image : Spiegel.de
நீஜரில் யுரேனியம், தங்கம் போன்ற கனிம வளங்களை அகழும் பிரான்ஸ் கம்பனியைத் தடைசெய்த நீஜர் அரசு தாமே உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறது. யுரேனியத்துக்கான ஏற்றுமதி விலையை உலக சந்தையின் பெறுமதி “200 யூரோ/கிலோ” க்கு உயர்த்தியுள்ளது. இது கனடாவின் யுரேனிய ஏற்றுமதிப் பெறுமதியை அடிப்படையாகக் கொண்ட விலை நிர்ணயம் ஆகும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அணுசக்தி அமைப்பு Euratom க்கான யுரேனியத் தேவையினை பூர்த்திசெய்யும் நாடுகளில் நீஜர் இரண்டாம் இடத்தில் இருக்கிறது என சொல்லப்படுகிறது. 2022 இல் நீஜர் 2975 தொன் யுரேனியத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. அது Euratom க்கான தேவையின் 25.4 வீதத்தை பூர்த்திசெய்கிறது. கசகஸ்தான் முதலாவது ஏற்றுமதி நாடாகவும் கனடா மூன்றாவது ஏற்றுமதி நாடாகவும் உள்ளது. இம் மூன்று நாடுகளும் ஐரோப்பிய ஒன்றிய அணுசக்திக்கான யுரேனியத்தின் 74 வீதத்தை பூர்த்தி செய்கின்றன.
உலக அணுசக்தி அமைப்பின் (WNA) 2021 தகவல்படி யுரேனிய உலக உற்பத்தியில் நீஜர் 4 முதல் 5 வீதத்தை பூர்த்தி செய்கிறது. அதன் அளவு 311,100 தொன் ஆகும். இதன்படி நீஜர் உலகளவில் யுரேனிய வழங்கலில் 7வது இடத்தில் உள்ளது. கசகஸ்தான் 13 வீதத்தினையும் கனடா 10 வீதத்தினையும் நமீபியா 8 வீதத்தினையும் அவுஸ்திரேலியா 28 வீதத்தினையும் ரசியா 8 வீதத்தினையும் தென் ஆபிரிக்கா 5 வீதத்தினையும் பூர்த்தி செய்கின்றன. 2021 இல் மொத்தம் 6,078,500 தொன் யுரேனியம் உலகளவில் உற்பத்தி செய்யப்பட்டது.
பிரான்ஸிலுள்ள 56 அணுசக்தி செயலிகளை இயக்கும் 18 அணுமின் உற்பத்தி நிலையங்களுக்கு ஆண்டொன்றுக்கு 8000 தொன் யுரேனியம் தேவைப்படுகிறது. நீஜர் பிரான்ஸின் காலனியாக இருந்தபோது, 1957 இல் பிரெஞ்சு காலனியவாதிகள் நீஜரிலுள்ள ‘அசெலிக்’ எனும் இடத்தில் செப்பு கனிமவளத்தைத் தேடி அகழ்ந்தபோது முதன்முதலாக யுரேனியத்தை கண்டடைந்தனர். அதிலிருந்து யுரேனிய அகழ்வை பிரான்ஸ் கம்பனியான Areva (Orano) தம்வசம் வைத்து செல்வத்தை பெருக்கிக்கொண்டது.
மேற்கு ஆபிரிக்க மக்களின் தாய்மொழிகளை தடைசெய்து பிரெஞ்சு மொழி பேசுபவர்களாக அவர்களை மாற்றி பண்பாட்டை வல்லுறவு செய்த பிரான்ஸ் அந்த நிலத்தையும் வல்லுறவு செய்து வளங்களை சுவைத்தது. 1960 இல் காலனியத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பிரான்ஸ் அதன்பின் தமது சுரண்டலை பின்காலனிய முறையில் தொடர்ந்தது. சாகேல் பிரதேச (மேற்கு ஆபிரிக்க) நாடுகளில் மேற்குலகின் அடிவருடிகளின் -குறிப்பாக பிரான்ஸின்- பொம்மை ஆட்சியாளர்களின் அரசுகள் தொடர்ந்தன. அவர்கள் மேற்குலகம் தமது நாட்டை கருவறுக்க அனுமதித்து தமது வங்கிக் கணக்குகளை செழுமைப்படுத்தினார்கள். அவர்களின் கள்ளப் பணம் சுவிஸ் வங்கியில் வைப்பில் இடப்பட்டிருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
இதற்கு எதிர்நிலை கொண்டவையாக தற்போதைய இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் விளங்குகின்றன. இந்த இராணுவ ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளும் மக்களின் விழிப்புணர்வும் இப்போதைக்கு சாதகமான ஒத்திசைவான திசையில் செல்கின்றன. நீஜர் அரசானது பிரான்ஸ் தூதுவராலய அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டது. அதேபோல் பயங்கரவாத ஒழிப்பு என்ற பதாகையின் கீழ் நீஜரில் தங்கியிருக்கும் பிரான்ஸின் 1500 இராணுவத்தினரையும் நாட்டைவிட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டது. அவர்கள் செவிமடுக்கத் தயாராக இல்லை.
இராணுவத் தளத்தின் முன்னால் இலட்சக்கணக்கான நீஜர் மக்கள் கூடி குரலெழுப்பியும் பலனில்லை. தூதரக அதிகாரிகளோ நீஜரின் ஆட்சியாளர்கள் தம்மை சந்திக்கக் கேட்டிருந்தபோது புறக்கணித்திருந்தார்கள். அதன்பின்னர் அவர்களை வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. பலன் எதுவும் இல்லாததால் தூதரகத்துக்கான நீர்வழங்கல், மின்வழங்கல் இரண்டையும் அரசு நிறுத்தியிருந்தது. அவர்களது விசாவை காலாவதியாக்கியது. பலனில்லை. இப்போ தூதரகத்துள் உணவுப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுவதற்கு தடைவிதித்துள்ளது. ஒரு நாட்டின் இறையாண்மையை மதிக்கும் மேற்கத்தைய நாடுகளின் சனநாயக பெறுமதி இதுதான்.
பிரான்ஸ் தனது இறுதிப் பிடியை இலகுவில் விட்டுவிடுவதிலுள்ள பொருளாதார ஆபத்தை கணக்கில் எடுத்து செயற்படுகிறது. “இந்த அரசு ஜனநாயக ரீதியில் செல்லுபடியாகாத அரசு. அதற்கு நாம் கட்டுப்படுவதாயில்லை” என ஒரு காரணத்தை மக்ரோன் முன்வைக்கிறார். பிரான்ஸ் மீதான எந்தவொரு தாக்குதலையும், அதேபோல் தமது நலனுக்கு எதிரான எதையுமே பிரான்ஸ் சகித்துக்கொள்ளாது என மக்ரோன் தெரிவித்துள்ளார். தனது நாட்டின் வளங்களை பல ஆண்டுகளாக கொள்ளையடிக்கும் பிரான்ஸை நீஜர் தொடர்ந்து சகித்துக்கொண்டிருக்க வேண்டும் என பிரான்ஸ் இன் பின்காலனிய சிந்தனைக் கட்டமைப்பானது மறைமுகமாகச் சொல்கிறதா என மக்ரோனின் பிரகடனம் யோசிக்க வைக்கிறது.
இப்படியொரு பொறியை உருவாக்கி தமது இராணுவத் தலையீட்டையோ அல்லது ECOWAS பொருளாதார கூட்டமைப்பினூடக இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு தமக்கு சார்பான Mohamed Bazoum அவர்களின் ஆட்சியை மீளக் கொண்டுவருவதற்கோ அல்லது தமக்கு சார்பான புதிய மாற்று இராணுவக் கவிழ்ப்புச் சதியை அரங்கேற்றவோ பிரான்ஸ் காத்திருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது மேற்குலக சார்பான ECOWAS நாடுகளை பாவித்து நீஜருக்குள் ஒரு சகோதரப் போரை உருவாக்க படாதபாடு படுகிறது.
அந்த அமைப்பின் தற்போதைய தலைமைப் பதவியில் நைஜீரியா அதிபர் Bola Tinubu அவர்கள் இருக்கிறார். அந்த அமைப்பு போர் முரசு கொட்டி ஒரு வார கால அவகாசமும் கொடுத்திருந்தது. அது காலாவதியாகி, மீண்டும் அவகாசித்து, மீண்டும் காலாவதியாகி… என அச்சுறுத்தல் முன்னும் பின்னுமாக ஓடியோடி குரைத்தது. ஆனால் நைஜீரியாவின் செனட் சபை உறுப்பினர்கள் எல்லோருமே இந்த முடிவை எதிர்த்தார்கள். நைஜீரியா போருக்குப் போவதை விட்டு “எமது நாட்டுக்குள் இருக்கும் பொக்கோ கராம் பயங்கரவாதிகளை ஒழிக்கிற வேலையை செய்யட்டும்” என்று அறைகூவினார்கள். அதனால் போர்முரசு தற்காலிகமாக ஒலிக்காதிருக்கிறது. பைடன் Bola Tinubu அவர்களை விரைவில் சந்திக்க இருக்கிறார். எனவே போர்முரசு மீண்டும் எழாது என்பதற்கு உத்தரவாதமில்லை. ஒருபுறம் மேற்குலக நெருக்குதல் இன்னொருபுறம் செனட்சபை கூட்டு எதிர்ப்பு என இரண்டுக்கும் நடுவில் நைஜீரிய தலைவர் ஆட்சிக் கட்டிலை தொட்டுப் பார்த்தபடி நிற்கிறார்.
ECOWAS போலவே ஆபிரிக்க கூட்டமைப்பும் (AU) மேற்குலகின் குரலையே ஒலிக்கின்றன. அதாவது “சனநாயக முறையில் தெரிவுசெய்யப்பட்ட Bazoum அவர்களை இராணுவ ஆட்சியாளர் மீண்டும் கதிரையில் அமர்த்திவிட்டு விலகிவிட வேண்டும்” என்பதே அது. அதேநேரம் சமாதான வழியில் இது சாத்தியப்படுத்தப் படாவிட்டால் “ECOWAS நாட்டு இராணுவ நடவடிக்கையை நாம் ஆதரிப்போம். ஆனால் ஆபிரிக்க கண்டத்துக்கு வெளியிலுள்ள நாடுகளின் இராணுவத் தலையீட்டை நாம் ஆதரிக்க மாட்டோம்” என தமது ‘ஆனால் நிலைப்பாட்டை’ முன்வைத்துள்ளது.
ஒரு பதினைந்து நாடுகளைக் கொண்ட ECOWAS கூட்டமைப்பிடமிருந்து நடவடிக்கைகளை எதிபார்க்கிறது, 55 நாடுகளைக் கொண்ட ஆபிரிக்கக் கூட்டமைப்பு!. இதுவே ஆபிரிக்க கூட்டமைப்பின் பலத்தை அல்லது ஆளுமையை தோலுரிக்கிறது. இந்த பலவீனமான நிலை ஜி-20 இல் 21வது அங்கத்தவராக ஆபிரிக்க கூட்டமைப்பை மேற்குலகு எதிர்ப்பின்றி உள்வாங்க ஒரு சாதகமான நிலையை ஏற்படுத்திய துணைக் காரணிகளில் ஒன்று எனலாம்.
பிரான்சுக்கு மிக மலிவான விலையில் நாட்டின் யுரேனிய வளத்தை வாரிக்கொடுத்தவர் Bazoum அவர்கள். அவரின் அரசுக்குப் பெயர் ஜனநாயக அரசு. சொந்த மக்களின் நலனை அடைவு வைத்து பணக்காரர் ஆகுபவரது அரசு ஒரு ஜனநாயக அரசு. சில வருடங்களுக்கு முன் தேர்தலில் வெற்றிபெற்று சனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்தவர் என்ற ஒற்றைக் காரணத்தை வைத்து ஜனநாயகம் பேசுபவர்கள் இன்று ஒரு தேர்தலை சந்தித்து அவர் மீண்டும் வரட்டும் என பேச முன்வருவார்களா என்ன. அல்லது இன்றைய இராணுவ ஆட்சியாளர்கள் இன்று ஒரு தேர்தலை வைத்து தம்மை நிரூபிக்கட்டும் என அறைகூவல் விடுக்க முடியுமா என்ன. கிழிஞ்சிடும்!
இராணுவ ஆட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளியது இவர்கள் எல்லோரும் முன்வைக்கும் ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்டு தொடர்ந்தவர்களின் சோரம்போதல்தான். நாட்டை ஒட்டச் சுரண்டி பின்காலனியத்தைப் பேண உதவியதுதான்.
மேற்குலகு ECOWAS மூலமான சகோதரப் போரை நடத்த எத்தனிக்கிறது. முடியாதபோது இதே இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முறைமையை அது முயற்சிக்க வாய்ப்பு உண்டு. இதில் அவர்கள் தேர்ந்தவர்கள் என்பது வரலாறு. யுரேனிய ருசி கண்ட பூனை நீஜரை சுற்றிச்சுற்றியே வரும். அவளவு இலகுவில் அது விலகா!
Enough is Enough ! இதுவே இன்றை நீஜர் மக்களின் குரல்.
- 13092023
- fb link : https://www.facebook.com/ravindran.pa/posts/pfbid0xXcDLz9DiKcPB7uFWug2UwshtcyGqg7yJxWhRQUK3GMKFDGzvyK9zojhiajKKK7il
- Thanks for image : Spiegel.de
