நம்பிக்கை

நம்பிக்கை என்பது தர்க்க விஞ்ஞானத்துக்கு உட்பட்டதாக வளர்ந்து கொள்கிறபோது அது யதார்த்தமாகப் பரிணமிக்கிற சாத்தியப்பாடுகளை கொண்டிருக்கும். இல்லாதபோது அது மத நம்பிக்கை போன்று உளத்துள் உலாவுகிற அல்லது உளத்துக்கு அமைதி தருகிற நம்பிக்கையாக தேங்கிவிடும்.

விஞ்ஞான தகவல்களினதும் பௌதீகக் கோட்பாடுகளினதும் வளர்ச்சிப் போக்கில் பெற்ற தர்க்கத்தின் அடிப்படையில் கருந்துளை (black hole) என்ற ஒன்று இருக்க வேண்டும் என நம்பினர் விஞ்ஞானிகள்!. பின்னர் அது யதார்த்தமானதாக கண்டுபிடிக்கப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு முன் mad scientist என அழைக்கப்பட்ட நிக்கொலா ரெஸ்லா wireless communication, wireless electricity என்ற இரு கருதுகோள்களை முதலில் நம்பிக்கைகளாக முன்வைத்தார். wireless communication இனை அவர் கண்டுபிடித்தார். அது பின்னர் வளர்ச்சி பெற்று மக்கள் பாவனைக்கு வந்தது. எதிர்கால விஞ்ஞானம் wireless electricity யையும் கண்டுபிடித்துத் தரலாம்.

இந்தவகை விஞ்ஞானத் தர்க்கம் கடந்தகால நிகழ்கால வரலாறுகளோடும் தகவல்களோடும் வளர்ச்சியடைந்து புதிய புதிய கோட்பாட்டு உருவாக்கம் பெறுகிறது. அதன்வழி எழும் நம்பிக்கையானது யதார்த்தத்தில் கண்டுபிடிப்புகளை உருவாக்கித் தருகிறது.

அதாவது அகநிலைசார் திருப்தி தரும் நம்பிக்கைகள் -மதம் உட்பட்ட- பண்பாட்டுத் தளத்தில் மாற்றமில்லாது நிலவுகிற அதேநேரம், புறநிலைசார் நம்பிக்கைகள் தர்க்க விஞ்ஞான அடிப்படையில் மாறிக்கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கும். அது யதார்த்தமாக பரிணமிக்கும் அதிக சாத்தியப்பாடுகளை நிகழ்த்திக் காட்டியபடி இருக்கிறது. சமூக விஞ்ஞானத்துள் உள்ளடங்குகிற அரசியலுக்கும் இது பொருந்திப் போவதை தத்துவவியலாளர்கள் கண்டு சொல்லியிருக்கிறார்கள்.

பண்பாட்டுத் தளத்தில் தர்க்க விஞ்ஞானமற்ற நம்பிக்கைகளை புறநிலைசார்ந்து மறுக்கும் ஒருவர், அகநிலை சார்ந்து மற்றவர் ஏற்றுக் கொள்வதை புரிந்து கொள்ள முடியும். (மத நம்பிக்கை இதில் அடங்கும்). ஆனால் அரசியல் தளத்தில் தர்க்க விஞ்ஞானமற்ற நம்பிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. இங்கு (அரசியலில்) அகம்சார் திருப்தியை ஏற்றுக் கொள்வது அர்த்தமற்றது. அரசியல் தளத்தில் கடந்தகால நிகழ்கால வரலாறுகளினூடும் கோட்பாட்டுப் புரிதலோடும் தர்க்க விஞ்ஞான அடிப்படையில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதுவே யதார்த்தமாகப் பரிணமிக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கும். இல்லையேல் அது நம்மை ஏமாற்றிவிடும்!

  • 23112024

Leave a comment