இவ்வாறாகத்தான் பிறந்தோம்.

காஸாவில் நாம் இவ்வாறாகத்தான் பிறந்தோம்.
காஸாவின் புதல்விகளாய் புதல்வர்களாய்
மரணத்தைப் போர்த்தியபடிதான் நாம் பிறக்கிறோம்.
எனது மகளும் அவ்வாறேதான் பிறந்தாள்.
நாட்கள் அவளது வாழ்வில் முளைத்து, குருத்தெறியத் தொடங்கியிருக்கின்றன.
குண்டுவீச்சுகள், வெடிச் சத்தங்கள், மரண ஓலங்கள்
எல்லாவற்றையும் அவள் கேட்டாள்.
போரற்ற உலகில் தூங்கியெழும் மனிதர்
கேட்டிலர், தன் வாழ்நாள் முழுதிலும் இவளவையும்!

ஆம், இவை எல்லாம் நடந்தது வேறு எங்குமல்ல,
வைத்தியசாலையில்.
அல் ஸீபா வைத்தியசாலையில்தான்!
நாம் மரண நிழலின் கீழ்த்தான் பிறக்கிறோம்.
எஞ்சிய காலமும் அதன் கணங்களும்
வாழ்தலுக்கான போராட்டம்தான்- அது.
பட்டினியில் மரணித்துவிடாமல் தப்ப
நடத்தும் போராட்டம்!

முடிவில்,
நாம் இடிபாடுகளின் கீழ் அகப்பட்டோ,
டாங்கிகளின் கீழ் நசிபட்டோ மரணிக்கிறோம்
அல்லது
வீதியில் சுடப்பட்டு மரணிக்கிறபோது
அநாதையாய் சிதையும் உடல்
பசித்தலையும் நாய்களுக்கு உணவாகிப்போக
வாழ்வு கரைந்து போகிறது!

-ravindran pa, 26112024
-Sameh Jindiyya அவர்களின் வாக்குமூலத்தின் கவிதை வடிவம்
(Thanks:Mondoweiss)

Leave a comment