எதைச் செய்ய முடியும்?

  • Norman Finkelstein

Norman Finkelstein அவர்கள் 1953 இல் அமெரிக்காவில் பிறந்த யூத இனத்தவர். அவரது பெற்றோர் இருவரும் நாசிகளின் இருவேறு கொன்சன்றேசன் முகாம்கள் (Auschwitz, Majdanek) இலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள். இவர்கள் 1995 இல் காலமாகினர். பின்கல்ஸ்ரைன் அவர்கள் அறியப்பட்ட அரசியல் விஞ்ஞானியும், பேராசிரியரும் எழுத்தாளரும் ஆவார். அவர் சியோனிசம், கொலோகாஸ்ற் என்பன குறித்து நூல்கள் எழுதியவர். அவர் The Jimmy Dore Show க்கு 12.10.2023 இல் வழங்கிய நேர்காணலில் அவர் முன்வைத்த கருத்துகளை நன்றியுடன் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

யார் காஸா மக்கள்?. 70 வீதமான காஸா மக்கள் 1948 யுத்தத்தின் போதான அகதிகள் அல்லது அந்த அகதிகளின் வாரிசுகள். இஸ்ரேலிய அரசால் துரத்தப்பட்ட 750’000 பலஸ்தீனர்களில் 290’000 பேர் காஸாவில் தங்கினர். இப்போ காஸாவில் 2.3 மில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அவர்களில் 50 வீதம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள். இந்தப் பூமியின் மிக சனத்தொகை நெரிசலைக் கொண்ட இடம் காஸா. 5 மைல் அகலமும் 25 மைல் நீளமும் கொண்ட சிறிய நிலப் பரப்பு.

2006 இல் காஸாவிலும் மேற்குக் கரையிலும் நடந்த பாராளுமன்றத் தேர்தலினை கண்காணிக்கும் குழுவில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரும் இருந்தார். மிக நேர்மையாகவும் ஒழுங்காகவும் நடந்த தேர்தல் இது என அவர் கூறியுமிருந்தார். இதில் கமாஸ் அமைப்பினர் பெரும்பான்மை வெற்றியை ஈட்டி அதிகாரத்துக்கு வந்தனர். இவ்வாறு ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கமாஸ் இனை நிராகரித்து இஸ்ரேல் முற்றுகையை (blocade) செயற்படுத்தியது. அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. காஸாவில் 50 வீத மக்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாக இருந்தனர். அதில் 60 வீதமானோர் இளையோர்கள்.

காஸாவுக்குள் எவருமே உள்நுழைய முடியாது. அதேபோல் காஸாவிலிருந்து எவருமே வெளியே செல்ல முடியாது. இந்த 17 வருடத்திலும் இளையோர்கள் இந்த 5×25 சதுர மைல் பரப்பளவுக்கு வெளியே தம் வாழ்வில் எதையும் கண்டதில்லை. கொன்சர்வேற்றிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அவர்கள் காஸாவை ஒரு “திறந்தவெளிச் சிறைச்சாலை” என வர்ணித்தார். இஸ்ரேலின் முன்னணி சமூகவியலாளர் Baruch Kimmerling ஹிப்ரூ மொழியில் (2003) எழுதிய “ஆரியல் ஷரோனின் பலஸ்தீனத்துக்கு எதிரான போர்” என்ற தனது நூலில் காஸாவை இதுவரை தோன்றியிராத மிகப் பெரும் “கொன்சன்றேசன் முகாம்” (கொ.மு) என வர்ணித்தார். அரைவாசிப் பேர் இந்த கொ.மு க்குள் பிறந்து குழந்தைகளாகி சிறுவர்களாகி இளையோர்களாகி வளர்ந்தவர்களாகினர். அவர்களது அனுபவங்கள் இந்த கொ.மு எல்லைக்குள்தான் இருந்தது. இவ்வாறான நிலையில் இந்த காஸா மக்கள் எதைச் செய்ய முடியும்?.

முன்னர் எனது தாய் தந்தையர் நாசிகளின் கொ.மு இல் அடைத்து வைக்கப்பட்டவர்கள். அதனால் இந்த மக்களும் எனது பெற்றோர் அனுபவித்ததைப் போன்ற அதே நிலைமைக்குள் விடப்பட்டதற்காகவும் அந்த நிலைமையை முகங்கொடுக்க வைத்தததற்காகவும் இஸ்ரேலியன் என்ற முறையில் நான் என்னை ஒரு குற்றவாளியாக உணர்கிறேன். எனது 40 வருட உழைப்பு இந்த இஸ்ரேல் பலஸ்தீன முரண்பாட்டில் எதையுமே செய்யமுடியாமல் போனதை உணர்கிறேன்.

இந்த கொ.மு இல் பிறந்த அதே மனிதன் சில நாட்களுக்கு முன் (ஒக்ரோபர்-7) அந்த முகாமிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றதை, அதற்காக அவர்கள் என்னவிதமான தந்திரோபாயத்தை உபயோகித்தார்கள் என்பதை யார்தான் விமர்சிக்க முடியும்?. நான் இதை அங்கீகரிக்கவும் இல்லை. நிராகரிக்கவும் இல்லை. ஏனெனில் அப்படியொரு கொ.மு இனுள் நானும் பிறந்து 20 வருட வாழ்வை அங்கு வாழ்ந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என எனக்குத் தெரியாது.

2008, 2012 களில் அமெரிக்காவின் ஜனாதிபதி போட்டிக்கு குடியரசுக் கட்சியினால் தெரிவுசெய்யப்பட்டவரான றொன் பவுல் அவர்கள் 2009 இல் ஒரு உரையின்போது இஸ்ரேலானது பிஎல்ஓ (பலஸ்தீன விடுதலை இயக்கம்) க்கு எதிராக கமாஸின் உருவாக்கத்தை உற்சாகப்படுத்தியது என தெரிவித்திருந்தார். ஆம். அவர் சொல்வது வரலாற்று ரீதியில் சரிதான். இஸ்ரேல் கமாஸை பல வழிகளில் உற்சாகப்படுத்தியது என்பது உண்மை. ஆனால் பிஎல்ஓ க்கு ஒரு எதிர் அணியாக கமாஸை உருவாக்குவதற்கு இஸ்ரேல் கமாஸின் மீது நெருக்கடிகளை உருவாக்கியது என்பதும் உண்மை.

நான் கமாஸை நியாயப்படுத்தவில்லை. பலஸ்தீன மக்கள் தமது தலைமையை தாமே தீர்மானிக்க கடமைப்பட்டவர்கள். 2006 தேர்தலில் அவர்கள் கமாஸை தெரிவுசெய்தார்கள். பொருளாதாரத் தடை நடைமுறைப்படுத்தப்பட்ட பின் அதன் தாக்கங்களால் கமாஸ் தமது தலைமை ஆற்றவேண்டிய கடமையிலிருந்து தோல்வி அடைந்திருக்கக் கூடும். அதனால் கமாஸ் அடுத்த தேர்தலில் தோல்வியைச் சந்தித்திருகக் கூடும். இந்த ஜனநாயக முறைமைக்கான சந்தர்ப்பம் ஒருபோதுமே பலஸ்தீன மக்களுக்கு அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு 2006 வரை கமாஸ் இஸ்ரேலை ஒரு அரசாக அங்கீகரிக்கவில்லை என்றபோதும், அதிகாரத்துக்கு வந்த பின்னான ஒரு பரிணாம வளர்ச்சிக் கட்டத்தில் தலைமை இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்திருக்கவும் கூடும். நிச்சயமாக என நான் சொல்லவில்லை. சாத்தியம் என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். ஒருபோதுமே இந்த சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

கமாஸ் உம் காஸா மக்களும் இரண்டுமே ஒன்றுதான் என நான் சொல்ல வரவில்லை. எவ்வாறாயினும் கமாஸை வளப்படுத்தியவர்களும், ஆதரித்தவர்களுமான இளையோர்கள் அந்த அமைப்பில் இணைந்தார்கள். அவர்களது இயல்பு வாழ்வுக்கான ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் மூச்சுவிட முடிந்திருந்தால் அவர்கள் கமாஸில் இணைவார்களா தெரியாது. இந்த இளசுகள் தமது வாழ்வை தியாகம் செய்ய முன்வருவது ஏனெனில் நிலைமை வாழ்தலுக்கான எந்தச் சந்தர்ப்பத்தையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை, நம்பிக்கையீனத்தைக் கொடுத்தது என்பதால்தான். எனவே சரியாகச் சொல்வதானால் நான் கமாஸை காஸா மக்களிலிருந்து பிரித்துப் பார்க்கவில்லை. காஸா மக்கள் மீது செலுத்தப்பட்ட தடைகளானது கமாஸ் மீது ஒரு அனுதாபத்தையும் தூண்டலையும் அந்த அந்த மக்களிடையில் ஏற்படுத்தியிருந்தது. அவர்களுக்கு வேறு தேர்வுகள் இருக்கவில்லை. வேறு வழிவகைகள் இருக்கவில்லை. இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்க முடியும். “எங்கே, எது, என்ன… அவர்களது தேர்வாக இருக்க முடியும்?” என்பதே அந்தக் கேள்வி.

காலங்காலமாக இஸ்ரேல் மோசமான கிரிமினல் நடவடிக்கையை காஸா மீது ஏவி வருகிறது. பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. உதாரணமாக 2007 மார்கழியிலிருந்து 2008 தை மாதம் வரை Hot Winter என்ற பெயரில் ஒரு இராணுவ நடவடிக்கையைச் செய்தது. 2009 இல் சர்வதேச மனித உரிமைகள் சபை ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டது. அதன்படி 1400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அதில் 350 பேர் குழந்தைகள். 6000 வீடுகள் அழிக்கப்பட்டன. 2014 இல் Protective Edge என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் 550 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 18’000 வீடுகள் தரைமட்டமாகின. இந் நடவடிக்கை முடிந்த 51 நாட்களுக்குப் பின் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் அந்த இடத்தைப் பார்வையிடச் சென்றிருந்தார். “எனது வாழ்க்கையில் இவ்வாறான ஒரு பேரழிவை இதற்குமுன் கண்டதில்லை” என அவர் கூறியிருந்தார்.

நீங்கள் கேட்கலாம், “ஏன் பலஸ்தீனர்கள் வன்முறையற்ற வழியில் பிரச்சினையைத் தீர்க்க முயலக்கூடாது?” என!. அவர்கள் அவ்வாறான வழியில் முயற்சி செய்து பார்த்தவர்கள். அத்தோடு 2018 இல் அவர்கள் ஒரு மிகப் பெரும் ஊர்வலமொன்றைச் செய்திருந்தார்கள். அது அமைதியான வழியில் தொடங்கியது. ஆனால் அது அவ்வாறு முடியவில்லை. இதன்போது இஸ்ரேல் என்ன செய்தது என்பதை ஐநா மனித உரிமைகள் சபை தமது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் உளவுப்படை மறைந்திருந்து (ஸ்னிப்பர் தாக்குதல் மூலம்) வைத்தியத்துறையைச் சார்ந்தவர்களையும் ஊடகவியலாளர்களையும் மாற்றுத் திறனாளர்களையும் குறிவைத்துச் சுட்டுக் கொன்றது. இதைத் தொடர்ந்து காஸா மீது மேலும் மிகக் கொடுமையான மனிதத்தன்மையற்ற தடைகளை நடைமுறைப்படுத்தியது. இப்போ அந்தக் கேள்விக்கு மீண்டும் வருவோம். அதற்கான பதில் அந்த மக்கள் என்ன செய்ய முடியும் என்ற கேள்விதான்.

நெத்தன்யாகு பலஸ்தீனக் கேள்வியை ஒடுக்குவதற்கான ஒரு உத்தியை கையாண்டார். அண்டை அரபு நாடுகளுடன் எல்லா ஒப்பந்தங்கள் குறித்தும் பேச்சு நடத்தினார். அதன்மூலம் பலஸ்தீனக் கேள்வியை காணாமல் செய்யலாம் என நினைத்தார். இந்த காணாமல் செய்தல் என்பது ஒரு சூழ்ச்சிகரமான வழிமுறை. காஸா கொ.முகாம் வாழ்வை ஒரு நீண்ட காலத்துக்கு தொடரச் செய்து அவர்களை பசியில் மரணிக்க விடுவதை (starvation) நோக்கமாகக் கொண்டது. ஆனால் அந்த மக்கள் மரணிக்க மறுத்தார்கள். அதாவது தமது இருத்தலுக்காக கிளர்ந்தெழுந்தார்கள்.

“நாம் மிருகங்களுடன் போரிடுகிறோம்” என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கூறினார். காஸாவுக்குள் உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் எல்லாவற்றையும் நிறுத்துகிறோம் என அறிவித்தார். இந்த ‘மிருகங்களில்’ அரைவாசிப் பேர் குழந்தைகள். ஒரு மில்லியன் குழந்தைகள். அவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றனர். எனவே அவர்களை பட்டினிச் சாவு பிரளயத்தை நோக்கித் தள்ள இஸ்ரேல் முயற்சிக்கிறது. காலமாகிய எனது அம்மா சொல்வார், “பலஸ்தீனத்தில் பிறந்ததைத் தவிர என்ன குற்றத்தை அவர்கள் செய்தார்கள்?” என!. கமாஸ் க்கு எதிராக வாதிடுபவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன், பலஸ்தீனத்தில் பிறந்ததைத் தவிர அந்த ஒரு மில்லியன் குழந்தைகளும் என்ன குற்றம் செய்தனர் என!.

இப்போ சமூகவலைத்தள காவலர்கள் கிளர்ந்தெழுகிறார்கள். இஸ்ரேலின் நடவடிக்கைகளையும் நாசிகளின் நடவடிக்கைகளையும் ஒப்பீடு செய்வதற்கு எதிராக கிளம்புகிறார்கள். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்பவற்றை காஸாவுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றார். நெத்தன்யாகு தாம் ஒரு நீண்ட யுத்தத்துக்கு தயாராகிறோம் என்றார். இந்த இரண்டு அறிவிப்புகளையும் அருகருகாக வைத்து இணைத்துப் பார்க்கிறபோது, இந்த சமூகவலைத்தள காவலர்களுக்கு என்ன புரிகிறது என்பதை கேட்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இஸ்ரேல் அரசானது காஸா பிரச்சினை மீதான தனது இறுதித் தீர்வை இவ் வழியில் வரைந்திருக்கிறது என்கிறேன்.

கமாஸை இல்லாமலாக்க தாம் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்போம் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமா சொல்லியிருக்கிறார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஒபாமா உங்களிடம் நான் கேட்கிறேன், கமாஸை இல்லாமலாக்குவதற்கு இஸ்ரேல் தாம் எவ்வாறு எந்த வழியில் போவோம் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறது. காஸா மக்களுக்கான உணவு தண்ணீர் மின்சாரம் எரிபொருள் என்பவற்றை மறுப்பதன் மூலம் அதை இஸ்ரேல் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது. அப்படியாயின் நீங்கள் காஸா மக்களின் மீதான கூட்டுப்படுகொலையை ஆதரிக்கிறீர்களா?. அதாவது நீங்கள் இஸ்ரேலுக்கு செங்கம்பள வரவேற்பை அளிப்பது என்பது பலஸ்தீன மக்களின் மீதான கூட்டுப் படுகொலைக்கு செங்கம்பளம் விரிப்பதாகும். நீங்கள் உங்கள் வேலைகளுக்கு பொறுப்புள்ளவர்களாக இருங்கள்.

சர்வதேசச் சட்டத்தின்படி வாழ்வியல் தேவைகளின் மீதான தடை என்பது கூட்டுத் தண்டனை (collective punishment) ஆகும். அதன்படி அது சர்வதேசச் சட்ட விதிமுறைகளுக்கு விரோதமானது. தொடர்ச்சியாக சுமத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தடைகள் அகற்றப்பட்டால், மற்றைய மக்களைப் போலவே காஸா மக்களும் தமது வாழ்வாதாரத்தை தேடவும் அதை மேம்படுத்தவுமான சந்தர்ப்பங்களை தேடிக்கொள்வர். அதன்பிறகு மக்கள் 2006 இல் நடந்ததுபோன்று நிலைக்கு வராமலிருக்க சாத்தியம் உண்டு. 2006 தேர்தலில் அவர்கள் பலஸ்தீன ஆட்சியாளர்களை நிராகரித்து கமாஸ் க்கு வாக்களித்திருந்தனர். சட்டவிரோதமானதும், குற்றத்தன்மை வாய்ந்ததும், தார்மீகநெறி அற்றதுமான தடைகளையும் முடிவுக்குக் கொண்டு வந்து அந்த மக்களை வாழ விடுங்கள். அவர்கள் மூச்சுவிடட்டும்.

இஸ்ரேல் ஒக்ரோபர் 7 இல் எதிர்கொண்டதை பலஸ்தீனர்கள் பலமுறை எதிர்கொண்டிருக்கின்றனர். அவை குறித்த எண்ணிலடங்கா மனித உரிமை அறிக்கைகள் இருக்கின்றன. இஸ்ரேல் காஸாவுக்குள் நுழைந்த ஒவ்வொரு முறையும் விசேட இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒவ்வொரு முறையும் வீடுகள், மசூதிகள், வைத்தியசாலைகள் குழந்தைகள் என எல்லோரையும் இலக்காக்கியது. எல்லாம் ஆயிரக்கணக்கில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

நுட்பமான சொற்பிரயோகங்களில் நான் பேச விரும்பவில்லை. “கமாஸ் இஸ்ரேலைத் தாக்கியது” என்பது அவ்வகைப்பட்ட சொல்லாடல் ஆகும். அது தவறானது. காஸா இஸ்ரேலின் ஒரு பகுதியாக உள்ளது. இஸ்ரேலானது காஸா உடனும் மேற்குக் கரையுடனும் (வலிந்த) ஒரு நிழல் அரசு இணைப்பைக் கொண்டுள்ளது. சர்வதேச சட்டம் ஆக்கிரமிப்பு என்பதையும் நில இணைப்பையும் தெளிவாக வரையறுத்திருக்கிறது. அதன்படி ஆக்கிரமிப்பு என்பது தற்காலிகமானது. இணைப்பு என்பது நிரந்தரமானது. காஸாவும் மேற்குக் கரையும் அரை நூற்றாண்டுக்கு முன் ஆக்கிரமிக்கப்பட்டு பின் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டுவிட்டது. அது நிரந்தரமானது. எனவே காஸா இஸ்ரேலை தாக்கியது என சொல்லாடுவது அர்த்தமற்றது. காஸா இஸ்ரேலின் ஒரு பகுதி. சில நாட்களுக்கு முன் (ஒக்ரோபர்,7) நடந்ததை பொருத்தமான வார்த்தையில் சொன்னால் தமது எசமானுக்கெதிரான அடிமைகளின் கலகம் அது. அதுதான் யதார்த்தம். “எங்களது அரசு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது” என நுட்பமாக சொல்லாடாதீர்கள். அது தவறு. மாறாக “அந்த அடிமைகள் தமது விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் கிளர்ந்தெழுந்தனர்” என்பதே சரி.

வியட்நாம் போரின்போது ஐநா செயலராக இருந்தவர் பர்மாவைச் (மியன்மார்) சேர்ந்த U Thantஅவர்கள். “யுத்தத்தில் முதல் பலியாவது உண்மை தான்” என அவர் சொன்னார். “அமெரிக்க மக்களுக்கு வியட்நாம் போரின் உண்மைத்தன்மை தெரிந்தால் அவர்கள் போரை ஆதரிப்பார்கள் என நான் நம்பவில்லை” என அவர் 1965 இல் சொல்லியிருந்தார். அதையே இப்போ நானும் சொல்கிறேன். அமெரிக்க மக்களுக்கு இந்தப் போரின் உண்மைத்தன்மை தெரிந்தால் அவர்கள் இதை ஆதரிக்க மாட்டார்கள். மேற்குலகில் இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினை பற்றி அதிலும் குறிப்பாக காஸா பற்றி போதியளவு அறிவை கொண்டவர்கள் அரிதானவர்கள். 1948 இலிருந்து அவர்களுக்கு வரலாறு தெரிய வேண்டும் என்பதுகூட இல்லை. 2006 இலிருந்து, அதாவது 18 வருடங்களுக்கு உட்பட்ட வரலாறு தெரிந்தாலே போதுமானது. ஊடகங்கள் மற்றும் லொபிகளைத் தாண்டி பலஸ்தீன மக்களின் சீற்றத்தை உணர்ந்துகொள்ளும் திறன் கொண்டவர்களாக அவர்கள் இருக்க முடியும்.

இந்த மக்கள் எங்காவது போய்க் கொள்ள முடியும் என நெத்தன்யாகு நம்புகிறார். இஸ்ரேலிய அதிகாரிகளோ காஸாவுக்கள் வாழும் மக்களின் பட்டினிச்சாவுக் கோட்டுக்கு சற்று மேலாக எவளவு கலோரிகள் தேவைப்படும், அதற்கு கணக்காக அனுமதிக்கப்படக் கூடிய உணவுப் பொருட்களின் அளவு என்பவற்றைக் கணிப்பதில் ஈடுபடுகின்றனர். அந்த அளவையே உள்ளே அனுமதிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டிக்கப்படக் கூடியவர்கள். இவர்களை தடுத்து நிறுத்த (நீதிமன்றம் போன்ற) நிறுவனம் இருக்கின்றது. நெத்தன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் போன்றோரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த போதிய ஆதாரங்கள் உள்ளன. பலஸ்தீன அரசு இவர்களை அங்கு கொண்டுவர முடியும். (பலஸ்தீன அரசு 2015 இல் ஐசிசி யில் ஒரு அங்கத்தவராக சேர்ந்திருக்கிறது- மொ.ர்). நீதிமன்றத்தில் அவர்கள் விசாரிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்கா அவர்களை பாதுகாக்காது. எனவே இஸ்ரேல் ஒன்றுக்கு இரண்டு தடவை இதை யோசிக்க வேண்டும்.

ரசியா 1967 எல்லையின் அடிப்படையில் “இரு அரசு” (two state) தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோருவது மிகச் சரியானது. 2006 இல் கமாஸ் தேர்தலில் வென்றபின் அவர்களது அரசியல் நிலைப்பாட்டில் ஒரு பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. அதேகாலத்தில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சொல்லும்போது நாங்கள் இதை (இரு அரசுத் தீர்வை) ஆதரிக்க மாட்டோம். ஆனால் பலஸ்தீன மக்கள் விரும்பினால் நாங்கள் இதற்குக் குறுக்கே நிற்க மாட்டோம் என கூறியிருந்தார். ஈரான் திரும்பத் திரும்ப சர்வதேச சட்டங்களின் நியமங்களுக்கு உட்பட்ட தீர்வுக்கு ஆதரவாக ஐநா வில் வாக்களித்திருந்தது. முக்கியமாக சட்ட மீறல் செய்தது அமெரிக்காவும் இஸ்ரேலும்தான். எல்லா தரப்பும் சமாதானமாக வாழ வழிவகுக்கும் இந்த விதிமுறைகளை அவர்கள் அரை நூற்றாண்டுகளாக மறுத்து வருகின்றனர். அதில் அவர்கள் வெற்றி அடைந்தனர். தோற்கவும் செய்தனர். அது துல்லியமாக இன்றைய நிலையினை வந்தடைய வைத்திருக்கிறது. இஸ்ரேல் பலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதன் மூலம் சர்வதேச சட்டங்களை கடைப்பிடிக்கவில்லை.

மக்கள் என்பதற்குப் பதிலாக ‘மனித மிருகங்கள்’ என பலஸ்தீனர்களை விளித்தார்கள். தாம் அதிமனிதர்கள் (Superman) எனவும் பலஸ்தீனர்களும் அரபுக்களும் சாதாரணமானவர்கள் எனவும் கருதினார்கள். வரைபடத்தில் காஸா ஒரு சிறு முத்திரை போன்ற இடம். ஆனால் காஸாவின் சுரங்கங்கள் இந்த உலகின் ‘தப்பிப் பிழைக்கும்’ இடமாக இருக்கிறது எனலாம். இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பம் காஸாவின் மூலைமுடுக்குகளுக்குள் உருளுகிறது. ஒரு மிகக் கடினமான சூழ்நிலையில் சிக்கலான நடவடிக்கையில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

அந்த சுரங்கங்கள் இராணுவத்தின் கடைசிப் படுகுழி ஆகலாம். 24 மணி நேரம். கிழமையில் 7 நாட்கள். காஸாவின் சுரங்கப் பாதைகள் தப்பிப் பிழைத்தலுக்கான அதிநவீனமானதும் கண்காணிப்பானதுமானதுமாக இருக்கிறது. அதாவது மனிதகுல புத்திக் கூர்மையே அவர்களின் உயர்ந்த தொழில்நுட்பமாக இருக்கிறது. இது மதிப்பு வாய்ந்தது. அத்தோடு அடக்கமுடியாத சுதந்திர தாகத்தின் குறியீடாக அமைந்திருப்பது இன்னொரு வகையில் மதிப்பு வாய்ந்தது. எல்லாப் பயங்கரங்களும் சூழ்ந்திருக்கிறபோதும் தமது உடலுழைப்பின் மூலமும் புத்திக் கூர்மையின் மூலமும் சாதித்துள்ள காஸா மக்களின் இந்தச் சாதனையை மதிக்கிறேன். அளவற்ற இரத்தம் சிந்தப்படுகிற இந் நிலைமையில், தமது அடிமைத்தனத்துக்கு எதிராக போராடும் காஸா மக்களின் உரிமையை நான் மதிக்கிறேன், கௌரவப்படுத்துகிறேன். இந்த கொன்சன்றேசன் முகாமிலிருந்து அவர்கள் விடுதலையாவதோடு தமது விடுதலையைப் பெறும் சந்தர்ப்பத்தையும் அவர்கள் பெறுவார்கள் என்பது நிச்சயம்!

  • ரவி, 04112023
  • Thanks: The Jimmy Dore Show
  • Thanks for image: International Views

Leave a comment