வருக!
தற்போதைய ஜேவிபியை ஒரு கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ற், சோசலிஸ்ட் கட்சி என்றெல்லாம் விளிப்பது அதீதம். ஜேவிபியின் சிற்பியான தோழர் ரோகண விஜயவீரா கால அடிச்சுவட்டிலிலிருந்து இந்தச் சிவப்பு நிறம் தொற்றிக் கொண்டதால், இப்போதும் அப்படி சுட்ட பலரும் தயங்கவில்லை. அது அபத்தம் நிறைந்தது. எனவே (அல்ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் சுட்டுகிற) அநுர ஒரு மார்க்ஸியத் தலைவர் என்ற லேபலில் மகிழ்ச்சி இல்லை. மார்க்ஸியத்தை அது கொச்சைப்படுத்துவதாகும்.
* இலங்கை சுதந்திரம் பெற்றபின் 76 வருடமாக இரு கட்சிகளும் அதனதன் வாரிசுகளும் மாறிமாறி ஆட்சி செய்து சீரழித்த ஒரு நாட்டை அந்த குடும்ப ஆட்சிமுறைகளிலிருந்து வெளியே எடுத்து 2024 அநுர பொறுப்பேற்பது முதல் மகிழ்ச்சி.
* கடந்த 40 வருடத்துள் உலகம் என்றுமில்லாதவாறு ஒரு தொடர்பாடல் விஞ்ஞான இணைய யுகத்துள் புகுந்ததன் விளைவாக தோன்றிய இளம் சந்ததியின் நாடியை பிடித்துப் பார்க்கக் கூடியவராக, ஒரு இற்றைப்படுத்தப்பட்ட சந்ததியோடு பயணிக்கக்கூடியவராக அநுர தலைமையேற்பது இன்னொரு மகிழ்ச்சி.
* நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருக்கும் நேரத்தில் ஊழலற்ற, ஊதாரித்தனமற்ற நிர்வாகத்தை ஏற்படுத்தி செயலூக்கமுள்ளதாக மாற்றியமைக்க அவருக்கு இருக்கும் விருப்பும், கிடைத்திருக்கிற அதிகாரமும் குறித்து மகிழ்ச்சி.
* சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஆயுதம் தாங்கி போராடிய காலத்தினூடாக சிறுபான்மை இனங்களை தொடர்கிற பேரினவாத அரச அதிகாரத்தின் மீதான வெறுப்பை இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்த பன்முக வாக்குகள் வரை வெளிப்படுத்தி யிருக்கிறார்கள் என்பதை அநுர கண்டுகொண்டால், அது தீர்க்கப்பட வேண்டும் என புரிந்துகொண்டால், தீர்வுகளை நோக்கி நகர்ந்தால் மகிழ்ச்சி.
* அரசு கட்டமைப்பின் பேரினவாத கருத்தியலை அசைத்துப் பார்ப்பது இலகுவான காரியமல்ல. அந்த முறைமை மாற்றமானது அரசு கட்டுமானத்தின் நிரந்த அங்கமான மக்கள் திரளின் அரகலயக்களால்தான் முடியும். அநுரவால் அது முடியப்போவதில்லை. இருந்தபோதும் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு அவர் நிகழ்த்தக்கூடிய மாற்றங்களை செய்துகாட்டினால் மகிழ்ச்சி.
* உலக ஒழுங்கில் ஒற்றை உலக ஒழுங்கு பலவீனமாகி பன்முக உலக ஒழுங்கின் சாத்தியம் தோன்றியிருக்கிற வேளை இது. பிரிக்ஸ் இல் இணைவது பற்றி அவர் சிந்திப்பது நல்லது. ஐ.எம்.எப் க்கு மாற்றீடான ஒரு பொருளாதாரத் தளத்தை மட்டுமல்ல, சீனாவையும் இந்தியாவையும் ஒரே அரசியல் தளத்தில் வைத்து கையாள்வதற்கும் அது இலகுவாக இருக்கும்.
காலத்தை கைப்பற்றும் அவரது புதிய முயற்சிகளை வரவேற்கக் காத்திருப்போம்.
வாழ்த்துகள் அநுர.
வருக!
- 23092024
- ravindran pa
