இருந்தும் விடுகிறோம்!

காஸாவின் குழந்தைகள் தமது உள்ளங்கைகளில் பெயரையும் முகவரியையும் வர்ணம் கலந்த பேனா மையினால் எழுதி வைக்கிறார்கள். தாம் இறந்தபின் சிதறுண்ட தமது உடலை வேண்டியவர்கள் அடையாளம் காண அப்படிச் செய்கிறார்கள். கசங்கிய கடதாசியில் பிஞ்சுக் கைகளால் ‘உயில்’ எழுதி வைக்கிறார்கள். தமது விளையாட்டுப் பொருட்களை யார்யாருக்கு கொடுக்க வேண்டும். தமது உடைகளை யார்யாருக்குக் கொடுக்க வேண்டும். தாம் குருவிபோல் சேகரித்த உண்டியல் காசை யார்யாருக்கு எவ்வளவு எவ்வளவாய் பிரித்துக் கொடுக்க வேண்டும். எழுதுகிறார்கள். தமது அம்மா அப்பா தம்பி அண்ணன் தங்கை அக்கா என குறிப்பிட்டு அவர்கள் எழுதும் இந்த உயிலை வாசிக்கக்கூட அவர்களது இந்த உறவுகள் உயிர்பிழைப்பார்களா தெரியாது. என்ன கொடுமை இது.

தனக்கருகே காயம்பட்டு ஒரு பொம்மை போல் வைத்திய சிகிச்சைத் துணியால் கட்டப்பட்டிருந்த தன் குழந்தையை நெற்றியில் முத்தமிடுகிறான் தந்தை. தந்தை கைக் கட்டுகளோடு அருகில் படுத்திருக்கிறான். “அப்பா நான் ஓகே. நலமாகவே இருக்கிறேன். கவலைப்படாதையுங்க” என்கிறது குழந்தை. அவன் வெடித்து அழுகிறான். காணொளியை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. “நீ வளர்ந்து என்னவாக வர ஆசைப்படுகிறாய்” என யாரோ ஒருவர் ஒரு சிறுவனிடம் கேட்கிறார். அவன் முகத்தில் புன்னகை தவழ சொல்கிறான், “நான் வளர்வேனா தெரியவில்லை. பிறகு எப்படி…” என்கிறான்.

என்ன கொடுமைகள் இவை. உயிர்வாழ ஆதாரமான உணவு இல்லை. தண்ணீர் இல்லை. அச்சம் தரும் இருளை விலக்கவும் வைத்திய சிகிச்சையளிக்கவும் வாழ்வாதாரத்தை பேணவுமான மின்சாரம் இல்லை. அகதியாய் வெளியேற விடாமல் எல்லைகளை மூடி காவல் காக்கிறார்கள் எல்லை நாடுகள். கொடிய மானிடர்கள் வாழும் உலகு இது. காஸாவினுள் அடைபட்டுக் கிடக்கும் 12 இலட்சம் பேரில் 50 வீதம் குழந்தைகள் என்கிறது ஒரு செய்தி. மற்றொரு செய்தி 35 வீதம் என்கிறது. என்னவோ தெரியவில்லை. இவர்கள் வளர அதிஸ்டம் வாய்க்கப் பெற்றால் என்ன ஆவார்கள். இன்னொரு திசையில் வாழ்க்கை கைகால்களை உறவினரை பறித்துக்கொண்டு அவர்களை கைவிட்டு வெகுதூரம்கூட சென்றும் விடலாம்.

இரத்தமும் சதையும் கொண்ட மனிதனாய் எழுதத் தோன்றுவதை மூளையும் அறிவும் தடுத்து நிறுத்துகிறது. போர்கள் எவளவு கொடியன என்பதை குழந்தைகளைவிட யாரும் தெளிவாக சொல்லிவிட முடியாது என தோன்றுகிறது. அது எந்த நிலமாக இருந்தாலென்ன. எந்த மக்களாக இருந்தாலென்ன. கபட அரசியலை சூழ்ச்சிகளை அவர்கள் அறிந்திலர். பாவம்.

இளமையில் மரணம் கொடியது. அதுவும் உடல்சிதறி உள்ளம் சிதைந்து நிகழும் இவ்வகை மரணத்தை சகித்துக் கொள்ளப் பழகுவதே முடியாமல் இருக்கிறபோது, அமைச்சன் ஒருவன் காஸா மக்களை ‘மனித மிருகங்கள்’ என விளிக்கிறான். இப்படித்தானே கிற்லரும் விளித்தான். மனிதகுலம் இப்போது நினைத்தாலும் பதறவைக்கும் அந்த கொலோகாஸ்ற் இனை நிகழ்த்த வைத்த இந்த விளிப்பு இப்போதும் ஆவியாய் அலைகிறது, இன்னுமொரு பேரழிவுப் பசியோடு!. இடம்தான் மாறுகிறது.

காஸாவின் வைத்தியசாலை மீது எதிரி குண்டுவீசி அழித்த குழந்தைகளின் உள்ளங்கைகளில் பெயர் முகவரி மட்டுமல்ல இரத்த சாட்சியும் வரையப்பட்டிருக்கிறது. குண்டு போட்டது நாமில்லை என பொய்யர்கள் பொய்யுரையை நம்ப நாம் கேணையர்களாக இருந்துவிட வேண்டும். இருந்தும் விடுகிறோம்!

Leave a comment