யாழ் பல்கலைக்கழக வளவுக்குள் நடந்த திரைப்பட விழாவொன்றுக்கு ஒருவர் அரைக் காற்சட்டையோடு போக அனுமதிக்கப்படாத விவகாரம் சமூகவலைத் தளங்களில் பெரும் பேசு பொருளாக வலம்வந்து கொண்டிருக்கிறது. இச் சம்பவம் குறித்து கருத்துச் சொல்ல நான் முனையவில்லை. இந்த சம்பவம் எதை வெளிப்படுத்துகிறது என்று பார்க்க முயல்கிறேன்.
இச் சம்பவம் இலகுவாக புறந்தள்ளப்படாமல் அதுகுறித்த விவாதம் இந்தளவுக்கு பரவலாவதன் மூலம் கிடைக்கும் செய்தி என்ன. நிலவும் ஒழுங்கு விதி குறித்தான கேள்வியொன்று எழத் தொடங்கியிருக்கிறது என்பதே அது. இது இப்படி ஒரு சம்பவமாக இல்லாவிட்டாலும் வேறொரு சம்பவமாக வேறொரு சந்தர்ப்பத்தில வெளிக்கிளம்பலாம். (ஏற்கனவே 2016 இல் ஒரு பழைய மாணவரும் உள்நுழைய தடுக்கப்பட்டு விவாதப் பொருளானது). இந்த விவாதப் பரவலாக்கமானது குறித்த ஆடைக் கட்டுப்பாட்டு ஒழுங்கு குறித்த கேள்வியை எழுப்பி விடைகாணத் துடிக்கிற அல்லது மாற்றத்தை வேண்டி நிற்கிறதன் வெளிப்பாடு எனலாம். அந்தளவில் பலர் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதுதான்.
எனவே சம்பந்தப்பட்ட கல்விச் சமூகம் இந்தக் கேள்வியை முகங்கொடுத்து மாற்றம் அவசியமா இல்லையா எனவும் அவசியம் எனின் அதை எவ்வாறாக மாற்றியமைப்பது எனவும் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு புள்ளியை அடையாளம் காட்டியிருக்கிறது எனலாம்.
*
காலனியவாதிகள் உருவாக்கிய கல்வி முறைமைகளும் பாடசாலை மற்றும் கட்டடக்கலை முறைமைகளும் காலனியப்பட்ட நாடுகளில் பெரும்பாலும் மாற்றமின்றி தொடர்கிறது. கல்வி முறைமை மட்டுமல்ல மாணவர்களை கண்காணிப்புப் பார்வைப் புலத்துள்; வைத்திருக்கும் (சிறைவகை) கட்டட அமைப்புமுறையும் பெரும்பாலும் மாற்றமுறவில்லை. காலனியத்தை நிகழ்த்திய நாடுகளோ இவைகளெல்லாவற்றிலும் பெரும் மாறுதல்களை செயற்படுத்தி காலத்தோடு பயணிக்கிறது.
வெக்கையில் தகிக்கும், வியர்வையில் நனையும் ஒரு நாட்டில் வெள்ளைச் சீருடையும் போதாததுக்கு கழுத்துப்பட்டியும் அணியும் ஒரு பாடசாலைச் சீருடை தேவையா என்ன. காலனியவாதிகள் விட்டுச் சென்ற இந்த முறைமையை கேள்வி கேட்கக்கூட முடியாமலா நாம் நகர்கிறோம். பாடசாலை சீருடை என்பது இப்போதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய முறைமைதான் என்பது என் அபிப்பிராயம். எதிர்காலத்தில் அதுவும் கடக்கப்பட்டுவிடலாம்.
ஆனால் சீருடைத் தேர்வு காலநிலையை புறக்கணித்ததாக இருக்குமானால் அது மாணவர்க்கு அசௌகரியமான ஒன்று மட்டுமல்ல அந்த உடைப் பராமரிப்பும் சவால் நிறைந்ததாகவே இருக்கும். எனவே சீருடை (வடிவமைப்பு, நிறம் என்பவற்றில்) காலநிலைக்கு ஏற்றதாகவும் ‘நாகரிக’ வளர்ச்சியோடு ஊடாட்டமுள்ளதாகவும் பல்லின பண்பாடுகளுக்கு தகவமைந்ததாகவும் இருப்பது சிறந்தது. அதை அணியும் தரப்பு என்ற ரீதியில் முக்கியமாக அது மாணவர்கள் தேர்வைக் கவனத்தில் எடுத்ததாக இருக்க வேண்டும்.
மிஞ்சிமிஞ்சிப் போனால் சீருடை என்பது பாடசாலை மாணவர்களை அடையாளப்படுத்தவும் பாடசாலைகளுக்குள் அவர்களுக்கிடையில் வேறுபாடற்ற பார்வைக்கோணங்களை தக்கவைக்கவும் இருக்குமே ஒழிய, பாடசாலையை ‘புனித’நிலையில் பேணுவதாக இருக்காது. பாடசாலை வளவுக்குள் பாடசாலை நேரமில்லாத அல்லது கல்விச் செயற்பாடு இல்லாத போது ஒரு மாணவன்/மாணவியோ, பழைய மாணவர்களோ, வெளியாரோ உள்நுழைய வேண்டிய சந்தர்ப்பத்தில் உடைக் கட்டுப்பாட்டை கோருதல் அர்த்தமற்றது. இல்லை, பாடசாலை வளவுக்குள் போகும்போது எந்நேரமும் உடைக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கோருவது பாடசாலையை புனித ஸ்தலமாக கற்பிதமாக்கும் தேவையற்ற வேலை.
*
ஒழுங்குமுறைகள் விதிமுறைகள் எல்லாம் சமூகத்தின் பண்பாட்டு அம்சத்துள் வருவன. அது பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருந்தாலே உயிர்வாழும். அதற்கேற்ப மாற்றமுறாவிட்டால் பெறுமானம் தலைகீழாகி (பொருத்தம் இழந்த) ஒழுங்கு விதிமுறைகளுக்கு ஏற்ப மக்களை வாழ நிர்ப்பந்திக்கும் அல்லது மூளைச்சலவை செய்யும் நிலை தோன்றும். பண்பாடுகள் தமக்குள்ளும், புறவய வளர்ச்சி நிலைமைகளின் தாக்கத்திற்கு உட்பட்டும், மற்றைய பண்பாடுகளிடமிருந்து பொருத்தமானதை சுவீகரித்துக் கொண்டும், பொதுப்புத்தியின் வளர்ச்சிக்கு ஈடுகொடுத்தும் மாற்றமடைவதை தடுத்து நிறுத்துவது ஒருவகை அடிப்படைவாதத் தன்மை கொண்டது. அந்த முண்டுகொடுத்தல் அர்த்தமிழந்த பின் அதிகாரநிலைகளினூடாக அல்லது நிறுவனமயப்பட்ட கருத்தியல்களுக்கு ஊடாக தக்கவைக்க வேண்டிய நிலைக்கு மாறுகிறது. கலாச்சார காவலாளிகள் தோன்றுகிறார்கள். அடிப்படைவாதிகள் தோன்றுகிறார்கள்.
*
எனவே பாடசாலை சீருடை, உடைக் கட்டுப்பாடு மட்டுமல்ல பாடசாலை ஒழுங்குகள் விதிமுறைகள் கூட மாற்றத்திலிருந்து தப்ப முடியாது. திண்ணைப் பள்ளி முறையில் கடைப்பிடிக்கப்பட்ட புனிதங்கள் படிப்படியாக செல்லுபடியாகாததாக மாறி நீண்ட தூரம் வந்துவிட்டதைப் போல் காலனிய எச்சங்களின் முறைமைகளும் செல்லுபடியாகாததாக மாறிக் கொண்டுதான் இருக்கும்.
நவீன தொழில்நுட்ப அறிவுகளும், தொடர்புசாதன பரவலாக்கமும் மாணவர்களின் அறிவை மட்டுமல்ல சமூகத்தின் பொதுப்புத்தியை உயர்த்தியபடி இருக்கிறது. கடந்த 40 வருடத்தில் இது ஒரு பாய்ச்சலாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நமது நாட்டிலோ புள்ளிகள் அடிப்படையில் பந்தயக் குதிரைகளாக மாணவர்களைக் கலைக்கும் கல்வி முறைமை தொடர்கிறது. புள்ளிகள் கொண்டாடப் படுகின்றன. அதனால் மாணவர்கள் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறமையில் தங்கிவாழும் ஒரு சமூகமாக பார்க்கப்படும் நிலை உள்ளது.
ஆனால் மாணவர்கள் -கல்விநிலை போலன்றி- அறிவுநிலையில் ஆசிரியர்களில் தங்கி நிற்கும் நிலை இல்லை. மாறாக அத் தளத்தில் மாணவர்களுடன் பயணிக்க ஆசிரியர்கள்தான் அதிக உழைப்பை செலுத்தி தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆசிரியர்-மாணவ தலைமுறை இடைவெளியை நிரப்ப ஒரு கடினமான அறிவுத்தள உழைப்பு முதல் தலைமுறைக்கு (ஆசிரியர்களுக்கு) வேண்டியபடி இருக்கும். இது சுழற்றி முறையில் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
அடுத்து ஆசிரியர் மாணவருக்கான உறவு தொடர்ந்தும் ஒரு அதிகார நிலை வடிவத்துள் நிலவுவதும் கேள்வி கேட்கப்பட வேண்டியது. அது பரஸ்பர மரியாதையினூடான ஒரு நட்புநிலை நோக்கி அதிகார அழிப்பு செய்யப்பட வேண்டியது. இந்த நிலை மேற்குலகில் செயற்படுவதால் பெற்றோர்களை விட ஆசிரியர்களே பிள்ளைகளை அதிகம் புரிந்துகொண்டிருப்பவர்களாகவும் அவர்கள் எந்தத் துறையில் பொருந்திக் கொள்ளக் கூடியவர்கள் என கண்டுபிடிப்பவர்களாகவும் மாணவர்களது எதிர்கால தேர்வுகளுக்கு துணைசெய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல. மாணவர்கள் தமது கல்விசாரா தனிப்பட்ட பிரச்சினைகளைக்கூட ஆசிரியர்களுடன் மனந்திறந்து கதைத்து தீர்வை நாட தயங்காதவர்களாகவும் இருக்கிற நிலை இருக்கிறது.
அதெல்லாம் மேற்குலகத்துக்குத்தான் சரி இங்கை அடி போடாவிட்டால் சரிவராது என விவாதிக்கும் ஆசிரியர்கள் காலத்தோடு பயணிக்க மறுப்பவர்கள் எனலாம். பாடசாலைக்கு வெளியே பன்முக அறிவை இன்றைய தொழில்நுட்பங்களும் தகவல் குவியல்களும் வளர்த்துக் கொண்டிருக்க காலத்தை தவறவிட்டு ஆசிரியத்துவம் கல்வியுடன் மட்டும் காத்திருக்கக் கூடாது. மாணவர்களை சமூக மனிதர்களாக உருவாக்கும் திறன் கொண்ட அறிவு வளர்ச்சியோடும் பயணிக்க வேண்டும். கல்வியை அல்லது தகைமையை “அறிவு” என்பதாக குழப்பிக்கொள்வதிலிருந்து தப்ப வேண்டும். அறிவு இடைவெளியை அதிகாரத்துவத்தால் நிரப்ப முற்படுதல் அர்த்தமற்றது.
*
புனிதம் என்ற ஒன்று இருந்தால் இழிவு என்ற ஒன்று இருக்கும். தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைவதை எதிர்க்கும் ஆதிக்கசாதியினர் புனிதத்தை முன்வைத்து கதையாடினால் தாழ்த்தப்பட்டவர்களை இழிவின் நிலைக்குள் தள்ளுவதுதான். அதையே ஆதிக்கசாதியினர் ஒழுங்கு விதிமுறை அது இது என முன்வைப்பர். அந்த இழிவை ஏற்க மறுப்பவர்கள் நிலவும் ஒழுங்கு அல்லது விதிமுறைகள் மீது கேள்வி எழுப்பும்போது அது கலகக்கார சம்பவங்களாக அமைந்துவிடும். இங்கும் அந்தக் கேள்வியை எதிர்கொள்வதுதான் சமூக வளர்ச்சிக்கும் அறிவார்ந்த மாற்றத்துக்கும் முக்கியமே ஒழிய நிலவும் ஒழுங்கை விதிமுறைகளை காப்பாற்ற வரிந்து கட்டுவதல்ல.
வரலாறு பூராவும் வளர்ச்சிப் போக்கில் முகிழும் மாற்றத்திற்கான தேவை பல மீறல் சம்பவங்களினூடாகவும் எதிர்க் கேள்விகளாகவும் சமூகத்தின் முன் வைக்கப்பட்டுள்ளன. வரலாற்றில் முன்னுதாரணமாக அவை மாறியிருக்கின்றன. தற்போது நேர்ந்த அந்த யாழ் வளாக சம்பவத்தை அந்தளவுக்கு உயர்த்தி பார்க்க முடியாது என்றபோதும் -அதை விசாரணைப் பாணியில் அணுகுவதைவிட- அதனூடு எழுந்துள்ள கேள்வியை எதிர்கொள்வது நல்லது. அதுவே காலத்தின் தேவை என்பதை ஒருதொகை சமூகவலைத்தள உரையாடல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன எனலாம்.
*
குறிப்பு:
ஒழுங்கு விதிமுறைகள் கட்டுப்பாடுகள் ஒன்றும் தேவையில்லை என எனது கருத்தை அலாக்காக மொழிபெயர்த்துவிட வேண்டாம். காலவெளிக்கு ஏற்ப அவற்றில் மாறுதல் நிகழ வேண்டும் என்பதையே சொல்ல வருகிறேன்.
ravindran.pa, 23122023