2023

P. Duvaraga & AI Duvaraga
விமர்சனம் என்பது வரலாற்றை மறுத்தல் அல்ல. வரலாற்றின் மீது நின்று பேசுதல் ஆகும். தமிழீழ விடுதலைக்காக போராடிய இயக்கங்களுக்கு ஒரு வரலாறு இருந்தது. விடுதலைப் புலிகளுக்கு ஒரு நீள் வரலாறு இருந்தது. அதற்குள்ளும் ஒரு வரலாறு உள்ளோட்டமாய் இருந்தது. மண்ணுக்காக மடிந்தோர் எல்லோரும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்தான். மரணித்த போராளிகளின் உறவினர்கள் இந்த மாவீரர் நாளில் விடும் கண்ணீர் ஆத்மார்த்தமானது என்பதும் உண்மை. அதை வைத்து ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை சென்ரிமென்ராக எழுத முடியாது. அதில் பிரயோசனம் இல்லை.
தமிழீழ விடுதலையென புறப்பட்டுப் போராடி மடிந்த போராளிகள் எல்லா இயக்கங்களிலும் இருந்தனர். எல்லோருக்கும் சேர்த்து ஒரு போராளிகள் தினத்தை கொண்டாட வக்கில்லாத ஒரு சமூகம் எல்லை பிரிப்பதுபோல் விடுதலைப் புலிப் போராளிகளின் மரணத்தை அடையாளப்படுத்தும் ஒரு நாளாக மாவீரர் நாளை கொண்டாடுகிறது. இந்தளவுக்கு பக்குவப்படாத ஒரு சமூகம் விடுதலையடைய தகுதி படைத்ததா என்ற கேள்வி எழுகிறது.
எதிரியால் மட்டும் வீழ்ந்தவர்களல்ல எல்லா இயக்கப் போராளிகளும்!. தமக்குள்ளும் தமக்கு இடையிலும் என படுகொலையில் ஈடுபட்டவர்கள். குறிப்பாக மற்றைய இயக்கங்களை தடைசெய்த விடுதலைப் புலிகள் அந்த இயக்கப் போராளிகளை துரத்தித் துரத்திச் சுட்டும் துரோகி தீர்ப்பு வழங்கியும் உயிரோடு ரயர் போட்டுக் கொழுத்தியும் எரித்த வரலாறுகள் இந்த எல்லை பிரிப்புக்குக் காரணம் என நினைக்கத் தோன்றுகிறது. இந்த படுகொலை வரலாறு கூடத் தெரியாத ஓர் இளந்தலைமுறையும் கல்வியாளர்களும் இருப்பது நிகழ்காலத் துயரம்.
வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்டபோது சேர்த்த நிதியையெல்லாம் பொறுப்பாளர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலும் அவர்களது மாமன் மச்சான் அண்ணன் தம்பி என தனிப்பட்ட கணக்குகளிலும் பத்திரமாகப் போட்டு வைத்திருந்தார்கள். 2009 இயக்கம் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப் பணம் எல்லாம் சட்டப் படியும் கூட்டுக் களவாணித்தனத்திலும் வெளியே தெரியாமல் அவரவர் கணக்குகளுக்கு போய்ச் சேர்ந்தது. வியாபார நிலையங்கள், நீச்சல் தடாகத்தோடு வீடுகள், மாடிக் கட்டிடங்கள், விலையுயர்ந்த கார்கள் நகைகள் என அவர்களின் சிலுப்பல்களை நாம் நேரில் காண்கிறோம். குறைந்த சம்பளத்தில் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை விடுதலைக்காயென அள்ளிக் கொடுத்தவர்கள் பரதேசிபோல் திரிகின்றனர். வடக்குக் கிழக்கில் உடல் அங்கங்களை இழந்த விடுதலைப் புலி களப் போராளிகள் வாழவழியற்று கிடக்கின்றனர். அவர்களுக்குக்கூட களவாடிய பணத்தின் ஒரு பகுதியை பெருங்கள்வர்கள் தன்னும் கொடுக்கத் தயாராக இல்லை.
வெளிநாடுகளில் மாவீரர் தினம் ஒரு கொண்டாட்டமாக மாறியுள்ளது. உண்மையில் பாதிக்கப்பட்ட போராளிக் குடும்பங்கள் உறவினர்கள் ஆத்மார்த்தமாக மண்டபத்துள் கண்ணீர் விட்டு அழ, வெளியிலோ கொத்துரொட்டி வாசம் கிளம்பி அதைச் சாப்பிடுவதற்கென்றே போகும் கூட்டத்தையும் கவர்ந்திழுக்கிறது. மரணித்தவர்களை மாவீரர் என கொண்டாடுவதும் உயிரோடு தப்பிப் பிழைத்து முடங்கிப்போன போராளிகளை கண்டுகொள்ளாமல் இருப்பதும் என நகரும் ஒரு சமூகம் விடுதலைக்குத் தகுதியான சமூகம்தான்!.
தலைவரென்ன துவாரகா என்ன எவர் வந்தாலும் 2009 இலிருந்து போராட்டத்தை தொடங்க time travel தொழில்நட்பத்தை கண்டுபிடித்து 2009 க்கு பயணித்து தொடர வேண்டும். காலம்-வெளி பற்றிய அறிவற்றவர்களுக்கு நாட்டில் மக்கள் தத்தமது வாழ்வை, இருத்தலை தகவமைத்து நகர்ந்து சென்றிருக்கும் இடமும் புரியவில்லை. இயங்கியலும் புரியவில்லை.
பிரபாகரனோ துவாரகாவோ உயிரோடு இருப்பதாகவே இருந்திட்டுப் போகட்டும். அவர்கள் வந்து switch போட்டு போராட்டத்தை இயக்க முடியாது. அது ஒரு தொடர் இயக்கம் கொண்ட செயல்முறை. சென்ரிமென்ற் விவகாரமல்ல அது. அது எதிர்காலத்தில் உருவாகுவதாயினும் அது அந்த மண்ணிலிருந்து உதிக்கும் புதிய பரம்பரையும் புதிய போராட்ட வடிவமும் என்றவாறாகத்தான் இருக்கும்.
தலைவரையும் வாரிசையும் எதிர்பார்ப்பதை விடுத்து ஏன் தோல்வியடைந்தோம் என்பதிலும் தலைமை இழைத்த தவறுகளிலிருந்தும் பாடம் கற்றுச் செல்லும் ஒரு சிந்தனை முறையை வளர்த்துக் கொள்வதே ஒரு சமூகம் விடுதலை குறித்து பேசும் தகுதியைத் தரும்.
*
// எதிர்காலத்தில் என்னைப் பின்பற்ற விரும்புபவர்கள் எவராக இருப்பினும் எனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். வேறு பாதையைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். // – Phan Boi Chau (வியட்நாமின் மூத்த தலைமுறைப் போராளி).