சூரிச் சந்திப்பு

30.06.2024 அன்று “மலையகா” நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் சூரிச் இல் 14:30 மணி தொடங்கி 18:00 மணிவரை ஓர் ஆர்வமூட்டும் சந்திப்பாக நடந்து முடிந்தது. 70 களில் தொடங்கி 2015 வரையான காலப் பகுதியில் 23 மலையகப் பெண்களால்/ எழுத்தாளர்களால் எழுதப்பட்ட 42 கதைகளை கொண்ட இத் தொகுப்பு நூல் “ஊடறு” வெளியீடாக வந்திருந்தது. மலையகம்-200 நிகழ்ச்சிப் போக்கில் தன்னையும் இணைத்துக் கொண்ட இத் தொகுப்புக் குறித்தான சந்திப்பாக நேற்றைய சந்திப்பு அமைந்தது.
(புகைப்படத்தில் இடமிருந்து வலமாக உள்ளபடி பார்த்தால்) நெறியாள்கை செய்த தேவா (ஜேர்மனி), உரையாளர்களான காஞ்சனா (சுவிஸ்), மாலினி (ஜேர்மனி), ஜெயா (சுவிஸ்), பாரதி (சுவிஸ்) ஆகியோர் சுருக்கமாகவும் அக்கறையோடும் ஆற்றிய உரைகளில் உள்ளடங்கிய கருத்துகளை பொதுவாகத் தொகுத்தால் பின்வருமாறு சொல்லலாம்.
மலையக வாழ்வின் தடங்களில் அனுபவங்களாகவோ, நேரடி சாட்சிகளாகவோ, நிகழ்காட்சி நிலைகளாகவோ தன்னை நிலைநிறுத்திய இக் கதைகளை ஒரு புனைவிலக்கிய அழகியல் கோட்பாடுகளால் மதிப்பிடுவதிலுள்ள சிக்கல்களை தாண்டி இக் கதைகள் மலையகத்தின் ஓர் உயிரோட்டமான வாழ்வியல் சாட்சிகளாக அமைகின்றன. இது ஒரு ஆவணப்படுத்தலாகக்கூட அமைந்துவிடுகிறது.
எனவே மலையக மக்களின் வரலாறு குறித்தான பார்வைகளும் மலையக மக்களின் கடந்தகால/ நிகழ்கால வாழ்வியல் குறித்தான பார்வைகளும், குறிப்பாக பெண்கள் எதிர்நோக்குகிற பிரச்சினைகளும் உரைகளில் வந்து செல்வது தவிர்க்க முடியாது. சரியாகச் சொன்னால் அவசியமானது எனலாம். அதை இந்த உரையாளர்கள் வெளிப்படுத்தியுமிருந்தார்கள். இந்த வழியெடுத்து உட்சென்று கதைகளை மதிப்பிட வேண்டிய தேவையை அவர்கள் நன்கு உணர்ந்து சிறப்பாகச் செய்தார்கள். இந்த அம்சத்தை மிகையற்றதான ஒரு பார்வையாக முன்வைப்பதில் எனக்கு தயக்கமில்லை.
உரையாளர்கள் தம்மைப் பாதித்த கதைகளை உதாரணப்படுத்தி பேசும்போதும் அநேகமும் வெவ்வேறு கதைகள் சிலாகிக்கப்பட நேர்ந்ததை நோக்குகிறபோது ஒருபடித்தான வாசக அனுபவத்தை நொருக்கி பன்முக வாசிப்பு அனுபவம் வெளிப்பட்டதன் சாட்சியாகக் கொள்ள முடியும்.
பின்னர் யாழ் பல்கலைக் கழகத்தில் பயிலும் மலையக மாணவி தர்சினி தனு அவர்களால் உருவாக்கப்பட்டுள்ள “கசிவு” என்ற 8 நிமிட ஆவணப் படம் திரையிடப்பட்டது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் படும் அவஸ்தை குறித்தான இவ் ஆவணப்படம் அவர்களின் உடற் சோர்வு களைப்புக் குறித்தான விடயத்தை காட்சிப்படுத்தியதோடு, அதையும் தாண்டி அவர்கள் இப்போதும் நப்கினுக்குப் பதிலாக பழைய துணிகளையே பாவிக்கும் இயலாமைக்குள் விடப்பட்டிருக்கிற துயரம் பலரையும் பாதித்த ஓர் விடயமாக உரையாடலின் போது வெளிப்பட்டது. அதுவும் எட்டு மணி நேரத்துக்கு மேலாக இந்த இடைஞ்சலையும் துயரத்தையும் அதோடு சேர்ந்த வலியையும் மேலதிகமாகத் தாங்கி வேலைசெய்ய விடப்படும் ஒரு நிலை மோசமானது என கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இயன்றவரை நப்கின் பாவிப்பை சிறிதாகத்தன்னும் சாத்தியமாக்க சிறிய அளவிலாவது ஒவ்வொருவராலும் முடிந்தளவு நிதி ஆதாரத்துடனும் மலையக செயற்பாட்டாளர்களுடன் இணைந்ததான செயற்பாட்டோடும் செயற்பட எந்தெந்த வழிகளுள்ளன என உரையாடப்பட்டு, அதற்கான வேலையை தொடங்குவதற்கும் முனைப்புக் காட்டப்பட்டுள்ளது. இது இந்த ஆவணப்படம் ஏற்படுத்தியிருக்கும் செயலூக்கம் எனலாம்.
உரையாடல் சற்று விரிவடைந்து இனறு இந்திய வம்சாவளித் தமிழர், மலையகத் தமிழர், இலங்கை மலையகத் தமிழர் என்ற அடையாளப்படுத்தல் குறித்தான பார்வைகளுக்குள்ளும் சென்றன. இந்த அடையாளப்படுத்தல்களின் அரசியல் பற்றிய பார்வைகளும் முன்வைக்கப்பட்டன. இலங்கை, இந்திய அரசுகளின் சூட்சுமமான அரசியல் சதுரங்க விளையாட்டுகளும் அது நிகழ் காலத்தில் எவ்வாறு செயற்படுகிறது என்றும், இதில் லொபிகள் செயற்படுகின்றனவா என்ற சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டன.
ஒரு நூலை அதன் பக்கங்களுக்குள், வரிகளுக்குள் ஊடறுத்து பார்வைகளை முன்வைத்தலிலும் அதை உணர்வுத் தளத்திலும் அறிவுத் தளத்திலும் இயன்றவரை புரிந்து கொள்ளவைப்பதில் அவர்கள் நூலைச் சூழ்ந்து அமைத்த மலையக மக்களின் வாழ்வியல் விபரிப்புளையும் சிறப்பான அம்சமாக காணநேர்ந்தது. உரையாளர்கள் எல்லோரும் இதை செய்தது என்பது இன்னொரு உற்சாகமான நிகழ்வாகவும் அமைந்தது. அந்த உரைகளையும் உரையாடலையும் நெறிப்படுத்திய தோழர் தேவா இன் சொல்லிறுக்கம் அவரது நீண்ட அனுபவத்தின் ஒரு சாட்சியாக அமைந்திருந்தது.
இந் நிகழ்வை இனிதே நிறைவடைந்தது என்பதா, வலியோடு நிறைவடைந்தது என்பதா, விழிப்புணர்வோடு நிறைவடைந்தது என்பதா, உற்சாகமாக நிறைவடைந்தது என்பதா அல்லது வழமைபோல்தான் முடிவடைந்ததா என்பதை வந்திருந்த ஆர்வலாகள்தான் சொல்லிச் செல்ல முடியும்.
என்னளவில் நான் எதிர்பாராதளவுக்கு, உரையாளர்கள் தமது உரைகளை நன்கு தயாரித்து சிறப்பாக முன்வைத்தார்கள் என சொல்வேன். தொடர்ந்த உரையாடலும் எல்லோரும் பங்குபற்றுவதான தயக்கமற்ற ஒரு சூழலை உருவாக்கி பேச வைத்திருந்தது இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
*
- மலையகா நூலின் முன்-பின் அட்டைப்பட ஓவியங்கள் மலையக இளம் ஓவியர் யுவராணி ராஜேந்திரன் அவர்களால் வரையப்பட்டவை.
- இந்தியாவில் இந் நூலைப் பெற விடியல் பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
- 01072024







































