வாழை

திரைப் பார்வை

பொதுவாக பல திரைப்படங்கள் ஒரு முடிவை பரிசளித்து இருக்கையிலிருக்கும் எம்மிடம் தந்து அனுப்பிவைக்கும். சிந்தனையில் இடையீடு இன்றி எழுந்து சென்று விடுவோம். அநாதரவாக எழுத்தோட்டம் திரையில் நகரும் வால்போல அசைந்துகொண்டிருக்கும். வாழை திரைப்படம் முடிந்தும் பார்வையாளர்கள் எழுந்தபாடில்லை. வாழையின் கனதியும் படத் தொகுப்பும் இருக்கையோடு கட்டிப் போட்டுவிட்டிருந்தது. இசை மூளையறையெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. காட்சிப்புலத்துள் யாரோ கலவரப்பட்டபடி ஓடித்திரிந்தார்கள்.

ஒரு விளிம்புநிலை மாந்தரின் வாழ்வு என்பதை நடுத்தரவர்க்க கீழ்மட்ட மாந்தர்கள் புரிந்துகொள்வதிலும்கூட முழுமையிருக்காது. “பசி” என்பதை இவர்கள் இருவரும் புரிந்துகொள்வதிலும் வேறுபாடு இருக்கிறது. ஒரு நேர சாப்பாட்டின் தாமதம் அல்லது இல்லாமை தரும் பசி என்பதும் ஒரு நேர சாப்பாட்டுக்காக ஏங்கி உடல் அவதியுறும் பசி என்பதும் ஒன்றல்ல.

வாழையில் இந்தப் பசி வாழைக்குலையில் ஒரு வாழைப்பழத்தை எட்டிப் பிடிக்க படாதபாடு படுகிறது. எட்டியபின் அதற்கான தண்டனையாக பசிச் சிறுவன் அதே வாழைக்குலையை சுமந்து நிற்கிறான். பசி உடல்நரம்புகளெல்லாம் களேபரப்பட்டு அந்த சிறுவனை வாட்டுகிறது. அவனை துரத்துகிறது. ஒரு பூனைபோல் தனது வீட்டினுள் புகுந்து ஒரு பிடி சோற்றை அவனது உடல் இரக்கத் துரத்துகிறது. தனது சகோதரியின் மரணம் தரும் மனவலியைத் தாண்டியும்கூட அவனை அடுப்படிக்குள் துரத்துகிறது. பின் அங்கிருந்தும் துரத்தப் படுகிறான். உளம் உடல் இரண்டும் அவனை பிய்த்தெறிகிறது. நெடிய வறுமையும் வாழ்தலின் பெரும் பாடும் மகளை இழந்த நிகழ் துயரும் என செரித்துக்கொள்ள முடியாமல் அவதிப்படும் ஒரு தாயின் பாசம் சிதைந்து பின் உயிர்ப்புறம் கடைசிக் காட்சியை புரிந்துகொள்ள முயற்சித்தபோது ஏதோவொன்று இதயத்தில் ஆணியை சொருகிக் கொண்டிருந்தது.

படத்தின் ஆரம்பம் வாழ்வின் மகிழ்வான தருணங்களை, பாடசாலை குறும்புகளை நினைவூட்டியது. பின் அந்த மகிழ்வை இரக்கமற்றுக் கொல்லும் யதார்த்தத்துள் வாழை என்னை பாதையெடுத்து அழைத்துச் சென்றுகொண்டிருந்தது. இந்தப் படத்தை முன்முடிவுகளோடு, சாதியப் பிரச்சினையோடு குறுக்கி திரையரங்கினுள் செல்பவர்களுக்கு வர்க்கப் பார்வை மங்கிப் போய்விடக் கூடும். வாழ்தலுக்காக இந்த உலகோடு போராடுபவர்களை மட்டுமல்ல, பசியோடு போராடுபவர்களையும் முன்முடிவுகளோடு குந்தியிருப்பவர்களுக்கு காணக் கிடைக்குமோ தெரியாது.

அந்தச் சிறுவனின் தந்தை விட்டுச் சென்ற சுத்தியல் அரிவாள் சின்னத்தை அவன் தனது சகோதரியின் காதலனாக உருவானவனிடம் பரிசாக அளிக்கிறான். தொழிலாளர் சார்ந்து முதலாளியை எதிர்கொள்ளும் அவனது துணிச்சலிலும் மனிதநேயத்திலும் தனது தந்தையை அவனிடத்தில் சிறுவன் காண்கிறான். அதை அவனிடத்தில் சொல்லவும் செய்கிறான்.

பாடசாலையில்லாத நாட்களில் வாழைக்குலை சுமப்பதற்கு அந்த பிஞ்சுடலை ஓயாது துரத்தும் இந்த சுரண்டல் முறைமைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், ஓரிடத்தில் தாய் சொல்வாள் “அவனை வேணுமெண்டு இப்படி வாட்டுகிறேனா நான். இந்த உலகில் நானில்லாத காலத்தில் அவன் தன் காலில் தான் நிற்கவேண்டும். அதற்கு அவன் உழைக்கப் பழகியிருக்க வேண்டும்” என்கிறாள். உழைப்பானது தன்காலில் தான் நிற்கவேண்டும் என்பதாக மட்டுமல்ல, ஒரு மனிதஜீவி என்ற அர்த்தத்தில் பரிணமிக்க உழைப்பை அத்தியாவசியமாக முன்வைப்பது கம்யூனிசம். ஆனால் வறுமையும் சுரண்டல் அமைப்பு முறைமையும் இணைந்து இங்கு குழந்தைகளின் உழைப்பை கோருவதுதான் கொடுமை.

அந்தக் கொடுமையை வாழை சுமந்தலைகிறது. இந்த உக்கிரம் மனதை பாரமாக்கி அழுத்துகிறது. நாம் விரும்பாத அல்லது ஜீரணிக்கமுடியாத ஒன்றை வாழை தருகிறபோது எழும் அதிர்ச்சயானது படத்தைத் தீவிரமடையச் செய்யும் காட்சிகள் மீதும் அதற்குப் பொருந்திப் போகிற ஒலியமைப்புத் தீவிரத்தின் மீதும் ஓர் இரக்கத்தைக் கோருகிறது. அதுவே படம் முடிந்தபின்னும் இருக்கையை விட்டு இலகுவில் எழமுடியாத பாரத்தை தருகிறது. வாழையைச் சுமந்தபடி திரையரங்கிலிருந்து வழிந்து வெளியேறவேண்டியிருக்கிறது.

விளிம்புநிலை மனிதர்கள் மீது விதிக்கப்பட்ட இந்த வாழ்வுச் சேற்றில் குழந்தைமையின் எதிர்காலமும் படிப்படியாக சந்ததி சந்ததியாக மெல்லப் புதையுண்டு கொண்டிருப்பதன் குறியீடாக படத்தின் முடிவு அமைவதாக நான் வாசிக்கிறேன். அந்தப் புதைவு முழுமையாக நடந்து முடிவதாக காட்சி கட்புலனினுள் புகுந்து கொள்ளவில்லை. என்றபோதும் அதிலிருந்து மீள்தலுக்கான வழியில் ஒரு தூரப் பறவையின் ஒலியைத் தன்னும் -யதார்த்தத்தில் மட்டுமல்ல- வாழையிலும் கேட்க முடியவில்லை. போராட்டக் குணத்தின் குறியீடான சுத்தியலும் அரிவாளும் வாழைத் தோட்டத்துள்ளும் இறக்கையற்று வீழ்ந்த கிடக்கிறது. அந்தச் சின்னம் ஒப்படைக்கப்பட்டவரும் மரணித்துப் போகிறார். ஒரு படைப்பின் முடிவினுள் தலையிட்டு படைப்பாளிக்கு அபிப்பிராயம் சொல்ல முடியாது என்பது அறிவுத்தளத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது என்றபோதும், உணர்வுத்தளத்தில் எழும் மீள்தலுக்கான மனித ஏக்கத்தை அறிவு பூர்த்திசெய்ய முடியாது என்றே நம்புகிறேன்.

குழந்தைமை அல்லது இளவயது மிகையுணர்ச்சியை உடல்சார்ந்த காதலாகவோ ஈர்ப்பாகவோ புரிந்துகொள்வது எமது இறக்கைகளை உதிர்த்துக் கொட்டிவிடும். பள்ளிக் காலம் வாழைத் தோட்டத்தில் புதைந்தெழும் பாதத்தில் முளைத்திருக்கும் ஆணிகளை விலக்கி சிவனணைந்தானுக்கும் அவனது தோழன் சேகருக்கும் இறக்கைகள் முளைக்கப் பண்ணிவிடுகிறது. அதை அந்த ஆசிரியையும் சரியாகவே புரிந்துகொண்டு இறக்கைகளை வளர்த்துவிடுகிறாள். இடையிடையே திரையரங்கினுள் புன்னகைகள் வெடித்து வாயினூடக வெளியேறியதை காணமுடிந்தது. மனித மனம் அவாவும் மகிழ்ச்சி அது.

அதிகாரத்தின் சூழ்ச்சி காவுகொண்ட -பள்ளிச் சிறுவர்கள் உட்பட- 19 பேரின் வாழைத் தோட்டப் பயங்கரத்தையும் தனது சிறுவயது வாழ்கால அனுபவத்தையும் தழுவி இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் ஒரு அற்புதமான கலையாக திரைப்பட வடிவத்தினூடு வெளிப்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு, இசை, காட்சித் தொகுப்பு, கொம்பு முளைக்காத நடிப்பு என எல்லாமும் வாழையினுள் இயக்குநருடன் சகவாசம் செய்கிறது. தமிழ்த் திரைப்படம் கலைத்தளத்தில் தரையிறங்கும் இன்னொரு காட்சியை வாழை திரைப்படம் பிரமிப்போடு பார்க்க வைத்திருக்கிறது.
*

முன்றாம் உலக நாடுகள் முழுவதும் இந்த சுரண்டல் முறைமை தேயிலைத் தோட்டங்களிலும், கொக்கோ தோட்டங்களிலும், தொழிற்துறைகளிலும் விரவியிருக்கிறது. காலங்காலமாக வறுமை அங்கெல்லாம் விளிம்புநிலை மனிதர்களை குறிப்பாக சிறுவர்களை இந்த கொடுமைக்குள் துரத்திவிடுகிறது. இன்னொருபுறம் சாதிய அமைப்புமுறைமை தன் பங்குக்கு துரத்துகிறது. இந்த மாந்தர்களின் வாழ்வை புரிந்துகொள்ள நடுத்தர வர்க்கத்தின் கீழ்மட்டத்தில் உலவுபவர்கள்கூட துளைபோட்டு கீழிறங்க வேண்டியுள்ளது.

  • ravindran.pa
  • 02082024

Leave a comment