ஓகஸ்ட்-1

எனது சுவிஸ் வாழ் காலப்பகுதியில் நான் பல தடவை உலாத்திய மலையுச்சி சன்ரீஸ். சுற்றிவர எண்ணற்ற மலைக் குன்றுகள், அல்ப்ஸ் மலைத்தொடர், ஏரிகள் என பூசிப்புணர்த்தி அழகுகாட்டும் 2500 மீற்றர் உயரமான இந்த மலைப் பகுதியில் 2009 இலிருந்து இராட்சத சுவிஸ் கொடியை ஏற்றி ஓகஸ்ட்-1 இனை அழகு பார்க்கிறார்கள். 6400 சதுர மீற்றர் பரப்பளவைக் கொண்ட (80 x 80 மீற்) சதுரக் கொடியால் சன்ரீஸின் நெஞ்சுப் பகுதியை இதயம் போலப் போர்த்திவிடுகிறார்கள். யூலை 31 இலிருந்து ஆகஸ்ட்2 வரை இரு நாட்களுக்கு அந்த இதயம் சிவப்பு-வெள்ளை நிறத்தில் பெரும் பார்வைப்புலத்தினை ஆக்கிமித்துக் கொள்ளும். உலகின் மிகப் பெரியதும், கின்னஸ் இல் இடம்பெற்றதுமான இக் கொடி ஏற்றலையும் இறக்கலையும் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரளுவர்.

இந்த மலைக்கு நான் நண்பர்களுடன் பல முறை கேபிள் கார் ஏகி சென்றடைந்து இரசித்திருக்கிறேன். தமிழகத்திலிருந்து அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் வரதராஜன், மாலதி மைத்ரி மற்றும் இலங்கையைச் சேர்ந்த அ.யேசுராசா, சு.வில்வரத்தினம் ஆகியோருடனும் உச்சியில் உலவிய பொழுதுகள் ஞாபகத்தில் பதிந்திருக்கிறது.

ஒருமுறை எஸ்.வி.ஆர் உடன் போனபோது எமது கலகலப்பும் பகிடியும் என காற்று இலேசாயிருந்த பொழுதில், திடீரென அவர் முகம் ஒரு புகைமமூட்டம் போலாகி மௌனம் அவரை விழுங்கிவிட்டிருந்தது. காற்று கனத்துப் போயிருந்தது. எதைக் கேட்டாலும் பதிலில்லை. “சரி.. வாங்க உணவகத்துக்குப் போவோம்” என அழைத்துச் சென்றோம். ஒரு கிளாஸ் வைன் உள்ளே இறங்கவும் அவரது முகம் பனிமூட்டத்தை விலக்கியது. சிரித்தார். இல்லை அழுதுகொண்டே சிரித்தார். “ஏன் இருந்தாப்போலை மௌனமாகினீங்கள்” என்ற கேள்வியை வைன் உடன் கலந்துவிட்டிருந்தோம். “ஐயோ இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்க என்ரை சகு இல்லையே என்று கவலையாகிப் போயிட்டுது” என துயரை இரண்டாவது கிளாஸ் வைனில் கரைத்தார்.

ஒரு மார்ச் மாதத்தில் வந்திருந்தார் வரதராஜனும் துணைவியாரும். அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்தவர் வரதராஜன். “மேலே சற்று குளிராக இருக்கும்” என சொன்னேன். பிரெஞ்சு விஸ்கியிடம் பேசி ஏதோ முடிவுக்கு வந்தார். கேபிள் காரில் பயணித்தபோது விஸ்கி பாடியது. பகலில் நிலவொளியை அது காட்டியதோ என்னவோ தனது மனைவியை அணைத்து “ஆகா இன்ப நிலாவினிலே..” என தனது கைகளை எம்ஜிஆரிடம் ஒப்படைத்துவிட்டார். கேபிள் காரினுள் -மொழி புரியாவிட்டாலும்- மகிழ்ச்சியை எல்லோரும் பருகினர். ரசித்தனர். நாமும்தான்!. “விடு.. பாடட்டும்” என்றான் நண்பன். உச்சியிலும் அவர் சில சாகசங்ளைக் காட்டினார். பிறகான காலங்களில் சென்னை சென்றபோது அவரின் வாழ்முறையும் எளிமையும் சக தோழராக வரவேற்று உபசரித்த விதமும் அவரை கம்யூனிஸ்டாக எம்மருகில் இருத்தியது. இன்று அந்த மனிதன் இல்லை.

இவ்வாறாக சன்ரீஸ் மலை வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இயற்கையழகை விரித்துவைத்து வரவேற்ற ஒரு சந்திப்புப் புள்ளியாக எமக்கு இருந்தது. காலம் மனிதர்களை தூரப்படுத்தலாம் அல்லது அவர்களாகவே தூரமாகிப் போகலாம். ஆனால் அந்த மலை எல்லா ஞாபகங்களையும் எழுதிவைத்து என்னிடம் தந்துகொண்டே இருக்கும். அதுவே எனது மகிழ்ச்சி.

அந்த மலை தனது நாட்டின் தேசியதினத்தன்று தனது இதயப் பகுதியில் இராட்சத கொடியை போர்த்தி மகிழ்கிறது. நீண்டகால வாழ்வும்,அரசியல் சமூக சூழலும், தகவமைவும் சுவிஸ் எமது இரண்டாவது தாயகமாக உணரவைத்திருக்கிற நிலையில் நமக்கும் மகிழ்ச்சிதான்!

Thanks for image: santisbahn.ch

  • 01082024

Leave a comment