மியன்மாரில் போர்
ஊடகங்களில் உக்ரைன்-ரசியா என சுழன்றுகொண்டிருந்த போர்ச் செய்திகளை ஒக்ரோபர் 7 அன்று இஸ்ரேல்-கமாஸ் மோதல் அள்ளிக் கொண்டு போனது. பெரும் வல்லரசுகள் சம்பந்தப்பட்ட இந்தப் போர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஊடக சந்தடியில்லாமல் ஒக்ரோபர் 27 மியன்மாரில் போர் வெடித்திருக்கிறது.
ஓக்ரோபர் 27 அன்று Min Aung Hlaing தலைமையிலான மியன்மார் இராணுவ அரசு பெரும் சவாலுக்கு உள்ளாகும்படியான திடீர்த் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கும் இனக்குழுக்களின் போராட்ட அமைப்புகள் சில தனித்தனியாகப் போராடுவதை நிறுத்தி கூட்டுச் சேர்ந்து இத் தாக்குதலை நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்டிருக்கிறது. “1027” எனப் பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை இது. இந்த அமைப்புகளில் உள்ளவர்கள் பல ஆயிரக் கணக்கில் நன்கு பயிற்சி எடுத்த அனுபவம் மிக்க ஆயுததாரிகள் என சொல்லப்படுகிறது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட Aung San Suu Kyi அவர்களின் அரசை தூக்கியெறிந்து 2021 இல் சதிமூலம் ஆட்சியமைத்திருக்கும் இன்றைய இராணுவ அரசுக்கு எதிராக நடந்த மிகப் பெரும் தாக்குதல் இது என சொல்லப்படுகிறது.
சீனாவோடு எல்லையைக் கொண்டுள்ள மியன்மாரின் Shan State இல் வெவ்வேறான இனக்குழுக்களிடையே செயற்படும் அமைப்புகள் இரண்டு மேற்குப் பகுதியிலுள்ள AA அமைப்புடன் இணைந்து 1027 என்ற கூட்டு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. மியன்மார் தேசிய ஜனநாயக இராணுக் கூட்டமைப்பு (MNDAA) , ராங் தேசிய விடுதலைப் படை TNLA, மேற்குப் பகுதியிலுள்ள Rakhine State இல் செயற்படும் அரக்கன் இராணுவம் (AA) என்பனவே அவை. ஒரு வருடமாக போர்நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த அரக்கன் இராணுவம் (Arakan Army) நவம்பர் 13 ம் திகதி களத்தில் இறங்கியிருக்கிறது.
ஐநா கணக்கெடுப்பின்படி Shan இல் 60000 மக்கள் இடம்பெயந்திருக்கிறார்கள். நாடளாவிய ரீதியில் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியுள்ளது. இராணுவ காவல் நிலையங்கள், இராணுத் தளங்கள் என்பவற்றிலிருந்த நூற்றுக்கு மேற்பட்ட அரச இராணுத்தினர் போரைக் கைவிட்டு சரணடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. சில இராணுவத்தினர் இந்தியாவுக்கு தப்பியோடியிருக்கிறார்கள். 150 இராணுவ காவல் நிலையங்களும் 80 இராணுவத் தளங்களும் அழித்தொழிக்கப் பட்டிருக்கின்றன. சில வேகவீதிகளும் நகரங்களும் பிரதேசங்களும் போராட்டக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. பெருமளவு இராணுத் தளபாடங்களையும் ஆயுதங்களையும் போராட்டக் குழுக்கள் கைப்பற்றியுள்ளன.
அரசு வட பகுதியில் இராணுவத்தை குவிக்க முயன்றுவருகிறது. பிரதான வீதிகளில் புதைக்கப்பட்டிருக்கிற கண்ணிவெடிகள், தகர்க்கப்பட்ட முக்கிய பாலங்கள் அவர்களின் துரித முன்னேற்றத்துக்குத் தடைகளாக இருக்கின்றன. ஆனால் வான் தாக்குதலை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
இராணுவ ஆட்சிக் கொடுமைகளிலிருந்து தம்மை மீட்க வந்த மீட்பர்களாக மக்களிடம் ஒரு உணர்வு ஏற்பட்டிருப்பதாக ஜனநாயக ரீதியில் சில போராட்டங்களை முன்னெடுத்த போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். மக்களிடத்தில் ஒரு மிகப் பெரும் எதிர்பார்ப்பையும், எதிர்ப்புப் போராட்டக் குழுக்கள்மீதான சென்ரிமென்ரையும் ஏற்படுத்தியிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
2021 இல் இராணு ஆட்சி ஏற்பட்ட பின் பல பில்லியன் கணக்கில் சீனா போக்குவரத்து கட்டுமானப் பணிகளுக்கு முதலிட்டுள்ளது. அதேநேரம் போராட்டக் குழுக்களோடும் இராஜதந்திர மட்டத்தில் தொடர்பு வைத்திருந்திருக்கிறது. இராணுவ ஆட்சியின் கொடுமைகளிலிருந்து விடுபட எத்தனிக்கும் மியன்மார் மக்களின் புகலிடம் இந்த போராட்டக் குழுக்களாக இருக்கிறது. இதில் சீனாவின் பாத்திரம் என்ன என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கலாம்.
எது எப்படியோ இந்தப் போராட்டக் குழுக்கள் ஏற்கனவே பிரதேசங்களை கட்டுப்படுத்துவதிலும் தமது பிரதேச மக்களின் நலன்களின் அடிப்படையிலும் அவர்களின் பண்பாட்டு அடிப்படையிலும் தமக்குள் முன்னர் மோதிக்கொண்ட வரலாறு கொண்டவை. இவர்களே மக்களின் மீட்பர்களாகத் தெரிகிறார்கள் என்ற கூற்று தவிர்க்க முடியாமல் தமிழீழப் போராட்டத்தின் படிப்பினைகளுக்குள் எமைக் கொணர்ந்து அச்சுறுத்துகிறது.
இந்தவகை உள் மோதல்களையும் போட்டிச் செயற்பாடுகளையும் எமது போராட்ட அமைப்புகள் ஈழப்போராட்ட அகநிலையில் நிகழ்த்த, புறநிலையில் எமது போராட்டத்தில் இந்தியா சுழற்றிய பம்பரத்தை சீனா தத்தெடுத்து மியன்மாருக்கு கைமாற்றி விளையாடாமல் இருந்தாலே பெரிய விசயம்தான். என்ன நாம் ஒரு படி மேலே போய், சகோதர இயக்க அழிப்புகளை மேற்கொண்டு தனியொரு இயக்கமாக முதலிலேயே சுய அழிவைத் தொடங்கியவர்கள் என்ற சிறப்பம்சம் வரலாறாக உள்ளது. அது மியன்மாரில் இதுவரை நிகழவில்லை.
இந்தப் போரில் மியன்மார் மக்கள் சந்திக்கின்ற பேரழிவுகளுக்கும் பேரவலங்களுக்கும் யாருமே சமாதானம் சொல்ல முடியாது. மியன்மார் மக்களின் மீட்சிக்கு அவாவுறுவோம். மாற்றங்கள் சாத்தியப்பாடுகளின் மீதுதானே நிகழும் என்பதும் உண்மை. நல்லதே நடக்கட்டும் மியன்மார் மக்களுக்கு!
- 21112023
