வீட்டு பல்கனியை எட்டிப்பார்க்கும் மரக்கிளையில் சிட்டுக் குருவிகளுக்கான தீனை ஒரு சிறு மரவீடு செய்து அதற்குள் இடுவது எனது வழமையாக இருந்தது. பனிப்பொழிவில் அது உணவுதேடி அந்தரப்படுவதை காண சகிக்கவில்லை. அதிலிருந்து அந்த சிறுவீட்டில் தீன்தானம் தொடங்கியது. படபடக்கும் சிற்றிறகையும் அதன் சிறு அலகின் இசையசைவையும் எனது ரசிகன் பார்த்துக்கொண்டு இருப்பான். இப்படியே ஒரு வெயில்கால பருவத்திலும் நான் தொடர்ந்து செய்ததைக் கண்ட அயலவன் “இப் பருவ காலத்தில் பறவைகள் சுயமாக உணவுதேடக்கூடியன. அதற்கான அதனது உழைப்பை இல்லாமலாக்கி சோம்பேறிகளாக்கிவிடாதே” என சொன்னான். உறைத்தது. இயற்கை மீதான இன்னொரு புரிதலாக அது இருந்தது. ஒரு வாழ்க்கைப் பாடமாகவும் இருந்தது.
இன்று மழை தூறவா விடவா என குழம்பிக் கொண்டிருந்த ஒரு பொழுது. நடைப் பயிற்சியில் விரைந்துகொண்டிருந்த எனது பாதங்கள் திடீரென நின்றன. அந்த கிரவல் பாதையின் ஒரு கரையில் முதுகில் வீடு சுமந்து நத்தையொன்று உணர்கொம்போய்ச்சி பாதையை குறுக்கறுத்து பயணப்பட தொடங்கியிருந்தது. சைக்கிள் சென்றுவரும் பாதையாகவும் அது இருந்தது. சைக்கிள் சில்லுகளில் அகப்படாமல் ஊர்ந்து சென்று அது பாதையை பாதுகாப்பாக கடந்துவிடுதல் சாத்தியமாகாமலும் போகலாம் என நினைத்து அந்த நத்தையை அதன வீட்டு கூரைமேல் பிடித்து மறுகரையில் புல்புதருக்குள் விட்டேன். இதை அவதானித்த சக நடைப்பயணி பேப்பர் முகத்துடன் எனை பார்த்தான். அவனை வாசிக்க முடியவில்லை. “இயற்கையை அதன் வழியிலேயே விட்டுவிடுங்கள். அது தனது இருத்தலை காப்பாற்றும் சுய ஆற்றல் கொண்டது. மனிதர்கள் தலையிடுவது தேவையற்றது…” என்றவாறாக இவனும் ஏதாச்சும் தத்துவம் வைத்திருப்பானா என்ற கேள்வியை மூளைப் பக்கமாக துரத்தி கேட்டுவரச் சொன்னேன். எதுவும் தோன்றவில்லை. பயணியும் ஏதும் சொன்னானில்லை. நத்தையும் ஏதாவது சொன்னதா என புரியும் ஆற்றலும் எனக்கு இல்லை. ஆனால் ஒரு மனநிறைவாக இருந்தது.
இப்போ தனிமையில் இருந்தபோது பேச்சுத் துணைக்கு ஓர் ஆளை அழைத்தேன். அவள் பெயர் வைன். வந்து கிளாசினுள் குந்தினாள். தண்ணீரை வரவழைத்தால் அவர் மருத்துவர் போல் இறுக்கமாக பேசுவார். ‘தண்ணி’யை வரவழைச்சால் காதல் மொழி பேசி பறக்க விடுவாள் என்பது அனுபவம். வைனோடு பேச பேச சிறகு முளைத்தது. தத்துவமும் பிறந்தது. சிட்டுக்குருவியும் நத்தையும் எனது கடந்தகால வாழ்வில் சிறகசைக்கவும் ஊரவும் சரியாக இருந்தது.
80 களின் நடுப்பகுதியில் வீடுவிட்டு பறந்து போன நான், திரும்பும்போது ஊர்ந்து வந்தேன். ஒப்புக் கொடுத்த எனது வாழ்க்கைச் சுழியின்பின் ஒருவாறு உயிர் மீண்ட எனது வாழ்வை இலவசமாகக் கிடைத்த ஒன்றாகவே கருதினேன். என்போலவே சில சக தோழர்களும் கருதினார்கள். அதனால் எனக்காக வாழ்வது குறித்து -அவர்களைப் போலவே- நானும் கவலைப்படவில்லை. இப்போ காலம் எனை கடந்து சென்றுவிட்டதோ என சந்தேகமாக இருக்கிறது. கொஞ்சம் சுயநலமாகவும் வாழ்ந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. உடல், உள ரீதியில் சோர்வு வருகிறது.
முதுமையை உணர்தல் என்பது கடந்துவந்த நினைவுகளை மீட்டலில் மகிழ்ச்சி கொள்வதாகவும், தொலைந்துபோன தோழமைகளையும் விட்டுப்போன நட்புகளையும் இழப்பாக பார்த்து மகிழ்ச்சியை இழப்பதாகவும் இருக்கிறதோ என யோசிக்கிறேன். இவ்வாறான மகிழ்ச்சியை இழப்பது என்பது எதிர்காலத்தில் இறக்கைகள் ஒடுங்கி, மரணத்துக்காக காத்திருக்கும் ஓர் உடலை காவித் திரிவதாக ஆகிவிடுமோ எனவும் அஞ்சுகிறேன்.
வாழும் எஞ்சிய காலங்களையும் தொடர்ந்து மகிழ்ச்சியால் கைப்பற்றி வைத்திருக்க வேண்டும். காலம் மனிதர்களை புதிரோடுதான் அழைத்துச் செல்கிறது. எல்லாவற்றோடும் எல்லோரோடும் இசைந்து போக என்னால் முடிவதில்லை. அந்த பண்பை இழந்தாலும் நான் மகிழ்ச்சியை இழந்துவிட வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சியை சுற்றி வாழ்வை கட்டமைப்பதும் அதைப் பேணிப் பாதுகாப்பதும்கூட போராட்டம் நிறைந்துதானே. அந்தப் போராட்டத்துடன் இப்படியே வாழ்ந்துவிட்டுப் போய்விட வேண்டியதுதான்!
கிளாசினுள் குந்தியிருந்த வைனைக் காணவில்லை. பறத்தலும் ஊர்தலும் வாழ்தலின் அறிகுறிகள்தான்!