முற்றவெளி மந்திரம்

எப்போதுமே சந்ததி இடைவெளி என்பது வரலாறு பூராவும் இருந்துகொண்டேதான் வருகிறது. அப்பர் நடந்துவந்த தடத்தில் நான் நடக்க சாத்தியமில்லை. நான் நடந்த தடத்தில் என் பிள்ளைகள் நடக்க சாத்தியம் இல்லை. காலம் இயக்கமுறாமல் நிலைகுத்தி நின்றால் மட்டுமே இது சாத்தியம். காலம் இயங்கியபடியே இருக்கிறது என்ற நினைப்பு இந்த விடயத்தில் பல பேருக்கு வருவதில்லை.

அதுவும் 40 வருடங்களுக்கு முன் இருந்த சந்ததி இடைவெளி போலன்றி பின்னர் ஏற்பட்ட இணையம், சமூக வலைத்தளம் என்பன போன்ற தொடர்பாடல் தொழில்நுட்பக் கடல் ஒரு சுனாமி போல் எழத் தொடங்கி அந்த இடைவெளியை அதிகரிக்கிறது. இது அதை கையாளத் தொடங்கிய வளர் இளம் பருவ அல்லது இளைஞர் பட்டாளத்தின் தகவல் அறிதல் திறனையும் கொள்ளளவையும் அறிவுப் பரம்பலையும் மாற்றி உலகை விரல் நுனியில் நிறுத்தியுள்ளது. இளஞ் சமுதாயத்தின் உலகை முதிய சமுதாயம் புரிந்து கொள்வதில் தமது இளம்பராய ஒப்பீடுகளை தவிடுபொடியாக்கியது. புதிய வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து தம்மை ‘இற்றைப்படுத்த’ (update) முடியாதவர்கள் இளஞ் சமுதாயத்தின் மேல் குற்றப் பத்திரிகை வாசிக்கும் இயலாமைக்குள் சென்றார்கள்.

இந்த மனப்பாங்குடனே யாழ் முற்றவெளி சம்பவத்தை அவர்கள் அணுகுகிறபோது கலாச்சாரச் சீரழிவு, ஒழுக்கமின்மை என்ற எளிய சூத்திரத்திரத்தை பாவித்தார்கள். எம்மையும்விட அடுத்தடுத்த சந்ததிகள் அறிவிலும், உலகை அறிதலிலும் வளர்ச்சிகண்டு கொண்டே போவதற்கான வெளிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். அதை நாம் அனுபவத்தில் எமது பிள்ளைகள் ஊடாக கண்டுகொண்டே இருக்கிறோம். ஒட்டுமொத்தமாக அவர்களை “அறிவுலக வெளிக்குள் தம்மை ஆட்படுத்திக் கொண்டவர்கள்” என எவரும் சான்றிதழ் கொடுத்துவிட முடியாது என்றபோதும், அதை ஒரு வளர்ச்சிப் போக்காக வரையறுக்க முடியும். யாழ் முற்றவெளியில் நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர்கள் நிகழ்த்திய மீறல் ஒன்றும் குற்றமாக எனக்குத் தெரியவில்லை. அங்கு ஏற்பட்ட இடைஞ்சல்களுக்கான பொறுப்பை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளாகள்தான் ஏற்க வேண்டும். அந்த விடயங்கள் பலராலும் பேசப்பட்டாயிற்று.

அந்த மீறலை ஒரு வன்முறைபோல சித்தரித்தல் அபத்தமானது. ஆனால் ஒரு கும்பல் தனமான வன்முறை அல்லது panic நிலைக்கு மாறக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது என்பதையும் மறுக்க முடியாது. அந்தளவில் இளைஞர்களுக்கும், அதேபோல் பொலிசாருக்கும் பொறுப்புணர்வு இருந்திருக்கிறது. அதன்படியான செயல் இயல்பாகவே குளவிக்கூட்டுக்கு கல்லெறியாத, ஒரு கண்ணீர்ப்புகையிடம் உதவிகோராத, அதன்மூலம் ஒருவித panic நிலையை உருவாக்காத பொலிஸாரின் பொறுப்புணர்வில் தெரிகிறது. அதேபோல் வன்முறையை அன்றி ஆர்வக்கோளாறை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மீறலின் எல்லைக்குள் செயற்பட்ட இளசுகளின் பொறுப்புணர்விலும் தெரிகிறது. எந்நேரமும் உடைந்து நொருங்கக்கூடிய அந்தப் பொறுப்புணர்வின் எல்லை ஓர் அனர்த்தத்தின் வாயிலை எட்டாதது ஒரு பெரும் நிம்மதிதான்.

இளைஞர்களின் போக்கை கிண்டலடிப்பவர்களுக்கு இது விளங்காமலே போய்விட்டது. இவ்வாறான நேரம்சங்களைக் கவனத்தில் எடுக்காமல், எப்போதும் எதிரம்சங்களை மோப்பம் பிடிக்கும் வேட்டைமனிதர்களே ஆபத்தானவர்கள். மாறாக இந்த இளைஞர்கள் அல்ல. இந்த வேட்டை மனிதர்கள் தமக்கான ஆதாரங்களை கும்பலாக ஓடிக்கொண்டிருப்பவர்களின் கால்களுக்குள் அகப்பட்டு முறிந்த சில கதிரைக் கால்களிலும், சரிந்து விழுந்த தண்ணீர்த் தாங்கியிலும், கதிரையைக் களவெடுத்துக் கொண்டு ஓடிய ஒருசில கள்ளப் பயல்களிடமும் கண்டடைந்து சொன்னார்கள். விலையுயர்ந்த கமராக்கள் ஒலிபெருக்கிகள் தொழில்நுட்ப சாதனங்கள் எதுவுமே அடித்து நொருக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்ததும், மேடைமீது பாய்ந்து ரகளை பண்ணாமல் இருந்ததும் என எல்லாமே இளைஞர்களின் மீறல் ஒரு வன்முறையல்ல, அது அவர்களின் நோக்கமுமல்ல என்பதற்கான ஆதாரங்கள்.

பல உலக நாடுகளில் கால்பந்து விளையாட்டு மைதானங்களில் இப்படியான ரசிகர்களின் மீறல்கள் இருப்பது நாம் பார்க்காததல்ல. யாழ் முற்றவெளி மீறல் மட்டும் ‘யாழ்ப்பாணியின் கலாச்சார சீரழிவாக’ ஒரு பகுதியினருக்கு தெரிவது அறிவின் ஓர் அவலம். கலாச்சார காவிகளாக பெண்களை அமர்த்திவிட்டு, கலாச்சார காவலர்களாக ஆண்கள் இருப்பதே ஆணாதிக்க முறைமை கொண்ட சமூகத்தில் நிலவும் வழிமுறை. ஆண்களின் கலாச்சார மீறல்களை இயல்பானதாக எடுக்கும் அதேவேளை, பெண்களின் கலாச்சார மீறல்களை ‘குய்யோ முறையோ’ என கூச்சலிட்டு எதிர்ப்பதுதான் ஆணாதிக்கக் கலாச்சாரக் கடமையாக இருந்தது. இதில் ஆண்கள் மீது நியாயமான விமர்சனங்களை முன்வைப்பவர்கள்கூட, முற்றவெளி விடயத்தில் இந்த இளைஞர்களை (ஆண்களை) முன்வைத்து கலாச்சாரச் சீரழிவு பற்றி பேசும் முரண்நகையை என்னவென்பது. அதுவும் முற்றவெளிக்கு வராத ஒரு மிகப் பெரும் பகுதி இளைஞர்கள் இவர்கள் கவனத்திற்குள் வரவேயில்லை. ஒரு சிறு பகுதி இளைஞர்களை வைத்து பொதுவாக ‘யாழ்ப்பாணிகளின் கலாச்சார சீரழிவு’ என பிரதேசவாத வாடையுடனும், ஒரு கொசிப்பு மனநிலையுடனும் வந்து களமாடியவர்கள் உண்டு.

அடுத்தது ஒரு சமூகத்தின் கலாச்சார பங்காளிகளில் ஒரு பகுதியினர் மட்டுமே இளைஞர்கள். அதுவும் ஆணாதிக்க பங்காளிகள். ஒரு கலாச்சார முழுமையில் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் பங்கை வசதியாக மறைத்துவிட்டு முற்றவெளிக்கு வந்த இளைஞர்களை மட்டும் முன்னிறுத்தி ‘தமிழ்க் கலாச்சார சீரழிவு’ என விரிவுபடுத்தி பேசுபவர்களும் இருந்தார்கள். இது இன்னொரு அபத்தம் அல்லது மோசடி. இளம் பெண்கள் முற்றவெளியில் நடந்த மீறலில் இளைஞர்களுடன் சமனான அல்லது முன்னணிப் பாத்திரம் கொண்டிருந்திருந்தால் கலாச்சார சீரழிவு மதிப்பீட்டாளர்கள் இன்னும் பத்து மடங்கு எகிறியிருப்பார்கள். புலத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாட்டிலும் இந்த கலாச்சார மதிப்பீட்டாளர்கள் கலாய்த்தபடிதான் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

இந்துத்துவ இந்தியாவின் மத மற்றும் சாதியப் பண்பாட்டு பரவலாக்கம் அல்லது தீவிரப்படுத்தல் மட்டுமல்ல, சினிமாவை முதன்மையில் வைக்கும் ஜனரஞ்சக பண்பாட்டு ஆதிக்கமும் இலங்கைத் தமிழ் மக்களை நோக்கி திட்டமிடப்பட்ட வகையில் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலின்படி படிப்படியாக நகர்த்தப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ இம் முற்றவெளி கலைநிகழ்ச்சி ஏற்பாடும் அதற்குத் துணைபோனதாக ஒருவர் மதிப்பிடுவதை இலகுவில் நிராகரிக்க முடியாது. ஒரு சிலமணி நேர நிகழ்ச்சிக்கு இவளவு பெருந்தொகையான சினிமாத்தள ‘கலைஞர்களை’ கொண்டுவந்து இறக்கிய செயல் அதனடிப்படையிலானதாகவும் இருக்கலாம். அதுவும் முந்தநாள் மழையில் நேற்று முளைத்தவர்களும் இந்த படைபெடுப்பினுள் அடக்கம்.

இந்தியப் பெருநகரங்களில் இல்லாத பெருமெடுப்பில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபம் கட்டித் தந்திருக்கிறோம் எனவும் எதிர்காலத்தில் இந்தியாவுக்கும் தமிழ் நிலத்துக்குமான தொடர்பானது தரை, கடல், ஆகாயம் வழி இறுகப் பற்றிக் கொள்ளும் எனவும் இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றாகக் கோர்த்து யாழ்ப்பாணத்தில் மேடையில் நின்று உறவுப்பாலம் அமைத்துக் காட்டினார் அண்ணாமலை. அயோத்தியில் தொன்மைமிகு மசூதியை உடைத்து இராமர் கோயில் கட்டிமுடிய, இப்போ இராமர் பாலம் இலங்கையை கொழுவி இழுத்து கட்ட ஆயத்தமாகிறார்கள். இந்த பண்பாட்டு ஆதிக்கம் அல்லது பரவலாக்கலுக்கு இளைஞர்கள் படிப்படியாக இரையாகுவது குறித்து விழிப்படைய வேண்டும். ஒவ்வொரு பண்பாட்டிலுமிருந்து நல்லனவற்றையும் பொருத்தமானவற்றையும் உள்வாங்கி சொந்தப் பண்பாட்டை வளமாக்குதல் முக்கியம். அதேநேரம் மற்றைய கசடுகளை கழித்துக் கட்ட வேண்டியதும் அவசியம். முற்றவெளி நிகழ்ச்சி இந்தக் கசடுகளின் பிரமாண்டம்.

சினிமா ஓர் அற்புதமான கலை. எல்லாக் குறைபாடுகளையும் காட்டி அந்தக் கலையை நாம் ஒருபோதுமே நிராகரிக்க முடியாது. பெண்ணுடலை பாலியல் பண்டமாக்கும் கருத்துநிலைக்கு ஏற்ப அதன் காட்சிப் படிமங்கள், பாடல்கள் என சினிமாவானது ஒரு காலத் தொடர்ச்சி கொண்டது. அதற்கு இரசிகர்களாகி பலியாகியபடிதான் வந்துகொண்டிருக்கிறோம். அத் தொடர்ச்சி தமன்னா வடிவில் இப்போ இந்த இளைஞர்களை மேடைக்கு அருகில் இழுத்துவந்து விட்டதிலும், பனை மரத்தில் கம்பங்களில் என ஏற்றியதிலும் பெரும் பங்கை ஆற்றியது எனலாம். இரசனை வேறு மோகம் வேறு. இதுகுறித்து இளைஞர்கள் விழிப்புற வேண்டும். தமன்னாவுடன் புகைப்படம் எடுப்பதற்கு சிலரிடமிருந்து 30’000 ரூபாவை பறித்து விசுக்கியது இந்த மோகம்தானே ஒழிய சினிமா இரசனை அல்ல என்பதை அவர்கள் அடையாளம் காண வேண்டும்.

ஈழத்தில் 70 களில் வீச்சம் பெற்று எழுந்த பொப் இசை வடிவம் என்பது சினிமாவிலிருந்து கிளைத்ததல்ல. அது தனித்துவம் கொண்டது. அதன் தொடர்ச்சியை போர் முறித்தெறிந்துவிட்டது. இந்தியாவிலோ ‘பாடலிசை’ சினிமாவுக்குள் அடக்கமாகிப் போனது. பாடலிசையை இரசிப்பது என்பதை சினிமாவுக்கு வெளியில் பிம்பமுறாதபடி இரசிகரின் மனதை கட்டிப் போட்டுள்ளது. பல நாடுகளில் பாடலிசை என்பது சினிமாவுக்கு வெளியே வளர்ச்சியுறும் கலை வடிவம். இசையை இரசிப்பது, ஆடுவது என்பதெல்லாம் இளம் உடலின் துடிப்புத்தனத்துக்கும் அகத் தூண்டலுக்கும் அதிகம் இதமளிப்பது. மகிழ்ச்சியை சுற்றி வாழ்வை அமைத்துக் கொள்ள உதவுவது.

திரையில் உலவிய கதாநாயகன் அரசியலில் அறிவுக்கூச்சமின்றி முதலமைச்சராக நினைக்கிறான். தொலைக்காட்சி முழுவதும் கேளிக்கை நிகழ்ச்சியிலிருந்து அறிவை முன்னிறுத்துவதாக படம் காட்டும் போட்டி அல்லது உரையாடல் நிகழ்ச்சி எல்லாமே திரையுலகம் சுற்றியே சுழல்கிறது. நடிகர்களின் கட் அவுட்டுக்கு பால் வார்க்கவும், கோயில் கட்டவும்கூட மனித அறிவை இழிநிலைக்கு கொணர்ந்து விட்டிருக்கிறது இந்தியத் திரையுலகம். இவையெல்லாம் இனி ஈழத்திலும் நடக்காது என்பதற்கான உத்தரவாதத்தை இந்தியாவிலிருந்து வரும் இந்தக் கிழிசல் பண்பாட்டு அம்சங்கள் உடைத்து நொருக்க நாளாகாது என்றே தோன்றுகிறது. இதுகுறித்து இளைஞர்கள் எச்சரிக்கையடையவும் வேண்டும்.

யுத்தங்கள் நடந்து முடிந்த பிரதேசங்களிலெல்லாம் திட்டமிட்டே போதைப்பொருளை பரவலாக்குவதன்மூலம் இளைஞர்களை அதற்கு அடிமையாக்கி, சமூகம்சார் அரசியலிலிலிருந்து தூரப்படுத்தி தமது அதிகாரங்களுக்கு எதிராக எழுந்துவிடாதபடி பார்த்துக் கொள்வது அதிகாரவெறியர்களின் உத்திகளில் ஒன்று. இலங்கைக்குள் அதுவும் குறிப்பாக தமிழ்ப் பகுதியினுள் போதைப் பொருள் இந்தியாவிலிருந்து பெருமளவு வருகிறது என சொல்லப்படுகிறது. இலங்கை அரசு அதிகார வெறியர்களின் உத்திக்கு இசைவாக, இந்திய வியாபாரிகளின் காசு பார்க்கும் குறியும் அமைவதால் அந்தக் காட்டில் ஒரே மழைதான்.

இலாபமீட்டும் தொழிலாக போதைப் பொருள் வியாபாரம் உலகின் மூலைமுடக்குகளெல்லாம் ஒரு சமூகவிரோத கிருமியாகப் பரவத் தொடங்கி நாளாகிவிட்டது. அதற்கு எதிராக இருப்பதும், அதை பொலிஸாரின் சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலமும், சிவில் சமூக நிறுவனங்களின் அறிவூட்டல் செயற்பாடுகள் மூலமும் எதிர்கொள்வது அவசியமானது.

ஆனாலும் போதைப் பொருளை ‘கடந்து போதல்’ என்பது இளம் சந்ததியால் முடியாததல்ல. புலம்பெயர் நாட்டில் மது, சிகரெட், போதைப் பொருள், பாலியல் தொழில் விடுதிகள் என சட்பூர்வமாகவும் சட்டபூர்வமற்றும் கண்முன்னே விரிகிற சந்தர்ப்பங்கள் இருக்கிறபோதும், இவைகளுக்கு அடிமையாகுபவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவானவர்கள். அது தனக்கானது அல்ல என்கின்ற அறிவு மற்றும் மனவளத்தால் பெரும்பான்மை மனிதர்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். எனவே இலங்கையிலும் பெரும்பான்மை மனிதர்கள் அல்லது இளைய சமுதாயம் இதற்கு (கடந்துபோதலுக்கு) விதிவிலக்காக இருக்க நியாயமில்லை.

முற்றவெளி நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களுக்கு ஒரு பாடம். இளைஞர்களுக்கு ஒரு சுயவிசாரணை!

  • ravindran.pa
  • 18022004

2 thoughts on “முற்றவெளி மந்திரம்”

  1. ஆராய்வுடன் கூடிய நல்ல பதிவு. ரவி இதனை ஈழ பத்திரிகைகளில் வெளியிட்டு பரப்புதல் செய்யவேண்டும். விரிந்த பரந்த அளவில் உங்கள் கட்டுரை, சிந்தனை வெளிப்பாடு பல சந்ததிகளும் உள்வாங்க சந்தர்ப்பம் தரப்படவேண்டும்.

Leave a comment