வழித்தடம்

மேற்குலகின் அளவுகோல்கள் வசதிக்கேற்ப வளைந்து கொடுக்கும் ஒன்று என்பது தொடர் வரலாறாக உள்ளது. 1948 இல் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கமே ஆயிரக் கணக்கான பலஸ்தீன மக்களை கொலைசெய்தும் ஏழு இலட்சம் பேரை அகதிகளாக்கியும் 500 பலஸ்தீன கிராமங்களை அழித்து நில ஆக்கிரமிப்பு செய்ததும் என ஒரு வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றை நாக்பா என பலஸ்தீன மக்கள் கவலையுடன் நினைவுகூர மறுபுறம் இஸ்ரேல் தேசியதினமாக கொண்டாடும் வரலாறு அது. அதன்பின்னாக காலத்துக்குக் காலம் பல பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் படிப்படியாக பலஸ்தீனத்தின் பெருநிலப்பரப்பை இஸ்ரேல் விழுங்கிக் கொண்டது. ஒவ்வொரு இராணுவ நடவடிக்கைகளிலும் பல பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டும் அகதிகள் ஆகியும் தமது நிலத்தையும் வாழ்விடங்களையும் இழந்துகொண்டது வரலாறு.

சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணான இந் நடவடிக்கைகள் பயங்கரவாதம் என்பதற்குள் மட்டுமல்ல போர்க்குற்றம் என்பதற்குள்ளும் அடங்கும். அரச பயங்கரவாதம் அது. ஐநாவை செவிமடுக்கக்கூட தயாராக இல்லாத இஸ்ரேல் அரசை பெரியண்ணன் கிள்ளியும் நுள்ளியும் கொஞ்சிக் குலாவியும் முதுகில் தட்டிவிட்டுக் கொண்டும் இருந்தார்/ இருக்கிறார். இவர்களெல்லாம் பலஸ்தீன இஸ்ரேல் வரலாற்றை 2023 ஒக்ரோபர் 7 இலிருந்து தொடங்கி பேசிக்கொண்டிருப்பதும் அதை மேற்குலக ஊடகங்கள் ஊதிக்கொண்டிருப்பதும் தப்பித்தலுக்கான கடப்பு வழியாக இருக்கிறது.

ஒக்ரோபர் 7 க்குப் பின்னான காஸாவைக்கூட அவர்கள் தங்கள் மேலாதிக்க கண்ணாடியை அணிந்தே பார்க்கிறார்கள். பட்டினி சாவையும் குண்டுகளையயும் ஏவும் ஒரு அரசை கட்டடுப்படுத்த முடியாத ஒரு ஐநா இந்த உலகத்தில் இருப்பது அர்த்தப்பாடு கொண்டதா என்ன. இவளவு பெருந்தொகையாக மனித உயிர்கள் சின்னாபின்னப்பட, குழந்தைகள் உதிர்ந்து விழ ஒரு போர்நிறுத்தத்தைக் கூட ஏற்க தயாராக இல்லாத ஒரு நாகரிகமும் சனநாயகமும் எவளவு கேவலமானது. பேரரசுகள் தொடங்கி காலனியம் என உலகை ஆண்ட அமைப்பு வடிவங்கள் எல்லாம் கவிழ்ந்து கொட்டுப்பட்டன என்பது வரலாறு. அதுவே இயங்கியல். அதிலிருந்து யாரும் தப்பிவிட முடியாது. அதற்குள் மில்லியன் கணக்கான உயிர்கள் வரலாறு நெடுகிலும அதற்கு பலியாக்கப் பட்டிருக்கின்றன என்பது பேரவலம்.

அரசுகளை இயக்குவது மக்கள் என்பதும் ஜனநாயகம் என்பதும் எல்லாம் பச்சைப் பொய். அதிகாரத் தாகமும் பெரும் காப்பரேட்டுகளும் பலம்வாய்ந்த லொபிகளும்தான் இயக்குகின்றன. மூன்று இலட்சம் அங்கத்தவர்களைக் கொண்ட அமெரிக்கப் பணக்கார சியோனிச லொபியை தாண்டி பெரியண்ணன் வண்டி ஓட்ட முடியாது. அண்ணனின் தலைமையிலான நேட்டோவும் பின்னிணைப்பான ஐரோப்பிய ஒன்றியமும் போரையும் உலக மேலாதிக்கத்தையும் காக்கும் அமைப்புகளாக இருக்கின்றன. இஸ்ரேல் அரசின் அடாவடிகளை இவர்கள் வேடிக்கை பார்ப்பதும் பொய்களை கட்டமைத்து நியாயப்படுத்துவதும் தொடர்ந்தால் அதன் வழித்தடம் இன்னொரு உலகப்போரை தவிர்க்க முடியாததாக்கிவிடும்!

Leave a comment