நான் உண்மையின் ஆதரவாளன்!

Dr. Gabor Mate

நான் அவுஸ்விற்ஸ் கொலோகோஸ்ட் (Auschwitz Holocaust) இலிருந்து தப்பிய ஒரு குழந்தை. எனது அப்பா அப்பப்பா அம்மா அம்மம்மா என எல்லா உறவினர்களும் அதில் கொல்லப்பட்டார்கள். இதுதான் எனது குடும்பப் பின்னணி. எனது யூத அடையாளம் குறித்த அவமானத்துடன் நான் வளர்ந்தேன். உலக யுத்தத்தின் பின்னரும் ஹங்கேரியில் நான் ஒரு யூதன் என்பதற்காக அவமானப்படுத்தப் பட்டேன். அவ்வாறான சந்தர்ப்பங்களில் என்னைக் காப்பாற்ற வரும் எனது நண்பன் ஒருவனை நான் ஞாபகப்படுத்த முடிகிறது. அவன் சொல்வான் “அவனை விட்டுவிடுங்கள். அவன் யூதனாகப் பிறந்தது அவனது தவறில்லை” என்பான். இது தவறு. ஆனால் இது அவனது தவறல்ல. இது ஒரு பாதுகாப்பு அரண்.

இவ்வாறான சூழலில் நான் வளர்ந்தேன். எனது அப்பப்பா ஒரு இயற்பியல்வாதியும் எழுத்தாளரும் ஆவார். அவுஸ்விற்ஸ் இல் கொல்லப்பட அவர் விளாடிமிர் யப்போற்றின்ஸ்கி (Vladimir Jabtinky) என்பவரின் நண்பன். யப்போற்றின்ஸ்கி பெரும் சியோனிசத் தலைவர்களில் ஒருவர்.

கனடாவில் எனது விடலைப் பருவத்தின்போது சியோனிஸ்டாக (Zionist) உருவானேன். அது யூத மக்களின் கனவாக, தமது வரலாற்று நிலத்தில் உயிர்த்தெழுதலாக, அவுஸ்விற்ஸ் இன் முட்கம்பி சுருள் வேலியிலிருந்து விட்டுவிடுதலையாகி ஒரு யூத அரசின் எல்லைக்குள் வியாபித்தலாக, அதுவும் பலம்பொருந்திய இராணுவத்தின் பாதுகாப்பு அரணுக்குள் அடைக்கலமாதலாக உணர்ந்ததில் யூத மக்களின் விடுதலையைக் கண்டேன். இந்தக் கனவை நம்புதல் களிப்பூட்டியது.

பிறகு அது அப்படியில்லை என்பதை கண்டேன். இந்த யூதக் கனவை ஒரு யதார்த்தமாக அடைய அந்த மண்ணின் உள்ளுர்வாசிகள் அச்சமூட்டும் அனுபவங்களை தரிசிக்க வேண்டியிருந்தது. சியோனிச கோசம் ஒன்று இருக்கிறது. “நாடே இல்லாத மக்களுக்காக, மக்களே இல்லாத ஒரு நாடு” என்பதே அது. ஆனால் மக்களில்லாத ஒரு நாடும் கிடையாது. அங்கே மக்கள் இருப்பார்கள். அவர்கள் நூற்றுக் கணக்கான வருடங்களாகவோ அல்லது அதைவிட நெடிய காலம் கொண்டதாகவோ அவர்கள் அங்கு வாழ்ந்திருப்பார்கள் என்பதே உண்மை.

டேவிட் பென் குரியன் (David Ben Gurion) இஸ்ரேலின் முதல் பிரதம மந்திரியாக இருந்தவர். அவர் கேட்டார் “யார் அந்த பலஸ்தீனியர்?. ஏனெனில் றோமர் காலத்தில் எல்லா யூதர்களும் பலஸ்தீனத்தை விட்டு வெளியேறியிருக்கவில்லை. பலர் அங்கு தங்கியிருந்தார்கள். பலர் இஸ்லாம் க்கு மதம் மாறினார்கள். அதனால், பலஸ்தீனர்கள் எங்கே இருக்கிறார்கள்?. உய்த்துணருங்கள். ஒருவழியில் அவர்கள் புராதன யூதர்களின் வழித்தோன்றல்கள். வேண்டுமானால் அவர்கள் எமது மைத்துனர்கள் என கூறலாம்” என்றார்.

இது குறித்து உங்கள் பார்வை எதுவாகவும் இருக்கட்டும். உள்ளுர் மக்களை அடக்கியொடுக்காமலும், வெளியேற்றாமலும் ஒரு யூத அரசு உருவாக்கப்பட்டிருக்க சாத்தியமில்லை. இதைத்தான் அவர்கள் 1947 இல் செய்தார்கள். எல்லாவற்றுக்கும் முதலில் இந்த அரசு பிரித்தானியப் பேரரசின் பாதுகாப்பினுள் இருந்தது. 1948 இல் பலஸ்தீனியர்களின் வெளியேற்றம் தொடர்ச்சியாக இருந்ததாக இஸ்ரேலிய யூத வரலாற்றாசிரியர்கள் எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி காட்டியிருக்கிறார்கள். இது பரவலாக நடைபெற்றது. இது குரூரமானது. கொலைகாரத்தனமானது. இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட ஒன்று. இதுவே அரபு மொழியில் “நாக்பா” (Nakba) எனப் படுகிறது. அதாவது பேரழிவு அல்லது நாசகாரமானது என்பது பொருள்.

கனடாவில் ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி நீங்கள் கொலோகாஸ்ற் இனை மறுக்கவே கூடாது. அப்படியான சட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது இருக்கட்டும். ஆனால் இஸ்ரேலில் ஒருவரும் நாக்பாவை குறிப்பிட்டு பேசவே கூடாது. இஸ்ரேல் என்ற நாட்டின் தோற்றத்தின் அடித்தளமே இந்த நாக்பாவின் மீது கட்டப்பட்டது என்ற போதும்கூட, யாரும் அதை உச்சரிக்கக் கூடாது. ஆம், நாம் எமது அழகிய கனவை நனவாக்கினோம். ஆனால் அதற்காக நாம் இன்னொருவர் மீது கொடுங் கனவை திணித்தோம்.

முதலாவது துணிகரமான பலஸ்தீனர்களின் எழுச்சியான இன்ரிபாடா (Intifada) நடந்த காலகட்டத்தில், இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை சென்று பார்த்தேன். அங்கு நான் கண்ட காட்சிகளால் இரண்டு வாரமாக ஒவ்வொரு நாளும் அழுதேன். ஆக்கிரமிப்பின் மிருகத்தனத்தையும் துன்புறுத்தல்களையும் அதிலிருந்த கொலைகாரத்தனத்தையும் கண்டேன். பலஸ்தீனியர்களை எரித்ததையும் பலஸ்தீனர்களின் ஒலிவ் மரங்களை வெட்டி வீழ்த்தியதையும் கண்டேன். அவர்களுக்கான நீரின் மீதான உரிமை மறுப்பையும், அவமானப்படுத்தல்களையும் கண்டேன். அது பிறகும் தொடர்ந்துகொண்டே இருந்தது. இதுதான் இஸ்ரேலிய அரசின் தோற்றப் பின்னணி.

இது வேறு வடிவில் நிகழ்ந்திருக்கவும் முடியாது. ஏனெனில் மீண்டும் சொல்கிறேன், உள்ளுர் மக்களை அடக்கியொடுக்காமலும் வெளியேற்றாமலும் இந்த பிரத்தியேகமான யூத அரசை அவர்களால் நிறுவியிருக்க முடியாது. 20ம், 21ம் நூற்றாண்டுகளின் மிக நீண்ட இனச்சுத்திகரிப்பு இது. அது இப்போதும் தொடர்கிறது. இப்போதைய நிலைமை அந்த முன்னைய நிலைமையைவிட இன்னும் மோசமானது.

காஸாவில் இருப்பவர்கள் யார்? இது ஒரு சிறிய நிலப்பரப்பைக் கொண்டது. இஸ்ரேலிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் அல்லது இஸ்ரேல் என இன்று அழைக்கப்படுகிற நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் நேரடி வாரிசுகள் அல்லது பேரப்பிள்ளைகள் அவர்கள். நான் ஒரு யூத இனத்தவனாக என்னால் நாளைக்கே ரெல் அவீவ் (Tel Aviv) க்கு போய் இறங்கி பிரசாவுரிமை கோர முடியும். இது திரும்புதலுக்கான உரிமை (Right to Return) என்ற சட்டத்தின் கீழ் சாத்தியமாக உள்ளது. ஆனால் ஜெரூசலத்தில் பிறந்து தற்போது வன்கூவரில் வசிக்கும் எனது பலஸ்தீனிய நண்பன் ஹன்னா ஹவாஸ் குறைந்தபட்சம் அங்கு சென்றுவரக்கூட உரிமை மறுக்கப்படுகிறது. இதை இன்னொரு வகையில் கூறினால், யூத வரலாறு சொல்கிறபடி எடுத்துக்கொண்டால், அது கேள்விக்கிடமானது என்றபோதும், 2000 ஆண்டுகளுக்குப் பிறகும் நான் திரும்பிச் செல்லும் உரிமை எனக்கு உள்ளதெனின், ஹன்னா 70 வருடங்களுக்குப் பிறகு திரும்பிச் செல்ல ஏன் உரிமையில்லை?.

எனவே யாருடைய காஸா அது? தனிமைப்படுத்தப்பட்ட, தடுக்கப்பட்ட இந்த மக்கள் பயங்கரமான விதத்தில் அடைத்துவைத்திருக்கப் பட்டிருக்கிறார்கள். உலகின் மிகப் பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை என மக்கள் அதை அழைக்கிறார்கள். அது அவ்வாறாகவே உள்ளது. மிக மோசமான வறுமை, 50 வீத வேலைவாய்ப்பின்மை அங்கு நிலவுகிறது.

ஹமாஸ் ஒரு இஸ்லாமிய அமைப்பு. அது இஸ்ரேலினால் ஊக்குவிக்கப்பட்டு ஆதரவு வழங்கப்பட்ட ஓர் அமைப்பு. இஸ்ரேலால் விரும்பப்படாததும் மதச்சார்பற்றதுமான பலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) ஓர் எதிர்முகாமாக ஹமாஸை இஸ்ரேல் கருதியதே அதற்குக் காரணம்.

இந்தவகையில் அனுமதிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட நிபந்தனைகளுள் மக்கள் தமக்கான ஒரு அதிதீவிரத் தலைமையை தேர்வுசெய்வதே உண்மையில் நடக்கிறது. பரிதாபகரமானதும் நம்பிக்கை இழந்ததுமான நிலைக்குள் தள்ளப்பட்டதோடு, பறிக்கப்பட்ட எல்லா சாத்தியப்பாடுகள் மற்றும் இன்னோரன்ன இன்மைகளினுள் விடப்பட்ட மக்கள் அதைத்தான் செய்ய முடியும்.

பலஸ்தீனர்களின் உரிமைக்கான போராட்டத்தில் நீங்கள் ஹமாஸின் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. அங்கு நடந்த தேர்தல்களை சர்வதேச சமூகம் கண்காணித்தது. இதுவரை அரபு உலகத்தில் நடந்த தேர்தல்களிலேயே அதிக சுதந்திரமான தேர்தல் அவை என கண்காணிப்பாளர்கள் அறிவித்திருந்தனர். ஹமாஸ் வெற்றிபெற்றிருந்தது. அவ்வாறாக வென்ற ஹமாஸை ஒரு இராணுவச் சதி மூலம் கவிழ்க்க இஸ்ரேலும் அமெரிக்காவும் முயற்சி செய்தன. ஹமாஸ் அதை தோற்கடித்தது. அதற்கான தண்டனையாகவே காஸா மீது தடைகளை அறிவித்ததுடன் உணவு, மருத்துவ வழங்கல்கள், போதியளவு நீர் விநியோகம் என்பவற்றையும் இஸ்ரேல் மறுத்தது. இப்படியே நிலைமைகள் தொடர்ந்தன. இப்போ இந்த மோதலில் வந்து நிற்கிறது. இஸ்ரேல் இப்போ அறுவடை செய்கிறது என்கிறார்கள் அவர்கள். அதன்மூலம் அவர்கள் சொல்ல வருவது பலஸ்தீன மக்களின் கூட்டுப் படுகொலைக்கான விளைவைத்தான்.

இப்போ ஹமாஸ் ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் ஏவி மக்களை கொல்கிறார்கள் என்பது உண்மையா?. ஆம் உண்மை. அதை நான் ஆதரிக்கிறேனா? இல்லை. ஆனால், அப்பாவி மக்களின் கொலை என வருகிறபோது, 1982 இல் இஸ்ரேல் இருபதினாயிரம் லெபனான் மக்களை கொத்துக் குண்டுகள் போன்ற தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் கொண்டு கொன்று தீர்த்தது. ஒரு யுத்தத்தில் எந்தவகையிலும் ஒரு மதிப்பீட்டுக்கு வர முடிவதில்லை. அதிகாரம், பொறுப்புக் கூறல், ஒடுக்குமுறை என்ற வகைமைகளில் ஒரு ஒப்பீடு செய்தால் குறிப்பிடத்தக்க வகையில் அது ஒரு பக்கத்திலேயே இருக்கிறது. ஹமாஸ் பற்றி நீங்கள் முன்வைக்கக்கூடிய மிக மோசமான செயல்களின் அளவை ஆயிரம் மடங்குகளால் பெருக்கினால்கூட, பலஸ்தீன மக்களின் மேலான இஸ்ரேலின் அடக்குமுறை மற்றும் கொலைகளின் அளவை எட்ட முடியாது.

மேற்கத்தைய ஊடகங்களை கவனியுங்கள். கொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் மீது கல் எறிந்தால் அது சாகசம் வாய்ந்ததாக காட்டப்படுகிறது. மியன்மாரில் அடக்குமுறை இராணுவத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கவண் எறிந்தால், அதுவும் சாகசம் வாய்ந்ததாக காட்டப்படுகிறது. ஆனால் பலஸ்தீன சிறார்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் மீது கல் எறிந்தால் அது பயங்கரவாதமாகக் காட்டப்படுகிறது. அத்தோடு மேற்கத்தைய ஊடகம் மற்றைய நாடுகள் மீது விமர்சனம் செய்கிற அளவுக்கு அது இஸ்ரேலை கண்டுகொள்வதில்லை.

அண்மையில் ஒரு பலஸ்தீனிய பெண் என்னை தொடர்கொண்டு பேசினார். அவர் இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் விடலைப் பருவ சிறார்களுக்கான ஒரு நிகழ்ச்சியை செயற்படுத்தி வருபவர். 14, 15, 16 வயதுகளை உடைய அந்த சிறுவர்கள் சில வேளைகளில் தங்களது குடும்பத்தவரை காணும் சந்தர்ப்பம் மாதக் கணக்கில்கூட வாய்ப்பதில்லை. அவர்களுக்கான உளவழி சிகிச்சையை அந்தப் பெண் செயற்பாட்டாளர் செய்து வருகிறார். தியானம், ஆடல், பாடல், சுபி டேர்விஷ் என்ற மெல்லசைவு நடனம் போன்ற வழிகளில் அந்தச் சிறார்களை உளவியல் சிக்கலிலிருந்து மீட்க பாடுபடுகிறார். பிள்ளைகள் பின்-உள அதிர்ச்சி (post-traumatic) நெருக்கடியிலான பாதிப்பில் இல்லை. அதாவது உள அதிர்ச்சி (trauma) அவர்களுக்கு ‘பின்னையதாக’ இல்லை. அது நாளாந்த உள அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.
என்னைப் போல உங்களது சியோனிச நண்பரும் காஸாவின் ஆக்கிரமிக்க்பட்ட பகுதிகளை சென்று பார்க்க வேண்டும் என அவாவுறுகிறேன். அதன் பிறகு அவர் பேசட்டும். அவரிடம் ஒரு அவுன்ஸ் மனிதாபிமானமாவது எஞ்சியிருக்குமாயின், நான் அங்கு இருந்தபோது இரு வாரமாக அழுதது போலவே அவரும் அழுவார்.

உங்களுக்கு அல்பேர்ட் ஸ்பீர் (Albert Speer) இனை ஞாபகப்படுத்த முடிகிறதா. நாசிகளின் ஆட்சியில் ஆயுத விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தவர். அவர் ஒரு போர்க் குற்றவாளி. போர் முடிவடைந்த பின்னர் ஸ்பான்டௌவ் (Spandau) சிறையில் 20 ஆண்டுகளை கழித்தவர். அவர் நாசிகளின் குற்றங்கள், இனப்படுகொலை, மனிதவிரோதங்கள், போர்க் கொடுமைகள் என பல விடயங்கள் பற்றி பேசியிருந்தார். குறிப்பாக யூதர்கள் மீதான இனப்படுகொலை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் தனது சுயசரிதையில் கூறுகிறார், “உனக்கு எவை தெரிந்திருந்தன?” என அடிக்கடி கேட்டார்கள். “எனக்கு என்ன தெரிந்திருந்தது” என்பது பொருத்தமான கேள்வி அல்ல. அந்தக் கேள்வி இவ்வாறு இருக்க வேண்டும். “நீ விரும்பியிருந்தால் எவையெவைகளைத் தெரிந்து கொண்டிருக்கலாம்” என கேட்கப்பட வேண்டும் என்கிறார். அதற்கான போதுமான குறிப்புணர்தலை பெற்றிருந்தேன் என்கிறார் அவர். ஒரு உதாரணத்தை முன்வைக்கிறார். தான் ஒரு ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைக்குச் சென்றபோது, அவர் அங்கு வேலைக்கு கொண்டுவரப்பட்ட holocaust கைதிகள் சிலர் கண்ணில் எதிர்ப்பட்டார்கள் என்றும், தான் அவர்களை “நீங்கள் இங்கு இருக்க விரும்பிறியளா அல்லது முகாமிலா” என மட்டும் கேட்டதாகவும் சொல்கிறார். ஆனால் தான் அதைக் கேட்டபோது அவர்களின் முகத்தில் திடீரென அதிர்ச்சி வெளிப்பட்டதாகவும் சொல்கிறார். ஆனால் நான் அவர்களை “ஏன் எனது இந்தக் கேள்விக்கு அதி அதிர்ச்சி அடைகிறீர்கள்” என கேட்டதில்லை என்கிறார். ஒருமுறை தான் ஜேர்மன் ஜெனரலிடம் (அவர் நாசி ஜெனரல் என சொன்னாரில்லை) தான் ஜேர்மனியின் கிழக்குப் பகுதிக்கு செல்ல யோசிப்பதாகச் சொன்னபோது, “நீங்கள் அங்கே என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டியதில்லை” என பதிலளித்தார். “நான் ஒருபோதும் ஏன் என்று கேட்கவில்லை” என்கிறார் அவர். எனவே கேள்வி “அவருக்கு என்ன தெரிந்திருந்தது” என்பதல்ல. “அவர் விரும்பியிருந்தால் எதைத் தெரிந்துகொண்டிருப்பார்?” என்பதே அதன் சாரம்.

இப்போ நாங்கள் நாசி ஜேர்மனியில் வாழவில்லை. எவரும் யுரியூப் க்கு போய் இலான் பப்பே (Ilan Pappe) சொல்வதை அவதானிக்க முடியும். அவர் ஒரு சிறந்த இஸ்ரேலிய வரலாற்றாசிரியர். இஸ்ரேலில் தனது வாழ்வு நெருக்கடியாக இருந்ததால் இங்கிலாந்துக்கு வந்தார். அதேபோலவே நோர்மன் பின்கெல்ஸ்ரைன் (Norman Finkelstein) இனை அவதானிக்க முடியும். அவர் ஒரு யூத பேராசிரியர். காஸா குறித்து நிபுணத்துவம் பெற்றவரும், உலகில் அறியப்பட்டவரும் ஆவார். அவர் இஸ்ரேலின் கொள்கைகளுக்கு எதிராக பொதுவெளியில் பேசியதால் பல்கலைக்கழக பேராசிரியர் பதவிக்காலம் பறிக்கப்பட்டவர்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் சிலரின் பேச்சுகளை அவதானிக்க முடியும். தாம் இராணுவத்தில் பணியாற்றியபோது புரிந்த மனிதவிரோத அல்லது காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்காக கவலைப்படுகிறார்கள். இஸ்ரேலிய வான்படையைச் சேர்ந்த சிலர் தாம் ஏன் காஸா மீதான பறத்தலுக்கும் தாக்குதலுக்கும் மறுத்தோம் என்பது பற்றி பேசுவதை அவதானிக்க முடியும்.

அதாவது நீங்கள் விரும்பும் எல்லா தகவல்களையும் இப்போ பெறக்கூடியதாக இருக்கிறது. எனவே எவராவது எதையாவது தெரியாமல் இருப்பது என்பது தகவல்களின் போதாமையால் அல்ல. அதாவது உங்களுக்கு என்ன தெரியும் என்பதல்ல பிரச்சினை, மாறாக நீங்கள் விரும்பினால் எதையெதையெல்லாம் தெரிந்து வைத்திருக்க முடியும் என்பதே.

இஸ்ரேலுக்காக நிற்கும் யூதர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஏனெனில் நானும் அதே முகாமில் பயணிக்க வைக்கப்பட்டவன். நாசிகளின் கொடுமையான இனப்படுகொலைப் பயங்கரங்கள் தந்த அவநம்பிக்கை பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதை நான் புரிந்துகொள்கிறேன். ஆம், அவை எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறேன். ஆனால் இவை எதுவுமே நாம் இப்போ என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை நியாயப்படுத்தாது. தேர்ந்த உண்மைகளை தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு மன்னிப்பும் வழங்காது. அத்தோடு யூதர்களோ யூதர் அல்லாதவர்களோ எவராக இருந்தாலும் ஒருவர் குரல்கொடுப்பதை அதன் பெயரால் மௌனமாக்கும் முயற்சிகள் வேண்டுமென்றே செய்யப்படுவதையும் ஏற்க முடியாது. அதிகாரம் மற்றும் கட்டுப்படுத்தல் என்ற தோரணையில் நிகழ்த்தப்படுபவைகளுக்கு நேரடியாக எதிர்த்து நிற்க வேண்டும். இரு பக்கங்களிலும் நிற்க முடியாது.

அங்கே மக்கள் வாழ்ந்துகொண்டிருந்த ஒரு நிலம் இருந்தது. மற்றைய மக்கள் அந்த நிலத்தைப் பெற விரும்பினர். அவர்கள் அதை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கின்றனர். பாரபட்சம் காட்டினர். ஒடுக்கினர். வெளியேற்றவும் செய்தனர். அதுவே நடந்தது. அதுவே இப்போதும் நடக்கிறது.

நல்ல நோக்கமுள்ளவர்கள் அவதூறுகளுக்கு எதிராக நிற்க வேண்டும். அதைத்தான் நான் விரும்புகிறேன். இது பலஸ்தீன ஆதரவாளராக இருப்பது பற்றிய கேள்வியல்ல. நான் பலஸ்தீன ஆதரவாளன் அல்ல, தேர்ந்த உண்மையின் ஆதரவாளன்.

I am not a pro-Palastinian
I am pro-Truth

முடிவாக, இப்போ நடந்துகொண்டிருப்பது இஸ்ரேலுக்கு நீண்டகால நோக்கில் பேரழிவாகவே அமையும் என நினைக்கிறேன். அது மீளமுடியாததாக இருக்கும். நான் உணர்வதுபோலவே தாமும் உணரும் பல நல்ல மனிதர்கள் இஸ்ரேலில் இருக்கிறார்கள். எனவே இன்றைய கேள்வி ஒருவர் பலஸ்தீன ஆதரவாளராக இருப்பது பற்றியதல்ல. நீதியின் மீதும் அர்ப்பணிப்பு மீதும் சுதந்திரத்தின் மீதும் தேர்ந்த உண்மையின் மீதும் காதல் கொண்டவரா இருக்கிறாரா இல்லையா என்பதே !

  • 14102023
  • Thanks for image: ACERT

Leave a comment