“வாசிப்பும் உரையாடலும்-சூரிச்”
பத்தாவது ஆண்டை கடந்துவிட்டிருக்கிறது!
2014 இல் ஒருநாள் சயந்தன் என்னை அழைத்து இப்படியோர் அமைப்பை உருவாக்க தாம் மூவர் யோசித்திருப்பதாக சொல்லி, எனது பங்குபற்றலையும் கோரினார். உற்சாகமாக இருந்தது. முதல் சந்திப்பில் நாம் நால்வர்தான் பங்குகொண்டோம். இரண்டாவது சந்திப்பில் கொஞ்சம் பேர் பங்குபற்றினார்கள். இந் நிலை கொஞ்சம் நீடிக்கவே செய்தது. விடாப்பிடியாக இதை தொடர்ந்தோம். பிறகு இது பலரின் பங்குபற்றலுடன் மிக உற்சாகமாகவும் வாசிப்பு மனநிலையை ஊக்குவிப்பதாகவும் வளர்ச்சி பெற்றது.
கோடை காலங்களில் இச் சந்திப்பு இருமுறை காட்டிலும் ஒருமுறை அருகில் அமைந்திருக்கிற ஒரு சிறு தனித் தீவிலுள்ள பழைய கோட்டையின் முற்றத்திலும் வா.உ சந்திப்புகள் நடந்தன. காம்யூ இன் அந்நியன் நாவல் சுவிஸின் ஒரு முதியோர் இல்லத்தில் ஒழுங்குசெய்யப்பட்டு உரையாடலாகியது. சோபியின் உலகம் நாவலின் கதைக் களம் காட்டோடு அண்டியிருந்ததால் அந் நூல் பற்றிய உரையாடல் காட்டு சூழலை களமாக வைத்து நடத்தப்பட்டது.
பெரும்பாலான சந்திப்புகளும் ஏதோவோர் -நூலோடு தொடர்புபட்ட- அரங்கியல் மூலம் தொடக்கி வைக்கப்பட்ட சூழலோடு நடந்தன என்பது சிறப்பு அம்சமாகும். மூன்று (ஒரு கட்டத்தில் நான்கு) அரங்கியலாளர்கள் எம்மிடையே இருந்ததால் அவர்களின் புத்தாக்க அரங்கியலுடனான கூட்ட ஆரம்பம் ஊக்கமளிப்பதாக அமைந்தது.
இரு மாதத்துக்கு ஒருமுறை சந்திப்பது என்பதும், அடுத்த சந்திப்புக்கான நூலை நிகழ் சந்திப்பில் வழங்குவது என்பதும், அந் நூலை எல்லோரும் வாசித்துவிட்டு வந்து உரையாடுவது என்பதும் ஒரு முறைமையாக இருந்தது. தஸ்தாவொஸ்கி, ஓரான் பாமுக், அல்பேர்ட் காம்யூ, காப்கா, பௌலோ கொய்லா, அலெக்ஸ் ஹெலி, ஜோன் பெர்க்கின்ஸ், ஜியாங் றொங்.. என எழுத்தாளர் பட்டியல் “வாசிப்பும் உரையாடலும்” சந்திப்புகளின் வாசிப்பு இரசனைக்குள் வந்திருந்தார்கள். தமிழ் எழுத்தாளர்களின் சில நூல்களை அவ்வப்போது சிலர் அறிமுகம் செய்து வைத்தார்கள். அவற்றில் ஒருசில மட்டுமே அறிமுகம் என்பதைத் தாண்டி உரையாடலுக்கு எடுக்கப்பட்டது. மற்றபடி வா.உ சந்திப்பில் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவை அநேகமும் மொழிபெயர்ப்பு நூல்களாகவும், பேசப்படுகிற நாவல்களாகவும் இருந்தன.
அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. இரண்டாம் சந்ததியினரில் சிலர் தமிழை சரளமாக பேசினாலும், அவர்கள் பிறந்து வளர்ந்த இந் நாட்டின் (யேர்மன், பிரெஞ்சு, இத்தாலி) மொழியில் உணர்வுநிலை வாசிப்பை நிகழ்த்தக்கூடியதாக இருந்தார்கள். மொழிபெயர்ப்பு நூல்கள் அதற்கு சாதகமாக இருந்தன. இது ஒரு காரணம். அடுத்தது மொழிபெயர்ப்பு நாவல்களினூடு நாம் பெற்றுக் கொள்கின்ற வாசிப்பு அனுபவம் தமிழ்ச் சூழலுக்கு வெளியே இன்னொருவகை அறிதலாகவும் ஆர்வமூட்டுவதாகவும் வேறு பண்பாடுகளினை ஓரளவாவது அறியும் புத்தனுபவத்தை கொடுப்பதாகவும், பாத்திரப் படைப்புகளின் பன்முகத் தன்மையை அறிமுகப்படுத்துவதாகவும் இருந்தன. இது இரண்டாவது காரணம்.
அத்தோடு “திரையிடலும் உரையாடலும்” நிகழ்ச்சிகளும் இடையிடையே நிகழ்த்தப்பட்டன. லெனின் சிவம் அவர்களின் A Gun and a Ring படமும், பிரசன்ன விதானகேயின் With You Without You படமும் திவ்ய பாரதியின் “கக்கூஸ்” ஆவணப் படமும் புங்குடுதீவு குறித்த ஆவணப்படமும் உள்ளடங்கலாக இன்னும் ஒருசில ஆவணப்படங்களும் திரையிடப்பட்டு உரையாடப்பட்டன.
இவ்வாறு தொடர்ந்த சந்திப்பை 2020 இல் கொரோனா ஆக்கிரமித்து இடைநிறுத்தியது. வருடங்கள் தாண்டி பின் மீண்டும் தொடங்கிய சந்திப்பு ஒரு தொய்வுடன் ஆரம்பித்தது. பங்குபற்றுபவர் தொகை குறைந்துவிட்டிருந்தது. இதை கடப்பது சவாலாகவே தொடர்ந்தது. குறைந்தளவு ஆட்களுடனேயே சந்திப்பு தொடர்ந்தது. எனவே பத்து வருட பூர்த்தியான நிலையில் எம்மைப் பற்றிய சுயவிசாரணைகளை செய்து பழைய நிலைக்கு மீளும் ஒரே நோக்குடன் இன்றைய (30.11.24) சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. விருந்துண்டு மகிழ்ந்து இந் நிலையை கடப்பதற்காக எல்லாவற்றையும் ஆராய்ந்தோம். ஒரு புத்துணர்ச்சியுடன் அடுத்த ஆண்டை (2025) தொடங்குவதாக ஏகமனதான முடிவுக்கு வந்தோம். உற்சாகத்துடன் விடைபெற்றோம்.
- ravindran. pa
- 30112024
(குறிப்பு: உரையாடலுக்கு எடுக்கப்பட்ட நூல்களை இந் நிகழ்வை பொறுப்பெடுத்து நடத்திய கபிலன் ஓரளவுக்கு தொகுத்து காட்சிப்படுத்தியிருந்தார்)
















