அலைகளின் நடுவே

இலங்கை அரசியல்

ஜீன் சீக்லர் (Jean Ziegler) அவர்கள் சுவிஸ் இல் ஓர் அறியப்பட்ட இடதுசாரியாவார். பிடல் கஸ்ரோ மரணித்தபோது சுவிஸ் வானொலி அவருடன் ஒரு நேர்காணல் நடத்தியது. அதில் “பிடல் இறந்துவிட்டார். இந்த உலகின் கடைசி புரட்சியாளர் பிடல் என சொல்லலாமா” என கேட்கப்பட்டது. “புரட்சியாளர்கள் ஒவ்வொரு 5 வருடத்துக்கும் பிறப்பதில்லை. பல ஆண்டுகள், சிலவேளை நூற்றாண்டுகள் கூட ஆகலாம்” என்றார். பிடல் கடைசி புரட்சியாளராக இருக்க முடியாது என்றார். அவர் சொன்ன அந்த 5 வருடம் என்பது தேர்தலில் புரட்சியாளர்கள் பிறப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டவே ஆகும்.

2019 இல் 3 வீத வாக்குகளை பெற்ற ஜேவிபியின் தலைவர் அநுர 2024 இல் 42 வீத வாக்குளை எடுத்து ஜனாதிபதியாக வருகிறார். இந்த 5 வருடத்தில் அரசியலில் ஜேவிபியோ அநுரவோ அப்படி என்னத்தைத்தான் புரட்டிப் போட்டார்கள், இந்த அலையை உருவாக்க என்றால் பதில் ஏதுமில்லை. 2022 இல் நடந்த அரகலய போராட்டத்தின் காலப்புரட்சியை ஒரு அமைப்பு வடிவம் பெற்றிருந்த ஜேவிபி தன்வசமாக்கியததான் நடந்தது. இந்த அரகலய போராட்டத்தை முன்னின்று நடத்தியமுன்னிலை சோசலிசக் கட்சியும் வெவ்வேறான இடதுசாரிய சிந்தனைக் குழுக்களும் உதிரிகளும் பெரியளவில் பரந்த அமைப்பு வடிவத்தை கொண்டிராததால் அரகலயவில் பங்குபற்றிய ஜேவிபி இந்த தன்வயமாக்கலை நடத்தியது. அதன் வெற்றிதான் அநுரவின் வெற்றி.

எனவே அநுர வென்றார் என்பதைவிட, அநுரவை அரகலய ஒரு முன்பாய்ச்சலான வரலாற்றுக் கட்டத்தில் தலைவராக நிறுத்தியிருக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும். அரகலய எதிர்த்துப் போராடிய ஊழல் அமைப்புமுறைக்கும் இனவாதத்துக்கும் இடமளிக்க அனுமதிக்கப்படாத வரலாற்றுக் கட்டம்தான் அது. இந்த வரலாற்று நிலைமையை உருவாக்கியது நாட்டை திவாலாக்கிய பொருளாதார நெருக்கடிதான். இந்தக் காரணிகளின் ஒட்டுமொத்தக் குரலாக “முறைமை மாற்றம்” system change என்பதை அரகலய தனது முழக்கமாக முன்வைத்தது. என்பிபி யின் தேர்தல் பிரச்சாரம் இவற்றை மையங்கொண்டிருந்தது, இருக்கிறது.

இதே ஊழல் அரசாங்கத்தில் பாராளுமன்றத்திலும் குறுகியகால அமைச்சர் பதவியிலும் பங்குகொண்டவர்கள் ஜேவிபியினர். போரில் பங்குகொண்டவர்கள் அல்லது போரை ஆதரித்தவர்கள். நாட்டுக்குள் இனவழிப்பைச் செய்து வெற்றிகொண்ட போரை பாற்சோறு காய்ச்சி கொண்டாடியவர்களில் இவர்களும் அடக்கம். இந்தப் போர் அதிகாரவர்க்கம் கட்டற்ற ஊழலை செய்யவும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யவும் பொருளாதார வீழ்ச்சியை துரிதமாக்கவும் இனவாத சிந்தனையை கூர்மைப்படுத்தவும் செய்தது. இவையெல்லாம் நாட்டை பேரழிவுக்குத் தள்ளியது என இப்போ சொல்ல முடிகிற நிலையை அவர்கள் (JVP) அன்று எதிர்த்து நின்று காட்டியவர்கள் அல்ல. அதை அரகலயதான் காட்டியது. எனவேதான் இந்த அரசாங்கத்தை அரகலய ஒரு வரலாற்றுக் கட்டத்தில் நிறுத்தியிருக்கிறது என்கிறேன்.

இன்று அவர்கள் சொல்லுகிற மாற்றம் என்பதை நிகழ்த்த பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை ஆசனங்களை அவர்கள் பெற வேண்டும் என்பது தர்க்க நியாயமான ஒன்று. அவர்கள் பெறுவார்கள் என்பது என் கணிப்பு. சிறுபான்மை இனங்கள் 2019 இல் ஜேவிபி க்கு அளித்த வாக்குகளை விட பலமடங்கு அதிகமாக அநுராவுக்கு கொடுத்தார்கள் என்பது புள்ளிவிபரம் காட்டும் விடயம். அதை அநுரவே சொல்லியுமிருக்கிறார். எந்த மாகாணங்களில் எந்தக் கட்சி கூடுதலான வாக்குகளைப் பெற்றது என்ற பருமட்டான வர்ண அடையாளமிட்ட வரைபடத்தை வைத்துக் கொண்டு சிங்கள மக்கள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டனர். சிறுபான்மை இனங்கள் மாற்றத்தை விரும்பவில்லை என முடிவுக்கு வருவது பருண்மையானது. தவறானது.

மாற்றத்தை விரும்பாத சாமான்ய அல்லது விளிம்புநிலை மனிதரை எங்காவது காண முடியுமா என்ன. மாற்றத்துக்காக அரகலயவை நடத்தியவர்களில் குமார் குணரட்ணம் தலைமை தாங்கும் முன்னிலை சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜேவிபியிலிருந்து தள்ளி நிற்பதையும் இன்னொரு பகுதியினர் நுவான் போகபே அவர்களை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தி வாக்களித்தார்கள் என்பதையும்கூட வசதியாக மறந்து அல்லது மறைத்து எழுதும் ஆய்வுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும். அவர்களும் மாற்றத்தை விரும்பாதவர்களா என்ன. அதிகாரத்தை சுகிப்பவர்களும் ஊழலில் திளைப்பவர்களும் என வாழ்க்கை நடத்தும் அதிகார சக்திகள் -அவர்கள் எந்த இன, மத, மொழியைச் சேர்ந்தவர்களாயினும்- மட்டுமே மாற்றத்தை விரும்பாதவர்களாக, அதை எதிர்ப்பவர்களாக இருப்பர் என்ற வர்க்க குணாம்சத்தைக்கூட புரியாமல் ஆய்பவர்களுக்கு வரப்போகும் பாராளுமன்றத் தேர்தல் முகத்திலறைந்து ஒரு செய்தியைச் சொல்லத்தான் போகிறது.

சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெற சிறுபான்மையின கட்சிகளே நாங்கள் அநுரவின் “மாற்றம்” க்கு ஆதரவாக இருப்போம் என வாக்குக் கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இது சிறுபான்மையின மக்களின் வாக்குகள் என்பிபி க்கு திரும்பத் தொடங்கியிருக்கிறதின் அறிகுறி. அப்படி அவர்கள் பெரும்பான்மையாக என்பிபி க்கு வாக்களிக்கிற நிலை வருகிறபோது, ‘திருந்திவிட்டார்கள்’ என்ற ஒற்றைச் சுட்டலானது -சாத்தியப்பாடுகளை முன்வைத்து எழுதவேண்டிய ஆய்வுகளுக்கு ஈடாக- எந்த அரசியல் அர்த்தத்தையும் வழங்காது. மாற்றம் என்பது மாறிவிடலை மட்டும் குறிப்பதில்லை. மாற்றத்தை நோக்கிய வளர்ச்சியையும் குறிப்பது. சிறுபான்மை இனங்கள் மத்தியில் ஜேவிபி க்கான அந்த வாக்கு வளர்ச்சியை புறக்கணித்து மாற்றத்தை விரும்பாதவர்கள் என முத்திரை குத்துவது ஒருவகை அறிவுச் சோம்பேறித்தனம் மிக்கது.

தமிழ் மக்களின் வரலாறு குறிப்பாக 30 வருட போர் என்பது அழிவுகளின் வரலாறு. அது ஏற்படுத்திய தாக்கத்தை, தனித்த தேசியக் கட்சிகளுக்கு வாக்களிப்பதன் மீதான தயக்கத்தை புறக்கணித்து, ஆதரவு-எதிர்ப்பு என்ற இருமை சிந்தனையோடு அணுக முடியாது. இந்த தயக்கத்தினதும் தாக்கத்தினதும் உளவியல் எல்லா தமிழ்க் கட்சிகளினதும் வாக்குவங்கியை வங்குரோத்தாக விடாமல் வைத்திருக்கிறது. உருப்படியாக எதையுமே செய்யாமல் தமிழ்த் தேசியம் என்ற மந்திரத்தை ஓதி ஓதியே அரசியல் நடத்த அது வசதியாகவும் போய்விட்டது. அது தனியான ஒரு விடயதானம்.

இப்போ அதிக பெரும்பான்மையை என்.பி.பி எடுக்கிற பட்சத்தில், அது மாற்றத்தை நிகழ்த்துகிற படிமுறைகளில் முன்னேற வேண்டும். ஏனெனில் மக்கள் ஆணை வாக்குகளினால் கொடுக்கப்பட்டுவிடும். அதை அவர்கள் நிகழ்த்துவதில் அரச (state) வடிவக் கட்டமைப்பு எந்தத் தூரம் வரை அரசாங்கத்துடன் (government) பயணிக்கும் என்ற கேள்வி புறக்கணிக்க முடியாதது. 340 கோடி ஊழல் செய்த அர்ஜுன் அலோசியஸ் க்கு (மென்டிஸ் நிறுவனம்) வரி ஏய்ப்புக்காக அரச(state) கட்டுமானத்திற்கள் இயங்கும்- நீதிமன்றம் ஆறே ஆறு மாத கால சிறைத்தண்டனையை வழங்கியிருக்கிறது. இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதுபோல் புதிய அரசாங்கத்தைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. ஊழல் செய்வதற்கு எதிரான மனநிலையை அல்லது அச்சத்தை வழங்குவதற்குப் பதிலாக ஊழல் செய்வதற்கு தயங்காத ஒரு மனநிலையை இந்தத் தீர்ப்பு வழங்கக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது.

பௌத்த மேலாதிக்க பெரும்பான்மைவாதத்தை அடித்தளமாகக் கொண்ட அரச கட்டமைப்பின் கருத்தியல் அகற்றப்படும் வரை “முறைமை மாற்றம்” என்பது ஒரு ஏமாற்று. சமத்துவம் என்பது ஒரு ஏமாற்று. எனவே அரசாங்கம் ஒரு சமூகநல அரசு என்ற வடிவத்தை நிர்மாணிப்பது முடியுமானதாகலாம். நிர்வாகத்துள் மாற்றம், செயற்திறன், ஊழலின்மை போன்றவற்றை அது சாதிக்கலாம். முக்கியமாக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களை செயற்படுத்துவதில் அதிக கரிசனம் செலுத்தலாம். நடைமுறையில் வீரியமாக செயற்படலாம். ஓர் அதிகாரப் பரவலாக்கல் முறைமையை பரீட்சிக்கலாம். இது நடந்தால் இதுதான் அவர்களின் அதிகபட்ச சாதனையாக இருக்கும். காலம் அதற்கான விடையைத் தரும்.

முறைமை மாற்றம் என்பது அரகலயவின் முழக்கம். அதைச் சொல்லியே பாராளுமன்றத் தேர்தலிலும் வென்றபின், எல்லா புழுதிகளும் அடங்கியபின், வரலாறு என்பிபி யை கொணர்ந்து விட்டிருக்கிற இடத்திலிருந்து முன்னோக்கி பயணித்தாலே இந்த முழக்கத்தை தம்மோடு வைத்திருக்க முடியும். இது நடவாதபோது அல்லது முடியாதபோது அந்த தேக்கத்தை வரலாறு உடைக்கவே செய்யும். அந்த முழக்கம் திரும்பவும் மக்களிடமே வந்து சேரும். அது இன்னொரு அரகலயவை தோற்றுவிக்கலாம்.

அரசு கட்டமைப்பையும் அதன் வன்முறை இயந்திரமான இராணுவத்தையும் திருப்திசெய்ய வேண்டிய நிலையின் அறிகுறி ஏற்கனவே தென்பட்ட ஒன்று. போர்க்குற்றத்தை உள்ளக விசாரணை செய்து உண்மையை கண்டறியலாம். ஆனால் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை தண்டிக்க மாட்டோம் என்பதை அநுர தெளிவாகவே சொல்லிவிட்டார். ஈஸ்ரர் படுகொலையின் சூத்திரதாரிகள் அரசியல்வாதிகள் என்பதைத் தாண்டி இராணுவ உளவுப்படையினரும் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வெளிச் சதியாகவோ சிக்கல் அவிழுமாக இருந்தால் என்ன நடக்கும். இயலாமைகள் அல்லது மாற்றத்திற்குக் குறுக்கே எழும் தடைகளை தாண்ட முடியாத நிலையில் என்ன நிகழும். அதிகாரம் பண்புமாற்றத்தை என்பிபி அரசாங்கத்திடம் ஏற்படுத்திவிடக் கூடுமா, இன்னொரு அரகலய மேலெழும்புமா? அப்படி ஏற்படும் பட்சத்தில் அதை அரச அதிகார நிலையில் நின்று என்பிபி எப்படி கையாளும் என பல கேள்விகளுக்கான விடையை எதிர்காலம்தான் வைத்திருக்கிறது.

இந்த 70 வருடகால அரசியல் பாரம்பரியத்துக்கு வெளியே, அரகலய மக்கள் போராட்டம் முன்வைத்த மாற்றம் என்ற புதிய எழுச்சி ஏற்படுத்திய புது நம்பிக்கையை என்பிபி சுமந்து நிற்கிறது. இதில் ஏமாற்றம் நிகழுமாயின் அதன் தாக்கம் மக்களின் உளவியலில் பலமானதாகவே இருக்கும். என்பிபி இதில் வெற்றிபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக இருக்கிறது. நமதும்!

பிரதமர் ஹரிணி அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவது என்பதைவிட அது அவர்களின் உரிமை என்று சொல்வதே சரியானது என்று தெளிவாக சொன்ன சொற்கள் முளைவிட்டு நிமிர்வதற்குமுன், என்பிபி யின் பொதுச்செயலாளர் சில்வா அவர்கள் “வடக்குக்கு 13ம் சட்டத் திருத்தமும் தேவையில்லை. அதிகாரப் பகிர்வும் தேவையில்லை. பொருளாதார வளர்ச்சியே தேவை” என சொன்னதாக செய்திகள் வந்திருக்கின்றன. அதிகாரப் பகிர்வு என்பது ஜனநாயக முறைமையின் ஒரு செழுமையான அம்சம் என்பதற்கு சுவிற்சர்லாந்து ஓர் அசல் உதாரணம்.

அது ஒருபுறம் இருக்க, எல்லா முரண்பாடுகளையும் பொருளாதார பிரச்சினைக்குள் உட்படுத்துவதை மார்க்சிய வழித்தோன்றல்களாக தம்மை காட்டிக் கொண்ட ஜேவிபி கூறுவதை ஏற்க முடியவில்லை. இலங்கையை இந்த நிலைமைக்குள் தள்ளிய இனப் பிரச்சினையின் தனித்தன்மையை மற்றைய பிரச்சினைகளுடன் ஒரே சிமிளினுள் அடைத்து முன்பு வர்க்கப் பிரச்சினை மட்டும்தான் என்றார்கள். இப்போ பொருளாதாரப் பிரச்சினை மட்டும்தான் என்கிறார்கள்.

பொருளாதார நெருக்கடி முதன்மை முரண்பாடாக தோன்றி இனவாதத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியிருக்கிறதே யொழிய நீண்ட வரலாறும், செயற்பாடும், பொது உளவியலும் கொண்ட இனவாதத்தை ஒரு தேர்தலால் அடித்து வீழ்த்த முடியும் என்பது 5 வருடங்களுக்கு ஒருமுறை புரட்சியாளர் தோன்றுவர் என எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது.

*

அரசியல் ஒரு சமூக விஞ்ஞானம் என்றளவில் அது கேள்விகளோடு பயணிக்குமே ஒழிய விடைகளோடு முடிவதில்லை. அரசியல் ஆய்வுகள் இதன் அடிப்படையிலயே செய்யப்படக் கூடியது. அது வெறும் ஊகமோ வெறும் நம்பிக்கையோ விருப்புவெறுப்போ அல்ல. கடந்தகால நிகழ்கால வரலாறு வழியாக கோட்பாடுகளை கருவியாகக் கொண்டு எதிர்கால சாத்தியப்பாடுகளை சொல்ல முனைவதுதான் அரசியல் ஆய்வு என்பதாகும். அந்த கேள்விகளை கொன்று கட்சிகளை அல்லது அதன் தலைவர்களை ‘விசுவாசிப்பது’ அர்த்தமற்றது. அகநிலையிலும் புறநிலையிலும் (கட்சிக்கு வெளியே தூரப்படுத்தி) நின்று விமர்சன பூர்வமாக ஆதரவு கொடுப்பதுதான் கட்சி தவறுகளை அடையாளம் கண்டு முன்னேற கட்சிக்கு செய்யும் பணியாக இருக்கும். இயக்கங்களில் விசுவாசிகளாக இருந்து எம்மையும் இயக்கத்தையும் நாசமாக்கிய வரலாறு ஒன்று எம்மிடம் உள்ளது. அது ஒரு பாடம்!

One thought on “அலைகளின் நடுவே”

Leave a comment