிக் கொள்ளும் முனைப்பில் இந்த நாடகம் அரங்கேறத் தொடங்கியிருந்தது.

இந்த குழாய் சிரியாவை ஊடறுத்துச் செல்வதால் சிரியாவின் ஒப்புதல் இவர்களுக்கு தேவைப்பட்டது. யார் அரசை நடத்துகிறார்களோ அவர்களே இந்த வியாபாரத்தை கட்டுப்படுத்தும் வலுவையும் கொண்டிருப்பர் என்பதற்கு ஏற்ப, சிரிய அரசை நடத்திய -ஸியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த- அசாத் இந்த அதிகாரத்தை தன்வசம் வைத்திருந்தார்.

அமெரிக்க கூட்டாளியான கட்டார் தனது எரிவாயுவை திரவநிலை வாயுவாக்கி (எல்.என்.ஜி) கடல்வழியான சுற்றுப் பாதையால் ஐரோப்பாவுக்குள் கொண்டு வரும் நிலை இருக்கிறது. இந்த முறையானது அதன் விலையை அதிகரிப்பதோடு, பெருமளவான வியாபாரத்துக்கும் சாதகமாக இல்லை. எனவே கட்டார் எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டத்தில் இறங்கியது. அதன்படி கட்டார் க்கும் துருக்கிக்கும் இடையிலான நீண்ட குழாயமைப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டது.

அது ஓயில் மற்றும் எரிவாயுவை துருக்கியினூடாக ஐரோப்பாவுக்குள் கொண்டுவரும் 1500 கி.மீற் நீள பாதை கொண்ட (பத்து பில்லியன் டொலர்) திட்டமாகும். இது 2009 இல் ஆரம்பிக்கப்பட்டு, ஒரு தசாப்த காலத்தில் நிர்மாணித்து முடிக்கப்பட திட்டமிடப்பட்டது. கட்டாரிலிருந்து தொடங்கி, சிரியாவின் பெரும் நிலப்பரப்பினை ஊடறுத்து, துருக்கியை வந்தடைந்து, கிழக்கு ஐரோப்பிய நாடான பல்கேரியாவுக்குள் சென்றடையும் குழாய்வழித் திட்டம் அது. ஆனால் அசாத் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உடன்படவில்லை. அமெரிக்கப் பின்னணியில் அமைந்த திட்டமாதலால் அவர் இதை தனது அரசியல் நலன் சார்ந்து புறக்கணித்திருந்தார்.

ஆனால் இன்னொரு குழாயமைப்புத் திட்டமான ஈரானின் திட்டத்துக்கு அசாத் 2012 இல் ஒப்புதல் அளித்து கைச்சாந்திட்டார். இதற்கு ரசியா ஆதரவாக இருந்தது. இந்தக் குழாய் ஈரான் இல் தொடங்கி ஈராக், சிரியா நாடுகளினூடாகச் சென்று ஐரோப்பிய நாடான கிரேக்கத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இது 2016 இற்குள் நிர்மாணித்து முடிக்கப்பட இருந்தது. ஆனால் அது நடைமுறைக்கு வர முடியாதபடி அரபு வசந்தப் போராட்டமும் சிரிய யுத்த ஆரம்பமும் தடைகளாக அமைந்தன. 2011 இலிருந்து மேற்குலகின் சிரியா மீதான பொருளாாதாரத் தடைகளால் சிரிய மக்கள் பட்டினியை நோக்கி தள்ளப்பட்டனர்.

பாரசீக வளைகுடாவின் தரைப் பகுதியின் கீழ் 3000 மீற்றர் கீழே அமைந்துள்ள இயற்கை எரிவாயு வயலின் மூன்றில் ஒரு பகுதியை ஈரானும் மூன்றில் இரண்டு பகுதியை கட்டாரும் வளமாகக் கொண்டுள்ளன. உலகின் மிகப் பெரிய எரிவாயு வயல் என இது வர்ணிக்கப்படுகிறது.

2009 இல் வரையப்பட்ட கட்டாரின் குழாயமைப்புத் திட்டத்தால் இலாபமடைய காத்திருந்த துருக்கி மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாமே அசாத் க்கு எதிராக கிளம்பின. கட்டாரிலிருந்து தொடங்கி சவுதி அரேபியா -ஜோர்டன் -சிரியா -துருக்கி ஊடான பல்கேரியா வரையான இக் குழாயமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அசாத் இன் ஆட்சியை வீழ்த்த வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதற்கிடையில் ஐரோப்பாவின் தொழில்துறையையும் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் செழுமைப்படுத்த ரசியாவின் ஐரோப்பாவுக்கான இரு குழாய்கள் வழியே மலிவாக பாய்ந்துகொண்டிருந்த எரிவாயு 2022 தொடங்கிய உக்ரைன்- ரசிய யுத்தத்தினால் தடைப்பட்டுப் போனது. (அவை அநாயமதேயமாக கடலடியில் குண்டுத் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டது). இதிலிருந்து மீள அசாத் ஆட்சியை வீழ்த்தி கட்டார்-துருக்கி குழாய்த் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஐரோப்பாவுக்கு ஏற்பட்டது. ஐரோப்பாவை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றும் அவசரமும் அவசியமும் அது.

எனவே தாம் ‘பயங்கரவாதிகள்’ என அறிவித்த ஐஎஸ் மற்றும் அல்கைடா வழிவந்தவர்களையும், ஏற்கனவே அசாத் இன் ஒடுக்குமுறைக்கு எதிராக தோன்றியிருந்த பிராந்தியக் குழுக்களையும், எஸ்.என்.ஏ (சிரிய தேசிய இராணுவம்) இனையும் அசாத் ஆட்சியை வீழ்த்தும் பொது நோக்கத்தில் ஒன்றிணைத்து வெற்றிகண்டுள்ளன. இதில் பெரும் பங்கு கொண்டது துருக்கி. அது தானே உருவாக்கி பயிற்சி கொடுத்து ஆயுதங்கள் வழங்கி குர்திஸ் மக்களுக்கு எதிராக ஏவிவிட்டதுதான் “சிரிய தேசிய இராணுவம்” (எஸ்.என்.ஏ) ஆகும்.

அசாத் க்கு எதிரான இந்த வானவில் கூட்டணிக்கு கட்டார் 3 பில்லியன் டொலர்களை வழங்கியது. தனது அரசியல் நலன் சார்ந்து தானே உருவாக்கி தேவைக்கேற்ப பயங்கரவாதிகள் என பட்டம் வழங்கும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள் ஐஎஸ், அல்கைடா வழித்தோன்றலான எச்.ரி.எஸ் இற்கு பெருமளவு ஆயுதங்களைக் கொடுத்து, பயிற்சியும் கொடுத்து எல்லாம் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

அசாத் க்கு ஆதரவாக 2015 இல் ரசியா தனது வான்படைத் தளத்தை சிரியாவில் நிறுவி, ஐ.எஸ் க்கு எதிராக, அதாவது பயங்கரவாதிகளுக்கு எதிராக சிரியாவின் இறையாண்மையைக் காப்பாற்றுதல் என்ற பெயரில் செயற்பட்டது. ரசியாவுக்கு இந்த குழாய் அரசியலில் பெரிய ஈடுபாடு இருக்கவில்லை. ஆனால் மேற்குலகின் தலையீட்டை இன்னொரு முனையில், மத்திய கிழக்கில், கட்டுப்படுத்துவதற்காகவும் பிராந்திய முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும் சிரியாவுக்குள் சிரியாவுக்குள் ரசியா தலையிட்டது என்றே கொள்ள முடிகிறது. அசாத் ரசியாவிடம் உதவி கேட்டு ஓடிச் சென்றது ரசியாவுக்கு வாய்ப்பாகியது.

ரசியாவின் இந்த நோக்கத்தை அழித்தொழிக்கவும், கடற்படைத் தளத்தை இல்லாமலாக்கவும் இராணுவ தந்திரோபாய ரீதியில் அமெரிக்காவும் நேற்றோவும் செயற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்பது இன்னொரு பக்கமாகும். நீண்டு போய்க் கொண்டிருக்கும் உக்ரைன் போரில் ரசியா தனது வளங்களை குவிக்க வேண்டியிருப்பதும் அதற்கான முக்கியத்துவமும் ரசியாவுக்கு அதிகமானது என்பதால் அசாத் ஐ அநாதரவாக விட்டு பின்வாங்க நேர்ந்தது.

இப்போதும்கூட, எச்.ரி.எஸ் கைப்பற்றியுள்ள சிரியாவின் பெரும் ஆட்சிப் பிரதேசத்துக்கு வெளியே அசாத் ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டுப் பிரதேசமும் துருக்கி ஆதரவுப் படை (என்.எஸ்.ஏ) யின் கட்டுப்பாட்டுப் பிரதேசமும், மிகப் பெரியளவில் குர்திஸ் போராட்டக் குழுவின் கட்டுப்பாட்டுப் பிரதேசமும் என சிரியா பிளவுண்டுதான் இருக்கிறது. அத்தோடு இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பிரதேசம் வேறு இருக்கிறது.

“நாம் மேற்குலகின் நண்பர்கள்” என வெளிப்படையாகவே இப்போ எச்.ரி.எஸ் ஆட்சி அறிவித்துள்ளது. தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தவென சிரியாவுக்குள் இஸ்ரேலிய இராணுவம் சுமார் 500 வான்வழி தாக்குதலை செய்தும், சிரிய பிரதேசங்களை ஆக்கிரமித்து டமஸ்கஸ் இற்கு 25 கிலோ மீற் தொலைவுவரை படை நடத்தி வரவும் இந்த கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஒரு துரும்பளவான இராணு ரீதியாலன எதிர்ப்போ அறிக்கையோ கூட இதுவரை வெளிவரவில்லை.

அமெரிக்க இஸ்ரேல் நிகழ்ச்சி நிரலும் எரிவாயு குழாய் அரசியலும் சமாந்தரமாக சிரியாவில் பயணிக்கின்றன. இதற்கு, இஸ்ரேலை எப்போதுமே எதிர்ப்பதாகக் காட்டிக் கொள்ளும் துருக்கி முரண்நிலையாக மிகப் பெரிய அரசியல் சித்துவிளையாட்டை நிகழ்த்தியிருக்கிறது. அது இத்தோடு முடிவடையுமா அல்லது வானவில் கூட்டணிக்கு இடையில் மோதல்களை உருவாக்கி தொடருமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். சிரியாவில் எச்.ரி.எஸ் இன் ஆட்சியானது ஈராக் போன்று குர்திஸ் மக்களின் தன்னாட்சி உரிமையை (autonomy) அங்கீகரிக்குமா இல்லையா என்பதையும் கட்டார்-துருக்கி குழாய் அமைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமா இல்லையா என்பதையும் பொறுத்து துருக்கியின் நாடகம் இருக்கும். அதுகுறித்து இப்போதைக்கு எதையும் எதிர்வு கூற முடியாதுள்ளது.

One thought on “குழாயடி அரசியல்”

Leave a comment