“இருமை” சிந்தனை முறை

சுவிஸ் வரலாற்று ஆசிரியர் டானியல் கன்ஸர் அவர்கள் உக்ரைன்- ரசிய போரின்போது ஜேர்மனி-ரசிய முரண்பாட்டை விளக்கும் போது ஒரு வசனத்தை பாவித்திருந்தார். அமெரிக்கா அதிகாரம் செலுத்தும் நாட்டோவிலுள்ள ஜேர்மனியானது அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையில் எங்கே நிற்கும் என பார்த்தால் அது அதன் மத்திய புள்ளியிலிருந்து ரசியா பக்கம் சாய்ந்ததாக இருக்கும் என்றார். அந்த அரசியல் கருத்து மீது இன்னொருவருக்கு வேறு அபிப்பிராயங்கள் இருக்கும். அதல்ல நான் சொல்ல வந்தது. (அமெரிக்கா பக்கமா ரசியா பக்கமா என்பது போன்ற) இருமை நிலைப்பாடுகள் அல்லது சிந்தனை முறை பற்றியது. அவரது அந்த கூற்றில் மாறுபட்ட அரசியல் அபிப்பிராயங்களின் பன்முகத்தன்மையான “உரையாடல்” ( dialogue) வெளியை விட்டுவைக்கும் சொல்லாடலை குறிப்பிடுகிறேன். இங்கு சாதாரண சமூகத்திடமும் இந்த சிந்தனை முறை இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

எமது சமூகத்தில் “இருமை”” சிந்தனைமுறையே கோலோச்சுகிறது. சரி- பிழை, தியாகி-துரோகி, உண்மை-பொய், ஆதரவு-எதிர்ப்பு என தீர்க்கமான முடிவுகளை அறிவித்து, அவற்றுக்கு இடையிலான நிலைகளை மறுத்து, அவற்றை நிரூபிக்க நியாயப்படுத்த வரிந்து கட்டுவதால் “உரையாடல” வெளி சிதைக்கப்பட்டு விடுகிறது. அறிவை இற்றைப்படுத்துவது அல்லது விசாலிப்பதில் இது பாதகமாகிறது.

இதை கவனத்தில் கொண்டு (பாடசாலை, குடும்பம், மத, பண்பாட்டு சமூக வடிவங்களைக் கொண்ட) சிவில் சமூக நிறுவனங்கள் செயற்பட வேண்டும். ஆனால் அது எம்மிடத்தில் அவ்வாறு செயல்நிலையில் இல்லை. இருமை நிலைப்பாட்டு சிந்தனை முறை முழுமையற்றது என்பது என் அபிப்பிராயம். அவை கேள்விகளை முன்வைத்து மறைந்து விடுவன என்றளவிலாவது ஏற்றுக்கொண்டாலும், அதைவிட அது மாற்று கருத்துகளின் மீதான சகிப்பின்மையையும், பிழை என தெரிந்தாலும் நியாயப்படுத்த வேண்டிய நிலைக்கு ஒருவரை தள்ளுதலையும், அநாவசியமான கொந்தளிப்பான விவாதங்களையும், தன்முனைப்புகளை முன்தள்ளலையும், அதன்வழி மனித உறவுகளை பாதிப்பதையும் காணலாம்.

இருமை நிலையை ஆழப்படுத்தும் “பட்டிமன்றம்” என்ற முறைமை குறித்தான கேள்வி இங்கு எழுகிறது. இன்று கண்ணகி தரப்பில் நின்று மாதவியை விளாசும் அதே ஆள் நாளை மாதவி தரப்பில் நின்று கண்ணகியை விளாசுவதன் மூலம் அந்த நபர் எந்தவிதமான அறிவை சமூகத்திடம் வழங்கிவிட முடியும். அதனால்தான் முக்கியமான சிவில் சமூக நிறுவனமான பாடசாலையில் “உரையாடல்” முறையை ஊக்குவிக்கும் செயற்திட்டங்கள் அவசியம். பட்டிமன்ற முறைமையிலான சிந்தனை முறை இதற்கு எதிரானது.

“எனக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். அது எனக்கு எதுவுமே தெரியாது என்பதுதான்” என சோக்கரட்டீஸ் சொன்னதும், “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்பதும் தன்முனைப்புகளை அழித்து உரையாடல் வெளிக்குள் கொண்டுவருவதுமான நோக்கம் கொண்டவை. இன்று நாம் சரியாக நினைப்பது நாளை எமக்கே தவறாக தெரியவும், உண்மை பொய்யாக தெரியவும் நேர்கிறபோது மற்றவர் கருத்தை குறைந்தபட்சம் சகிக்கவாவது எம்மை நாம் செதுக்க வேண்டும். கருத்துகளோடும் கேள்விகளோடும் அதற்கான பதிலை தேடுதலோடும் என தொடரும் ஓர் அறிவுச் செயற்பாடு போற்றுதற்குரியது.

அந்த சிந்தனை முறையை சிவில் சமூக நிறுவனங்கள் சமூகத்துள் கடத்த வலுவுள்ளவை. அதுவே சமூக இயக்கத்தை முன்தள்ளுகிற “பொதுப்புத்தி” மட்டத்தை உயர்த்திக்கொண்டிருக்கும். இதில் கல்வி நிறுவனங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

கல்வி மிக அவசியமானது என்ற அதேநேரம் அது சமூக சிந்தனையை அளவிடும் முழு அளவுகோல் அல்ல. கல்வி வேறு. அறிவு வேறு. அதனால்தான் “கல்வியறிவு” என்ற வார்த்தை வழக்கில் உள்ளது. அறிவின் ஒரு முக்கிய பகுதிதான் கல்வி. அதேபோல் தேடலையும் பன்முக அறிவை வளர்த்துச் செல்லவும் அது ஒரு ஏணி என்பதாலும் அதன் முக்கியத்துவம் கேள்விக்கு இடமில்லாதது. அதனால்தான் கல்வியானது மனித உரிமை என்பதற்குள் உள்ளடக்கப் பட்டிருக்கிறது. எனவே கல்வியை வழங்கும் சிவில் சமூக நிறுவனமான பாடசாலை சமூகத்தின் பொதுப்புத்தி மட்டத்தை உயர்த்தும் பொறுப்பணர்வையும் கவனத்தில் எடுத்து மாணவர்களை சமூக மனிதர்களாக உருவாக்க பாடுபட்டால் பாடசாலைகளின் சமூகப் பெறுமதி இன்னும் அதிகமாகும். ஒன்றுமே நடைபெறுவதில்லை என்பதல்ல அதன் பொருள். போதாமை பற்றி பேசுதல் என்பதுதான் அதன் பொருள்.

இருமை சிந்தனை முறைமையை அது மாணவர்களின் சிந்தனைமுறையில் கேள்வியாகவாவது விட்டுச் செல்ல முயல வேண்டும். இருமை சிந்தனை முறையை தாண்டி பன்முக சிந்தனை முறைக்குள் வர பட்டிமன்ற முறைமை உதவாது. மாறாக பாதகமானது.

தலையா தளபதியா என பட்டி மன்றம் நடந்ததில் பங்குபற்றியவர்களை சாடி எதுவுமில்லை. பொதுப்புத்தி மட்டம்தான் பிரச்சினை. அதை உயர்த்த சிவில் சமூக நிறுவனங்கள், புத்திஜீவிகள், சமூக அமைப்புகள் கடமைப்பட்டவர்கள். புத்தகங்களை ஏன் வாசிக்கோணும்… கூகிளை தட்டினால் எல்லாம் வரும் என சொல்லக்கூடிய ஒரு சமூகம் ஓர் அவலம் என்பதையும் இங்கு சொல்லிவைக்கலாம்!

தலயா தளபதியா, கமலா ரஜனியா என மேடையில் மட்டுமல்ல பாடசாலை கடைதெரு என விவாதிப்பது நபர்கள் பற்றிய குறைபாடல்ல. பொதுப்புத்தி மட்டம் சார்ந்தது. நோயை விட்டுவைத்துக் கொண்டு அதன் அறிகுறிகளுக்கு வைத்தியம் பார்ப்பது பிரயோகம் அற்றது!

  • 13112023

Leave a comment