அதிசயம் நடக்குமா!

ஒரு இலட்சம் மக்கள் வாழும் லிபியாவின் கிழக்கு நகரமான டேர்னாவை (Derna) வெள்ளம் கடந்த 11.9.23 அன்று வாரியெடுத்திருக்கிறது. அந்த நகரத்தின் கால்வாசி பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 23 அடி உயரம் வரை வெள்ளம் அலைபோல் திரண்டு இந்த நகரை துரத்தியிருக்கிறது. அதன் தாக்குதலால் காணாமலாக்கப்பட்டும் கொலைசெய்யப்பட்டதுமான மனிதர்களின் தொகை 20’000 இனை தாண்டியுள்ளது என இதுவரையான கணிப்பு சொல்கிறது.

டானியல் என பெயரிடப்பட்ட புயல் மத்தியதரைக் கடலில் (Mediterranean) சற்றித் திரிந்து, லிபியாவை அண்மித்தபோது பெருமழை கவிழ்ந்து கொட்டியிருக்கிறது. ஒன்பது மாதங்களில் பொழியிற மழையின் அளவை ஆறு மணித்தியாலத்தில் கொட்டியிருக்கிறது. இதனால் Wadi Derna என்ற பேராறு அபாய மட்டத்தை அதிவேகத்தில் தாண்டியது. அதன் இரு அணைக்கட்டுகள் தகர்ந்தன. வெள்ளம் நகரை அடித்து வீழ்த்தி, கிடைத்ததையெல்லாம் வாரியள்ளி சிதைவுகளாக கடலுக்குள் கொண்டுபோய்க் கொட்டியிருக்கிறது. ஒரு கால் பகுதி நகரை அது காணாமலாக்கியிருக்கிறது.

டானியல் புயல் கடலில் உலாவியபோதே இந்த பேரழிவுக்கு முதல்நாள் டேர்னா நகரின் மேயர் எச்சரிக்கையடைந்து, இந்த அணைக்கட்டுகளை அண்மித்து வாழும் மக்களை பாதுகாப்பாக இடம்பெயர்பெயர்க்க விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்ட்டது. மாறாக, இந் நிலைமையை கையாள கிழக்கு அரசின் உள்நாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்ட அவசர குழு ஊரடங்குச் சட்டத்தை அறிவித்திருக்கிறது. இதுவே இவளவு பெருந்தொகையான மக்களை காவுகொள்ள வழிவகுத்திருப்பதாகச் சொல்லப் படுகிறது. லிபியாவின் அரசியல் நிலைமையும் ஆட்சிப் பிளவுகளும் காரணமாக இந்த அணைக்கட்டுகள் 2008 இலிருந்து இன்றுவரை பராமரிக்கப்படாமல் போயிருக்கிறது என மேயரின் பேச்சாளர் சொல்கிறார்.

2011 இல் கடாபியை கொன்றொழித்தது பூகோள அரசியல். அதன்பின் நகர்களை கைப்பற்றவும் பிரதேசங்களைக் கைப்பற்றவும் என பல குழுக்கள் தோன்றுவதும், சண்டையிடுவதும், இல்லாமல் போவதுமாக நாடு அரசியலில் அல்லோல கல்லோலப்பட்டது. ஐநாவின் தலையீடு GNA (Government of National Accord) அரசை அமைத்தது.

திரிபோலியை மையமாகக் கொண்டு இயங்கிய இந்த அரசை எதிர்த்து இஸ்லாமிய அரசு தீவரவாதிகள் 2014 இல் டேர்னாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். அந்தக் குழுவிடமிருந்து 2015 இல் Shura Council of Mujahideen என்ற இஸ்லாமிய கிளர்ச்சிக் குழு டேர்னாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அதன்பின் கலீபா கிப்ரர் (Khalifa) Hifter தலைமையிலான “லிபிய தேசிய இராணுவம்” ஒரு நெடிய போரைச் செய்து 2018 இல் டேர்னோவை கைப்பற்றியது மட்டுமல்லாமல், Obruk என்ற நகரை மையமாகக் கொண்டு, லிபியாவின் கிழக்குப் பகுதியை தமதாக்கி, ஒரு அரசை அமைத்து செயற்பட்டு வருகிறது. இப்போ லிபியாவில் கிழக்கு மேற்காக இரு அரசுகள் செயற்பட்டு வருகின்றன..

கலீபா கிப்ரின் லிபிய தேசிய இராணுவ அரசை (கிழக்கு அரசை) எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம், ரசியா என்பன ஆதரிக்கின்றன. திரிபோலியை மையமாகக் கொண்ட GNA அரசை (மேற்கு அரசை) ஐநாவின் போர்வைக்குள் மேற்குலக நாடுகளும், துருக்கி, கட்டார் ஆகிய நாடுகளும் ஆதரிக்கன்றன. இந்தப் பேரழிவு மேற்கு, கிழக்கு அரசுகள் இரண்டையும் பேச்சுவர்த்தை மேசைக்கு கொணர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. நல்லது நடக்கட்டும் என நம்புவோம். வரவேற்போம்.

“தனியொரு மனிதருக்கு உணவில்லையேல்…” என்ற பாரதியின் புகழ்பெற்ற சிந்தனையையும் தாண்டி, “தனியொரு குடும்பத்துக்கு வீடில்லையேல்…”, “தனியொரு மனிதருக்கு கல்வி இல்லையேல்…” என விரிந்த சிந்தனையை கடாபி செயற்படுத்தியவர். ஒவ்வொருவருக்கும் மருத்துவம், கல்வி, வீடு, வெளிநாட்டில் உயர் கல்விக்கான முழுச்செலவு என இலவசமாக வழங்க அவரது எண்ணெய் வளம் கைகொடுத்தது. அவரது சமூக சிந்தனை கைகொடுத்தது. அவரது விடாப்பிடியான நிலைப்பாடு கைகொடுத்தது.

வெளிநாட்டு சுரண்டலுக்கு தமது வளத்தை தாரைவார்க்காமல் தனது நாட்டுக்கானதாக அதை அவர் வைத்திருந்தார். அத்தோடு ஆபிரிக்கக் கண்டம் தமக்குள் ஐக்கியப்பட்டு ஒரே குரலில் ஒலிக்க வேண்டும் எனவும் தத்தமது வளங்களை தாமே கையாள வேண்டும் என குரல் கொடுத்தவர் அவர். இவை போதாதா மேற்குலகின் வெஞ்சினம் பொங்கி எழ!. எழுந்தனர்!. அதே ‘ஜனநாயக’ கோசத்துடன், அதன் உள்ளுடனை தமக்கேற்றதாக வளைத்துப் போட்டு போர் விமானங்களில் ஏற்றி மற்றைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த/செய்யும் பாரம்பரியம் அவர்களது!.

லிபியாவுக்குள் தமக்கான குழுக்களை உருவாக்கி கிளர்ச்சி செய்து அதை சாதித்தார்கள். லிபியாவை சிதைத்தார்கள். எடுபிடி தீவிரவாதிகள் கடாபியை ஒரு நாயை அடிப்பதுபோல் அடித்துக் கொன்றார்கள். அவரது இழப்பின் பின் மேற்குலகின் ‘ஐனநாயகக் குண்டு’ கொத்துக்குண்டாக வெடித்து லிபிய அரசியலை பிளந்தெறிந்து. வறுமையைக் காணாமலிருந்த ஒரு நாட்டை சிதைத்தெறிந்தது. இப்போ வளங்களை கொள்ளையிடும் பூகோள அரசியல் சதுரங்கத்துள் அந்த நாடு நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

பூகோள அரசியல் பிய்த்தெறிந்த அந்த நாட்டை இப்போ இயற்கையும் தன் பங்கிற்கு தாக்கியிருக்கிறது. இயற்கையை நாம் வல்லுறவு செய்தோம். அதற்கான விலையை நாம் முன்னரைவிட இப்போ குறுகிய கால இடைவெளிகளில் உலகின் எல்லா பாகங்களிலும் அபரிதமாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இயற்கை தன்னை சமநிலையில் பேண நடாத்துகின்ற போராட்டமோ இது என எண்ணத் தோன்றுகிறது.

துயருறும் லிபிய மக்கள் அதிலிருந்து மீள ஏதாச்சும் அதிசயம் நடக்குமா!

Leave a comment