எனது இதயத்தில் உயிரின் இழை இருக்கிறது என்கிறான்
ஒருவன்.
இரத்தக் குழாய் நதியின் ஓட்டத்தில்
உயிரின் படகு பயணிக்கிறது என்கிறான்
இன்னொருவன்.
இரண்டும் ஒன்றுதான் என்கிறாள் ஒருவள்.
எனது மனதின் சிறகு ஒடுங்கினால்
உடல் ஒரு சடப்பொருள் ஆகிவிடுகிறது.
அந்த வரண்ட உடலில் இதயம் இயங்கியென்ன
குருதிநதி குதித்து விழுந்து பாய்ந்தென்ன
மனதின் இறகில் அதன் பறப்பில்
கிறங்கும் என் வாழ்வை
உடல் காவுவதுவரை காவட்டும்.
வாழ்வின் மரணம் வானவில்லின்
நிறங்களாய் விரியும்
நினைவுகளை எழுதும்.
காலம் அதை மெல்ல மெல்ல
கலைந்தழிக்கும் நுண்கலையை அறியும்.
எல்லாம் காணாமல் போகும்.
புதிய புதிய வானவில்கள் தோன்றும்
இப் பிரபஞ்சத்தில்
காலம் பயணித்தபடி இருக்கும்,
எதுவும் நடவாததுபோல!
- 28062024
