போட்டுத் தள்ளுதல் !

கனடாவில் காலிஸ்தான் தலைவர் கொலை -அரசியல்

“போட்டுத் தள்ளுவது” என்ற வார்த்தை ஈழ அரசியல் சூழலிலிழுந்து தமிழ்ச் சினிமாவுக்குள் நுழைந்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. ‘போட்டுத் தள்ளுவது’ என்பது அரசியலில் ‘இனந்தெரியாதோரால்’ கொல்லப்படுதலுடன் தொடர்புடையது. ஒரு கொலையை செய்வதையும்விட தடயங்கள் துளியளவும் இல்லாமல் அதை செய்வது என்பது முதன்மையாக இருக்கும். இதில் கொலை என்பது இரண்டாம் பட்சமாகிவிடும். தடய அவதானம் முதலாம் பட்சமாக இருக்கும். அவை தமது தரப்பில் அரசியல் பாதிப்பை ஏற்படுத்திவிடாதபடி கவனம் கொள்வதால் அவ்வாறு நிகழ்த்தப் படுகிறது.

இதே வழிமுறைகள் பல நாடுகளின் உளவுப்படைகளால் காலங்காலமாக நிகழ்த்தப்படுபவை. அதிலிருந்து கற்றுக்கொண்டது நம்மட இயக்கங்கள். அமெரிக்க, ரசிய, இஸ்ரேலிய, இந்திய, சவூதி அரேபிய .. என சில நாடுகளின் உளவுப்படைகளால் காலாகாலமாக அரசியல் காரணங்களின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் தனிநபர் கொலைகள் ஒன்றும் புதிதல்ல. அவை நாடு கடந்து செய்யப்பட்டதும்கூட புதிதல்ல. ஈழத்தைப் பொறுத்தவரை இந்தவகை படுகொலைகள் ‘இனந்தெரியாதோரால்’ நிகழ்த்தப்பட்டதாக முத்திரை இடப்பட்டாலும், அந்தக் கொலைக்கான சாத்தியப்பாடுகளின் அடிப்படையில் கொலைகாரர்கள் சார்ந்த இயக்கங்களை மக்கள் அடையாளம் காணவே செய்தனர்.

சர்வதேச ரீதியிலும் பூகோள அரசியலை கவனித்துக் கொண்டிருக்கும் அரசியலாளர்கள் கொலைகாரர்களை அடையாளம் காணவே செய்கின்றனர். அதேபோலவே கனடாவில் நிகழ்த்தப்பட்ட கொலையையும் அதன் சாத்தியப்பாடுகள் அடிப்படையில் அவரவர் மதிப்பிட வழியுண்டு. உணர்ச்சி அரசியல் பேசி தேசாபிமானம் தேசத்துரோகம்… அது இது என யூரியூப் சலங்கை கட்டி ஆடி பிரயோசனமில்லை.

கனடாவில் காலிஸ்தான் தலைவரை அல்லது பிரமுகரை கொன்றது இந்திய உளவுப்படையாக இருக்கலாம் என்ற சாத்தியப்பாட்டை மறுக்க முடியாமல் இருக்கிறது. இது ஒரு சாத்தியப்பாடு மட்டுமே. “இந்தியாவை உடைக்க வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. அதனால் அமெரிக்கா இதை செய்திருக்கலாம்” என எனது வேலையிடத்து நண்பர் சொன்னார். அந்த சாத்தியப்பாட்டையும் நான் மறுக்கவில்லை என்றேன். “காலிஸ்தான் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலும் குழு மோதல் இருக்கிறது. அப்படியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம்” என்றார் இன்னொரு சக தொழிலாளி. அதுபற்றி எனக்கு தெரியாது. இருக்கலாம் என்றேன். எனது பார்வை வேறானதாக இருந்தது. அது இந்தியாவின் பூகோள அரசியல் நிலைப்பாட்டுடன் சம்பந்தப்பட்டது.

கனடா முன்வைக்கிற தனது நாட்டின் இறைமை மற்றைய நாடுகளுக்கும் பொருந்தும் என்பதை ஏற்றுக் கொள்வதில்தான் அர்த்தம் கொள்ள முடியும். அதை அவர்கள் நேட்டோ படைகளாக மற்றைய நாட்டுக்குள் சென்று குண்டுவீசியபோது மறந்துபோய்விட்டார்களோ என்னவோ தெரியவில்லை. தமது நாட்டு பிரசை ஒருவரை அதுவும் கனடாவுக்குள் வைத்தே படுகொலை செய்ததின் மூலம் தமது இறைமைக்கு பங்கம் நேர்ந்துவிட்டதாக கனடா பிரதமர் இன்று வசனம் பேசுகிறார்.

இறைமை உள்ள நாடுகளாக -ஒப்பீட்டு ரீதியில்- ஆதிக்க மேட்டிமை கொண்ட நாடுகள்தான் இருக்கின்றன. அமெரிக்கா இதில் முதலிடத்தில் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறது. உலகத்தின் பல நாடுகளில் அவர்களது சிஐஏ அரங்கேற்றிய கொலைகளும் ஆட்சிக் கவிழ்ப்புகளும் அந்தந்த நாடுகளின் இறைமை மீதான மிகப் பெரும் அச்சுறுத்தல் இல்லையா. ஈழம் அல்லது இலங்கையில் இந்தியாவும் இந்திய இராணுவமும் நடந்துகொண்ட விதம், காஸ்மீர் அபகரிப்பு, பங்களாதேஷ் பிரிப்பு என இந்தியா மற்றைய நாடுகளின் இறைமையில் தலையிட்டது வரலாறு இல்லையா. எனவே நாட்டின் ‘இறைமை’ என்பது ‘ஜனநாயகம்’ என்பது போன்று அவரவர் தனது நலன் சார்ந்து கதைவிடும் ஒன்றாக இருக்கிறது.

இந்தியா பிரிக்ஸ் (BRICS) இல் ஒரு முக்கியமான நாடு. அது பிரிக்ஸ் இல் இருந்துகொண்டே அமெரிக்காவுடனும் தனது உறவை பேணுகிறது. அதை இந்தியாவின் பன்முகத் தன்மை என சிலர் மேக்அப் போட்டு அழகு பார்க்கின்றனர். இந்த தளம்பல் நிலையைப் பாவித்து இந்தியாவை தமக்கு சாதகமாக இழுக்க, அதாவது தம்பக்கமாக இழுக்க அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தியா இந்த ‘நடுநிலை’யை கடைப்பிடிக்க அமெரிக்காவுடனான பொருளாதார சார்புநிலை காரணமாக இருப்பதாக தெரியவில்லை. சீனா மீதான பகையுணர்வு அல்லது அச்சவுணர்வு அல்லது ஒரு இயலாமை இருப்பதாகவே தோன்றுகிறது. சீனாவை சமாளிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா தேவைப்படுகிறது. அமெரிக்காவுக்கும் இந்தியா இதே காரணத்துக்காக தேவைப்படுகிறது.

மோடியின் அமெரிக்க விஜயத்தின்போது இந்தியாவில் இன, மத பேதமற்ற சமத்துவ தன்மை இருப்பதாக மோடி பேசியபோது அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் விசிலடிக்காத குறையாக கரகோசம் இட்டார்கள். அது மணிப்பூரையும் தாண்டி ஒலித்தது. தலித் மக்களின் குடிசைகளை தாண்டியும் ஒலித்தது. பாபர் மசூதியின் சுவட்டைத் தாண்டியும் ஒலித்தது. இதே அமெரிக்கா தேவை ஏற்படுகிறபோது இந்தியா மத, சாதி அடிப்படையிலான மனித உரிமை மீறல்களை செய்துவருகிறது என சொல்ல பின்நிற்காது. ‘தொப்பூழ்க் கொடி உறவு’ என கயிறு விடுவது போல அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளி வந்தவர்களின் பெயரை சொல்லி மோடி சென்றிமென்ற் கயிறு விட்டார். அந்த சென்றிமென்ற்றை -சிறகடிக்கும்- ஒரு புறாவைப்போல மனசுக்கு ரம்யமாக பறக்கவைத்தது, அமெரிக்க அரசியல்வாதிகளின் கரகோசம். அது அவர்களின் ஒரு உத்தி.

நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவு என்பது அவசியமானது. அதை மேவிய சென்ரிமென்ற் உறவு அல்லது கள்ள உறவு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. சந்தர்ப்பவாதமும் அதன்வழியான சறுகல்களையும் பரிசாக அளித்து நாட்டின் வளர்ச்சிக்குக் குறுக்கே வரவும் செய்யும்.

கனடாவில் நடந்த இந்தக் கொலை குறித்து ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில், கனேடிய உளவுப் படை அந்த ஆதாரங்களை இந்தியாவிடம் பின் கதவால் முன்வைத்து, இந்தியாவை பம்ம வைக்கச் செய்வார்கள். மாறாக, ஆதாரங்களை முன்வைக்க முடியாத பட்சத்தில், தமது கள்ளநோக்கம் நிறைவேறாத நிலையில் ஒரு மன்னிப்போடு கனேடிய அரசு இதை கடந்து செல்லவும் கூடும். இதில் சீக்கியர்கள் ஒரு பகடைக் காய்.

எனவே இன்றைய பிரிக்ஸ் இன் எழுச்சிக் காலகட்டத்தில், உலக ஒற்றை ஒழுங்கை கேள்விக்கு உள்ளாக்குகிற பாத்திரத்தை ஆற்றும் களத்தில் நிற்கும் இந்தியா மேற்குலகம் குறித்து உறுதியான நிலைப்பாட்டுக்கு வர வேண்டிய புள்ளியில் நிற்கிறார்கள். இந்திய வெளிநாட்டு அமைச்சர் ஜெயசங்கர் அவர்கள் மிக கறாரான விமர்சனங்களையும் நிலைப்பாடுகளையும் வெளிப்படையாகவே பேசி வந்தவர். அவரது குரலையும்கூட மோடியின் அமெரிக்க விஜயத்தின் பின் காணவில்லை என நினைக்கிறேன். (எனது அவதானம் போதாமலும் இருக்கலாம்)

எனவே “கனடாவை கதறவிட்ட இந்தியா, அலறவிட்ட இந்தியா..” என வசனம் பேசி பிரயோசனமில்லை. அதிதீவிர தேசப்பற்று அல்லது தேசியவெறி கொண்டு பூகோள அரசியலை மட்டுமல்ல, உள்நாட்டு அரசியலையும் அணுக முடியாது. சந்திராயன்-3, சனாதனம் என எல்லாவற்றையும் தமது தேர்தல் ஊட்டச்சத்தாக மாற்றும் மோடியும் பாஜக வும் இந்த கனடா பிரச்சினையையும் இன்னொரு தேர்தல் சத்தாக மாற்றும் வேலையில் இவ்வேளை அரக்கப் பரக்க இறங்கியிருப்பார்கள் என கருத இடமுண்டு.

Leave a comment